மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்

கல்வி

மாத்தி யோசி!

##~##

உங்கள் பார்வையில் மார்க்கெட்டிங் என்றால் என்ன என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கேள்வி கேட்டு அதற்கான பதிலை அனுப்பச் சொல்லி இருந்தேன். பல நூறு வாசகர்கள், கல்லூரி மாணவர்கள் போல கரெக்ட்டான நேரத்தில் பதில்களை அனுப்பி இருந்தார்கள். இ-மெயிலில் வந்த பதில்களைப் படித்து, அதில் சிறப்பாக இருந்த ஐந்து பதில்களைத் தேர்வு செய்து, இந்த இதழில் தந்திருக்கிறேன். பரிசுக்குத் தேர்வாகவில்லை என்றாலும் மற்ற வாசகர்கள் எழுதிய பதில்களை

www.vikatan.com-ல் தந்திருக்கிறேன், பார்த்துக்கொள்ளுங்கள்.

கடந்த இதழ்களில் மாஸ்லோ கொள்கை, எக்ஸ் ஒய் தியரி, டோட்டல் குவாலிட்டி மேனேஜ்மென்ட், 4 றிக்கள் என பல சீரியஸ் சமாச்சாரங்களைப் பார்த்தோம். இந்த வாரம் கொஞ்சம் விளையாட்டாக வேறு சில விஷயங்களைப் பார்ப்போம். முதலில், உங்களுக்கு மூன்று புதிர் கேள்விகள்.

1. கண்ணன் தன் அடுக்குமாடிக் கட்டடத்தின் பத்தாவது மாடியில் வசிக்கிறார். வெளியே போகும்போதும் வரும்போதும் லிஃப்ட் பயன்படுத்துகிறார். கீழே இறங்கும்போது கிரவுண்ட் ஃப்ளோரில் இறங்குகிறார். ஏறும்போது, அவரோடு வேறு யாராவது லிஃப்டில் பயணம் செய்தால், பத்தாவது மாடியில் இறங்குகிறார். தனியாகப் போனால், ஏழாவது மாடியில் இறங்கி, பத்தாவது மாடியில் இருக்கும் தன் அப்பார்ட்மென்ட்டுக்கு படியேறிப் போகிறார். ஏன்?

MBA - மூன்றெழுத்து மந்திரம்

2. கோயம்புத்தூரில் தனி பங்களாவில் வசித்து வந்தார் காளமேகம். ஒரு நாள் காலை, வீட்டிலிருந்து துர்நாற்றம் வரவே, அக்கம் பக்கத்தார் போலீஸில் புகார் செய்தார்கள். போலீஸ் கதவை உடைத்துப் பார்த்தால், முன் அறையில் மின்விசிறியில் கயிறு கட்டித் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார் அவர். யாரோ கழுவிவிட்டது போல் தரையில் ஏராளமாகத் தண்ணீர்.

சாதாரணமாக, நாற்காலி அல்லது ஸ்டூலில் ஏறி, கழுத்தில் கயிற்றை நெருக்கிக்கொண்டபின், நாற்காலி அல்லது ஸ்டூலைக் காலால் உதைத்துத் தள்ளினால்தான் தற்கொலை செய்துகொள்ள முடியும். ஆனால், காளமேகத்தின் அறையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. இது கொலையா? இல்லை தற்கொலையா?

MBA - மூன்றெழுத்து மந்திரம்

3. ஜெர்மனி நாடு, கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என்று இரு பகுதிகளாக இருந்தது. கிழக்கு ஜெர்மனி கம்யூனிஸ நாடு; மேற்கு ஜெர்மனி முதலாளித்துவ நாடு. 1961-ல் இரு நாடுகளுக்குமிடையே பெர்லின் சுவர் எழுப்பப்பட்டது. கிழக்கு ஜெர்மனியில் பல பொருட்களுக்குத் தட்டுப்பாடு. மேற்கு ஜெர்மனியிலிருந்த பலர், பொருட்களைக்  கிழக்கு ஜெர்மனிக்குக் கடத்தல் வியாபாரம் செய்தனர். இதைத் தடுக்க, மேற்கு ஜெர்மன் போலீஸார் தங்கள் எல்லையில் ஏராளமான போலீஸாரை நிறுத்தியிருந்தார்கள்.  

