மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஊர் ஜாதகம்

பானுமதி அருணாசலம், எம்.ஜே.கவுதம் படங்கள் : எஸ்.சிவபாலன்.

##~##

மகாமக நகரம் என்றால் கும்பகோணம்தான் என்று எல்லோருக்கும் தெரியும். தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய நகராட்சி என்ற பெருமையும் கும்பகோணத்துக்கு உண்டு. மங்கள நிகழ்ச்சிகளுக்கு  பயன்படுத்தக்கூடிய பட்டுப்புடவை, குத்துவிளக்கு, வெள்ளிக்குடம், வெற்றிலை, சீவல் என அனைத்துக்கும் பிரசித்திப் பெற்ற இடமாகத் திகழ்வதால் கும்பகோணம் மங்கள நகரமாகவே பார்க்கப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டிலிருந்தே தனிச் சிறப்புப் பெற்று திகழும் இந்த நகரம் ஒரு பக்கம் அரசலார் ஆறாலும், மறுபக்கம் காவிரி ஆறாலும் சூழ்ந்திருக்கிறது. ஊர் முழுக்க கோயில்கள் என்பதால் எப்போதும் பக்தி மணம் கமழ்கிறது கும்பகோணத்தில். ஆனால், தொழில் வளர்ச்சியில் இந்நகரம் எப்படி? என்று விசாரித்தபோது இந்த நகரத்துக்கு இன்னும் பல தேவை இருப்பது தெளிவாகத் தெரிந்தது.

தனி மாவட்டம் !

நாம் முதலில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சங்கத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சோழா மகேந்திரனிடம் பேசினோம்.

''கும்பகோணம் ஒரு நல்ல வர்த்தக நகரம். இங்கு எந்த ஒரு பொருளையும் விற்க முடியும் என்பதற்கு உதாரணமாகத்தான் தஞ்சையில்கூட இல்லாதப் பெரிய பெரிய நகைக் கடைகள் இங்கு வரத்தொடங்கியுள்ளன. பெரிய ஜவுளிக்கடைகளைத் திறக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

ஊர் ஜாதகம்

இங்கு இருக்கும் முக்கிய பிரச்னை, போக்குவரத்து சிக்கல்தான். கிட்டத்தட்ட திருச்சி அளவுக்கு மக்கள் தொகையைப் பெற்றுவிட்ட இந்நகரம்,  மக்கள் நெருக்கடியைச் சமாளிக்கிற விதத்தில் போக்குவரத்து வசதி இல்லை. கும்பகோணத்திலிருந்து வெளி ஊர்களுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கிருந்து மற்ற முக்கிய நகரங்களை இணைக்கும் சாலை வசதிகள் சரியானதாக இல்லை.

கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு போதுமான ரயில்கள் இல்லை. பெரிய   நகரமாகத் திகழ்ந்தாலும் கும்பகோணம் தனி மாவட்டமாகச் செயல்படவில்லை. தனி மாவட்டமாகத் திகழ்ந்தால் எல்லா வசதிகளும் பெற்று இந்த நகரம் இன்னும் வளர்ச்சி காணும்'' என்றார்.

கொள்ளைபோகும் மண் !

கும்பகோணத்தைச் சுற்றி இரண்டு ஆறுகள் ஓடுவதால், விவசாயம்தான் இந்நகரத்தின் பிரதானமாக இருக்கிறது. மாவட்டம் முழுக்க பல நூறு அரிசி ஆலைகள் உள்ளன. இங்கு சாகுபடியாகும் வெற்றிலை உலகப் புகழ் பெற்றது. இங்கு விவசாயம் குறித்த பிரச்னைகள் என்னெவெல்லாம் இருக்கிறது என தஞ்சை மாவட்ட விவசாய சங்கத் தலைவர் சுவாமிமலை விமலநாதனிடம் கேட்டோம்.

''கும்பகோணத்தில் வெற்றிலை மட்டுமல்லாமல் மலர்கள், வாழை நல்ல தரத்தில் விளைகிறது. இப்போது இங்கு விவசாயம் வளராமல் இருக்க காரணம், காவிரி நீர் கிடைக்காததே. தவிர, காவிரி நீர்ப்பாசன வாய்க்கால்களில் தனியார் மற்றும் அரசியல்வாதிகள் மணல் அள்ளுவதால் பாசனப் பகுதிகளுக்கு நீர்வரத்து இல்லாமல் போய்விடுகிறது. இதனைத் தடுக்க வேண்டும்'' என்கிற கோரிக்கையை வைத்தார்.

ஊர் ஜாதகம்

சிப்காட் தேவை !

