MBA - மூன்றெழுத்து மந்திரம்


எக்ஸ், ஒய் சித்தாந்தம்!
##~## |
ஏராளமான கம்பெனிகள் இந்த மேனேஜ்மென்ட் முன்னோடிகள் காட்டிய பாதையில் நடந்தன. ஆனால், இந்த கம்பெனி முதலாளிகளுக்கு ஒரு சந்தேகம், பயம் - தொழிலாளிகள் பிரச்னையைத் தீர்ப்பதற்காக அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுக்கத் தொடங்கினால், பிஸினஸையே இழந்துவிடுவோமோ?
ஹென்றி ஃபோர்டு காட்டிய வழி வொர்க் அவுட் ஆகவில்லை. மனோதத்துவமும் எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும் என்று தெரியவில்லை. முதலாளிகள் மனங்களில் மயக்கம், தயக்கம், குழப்பம், கலக்கம். 1960. ஞானோதயம் தரும் போதிமரம் ஒன்று முதலாளிகளுக்குக் கிடைத்தது. அந்த போதிமரம் - டக்ளஸ் மெக் கிரகர் (Douglas McGregor) என்னும் அமெரிக்கப் பேராசிரியர் கொண்டுவந்த எக்ஸ், ஒய் சித்தாந்தம் (Theory X, Theory Y).
ஙீ, சீ என்று பெயர்தான் மிரட்டுகிறதே தவிர, மேட்டர் ரொம்ப சிம்பிள். ரஜினி, விஜயசாந்தி நடித்த மன்னன் சினிமாவைப் பார்த்திருக்கிறீர்களா? அந்தப் படத்தில் விஜயசாந்தி தொழிலாளிகளை அதட்டி மிரட்டுவார்; ஆனால், ரஜினியோ தொழிலாளர்களை அன்பாக நடத்துவார். விஜயசாந்தி மேனேஜ்மென்ட் ஸ்டைல் X: ரஜினி ஸ்டைல் Y.
X, Y ஆகிய இரு வேறுபட்ட நிர்வாகக் கொள்கைகள் மாறுபட்ட இருவகை அனுமானங்களின் அடித்தளத்தில் எழுப்பப்பட்டுள்ளன. அந்த அனுமானங்கள் என்னவென்று பார்ப்போம்.

X கொள்கை அனுமானங்கள்!

1. அடிப்படையில் மனிதர்கள் சோம்பேறிகள். அடக்கி மிரட்டினால்தான் உழைப்பார்கள்.
2. சாதாரண மனிதன் பொறுப்புகளை வெறுக்கிறான். பிறருடைய கட்டளைகளுக்குப் பணிந்து நடப்பதை விரும்புகிறான். தன் வேலை நிலைக்க வேண்டும் என்ற பயத்திலிருந்து பாதுகாப்புதான் அவனுடைய முக்கியத் தேவை.
3. ஊழியர்களுக்குத் தேவையான பணத்தையும், வேலை பறி போகாது என்ற நம்பிக்கையையும் கொடுத்தால் அவர்கள் தங்கள் சக்தி முழுவதையும் நிறுவனத்துக்கு அளிப்பார்கள்.
Y கொள்கை அனுமானங்கள்!
1. ஊக்கம் கொடுத்தால் ஊழியர்கள் முழுமூச்சோடு பணியாற்றுவார்கள்.
2. நிறுவனத்தின் லட்சியங்களோடு தங்களை இணைத்துக்கொண்டவர்கள் அபாரமாகப் பணியாற்றுவார்கள்.
3. ஒரு மனிதனுக்குத் திருப்தியும் மகிழ்ச்சியும் தரும் வேலையை நிறுவனம் கொடுத்தால் அவன் மனநிறைவோடு தன் வேலையைச் செய்வான்.
4. ஒவ்வொரு மனிதனும் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான். அதிகப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறான்.
5. நிறுவனங்கள் பயன்படுத்தும் திறமைகளைவிட ஊழியர்களிடம் அதிகத் திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன.

