மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

எஸ்.எல்.வி.மூர்த்தி

##~##

'உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்.' தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல, கம்பெனிகளுக்கும் இந்தப் பாடல் வரிகள் கணகச்சிதமாகப் பொருந்தும் என்று நிர்வாக மேதைகள் சொல்கிறார்கள். ஏராளமான நிறுவனங்கள் தங்களைத் தாங்களே எடை போடவும், முடிவுகள் எடுக்கவும் 'ஸ்வாட் ஆராய்ச்சி’ (SWOT Analysis) என்ற முறையைப் பயன்படுத்துகின்றன. SWOT என்பது சுருக்கப் பெயர். இதன் ஒவ்வொரு எழுத்தும் ஒரு சொல்லைக் குறிக்கும்.

எஸ் என்பது  ஸ்ட்ரெங்த், அதாவது பலம். டபிள்யூ என்பது வீக்னஸ், அதாவது பலவீனம். ஓ என்பது ஆப்பர்ச்சூனிட்டீஸ், அதாவது வாய்ப்புகள். டி என்பது த்ரட்ஸ், அதாவது அபாயம்.

ஆல்பர்ட் ஹம்ப்ரே (Albert Humphrey) என்னும் பேராசிரியர் அமெரிக்காவின் புகழ் பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். அவர் உருவாக்கிய நிர்வாகக் கொள்கைதான் 'ஸ்வாட்’.

1949 முதல் பல அமெரிக்க நிறுவனங்கள் 10 ஆண்டு, 20 ஆண்டுத் திட்டங்கள் தீட்டி அவற்றைச் செயல்படுத்தி வந்தன. இந்தப் பணியை, நெடுநாள் திட்டமிடுதல் (Long-range Planning)என்று அழைத்தார்கள். இது வருங்காலத்தைக் கணிக்கும் வேலை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

MBA - மூன்றெழுத்து மந்திரம்

1. தொழில்நுட்பத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும், அவை நம் தொழிலை எப்படி  பாதிக்கும் என்று எடை போட வேண்டும்.

2. உலகப் பொருளாதாரமும், அமெரிக்கப் பொருளாதாரமும் எப்படி வளரும் என்று யூகிக்க வேண்டும்.

3. போட்டியாளர்கள் என்ன செய்வார்கள் என்று கணிக்க வேண்டும். இவற்றுக்கு ஏற்றபடி வியூகங்கள் வகுக்க வேண்டும்.

4. வியூகங்களைச் செயல்படுத்த பணம், ஆட்கள், கட்டமைப்பு ஆகியவை எவ்வளவு தேவை என்று திட்டமிட்டு, அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

1949-ல் நெடுநாள் திட்டமிடுதல் தொடங்கிய பல கம்பெனிகள் தங்களை எடை போட்டுப் பார்த்துக் கொண்டன.  ஏமாற்றம்! அவர்கள் எட்ட நினைத்தவை, சிகரங்கள்; தொட்டு நின்றவை, குன்றுகள். ஏன்? ஏன்? ஏன்?

அவர்கள் மனம் நிறையக் கேள்விகள். விடை காணத் துடித்தார்கள். கூர்மையான அறிவு, நிர்வாகத் திறமை, விடை கிடைக்கும் வரை தேடிக்கொண்டேயிருக்கும் ஆராய்ச்சி உள்ளம், உழைக்கத் தயங்காத மனம், எடுத்த வேலைகள் அத்தனையையும் கனகச்சிதமாக முடிக்கும் பழக்கம் - இவை அத்தனையும் கொண்டவரே தங்களுக்குத் தீர்வு தர முடியும் என்று உணர்ந்த இந்த கம்பெனிகள் வந்துசேர்ந்த இடம் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம். சந்தித்த மேதை ஆல்பர்ட் ஹம்ப்ரே.  

MBA - மூன்றெழுத்து மந்திரம்

ஆல்பர்ட் ஹம்ப்ரே தன் கீழ் திறமைசாலிகள் கொண்ட குழுவை அமைத்தார். இந்தக் குழு 1,100 கம்பெனிகளின் பத்து வருட வரவு செலவுக் கணக்குகளை ஆராய்ந்தது. இந்த நிறுவனங் களின் 5,000 மேனேஜர்களை, குறிப்பாக நெடுநாள் திட்டமிடுதல் பணியைச் செய்து கொண்டிருந்தவர்களை நேரடிப் பேட்டி கண்டது. வரவு செலவுக் கணக்குகளும், நேரடிப் பேட்டிகளும் தந்த விவரங்களை நிபுணர் குழு அலசி ஆராய்ந்தது. பத்து வருடங்கள் ஆராய்ச்சி தொடர்ந்தது. 1970-ல் ஆல்பர்ட் ஹம்ப்ரே, தன் கண்டுபிடிப்பை ஸ்வாட் ஆராய்ச்சி என்னும் பெயரில் அறிவித்தார்.

