MBA - மூன்றெழுத்து மந்திரம்

கார்ப்பரேட் உலகில் பெண்கள்!

ஜனவரி 2012. அமெரிக்காவின் சன்னிவேல் நகரத்தில் உள்ள யாஹூ கார்ப்பரேஷன் தலைமைச் செயலகத்தில் கம்பெனி இயக்குநர்கள் கவலையோடு உட்கார்ந்திருக்கிறார்கள். 2008-ல் வருமானம் 7,208 மில்லியன் டாலர்கள். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து சறுக்கல். 2011-ல் வருமானம் வெறும் 4,984 மில்லியன் டாலர்கள் மட்டுமே.
##~## |
அப்போது சி.இ.ஓ.வாக இருந்த ஸ்காட் தாம்ப்ஸனுக்கு இந்தத் திறமை இல்லை. எனவே, புதிய சி.இ.ஓ.வுக்கான தேடல் தொடங்கியது.
ஜூலை 16, 2012. மரிஸ்ஸா மேயர் (Marissa Mayer) என்னும் புதிய சி.இ.ஓ. நியமிக்கப்படுகிறார்.அமெரிக்க கார்ப்பரேட் உலகம் அதிசயிக்கிறது. ஏன் தெரியுமா? மரிஸ்ஸா 37 வயதுப் பெண்.
ஹ்யூலட் பக்கார்ட் (Hewlett Packard) நிறுவனம் 1939-ல் நிறுவப்பட்ட நிறுவனம். கம்ப்யூட்டர் துறையில் முன்னோடி நிறுவனம்; தொழில்நுட்பத்தில் உலக நிறுவனங்களுக்கு வழிகாட்டி. 2006 முதல் இந்நிறுவனத்தில் பல பிரச்னைகள். செப்டம்பர் 2010 முதல் செப்டம்பர் 2011 வரையிலான 13 மாதங்களில் மூன்று சி.இ.ஓ.க்கள் தங்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார்கள். கம்பெனியின் எதிர்காலமே கேள்விக்குறியானது. இந்த இருளில் நம்பிக்கை விளக்கேற்ற, மெக் விட்மேன் (Meg Whitman) என்னும் பெண்ணுக்கு ஹ்யூலட் பக்கார்ட் நிறுவனம் சி.இ.ஓ. ஆகுமாறு அழைப்பு விடுத்தது.
போட்டோகாப்பி எடுக்கும் துறையில் ஜெராக்ஸ் நிறுவனம் ஒரு தனிக்காட்டு ராஜா. 1906-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 2000-ம் ஆண்டு முதல் நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்தது. தன் முதலீட்டாளர்களுக்கும், அரசாங்கத்துக்கும் தந்த கணக்குகளில் பல தில்லாலங்கடி வேலைகள் வேறு. இந்நிறுவனத்தை யார் காப்பாற்றுவது என பலரும் அபயக்குரல் தந்தவேளையில், இந்நிறுவனத்தைக் கைதூக்கிவிட வந்தவர் ஒரு பெண் சி.இ.ஓ.தான். அவர் பெயர், உர்ஸுலா பர்ன்ஸ் (Ursula Burns).
ஆண் சி.இ.ஓ.க்கள் சாதிக்க முடியாததை இந்தப் பெண்கள் சாதித்துக்காட்டினார்கள். உலகமே அவர்களைப் பாராட்டி கை தட்டுகிறது. ஆனால், ஒரே ஒரு மனிதர் மட்டும் வருத்தப்பட்டார். அவர் - ஜார்ஜ் கில்டர் (George Gilder). யார் இவர்?
ஜார்ஜ் கில்டர் அமெரிக்காவின் அறிவுஜீவி, எழுத்தாளர், பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப மாற்றங்களைக் கணிப்பதில் மாமேதை. இன்டர்நெட் கலாசாரம் சமுதாயத்திலும், பிஸினஸிலும் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களைச் சரியாகக் கணித்தவர். இத்தனை முற்போக்குச் சிந்தனைகொண்டவர் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கடைந்தெடுத்த பிற்போக்குவாதியாக இருந்தார். அது - பெண்களுக்குச் சம உரிமை கொடுப்பது.

1970-களில், பெண்கள் பற்றி கில்டர் தெரிவித்த கருத்துக்கள் என்ன தெரியுமா?
பெண்களின் கடமை குழந்தைகள் பெறுவதும், குடும்பத்தை நிர்வகிப்பதும்தான். வேலை பார்க்கும் இடங்களிலும், குடும்பம் தாண்டிய எல்லா இடங்களிலும் ஆண்கள் கற்பனாசக்தியோடு பணியாற்றுவார்கள். உலக வரலாற்றின் எல்லாக் காலகட்டங்களிலும், பெண்களைவிட ஆண்களே மேலானவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.எதிர்காலத்திலும், இதுதான் உண்மை.
கில்டரின் கருத்துக்கள் ஆண் ஆதிக்கத்தின் ஆணவக் குரலாக இருக்கலாம். ஆனால், காலம் காலமாகச் சமுதாயத்தில் நிலவிக்கொண்டிருந்த கருத்துக்களைத்தான் அவர் பிரதிபலித்தார்.
ஆதிகாலம் தொட்டே ஆண்களுக்கு பெண்கள் சமமாகக் கருதப்படவில்லை. இதனை எதிர்த்து 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பெண் சம உரிமை இயக்கங்கள் உலகின் பல பகுதிகளில் தோன்றின. இவர்களின் கடும் முயற்சியால், பெண்களுக்கு ஓட்டுரிமையும், பெற்றோர் சொத்தில் உரிமையும் கிடைத்தன; கல்விச் சாலைகளின் கதவுகள் திறந்தன. கல்வி தந்த திறமையால், வேலை பற்றிய பெண்களின் கண்ணோட்டம் மாறத் தொடங்கியது. குடும்பப் பொறுப்பில் கட்டுப்பட்டிருந்த பெண்கள், கல்வி அறிவு பெற்றபிறகு நெடுநாள் நீடிக்கும் வேலைகளைத் தேடினார்கள்; தங்கள் படிப்புக்கும், உழைப்புக்கும் ஏற்ற சம்பளத்தை எதிர்பார்த்தார்கள்.