வில்லியம் தினமும் காலையில் மேற்கு ஜெர்மனியிலிருந்து கிழக்குப் பக்கம் சைக்கிளில் போவார்; மாலையில் திரும்புவார். தினமும் அவரை ராபர்ட் என்னும் போலீஸ்காரர் செக் பண்ணுவார். ராபர்ட்டுக்கு வில்லியம் மேல் சந்தேகம். ஆனால், தடயம் எதுவும் கிடைக்கவில்லை. பல வருடங்கள் ஓடின. ராபர்ட் பதவி ஓய்வுபெறும் நாள். அவர் வில்லியத்திடம் கேட்டார், 'நீங்கள் ஏதோ தினமும் கடத்தினீர்கள் என்பது எனக்குத் தெரிகிறது. ஆனால், என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த ரகசியத்தைச் சொல்லுங்கள். நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்.'

MBA - மூன்றெழுத்து மந்திரம்

வில்லியம் சொன்ன பதில் ராபர்ட்டை அசர வைத்தது. வில்லியம் அப்படி என்ன சொல்லியிருப்பார்?    மேற்சொன்ன இந்த மூன்று கேள்விகளுக்குமான விடை உங்கள் மனதில் மின்னலாக வந்து போயிருக்குமே! உங்கள் பதிலில் எது சரி என்று பார்ப்பதற்கு முன், என் விடையைச் சொல்லிவிடுகிறேன்.

1. கண்ணன் குள்ளமானவர். லிஃப்ட் பட்டனில், கீழே வரும்போது G-ஐ அழுத்துவார். கீழ்த்தளத்துக்கு வந்துவிடுவார். மேலே தனியாகப் போகும்போது, 8, 9, 10 ஆகிய பட்டன்கள் அவருக்கு எட்டாது. அவர் கைக்கு எட்டுகிற அதிகபட்ச எண் பட்டன் 7-தான்.

2. ரமேஷ் ஐஸ்கட்டியின் மேல் ஏறி, தன் கழுத்தில் கயிற்றைச் சுருக்கிக்கொண்டார். ஐஸ்கட்டி உருகிய தண்ணீர்தான் ஹாலில் இருந்தது.

3. வில்லியம் சொன்ன பதில்: 'நான் ஓட்டிக்கொண்டுபோகும் சைக்கிளை, தினமும் கிழக்கு ஜெர்மனியில் விற்றுவிடுவேன். என் பிஸினஸே இதுதான்.'

நீங்கள் நிச்சயமாக ஒரே ஒரு கேள்விக்காவது சரியான பதிலை சொல்லி இருப்பீர்கள். எனவே, நீங்கள் ஒரு ஜீனியஸ்தான். புத்திசாலிகளைக்கூடத் திணற வைக்கும் கேள்விகள் இவை. ஏன் தெரியுமா?

உதாரணத்துக்கு முதல் கேள்வியை எடுத்துக் கொள்வோம். சாதாரணமாக, கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, கேள்வியிலேயே ஏதாவது க்ளூ இருக்கும். அல்லது, கேள்வியில் இருக்கும் ஆதாரங்களை ஆராய்ந்தால், நூலிழை பிடிப்பது போல் தீர்வு கிடைக்கும். இந்தக் கேள்வியில், கண்ணன் குள்ளமானவர் என்பதற்கு க்ளூ ஒன்றுமே கிடையாது. அதேபோல், கீழே இறங்கும்போது கிரவுண்ட் ஃப்ளோரில் இறங்குவதற்கும், தனியாகப் போனால், ஏழாவது மாடியில் இறங்குவதற்கும், பொதுவான ஒரு காரணம் கண்டுபிடிக்கவே முடியாது. தனியாகப் போகாமல், வேறு யாரோடாவது லிஃப்டில் பயணம் செய்தால், அவர்கள் பட்டனை அழுத்துவார்கள்; கண்ணன் பத்தாம் மாடிக்கே போவார் என்று நினைத்தே பார்க்க முடியாது.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

இப்படி, க்ளூவே இல்லாமல், தர்க்கரீதியான (Logical) காரணங்கள் இல்லாமல், கேள்விகளுக்குப் பதில்களும், பிரச்னைகளுக்குத் தீர்வுகளும் கண்டுபிடிக்கும் முறை வித்தியாசச் சிந்தனை (Lateral thinking) என்று அழைக்கப்படுகிறது. ஐரோப்பாவில் இருக்கும் மால்டா (Malta) நாட்டைச் சேர்ந்த எட்வர்ட் டீ போனோ

(Edward de Bono) மனோதத்துவ மருத்துவர் டாக்டர் 1967-ல் இந்தக் கொள்கையைக் கண்டுபிடித்தார்.