ஆல்பர்ட் ஹம்ப்ரேயின் ஆராய்ச்சிபடி, தங்கள் பலங்களைப் பயன்படுத்தும் துறைகளில் இறங்கியிருந்த கம்பெனிகள் அவர்கள் நிர்ணயித்த இலக்குகளை எட்டியிருந்தார்கள். சில நிறுவனங்களை அவர்களுடைய பலவீனங்கள் படுகுழியில் இறக்கியிருந்தன. இதற்கொரு தீர்வாக ஹம்ப்ரே சொன்ன 'ஸ்வாட்’ ஆராய்ச்சியை மேனேஜ்மென்ட் உலகம் கைதட்டி வரவேற்றது.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

புதிய பொருட்களை அறிமுகம் செய்தல்; புதிய திட்டங்களில் முதலீடு; போட்டியாளர்களின் யுக்திகளை எடை போடுதல்;  முக்கிய பிரச்னைகளில் முடிவெடுத்தல் போன்ற பல சந்தர்ப்பங்களில் இன்று 'ஸ்வாட்’ ஆராய்ச்சி ஏராளமான கம்பெனிகளால் பயன் படுத்தப்படுகிறது.

பிரமாண்ட கம்பெனிகள் மட்டுமல்ல, சிறுதொழில் செய்வோரும், தொழில்முனைவர் களும் பயன்படுத்தும் முறையில் எளிமையாக இருப்பதுதான் 'ஸ்வாட்’-ன் மிகப் பெரிய பலம்.    

நீங்கள் 'ஸ்வாட்’ ஆராய்ச்சியை எப்படிப் பயன்படுத்தலாம்? ஒரு உதாரணம். உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் சாஃப்ட்வேர் கம்பெனி வருகிறது. அந்த கம்பெனி ஊழியர்களின் உணவுத் தேவைகளுக்காக கேன்டீன்  தொடங்கலாமா என்று சிந்திக்கிறீர்கள். நீங்கள் இப்போது ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறீர்கள். வேலையை விட்டுவிட்டு உணவு விடுதி தொடங்கும் முயற்சி ஒரு ரிஸ்க். முடிவெடுக்க என்ன செய்ய வேண்டும்? கொஞ்சம் 'ஸ்வாட்’ ஆராய்ச்சி செய்து பார்த்தால் தெளிவான பதில் கிடைத்துவிடும்!    

பலங்கள்!

சுவையாகச் சமைக்கும் திறமை, ஓட்டல் போன்ற உணவுத் தயாரிப்பு நிறுவனங்களில் அனுபவம்.

சமையல்காரர்களையும், பிற ஊழியர்களையும் கட்டி மேய்க்கும் நிர்வாகத் திறமை.

உணவு பரிமாறும் கான்ட்ராக்ட்டை சாஃப்ட்வேர் கம்பெனியிடம் பெறும் செல்வாக்கு, தொடர்புகள்.   பலவீனங்கள்!

15 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். கையில் 5 லட்சம் ரூபாய்தான் இருக்கிறது.

வாய்ப்புகள்!

இந்த சாஃப்ட்வேர் கம்பெனியைத் தொடர்ந்து பிற நிறுவனங்களும் அதே ஏரியாவில் வரும் சாத்தியங்கள்.  உணவு விடுதியோடு, ஊழியர்களின் வீட்டு விசேஷங்களிலும் உணவு சப்ளை செய்யும் வாய்ப்பு. கம்பெனிக்கான ஸ்டேஷனரி, ஊழியர்களின் குடும்பத் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு!  

அபாயம்!

இந்த பிஸினஸ் நீடிக்குமா? சாஃப்ட்வேர் கம்பெனி தங்களுக்காகவே கேன்டீன் நடத்திக்கொள்ள முயற்சிப்பார் களா? லாபம் வருமா? பிஸினஸ் சூடு பிடித்தவுடன் போட்டியாளர்கள் களத்தில் நுழைவார்களே, அவர்களை எப்படிச் சமாளிப்பது? நீங்கள் பிஸினஸ் தொடங்க முயற்சிப்பது வெளியே உங்கள் வேலை போய்விடும். அதற்கு தயாரா?

இப்படி உங்கள் பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள், அபாயங்கள் ஆகியவற்றை எடை போடுங்கள். என்ன முடிவு எடுக்கலாம் என்பதை யாரிடமும் கேட்காமல் நீங்களே தெளிவாக எடுத்துவிட முடியும்.

பிஸினஸ் தொடர்பான முடிவுகள் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும், புத்திசாலித்தனமான தீர்வுகள் காண 'ஸ்வாட்’ ஆராய்ச்சி உதவும். எப்படி?  

நீங்கள் பி.இ. படித்திருக்கிறீர்கள். சாஃப்ட்வேர் கம்பெனியில் ரூ.20,000 சம்பளம். ஆனால், எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்று ஆசை. இதற்கு 'ஸ்வாட்’ ஆராய்ச்சியை எப்படி பயன்படுத்தலாம்?  

MBA - மூன்றெழுத்து மந்திரம்

என் பலங்கள்!

1. ஆங்கிலத்தில் எழுதும் திறமை.