முக்கியமாக, அலுவலகங்களில், உழைப்பைவிட மூளையைப் பயன்படுத்தும் பணியாளர்கள் தேவைப்பட்டார்கள். ஒயிட் காலர் ஒர்க்கர்ஸ் (White collar workers) என அழைக்கப்படும் இந்த வேலையில் கல்வியறிவு பெற்ற ஏராளமான பெண்கள் சேர்ந்தார்கள்.
ஆனால், அவர்களுக்கு ஆண்களைவிடக் குறைவான சம்பளம், உத்தியோக உயர்வு மறுப்பு எனப் பல வேறுபாடுகள் இருந்ததால், இதனை ஒழித்துக் கட்ட பெண் உரிமை இயக்கங்கள் போராடத் தொடங்கின. விளைவு, ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அமைப்பான பன்னாட்டுத் தொழிலாளர் நிறுவனம்
1951ல் Equal Remuneration Convention என்னும் சர்வதேச மாநாடு நடத்தியது. ஒரே வேலை செய்யும் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஊதியத்தில் வித்தியாசம் இருக்கக்கூடாது; ஒரே சம்பளம்தான் தரவேண்டும் என்பது இந்த மாநாட்டு முடிவு. மொத்த 183 ஐ.எல்.ஓ. உறுப்பினர்களில் 168 நாடுகள் இதற்கு சம்மதித்துக் கையெழுத்திட்டன.
மாநாட்டு ஒப்பந்தம் ஒப்புக்கொள்ளப்பட்டு அறுபது ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றைக்கு பல நிறுவனங்களில் பெண்கள் சி.இ.ஓ.களாக இருக்கிறார்கள்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும், பிஸினஸ் உலகில் ஆண்களுக்கு சரிசமமான ஓர் இடத்தைப் பெண்கள் அடைந்துவிட்டார்களா என்றால் இல்லை! கிரான்ட் தார்ன்ட்டன் இன்டர்நேஷனல் (Grant Thornton International) லண்டனைத் தலைமையகமாகக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் அமைப்பு. ஒவ்வொரு வருடமும் இந்நிறுவனம் இன்டர்நேஷனல் பிஸினஸ் ரிப்போர்ட் என்னும் ஆராய்ச்சி அறிக்கையை வெளியிடுகிறது. அனைவரும் ஏற்றுக்கொள்ளும் இவ்வறிக்கையில் (2012-க்கானது) சொல்லப்பட்டுள்ள முக்கிய கண்டுபிடிப்புகள்:
உலகின் 10 சதவிகித கம்பெனிகளில் மட்டுமே பெண்கள் சி.இ.ஓ.- களாக இருக்கிறார்கள். முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும் (30%), தாய்லாந்து (29%), இத்தாலி (24%), அர்ஜென்டினா (23%) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பெறுகின்றன. ஆனால், நம் இந்தியாவோ வெறும் 10 சதவிகிதம்தான்!
உலக அளவில், சீனியர் மேனேஜர்களில் 21 சதவிகிதம் பெண்கள். இந்தப் பட்டியலில் ரஷ்யா (46% ) முதலிடம் பிடிக்கிறது. அடுத்தடுத்த இடங்களை போட்ஸ்வானா (39%), தாய்லாந்து (39%), பிலிப்பைன்ஸ் (39%), ஜார்ஜியா (38%) ஆகிய நாடுகள் பிடித்திருக்கின்றன. இந்தியா, உலக சராசரிக்கும் மிகக் கீழே - 14%.
கார்ன் ஃபெர்ரி இன்டர்நேஷனல் (Korn Ferry International), ஆசிய நாட்டு நிறுவனங்களில் பெண்களின் பங்களிப்பு பற்றி ஓர் ஆய்வு செய்தது. இந்த ஆய்வின்படி, 700 கம்பெனிகளில், 348 கம்பெனிகளில் முழுக்க முழுக்க ஆண் இயக்குநர்களே. 22 கம்பெனிகளில் மட்டுமே, இரண்டு அல்லது அதிகமான பெண் டைரக்டர்கள். சீனாவில், கம்பெனி டைரக்டர்களில் 8.1 % பேர் பெண்கள்: இந்தியாவில் 4.7 சதவிகிதம்தான்.
ஆனால், கிரான்ட் தார்ட்டன் நிறுவன அறிக்கைபடி, பெண் இயக்குநர்கள் அதிகமாக இருக்கும் நிறுவனங்களில் விற்பனை 42 சதவிகிதம் அதிகம்! லாபம் 66 சதவிகிதம் அதிகம்!
பெண்களின் கார்ப்பரேட் பயணம் தாமதமாகத் தொடங்கியிருக்கலாம், சூடுபிடிக்க நேரம் எடுக்கலாம். ஆனால், தங்கள் திறமையால், சாதனைகளால், அவர்களுக்கு வானமும் தொட்டுவிடும் தூரம்தான் என்று வருகின்ற நாட்கள் நிரூபிக்கப்போகின்றன.
(கற்போம்)
படங்கள்: வி.ராஜேஷ்.
