மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

படம்: ரா.நரேந்திரன்.

மென்டரிங்:

யார் உங்கள் குரு?

##~##

நாம் எல்லோருமே வேலையில் சேரும்போது, படிப்படியாகப் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கிறோம். ஆனால், பதவி ஏணியில் மேலே ஏறுவதற்கு,  அறிவு மட்டுமே போதாது. நீங்கள் அலுவலகத்தில் இரண்டறக் கலக்க வேண்டும் என்கிறார்கள் மேனேஜ்மென்ட் மேதைகள்.

இப்படி இரண்டறக் கலப்பதற்கு உங்களுக்கு என்னென்ன தெரிய வேண்டும்? இதற்கான பட்டியல் கொஞ்சம் நீளமானது என்பதால் தனியாக பெட்டிச் செய்தியில் தந்திருக்கிறேன், படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

ஆளுமை என்றால் என்ன? ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் ஆளுமை உண்டு. அவனுடைய எண்ணங்கள், நடத்தை, அணுகுமுறை, செயல் ஆகியவை ஒவ்வொன்றும் அவனுடைய ஆளுமையின் வெளிப்பாடுகள். இந்த ஆளுமையால்தான், தனித்தன்மை, தனிப்பட்ட அடையாளம், தனித்துவ மேம்பாடு ஆகியவை வருகின்றன.      

'சசி சொன்னா நம்பலாம்', 'சுந்தர் நிச்சயமா இந்தத் தப்பு செய்திருக்கமாட்டான்', 'முரளி பொய் சொல்லுவான். ஆனால், திருடமாட்டான்' - இப்படி ஒவ்வொருவர் பற்றியும் நமக்குள் ஓர் இமேஜ் இருக்கும்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்
MBA - மூன்றெழுத்து மந்திரம்

தனிமனிதர்களைப் போலவே, நிறுவனங் களுக்கும் ஆளுமை உண்டு. நிறுவனத்தின் லட்சியங்கள், அடிப்படைக் கொள்கைகள், சித்தாந்தங்கள் ஆகியவைதாம் அவற்றின் ஆளுமை.

'த இந்து’ என்றால் உண்மைச் செய்தி; 'டிவிஎஸ்’ என்றால் நம்பிக்கை; 'சரவணா ஸ்டோர்ஸ்’ என்றால் சகாய விலை - என்றெல்லாம் சொல்கிறோம். காலம் காலமாக, இந்த நிறுவனங்கள் கடைப்பிடித்து வரும், பொதுமக்கள் மனதில் ஆழப் பதிந்திருக்கும் பிம்பங்கள் (Images) இவை.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

ஆளுமை விவரங்களை நிறுவனங்கள், பழக்கப்படுத்துதல் என்னும் பயிற்சி மூலமாகப் புதுப் பணியாளர் களுக்குக் கற்றுத் தருகிறார்கள். முக்கிய அதிகாரி களோடு சந்திப்புகள், அவர்களின் பேச்சுகள், கம்பெனித் தொழிற்சாலைகள் / கம்பெனிக் கிளைகள் / கம்பெனிப் பிரதிநிதிகள் விசிட் போன்ற பல்வேறு முறைகளில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.  

ஊழியர்கள் வேலைக்குச் சேர்ந்தபின், தங்களுடைய செயல்பாடுகள் குறித்து திறந்த மனதோடு பகிர்ந்துகொள்வதன் மூலம், நிறுவனங்கள் இந்தப் பயிற்சியைத் தொடர்கின்றன. புதிய ஊழியர்கள் நிறுவனத்தோடு தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். தங்கள் வேலை களையும் கச்சிதமாகச் செய்கிறார்கள். இது போதுமா?

இன்றைய உலகம் வேகமானது. தொழில்நுட்பத்தில் நொடிக்கு நொடி மாற்றங்கள். இவற்றுக்கு ஏற்றபடி அறிவையும் திறமைகளையும் ஊழியர்கள் வளர்த்துக்கொண்டேயிருக்க வேண்டிய கட்டாயம். இல்லாவிட்டால், வேலையையே இழக்கும் நிலை. ஓர் உதாரணம் சொல்கிறேன்.  

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிஸினஸ் நிறுவனங்களில் கணக்குப் போட காம்ப்டோமீட்டர்களை (Comptometers)   பயன்படுத்தினார்கள். இந்த இயந்திரங்களை இயக்க தனிப் பயிற்சி தேவை. கம்ப்யூட்டர் பள்ளிகளைப்போல் காம்ப்டோமீட்டர் பயிற்சிப் பள்ளிகள் அப்போது மிகப் பிரபலம்.

1940-களில் டாபுலேட்டர் (Tabulator) என்னும் கருவி புழக்கத்துக்கு வந்தது. காம்ப்டோமீட்டர்கள் மெள்ள மெள்ள மறைந்தன. டாபுலேட்டர் இயக்கக் கற்றுக்கொண்ட காம்ப்டோமீட்டர் ஆபரேட்டர்கள் தங்கள் வேலைகளைத் தக்க வைத்துக்கொண்டார்கள். மற்றவர்களின் சீட்டை கம்பெனிகள் கிழித்தன.  