2.பள்ளியிலும், கல்லூரியிலும் பல நிகழ்ச்சிகளை நடத்திய தலைமைக் குணம்.

3. பொறியியல் / சாஃப்ட்வேர் துறையைவிட  மேனேஜ்மென்ட் துறையில் ஈடுபாடு.

செய்ய வேண்டியது: ஆங்கிலத் திறமை, தலைமைக் குணங்களை பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும். மேனேஜ்மென்ட் தொடர்பான புத்தகங்கள், பத்திரிகைகள் படிக்க வேண்டும்.

என் பலவீனங்கள்!

1. ஆங்கிலத்தில் உரையாடும் திறமை இல்லாமை.

2. கணக்கைக் கண்டால் பயம்.

3. சேமிப்பு இரண்டு லட்சம் ரூபாய்தான் இருக்கிறது,

நான் செய்ய வேண்டியது: நண்பர்களிடம் ஆங்கிலத்தில் பேசிப் பழக வேண்டும்.

Conversational English வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெறவேண்டும். பேச்சுக் கலை கற்றுத் தரும் Public Speaking  கோர்ஸில் சேர வேண்டும். வங்கிகளில் கல்விக் கடன் பற்றி விசாரிக்க வேண்டும்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

என் வாய்ப்புகள்!

1. எம்.பி.ஏ. படித்து முடித்தால் சுமார் 70,000 ரூபாய் சம்பளம்.

2. சாஃப்ட்வேரைவிட, நிர்வாகத் துறை வேலைகளில் அதிகப் பதவி உயர்வு.

நான் செய்ய வேண்டியது: இன்னும் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்று பார்க்க வேண்டும்

அபாயங்கள்!

எம்.பி.ஏ. படித்தபின் வேலை கிடைக்கா விட்டால்?

நான் செய்ய வேண்டியது: ரிஸ்க் எடுத்தால் ஜெயிக்க முடியும். முடிவு கிடைத்ததா? நீங்கள் தீர்வு காணத் திண்டாடும் பிரச்னை ஏதாவது இருக்கிறதா? 'ஸ்வாட்’ ஆராய்ச்சியைப் பயன் படுத்துங்கள். ஏதாவது சந்தேகமா? என்னைக் கேளுங்கள்.

(கற்போம்)

படம்: வி.ராஜேஷ்.

ஒரு பயிற்சி!

மாத்தி யோசிப்போம்!

மாத்தி யோசிப்பது பற்றி கடந்த இதழில் பார்த்தோம். பிஸினஸ் பிரச்னைக்குத் தீர்வு காண எப்படி மாத்தி யோசிக்கலாம்? இதோ உங்களுக்கு ஒரு சின்ன பயிற்சி.    

ஸ்ரீபெரும்புதூரில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஒரு கம்பெனியில் ஃபைனான்ஸ் எக்ஸிகியூட்டிவ்வாக வேலைக்குச் சேருகிறீர்கள். உங்கள் கம்பெனியில் 500 தொழிலாளர்கள். ஒவ்வொரு மாதமும்

30 கோடிக்கு ரூபாய்க்கு மூலப் பொருட்கள் வாங்குகிறார்கள். மாத விற்பனை 80 கோடி ரூபாய். ஃபைனான்ஸ் மேனேஜர் திடீரென உங்களைக் கூப்பிடுகிறார்.

'நீங்கள் மாதம் லட்சம் ரூபாய் அதிக லாபம் வரும்படி சிறிய மாற்றம் ஏதாவது செய்ய வேண்டும். இதற்கு மூன்று நிபந்தனைகள்:

1. விற்பனைப் பொருளின் விலையைக் கூட்ட முடியாது.

2. வாங்கும் பொருட்கள், தொழிலாளிகள் சம்பளம் ஆகியவற்றைக் குறைக்க முடியாது.

3. அடுத்த மாதமே எனக்கு ரிசல்ட் தெரிய வேண்டும்'' என்றவர் ஒரு பேப்பரை நீட்டினார். அதிலிருந்த விவரங்கள்:    

1. தொழிலாளர் யூனியன் ஸ்ட்ரைக் செய்யத் திட்டமிட்டு வருகிறது.

2. நம் சப்ளையர்கள் சென்னையில் அம்பத்தூர், கிண்டி, பெங்களூரு, டெல்லி, பரோடா ஆகிய இடங்களில் இருக்கிறார்கள்.

3. சப்ளையர்கள் நமக்கு 60 நாள் கடன் வசதி தருகிறார்கள்.

4. ஜெனரல் மேனேஜர் மிகத் திறமைசாலி. அவர் போட்டிக் கம்பெனியில் சேரப் போவதாக வதந்திகள்.  

5. வங்கி, கம்பெனிக்குத் தரும் கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

இது போட்டியல்ல, பயிற்சிதான். இந்த கேள்விக்கான உங்கள் பதிலை 100 வார்த்தைகளுக்கு மிகாமல் pdf word document attachment – ஆக எங்களுக்கு  அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி:mba@vikatan.com பதில் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 08.12.2012