மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்
MBA - மூன்றெழுத்து மந்திரம்

இன்னொரு தரக் கடவுள்!

MBA - மூன்றெழுத்து மந்திரம்

ஜே.எம்.ஜூரான் - இவர் சாதாரண மனிதரில்லை,  103 வருடங்கள் 259 நாட்கள் வாழ்ந்தவர். தனது   86-வது வயது வரை வெளிநாட்டுப் பயணங்கள் செய்து, தர நிர்வாகம் பற்றிய பயிற்சிப் பாசறைகள் நடத்தினார். ருமேனியாவில் பிறந்து, அமெரிக்காவில் படித்த ஜூரான் பட்டம் பெற்றவுடன் தன் 22-ம் வயதில் வெஸ்டர்ன் எலெக்ட்ரிக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். அன்றைய நாட்களில், அமெரிக்க நிர்வாக முறைப்படி தரக் கட்டுப்பாட்டில் 85 சதவிகிதப் பொறுப்பு மேனேஜர்களிடம் இருந்தது. மீதம் 15 சதவிகிதப் பொறுப்பு மட்டுமே தொழிலாளர்களிடம் இருந்தது.

ஜூரான் மகா துணிச்சல்காரர். வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களே ஆகியிருந்தவர் இப்படிச்  சொன்னார். 'இப்போது இருக்கும் தரக் கட்டுப்பாட்டுப் பொறுப்புமுறையை தலைகீழாக மாற்ற வேண்டும்; 85 சதவிகிதப் பொறுப்பு தொழிலாளிகளிடம் இருக்க வேண்டும்; மீதம் 15 சதவிகிதம் மட்டுமே மேனேஜர்களிடம் தர வேண்டும்'. அமெரிக்க கம்பெனிகள் ஜூரானின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தன. இதனால் ஜூரானின் திறமைகள் வெளியே தெரியாமலே இருந்தது.  

##~##
அப்போது ஒரு நாள் யூனியன் ஆஃப் ஜப்பானீஸ் சயின்டிஸ்ட் அண்ட் இன்ஜினீயர்ஸ் (JUSE) அமைப்பின் பொறியாளர் ஒருவர், ஜூரான் எழுதிய குவாலிட்டி கன்ட்ரோல் ஹேண்ட்புக் புத்தகத்தைப் படித்தார். அவரது தர நிர்வாகக் கொள்கைகள் ஜப்பானுக்கு கனகச்சிதமாகப் பொருந்தி வருவதை உணர்ந்தார்.  

1950. எட்வர்ட்ஸ் டெமிங் ஜப்பானிய குவாலிட்டி மேனேஜ்மென்ட் கடவுளாக இருந்த நாட்கள். ஜப்பானின் கம்பெனிகள் எல்லாமே தங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ளும் வேகத்தில் இருந்தன. அவர்களுக்கு ஒரு டெமிங் போதவில்லை. அந்த இடத்தை நிரப்ப, ஜூரான் ஜப்பானுக்கு அழைக்கப்பட்டார்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

1954-ல் ஜப்பான் வந்த ஜூரான், ஷோவா டென்கோ (Showa Denko) நிப்பான் கொகாகு (Nippon Kogaku), நோரிட்டேக்கே (Noritake), டக்கேடா பார்மாசூட்டிக்கல் கம்பெனி (Takeda Pharmaceutical Company) போன்ற பத்து முன்னணி நிறுவனங்களின் தர ஆலோசகரானார். நூற்றுக்கணக்கான மேனேஜர்களுக்குப் பயிற்சியளித்தார். ஹக்கோனே (Hakone), வசேதா (Waseda), ஒஸாகா (Osaka), கோயாஸான் (Koyasan) போன்ற பிரபல பல்கலைக்கழகங்களில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். மொத்தத்தில், இன்னொரு குவாலிட்டி மேனேஜ்மென்ட் கடவுள் ஜனனம். தர நிர்வாகத்துக்கு ஜூரான் சொன்ன மூன்று விஷயங்கள் சுருக்கமாக:

• 80 சதவிகிதப் பிரச்னைகள் 20 சதவிகிதக் காரணங்களால் வருகின்றன. உங்கள் கம்பெனியில் 100 வகையான குவாலிட்டிப் பிரச்னைகள் இருக்கின்றனவா? இவை 50 காரணங்களால் ஏற்படுகின்றனவா? அத்தனை 50 காரணங்களுக்கும் தீர்வு தேடி மண்டையை உடைத்துக்கொள்ளாதீர்கள். இவற்றுள் 10 காரணங்களுக்கு மட்டும் தீர்வு கண்டால், 80 பிரச்னைகளுக்கு குட்பை சொல்லிவிடலாம். (பார்க்க 80:20 கொள்கை பெட்டிச் செய்தி!)