1960 காலகட்டத்தில் கம்ப்யூட்டர்கள், டாபுலேட்டர்களின் இடத்தைப் பிடித்தன. கம்ப்யூட்டர் கற்றவர்களின் வேலை மட்டுமே நீடித்தது.

எனவே, மாறும் தொழில்நுட்பங்களில் பயிற்சி பெறுவது ஊழியர்களுக்கும், பயிற்சி கொடுப்பது நிறுவனங்களுக்கும், காலத்தின் கட்டாயமாகிவிட்டது. பயிற்சி வகுப்புகள், நிபுணர்களோடு சந்திப்புகள் எனப் பலவகை களில் கம்பெனிகள் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றன.

1970 முதல் அமெரிக்காவில், விமானங்கள் தயாரிக்கும் லாக்ஹீட் நிறுவனம், கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் ஹூலட் பக்கார்ட், அக்கவுன்டிங் நிர்வாக ஆலோசனை ஆகிய துறைகளில் முன்னணியில் நிற்கும் டெலாய்ட் அண்ட் ட்ய்ஷ் (Deloitte & Touche), அமெரிக்க விமானப்படை ஆகியோர் பயிற்சிக்காக கண்டுபிடித்த வழி, Mentoring என்கிற வழிகாட்டுதல் முறை.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

மென்டரிங் என்றால் என்ன? மென்டர் என்ற வார்த்தை ஆங்கில அகராதிக்கு எப்படி வந்தது என்று பார்த்தாலே இந்தத் தத்துவத்தின் அர்த்தம் புரியும்.

நம் நாட்டு ராமாயணம், மகாபாரதம் போல், ரோம் நாட்டின் முக்கிய இதிகாசம் இலியாத்

(Iliad). கி.மு. 800 காலகட்டத்தில் ஹோமர் என்னும் கவிச் சக்ரவர்த்தி உருவாக்கிய மாபெரும் காவியம். இதன் கதாநாயகன், கிரேக்க நாட்டு அரசன் ஒடிஸஸ் (Odysseus). ட்ராய் (Troy) என்னும் அண்டை நாட்டோடு போருக்குப் புறப்படுகிறான்.

ஒடிஸஸின் மகன் டெலிமாக்கஸ் சின்னக் குழந்தை. தனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், இளவரசன் அரசுக் கட்டில் ஏறவேண்டுமே? அதற்கு அவன் கல்வி, போர்முறை, அரசாட்சி ஆகியவற்றில் தேர்ச்சி பெறவேண்டாமா? மென்டர் (Mentor) என்ற தன் நண்பனிடம் மகனை ஒப்படைக்கிறான்.

ட்ரோஜன் யுத்தம் என்று அழைக்கப்படும் கிரேக்க - ட்ராய் யுத்தம் பத்து வருடங்கள் நடக்கிறது. வெற்றி வீரனாக ஒடிஸஸ் திரும்பும்போது அறிவும் வீரமும் கொண்ட மகன் டெலிமாக்கஸ் காத்திருக்கிறான். அவன் அறிவையும், திறமைகளையும் பட்டை தீட்டியவர் மென்டர் அல்லவா? இதிலிருந்துதான், வழிகாட்டிகள் துணையால் அறிவை வளர்க்கும் முறைக்கே மென்டரிங் என்னும் சொல் பிறந்தது.

நிறுவனத்தில் அனுபவம்கொண்ட ஓர் ஊழியர் மென்டராக இருக்கலாம். இவர் நமது உயரதிகாரியாகத்தான் இருக்க வேண்டியதில்லை. வேலை தொடர்பான சந்தேகங்கள், நிறுவனத்தில் முக்கியமானவர்களிடம் பழகும் முறை, கம்பெனி யின் எழுதப்படாத சட்டங்கள், ஏன் வேலைக் கடமைகளுக்கும் சொந்த வாழ்க்கைக்குமிடையே உரசல் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது எனப் பல பிரச்னைகளில் மென்டர்கள் உதவிக்கரம் தருகிறார்கள்.  

இன்ஃபோசிஸ், விப்ரோ, காக்னிசன்ட் டெக்னாலஜீஸ், கோத்ரெஜ், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா குழுமம் போன்றோர் மென்டரிங் தத்துவத்தைக் கடைப்பிடிப்பவர்கள். வேலையில் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேறவும், நீங்கள் ஒரு மென்டரைத் தேர்ந்தெடுங்கள்.

உங்களுக்குச் சரியான மென்டரை எப்படித் தேர்ந்தெடுப்பது? வழிகாட்ட இதோ வருகிறார் ஜாக் கான்ஃபீல்ட் (Jack Canfield).இவர் லேசுப்பட்ட ஆளில்லை. சுயமுன்னேற்றத் துறைப் பயிற்சியில் உலகிலேயே நம்பர் 1 ஆக இருப்பவர். Chicken Soup for the soul என்னும் பொதுத் தலைப்பில் இவர் எழுதியிருக்கும்

200 புத்தகங்கள் 40 மொழிகளில் வெளியாகி, 12 கோடி புத்தகங்களுக்கும் அதிகமாக விற்பனையாகி இருக்கின்றன. சொடுக்குங்கள் www.youtube.com/watch?v=QEPtqx90grI. உங்கள் முன் தோன்றுவார் ஜாக் கான்ஃபீல்ட்.

(கற்போம்)

MBA - மூன்றெழுத்து மந்திரம்