இதில் எந்தக் கொள்கை சிறந்தது? உங்கள் வீட்டில் நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் உங்கள் கண்ணசைவிலேயே உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும். சில குழந்தைகள் நீங்கள் கட்டளையிட்டால் பணியும். சில குழந்தைகளுக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் தேவை. சில குழந்தைகள் திட்டினால் பணியும். சில முரட்டுக் குழந்தைகளுக்கு அவ்வப்போது தண்டனைகள் தேவை.
ஆஹா, முதலாளிகளுக்கு இப்போது தெளிவு வந்துவிட்டது - குழந்தைகளுக்குத் தக்கபடி அணுகுமுறையை மாற்றும் பெற்றோர் போல், ஊழியர்களிடம் தேவைக்கேற்றபடி கண்டிப்பையும் அன்பையும் கலந்து X, Y கொள்கைகளின் கலவையைத் தாங்கள் பின்பற்ற வேண்டும்!
'X, Y என்று நீங்கள் சொல்லும்போது கசப்பான கணக்குப் பாடம்தான் நினைவுக்கு வருகிறது' என்று உங்களில் சிலர் மனமார நடுங்குவது எனக்குத் தெரிகிறது. ஆகவே, இப்போது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த, உங்கள் எல்லோருக்கும் ரொம்பப் பிடித்த ஒரு சப்ஜெக்ட். 1960-ல் புதிய பரிமாணங்களைத் தொட்ட சப்ஜெக்ட். அந்த சப்ஜெக்ட் - மார்க்கெட்டிங். மார்க்கெட்டிங் என்றால் என்ன?
சென்னை தி.நகர். தீபாவளி நேரம். கூட்டம் அலைமோதுகிறது. சென்னையிலிருந்து மட்டுமல்ல, தமிழகத்தின் எல்லாப் பாகங்களிலிருந்தும் சுமார் ஒரு கோடி பேர் தீபாவளி சீஸனில் ஷாப்பிங்குக்காக தி.நகர் வருகிறார்கள். எல்லாக் கடைகளிலும் மக்கள், மக்கள், மக்கள். கருத்துக் கணிப்பு நடத்த இதைவிடச் சிறந்த இடம் வேறு எங்கே கிடைக்கும்? இந்த மகாஜனங்களில் சிலரிடம் கேட்டோம், மார்க்கெட்டிங் என்றால் என்ன? எங்களுக்குக் கிடைத்த பதில்கள்:

'நாங்க பரம்பரை பரம்பரையா, தீபாவளிக்கு நல்லியில்தான் பட்டுப் புடவை வாங்குவோம். அவங்க தரமும், வெரைட்டியும்தான் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்!''
'கஸ்டமருக்குப் பொருட்களைக் குறைந்த விலையிலே தர்றதுதான் மார்க்கெட்டிங். இதிலே, சரவணா ஸ்டோர்ஸை அடிச்சுக்க யாருமே கிடையாது.'
'ஆயிரம் ரூபாய்க்குக் கம்மல் வாங்கினாலும், ஐம்பது லட்சத்துக்கு வைர நெக்லஸ் வாங்கினாலும், அதே கனிவான பழகுதல். ஜி.ஆர்.டி. தங்க மாளிகைதான் சூப்பர் மார்க்கெட்டிங்.'
'முருகன் இட்லிக் கடை ருசி நம்மை வா வான்னு இழுக்குதே, அதுதான் மார்க்கெட்டிங்.'
'எங்க வீட்டுக்கு புடவை விற்க ஒரு பொம்பளை வரும். என்னா பேச்சு, என்னா சாமர்த்தியம்? ஒரு புடவையாட்டியும் வாங்கலைன்னா நமக்கு மனசு உறுத்தும். அவங்க பண்றதுதான் மார்க்கெட்டிங்.'
இதில் எந்த பதில் சரி? கண் பார்வை இல்லாத நான்கு பேர், யானையைத் தொட்டு, தடவிப் பார்த்து, ஆளுக்கொன்றை சொன்ன மாதிரி, வாடிக்கையாளர்களுக்குப் பிடித்த விஷயத்தை மார்க்கெட்டிங் என்கிறார்கள். ஆனால், மார்க்கெட்டிங் என்பது இவ்வளவுதான் என்றில்லை. இதற்கு மேலும் இருக்கிறது.
அப்படியானால், உங்கள் பார்வையில் மார்க்கெட்டிங் என்றால் என்ன? இந்த கேள்விக்கான பதிலை உடனடியாக எனக்கு அனுப்பி வையுங்கள். மிகச் சரியான பதிலைச் சொல்கிற ஐந்து வாசகர்களுக்கு மறக்க முடியாத பரிசு ஒன்றை தரத் தயாராக இருக்கிறேன்.
பதில் அனுப்பும்போது உங்களுக்கு மூன்றே மூன்று கண்டிஷன்கள். 1. உங்கள் பதில் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும். 2. உங்கள் பதில் 20 வார்த்தைகளைத் தாண்டக்கூடாது.
3. பதிலை இ-மெயிலில் pdf word document attachment ஆக மட்டுமே அனுப்புங்கள். பதில் அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: mba@vikatan.com
பதில் அனுப்பும்போது உங்கள் பெயர், வயது, முழு விலாசம், மொபைல் எண், நீங்கள் மாணவரா, வேலை பார்க்கிறீர்களா என்பது போன்ற தகவலை உடன் அனுப்பி வையுங்கள். உங்கள் பதிலை வருகிற 17-ம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள். முதலில் வரும் 500 பதில்கள் மட்டுமே போட்டியில் இடம்பெறும். எனவே, டோண்ட் மிஸ் த சான்ஸ்! ஹேப்பி தீபாவளி!
(கற்போம்)
படங்கள்: எம்.விஜயகுமார், ரா.நரேந்திரன்.