இந்தக் கொள்கை என்ன சொல்கிறது? நம் எல்லோருக்குள்ளும் ஏராளமான கற்பனைத் திறமை ஓளிந்துகொண்டிருக்கிறது. பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது இந்தப் படைப்புத் திறன் அபாரமாகக் கை கொடுக்கும். ஆனால், பெரும்பாலான வேளைகளில் நாம் இந்தக் கற்பனா சக்தியைப் பயன்படுத்துவதில்லை. ஏன்?

MBA - மூன்றெழுத்து மந்திரம்

நம் மூளையில் இடது மூளை, வலது மூளை என்று இரண்டு பகுதிகள் இருக்கின்றன. இடது மூளை தகவல்களைச் சேகரித்து வைக்கிறது; எல்லா முடிவுகளையும் இந்தத் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே எடுக்கிறது. வலது மூளைக்கு தகவல்களைச் சேகரிப்பதில் ஆர்வம் கிடையாது. எனவே, அனுபவங்கள், ஞாபகங்கள் என்கிற கட்டுப்பாடுகளே இல்லாமல் புதுமையாகச் சிந்திக்கும், பிரச்னைகளைச் சந்திக்கும்.

நம் சமுதாயத்திலும், கல்வியிலும், இடது மூளைதான், ஞாபக அடிப்படையிலான அறிவுதான் வளர்க்கப்படுகிறது. இதனால், பிரச்னைகளைச் சந்திக்கும்போது, இடது மூளையை மட்டுமே பயன்படுத்துகிறோம். நாம் சந்தித்த அனுபவங்கள், எதிர்கொண்ட மனிதர்கள், கேட்ட விஷயங்கள், படித்த புத்தகங்கள் ஆகியவை தந்த அறிவின் அடிப்படையில் மட்டுமே தீர்வுகள் காண்கிறோம். வாழ்க்கைக்கு இரண்டு மூளைகளும் தேவை. இரண்டையும் பயன்படுத்துபவர்கள் வித்தியாசமாகச் செயல்படுகிறார்கள், பெரிய அளவில் வெற்றிகள் காண்கிறார்கள்.

பிஸினஸ் உலகிலும் இப்படி வெற்றிகண்ட வித்தியாசச் சிந்தனையாளர்கள் சிலரைச் சந்திப்போம்.  

ஹென்றி ஃபோர்டு:

1900 காலகட்டம். அமெரிக்காவில் பணக்காரர்கள் மட்டுமே வாங்கும் ஆடம்பர ஐட்டங்களாக இருந்த கார்களை சாதாரண மனிதனும் வாங்கும் விலையில் ஹென்றி ஃபோர்டு மாடல் டி (ஜி) கார் என அறிமுகம் செய்தார்.  

MBA - மூன்றெழுத்து மந்திரம்

ரிச்சர்டு பிரான்ஸன் (Richard Branson)

வித்தியாசம், தனித்துவம் என்றால் முதலில் பலர் எண்ணத்தில் வருவது இவர்தான். தன் கன்னி முயற்சியாக இசைத்தட்டு (Records) விற்பனை தொடங்கினார். அன்று இசைக் கம்பெனிகள் கொள்ளை லாபத்தில் இசைத்தட்டுகளை விற்றன.

பிரான்ஸன் குறைந்த விலையில் இசைத்தட்டுகளை வழங்கினார். தன் கடைகளில் இசைத்தட்டுகள் வாங்குவதை இளைஞர் / இளைஞிகளுக்கு சுக அனுபவமாக, பொழுதுபோக்காக மாற்றினார். வெர்ஜின் ஏர்லைன்ஸ், நிதி நிறுவனம் தொட்ட எல்லாத் துறைகளிலும், பிரான்ஸன் கண்டுவருவது தொடர் வெற்றி...          