• குவாலிட்டி மேனேஜ்மென்ட் கொள்கைகளை உற்பத்திக்கு மட்டுமல்ல, சேல்ஸ் போன்ற கம்பெனியின் எல்லா துறைகளிலும் கம்பெனி பயன்படுத்த வேண்டும்.

• எல்லா கம்பெனிகளின் தர நிர்வாகத்திலும், தரம் திட்டமிடுதல் (Quality Planning), தரக் கட்டுப்பாடு (Quality Control), தர மேம்பாடு (Quality Improvement) என்னும் மூன்று படிநிலைகள் உண்டு. ஒவ்வொரு படிநிலையாக நிறுவனங்கள் முன்னேற வேண்டும்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

டெமிங், ஜூரான் ஆகியோர் காட்டிய வழியில், பல ஜப்பானிய தரக் கட்டுப்பாட்டு மேதைகள் தோன்றினார்கள்; புதிய பாதைகள் போட்டார்கள். இவர்களுள் முக்கியமானவர் கவ்ரு இஷிகாவா (Kaoru Ishikawa) என்னும் ஜப்பானியப் பேராசிரியர் 1962-ல் தர வட்டம் (Quality Circles) என்னும் தர நிர்வாக முறையை உருவாக்கினார்.

சிறிய, எளிய மாற்றங்களின் மூலம் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம்; எல்லாச் செயல்களிலும் முன்னேற்றம் காணலாம் என்கிறது தர வட்டம்.

ஏன் வட்டம்? அரசியலில் வட்டம், மாவட்டம் என்று சொல்கிறோமே, அதே அர்த்தத்தில்தான் இந்த வட்டமும். தர முன்னேற்றத்துக்கான அணி என்பதைத் தர வட்டம் என்று சொல்கிறோம். ஆறு அல்லது எட்டு பேர் அணியாகச் சேருவார்கள். ஒரு பிரச்னையைக் கையில் எடுத்துத் தீர்வு காண்பார்கள்.    

தர வட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பதை எதிர்பக்கத்தில் இருக்கும் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். ஜப்பானில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தர வட்டங்கள் உள்ளன. (இந்தியாவிலும் தர வட்டம் பிரபலமான மேலாண்மைக் கொள்கை. பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ், டாடா மோட்டார்ஸ், டி.வி.எஸ். நிறுவனங்கள் போன்றவை தர வட்டக் கொள்கையைப் பின்பற்றுவதில் இந்தியாவில் முன்னோடிகள்.)  

MBA - மூன்றெழுத்து மந்திரம்

இஷிகாவா உருவாக்கிய இன்னொரு முக்கிய தர மேம்பாட்டு முறை காரண மற்றும் காரியம் வரைபடம் (Cause and Effect Diagram)  (அதை மேலே தந்திருக்கிறேன், பாருங்கள்.) எந்தக் கம்பெனியிலும் உற்பத்தி சீராக நடக்க, கீழ்க்கண்ட ஐந்து அம்சங்களும் இணைந்து செயல்பட வேண்டும்.  

1. தயாரிப்பு முறைகள் (Methods)

2. இயந்திரங்கள் (Machinery)

3. நிர்வாகம் (Management)

4. தயாரிப்புப் பொருட்கள் (Materials)

5. ஊழியர்கள் (Manpower)  

இவற்றை 5 வி-கள் என்று சொல்வார்கள். இந்த ஐந்தில் எந்த அம்சமும் பிரச்னையை ஏற்படுத்தலாம். ஏன், எதனால், எவ்வாறு, யாரால் என்னும் கேள்விகள் கேட்டு, இந்த காரணங்களை முறையாகத் தொகுத்து, இந்த காரணங்கள் ஏற்படுத்தும் விளைவுகளைப் படமாக வரைந்து விளக்குவதுதான் இந்த வரைபடம்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

படத் தோற்றம் மீனின் எலும்பு போல் இருப்பதால், இதை மீன் எலும்பு வரைபடம் (Fish Bone Diagram) என்றும் அழைப்பார்கள். இஷிகாவா உருவாக்கிய படம் என்பதால், இஷிகாவா வரைபடம் (Ishikawa Diagram) என்றும் சொல்வதுண்டு.  

கடந்த நான்கு வாரங்களாக நாம் ஜப்பானில் தங்கியிருக்கிறோம். அகியோ மோரிட்டா, கிச்சிரோ டொயோட்டா,

எட்வர்ட்ஸ் டெமிங், ஜோசப் மோசஸ் ஜூரான், கவ்ரு இஷிகாவா ஆகிய மாமனிதர்களைச் சந்தித்திருக்கிறோம். அடுத்து அமெரிக்காவுக்குப் புறப்படுவோம். 1960 அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான வருடம். அவர்கள் திறமைகளைப் பட்டை தீட்டும் பல புதிய கொள்கைகள் 1960-ல்தான் வெளிச்சத்துக்கு வந்தது.

(கற்போம்)
படம்:  ரா.நரேந்திரன்.