வேலைக்குத் தகுதி... பின்தங்கிய தமிழகம்!
##~## |
தமிழகத்தில் இன்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் 70 சதவிகிதத் தினர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். இதில் வெறும் 20-லிருந்து 30 சதவிகிதத்தினர் மட்டுமே வேலைக்குத் தகுதியானவர் என கன்ஃபெடரேஷன் ஆஃப் இண்டியன் இண்டஸ்ட்ரி செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியோ அதிர்ச்சி.
தமிழகத்தில் உள்ள மாணவர்களில் வெறும் 10 சதவிகிதத்தினரே வேலைக்கான முழுத்தகுதியுடன் இருக்கிறார்கள். இது இந்தியாவிலேயே மிகக் குறைந்த அளவு என கடந்த வருடம் உலக வங்கி ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. இதற்கு என்ன காரணம்? என்று சொல்கிறார் கெம்பா மேனேஜ்மென்ட் கன்சல்டிங் நிறுவனத்தின் இயக்குநர் கார்த்திகேயன்.
''இதற்கு முக்கியக் காரணம், தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்பதே. இன்ஜினீயரிங் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர்கள் முந்தைய வருடம் அதே கல்லூரியில் படித்த மாணவர்களாக இருக்கிறார்கள் அல்லது வேறு வேலை கிடைக்காததால் ஆசிரியர் வேலைக்கு வந்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு வேறு வேலை கிடைத்தால் உடனே கிளம்பிவிடுவார்களே தவிர, ஆசிரியர் வேலைக்கானத் தகுதியைத் தொடர்ந்து பெற்று தங்களை உயர்த்திக்கொள்பவர் களாக இருக்க மாட்டார்கள்.

கல்லூரியில் வேலை பார்க்கும் டிரைவரின் சம்பளத்தைவிட குறைவான சம்பளம் இந்த ஆசிரியர்களுக்குத் தரப்படுவது கொடுமையான விஷயம். புதிது புதிதாக கட்டடங்கள் கட்டுவதிலேயே அக்கறை காட்டுகிறது கல்லூரி நிர்வாகம்.
தமிழகத்தில் இருக்கும் 550 கல்லூரிகளில் அதிகபட்சம் 100 கல்லூரிகளில்தான் கேம்பஸ் இன்டர்வியூ நடக்கின்றன. இந்த இன்டர்வியூகளை பல கல்லூரிகள் கௌரவத்துக்காக நடத்துகின்றன. பெரும்பாலான கல்லூரிகள் 'பிளேஸ்மென்ட் ஆபீஸர்’ என்ற ஒரு பதவியை உருவாக்கி

நிறுவனங்களிடம் கேம்பஸ் இன்டர்வியூக்கு வரும்படி பேச வைக்கின்றன.
இதற்காக கல்லூரி நிர்வாகத்தை மட்டுமே குறைசொல்வது சரியல்ல. இங்கு இருக்கும் பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளின் கல்விக்குச் செலவு செய்த பணத்தை ஒரு முதலீடாகவே கருதுகிறார்கள். போட்ட பணத்தைக் குறுகியகாலத்தில் எடுத்துவிட நினைப்பதால், அதிகச் சம்பளத்திற்கு தன்னுடைய பிள்ளை வேலைக்குப் போகவேண்டும் என நினைக்கிறார்கள். இன்ஜினீயரிங் படித்தால்தான் இது நடக்கும் என நம்புகிறார்கள். இதனால் அதிக காசு கொடுத்து சீட் வாங்குகிறார்கள். கல்லூரிகளின் தரத்தைப் பற்றி பெற்றோர்கள் கவலைப்படுவதே இல்லை. முதலில் பெற்றோர்களின் இந்த மனநிலையை மாற்றவேண்டும்.
மாணவர்கள் மீது எந்த விதமான தவறும் சொல்ல முடியாது. காரணம், அவர்களுக்குச் சரியான வழியைக்காட்ட யாரும் இல்லை. மாணவனின் திறமை என்ன, அவனுக்கு என்ன வரும், எது வராது என்று யாரும் தெரிந்துகொள்ளத் தயாராக இல்லை. இதை தெரிந்துகொண்டாலே போதும், பாதி பிரச்னை தீர்ந்துவிடும்.
எந்தப் படிப்பு படித்தாலும் அதற்கான வேலை வாய்ப்பு இங்கே இருக்கின்றது என்பதை முதலில் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மாணவர்களின் ஆளுமைத் தன்மைக்கு ஏற்ப அவர்களை வழி நடத்தினாலே போதும், இங்கு தகுதி என்பது ஒரு தடையாக இருக்காது'' என்று முடித்தார் 'கெம்பா’ கார்த்திகேயன்.

மாணவர்கள் விரும்பும் படிப்பைக் கொடுத்தாலே போதும், அவர்களுடைய தன்னம்பிக்கை வளர்ந்து ஜொலிப்பார்கள்!
இரா.ரூபாவதி.