இங்வர் காம்ப்ராத் (Ingvar kamprad)

இங்வர் காம்ப்ராத் ஃபர்னிச்சர் கடை தொடங்கினார். மேசை, நாற்காலி,  கட்டில் ஆகியவற்றை வீட்டுக்கு டெலிவரி செய்ய வாடிக்கையாளர்களிடம் அதிகப் பணம் வசூலிக்கவேண்டி வந்தது. காம்ப்ராத் Foldable Furnitureஎனப்படும் மடக்கு மேசை நாற்காலி, கட்டில்களை அறிமுகப்படுத்தினார். நாற்காலி, கட்டில் ஆகியவற்றின் கால்கள், நடுப்பலகை ஆகியவற்றைப் பிரித்துப்  பொட்டலமாக்கினார். கஸ்டமர்கள் தங்கள் கார்களில் இந்தப் பொட்டலங்களை எடுத்துக்கொண்டு போனார்கள். இக்கியா (lkea) உலகளாவிய நிறுவனமாக இருக்கிறது.                    

ஸ்டீவ் ஜாப்ஸ்!

MBA - மூன்றெழுத்து மந்திரம்

1950 காலங்களில் ஐ.பி.எம். கம்பெனி கம்ப்யூட்டர் உலகின் தனிக்காட்டு ராஜா. அப்போது கம்ப்யூட்டர் ஒரு பெரிய அறையையே நிறைக்கும் பெரிய அளவில் இருந்தது. கம்பெனிகள் மட்டுமே கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தின. வீடுகளில் பயன்படுத்தும் கருவியாக கம்ப்யூட்டர் மாறினால், மார்க்கெட் அசுரகதியில் வளரும் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் வித்தியாசமாகச் சிந்தித்தார். அவருடைய ஆப்பிள் கம்பெனி 1976-ல் தனிமனிதன் உபயோகிக்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களை, எல்லோரும் வாங்கும் விலையில் விற்பனைக்குக் கொண்டுவந்தது. இதேபோல் ஐபோன், ஐபாட், ஐபேட் என்று அசத்தலான வித்தியாசத் தயாரிப்புகள். இன்று உலகப் பெரும் கம்பெனிகளுள் ஆப்பிள் இரண்டாம் இடம்!  

கஸன்பாய் பட்டேல்!

1959-ல் லீவர் கம்பெனியின் தயாரிப்பான ஸர்ஃப் பவுடர்தான் நம்பர் 1. ஒரு கிலோ விலை 13 ரூபாய்க்கு விற்றது. அப்போதைய விலைவாசியில், பணக்காரர்கள் மட்டுமே ஸர்ஃப் வாங்க முடிந்தது. கிலோ மூன்று ரூபாய் விலையில் கஸன்பாய் பட்டேல் நிர்மா சோப் பவுடர் அறிமுகம் செய்தார். 1,000 கோடி விற்பனையைத் தாண்டும் நிர்மா குழுமம் உருவானது.

சின்னி கிருஷ்ணன்!  

ஷாம்பு என்றாலே பணம் படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றிந்த காலமது. காரணம், பாட்டிலில் 100 மில்லியை 40 ரூபாய் தந்து வாங்க வேண்டும். இதனால் சாதாரண மக்களுக்கு ஷாம்பு என்பது கனவாகவே இருந்தது. கடலூரில் கணித ஆசிரியராக இருந்த சின்னி கிருஷ்ணன் சிங்கிள் யூஸ் பாக்கெட்டுகளாக வெல்வெட் ஷாம்பூவை உருவாக்கினார். ஒரு ரூபாய் விலைக்கு சாஷேக்களை விற்பனை செய்தார்.  

இப்படி வித்தியாசமாக யோசிப்பது பிஸினஸ் வெற்றிக்கு அடிப்படை. வித்தியாசச் சிந்தனை பிறவிக் குணமல்ல, பயிற்சிகளின் மூலம் நாம் எல்லோருமே எளிதில் வளர்த்துக்கொள்ளக்கூடிய திறமை என்று எட்வர்ட் டீ போனோ நிரூபித்திருக்கிறார். அவர் எழுதியிருக்கும் சில புத்தகங்கள் இதோ:  

1. Lateral Thinking
2. De Bono’s Thinking Course
3. How to have creative ideas: 62 Games to develop the mind

இந்தப் புத்தகங்களில் தந்திருக்கும் பயிற்சிகளைச் செய்யுங்கள். உங்கள் வித்தியாசச் சிந்தனைத் திறமை வளர்வதை நீங்களே புரிந்துகொள்வீர்கள். எட்வர்ட் டீ போனோவின் வித்தியாசச் சிந்தனை பற்றி இன்னும் தெரிந்துகொள்ள இந்த லிங்க்கை பாருங்கள். https://www.youtube.com/watch?v=eoUjYhxQmDc

(கற்போம்)
படங்கள்:  ரா.நரேந்திரன்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்