இந்நகரத்தைச் சுற்றி விவசாயமே பிரதானமாக இருப்பதால், மற்ற நகரங்களைப் போல தொழில் வளர்ச்சி அந்த அளவுக்கு வளரவில்லை.  பித்தளை, வெண்கலம், செம்பு, பாத்திரங்கள், பட்டு மற்றும் பருத்தி ஆடைகள், சர்க்கரை, மண்பாண்டம் உள்ளிட்ட தொழில்கள் இங்கு அதிகம் காணப்படுகின்றன.

இங்கிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் நாகப்பட்டினம் துறைமுகம் இருக்கிறது. 90 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி விமான நிலையம் இருக்கிறது. எனவே, இங்கு சில தொழிற்சாலைகள் தொடங்கப்படும் சமயத்தில் அவை சிறப்பாகச் செயல்படுவதற்கு நிறைய வாய்ப்புண்டு. டான்சி, சிப்காட் போன்ற அமைப்புகள் மூலம் இங்கு தொழிற்பேட்டைகளை நிறுவினால்தான் இந்தப் பகுதியில் புதிய தொழிற்சாலை தொடங்க நிறைய வாய்ப்புண்டு என்கிறார்கள் தொழிற் துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.  

பட்டு உற்பத்தி !

திருபுவனம் பட்டுப் புடவை உலகப் புகழ் பெற்றது. இங்கு 5,000 குடும்பங்களுக்கும் அதிகமாகப் பட்டு நெசவு செய்கிறார்கள். நெசவுத் தொழிலில் இருக்கும் முக்கிய பிரச்னைகள் குறித்து தஞ்சை மாவட்ட நெசவாளர் சங்க பொதுச் செயலர் சுப்பிரமணியனிடம் பேசினோம்.

ஊர் ஜாதகம்

''பட்டில் 22 ரகங்கள் உள்ளன. இதில் 11 ரகங்களை கைத்தறி நெசவாளர்களுக்கும், 11 ரகங்களை விசைத்தறியாளர்களுக்கும் நீதிமன்றம் பிரித்து கொடுத்தது. ஆனால், இப்போது யார் வேண்டுமானாலும் எந்த ரகம் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்பதே நடைமுறையாக மாறிவிட்டது. இதனை மாற்றி பழையபடி பிரித்துத் தரவேண்டும். மேலும், விசைத்தறியாளர்கள் உற்பத்தி செய்யும் சேலைகளை கைத்தறி நெசவு சேலை என சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். இதனைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.  

கல்வி வளர்ச்சி !

ஊர் ஜாதகம்

கும்பகோணத்தில் 1867-ம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப் பட்டது. இது மிக பழைமையான கல்லுரியாகும். உ.வே.சுவாமிநாத ஐயர், கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம், அரசியல் நிர்வாகி வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி ஆகியோர் படித்த மண் இது. ஆனால், தற்போது இங்குள்ள மாணவர்கள் தஞ்சாவூர், திருச்சிக்குச் சென்று உயர்படிப்புகள் படிக்கவேண்டிய நிலையே உள்ளது. இது குறித்து ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

''கும்பகோணத்தில் உள்ள மாணவர்கள் இன்னும் வெளியூர்களுக்குச் சென்று படிக்கவேண்டிய நிலைதான் இருக்கிறது. கல்லூரிகளுக்கான தேவை இங்கு இருக்கிறது. இதனை சரிசெய்யும் விதமாக கல்லூரிகள் வர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தொழிற்கல்வி கற்க நல்ல இன்ஜினீயரிங் கல்லூரிகள் வரவேண்டும்'' என்றார்.

மணக்கும் ஆன்மிகம் !

கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 188-க்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் கும்பகோணத்தைச் சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் சூழ்ந்திருக்கிறது. பட்டீஸ்வரம் கோயில், ஒப்பிலியப்பன் கோயில், சுவாமிமலை என தவிர்க்க முடியாத கோயில்கள் சூழ்ந்த நகரம். வெளிநாட்டினர் அதிகம் வந்து பார்க்கும் இந்தக் கோயில்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து சுற்றுலாத் திட்டங்களை அமைத்தாலே பல கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும்.

கும்பகோணத்தில் உள்ள சுற்றுலா வாய்ப்புகள் குறித்து ஓட்டல் ராயாஸ் நிறுவனத்தின் ராயா கோவிந்தராஜனிடம் பேசினோம். ''கும்பகோணத்தில் இருக்கும் நவக்கிரகங்களைத் தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமாக வருகிறார்கள். சனி, ஞாயிறுகளில் அதிகளவில் கூட்டம் வருகிறது. அந்த தினங்களில் மட்டும் மதிய நேரத்தில் கோயில் நடைகளைச் சாத்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும். இதைத்தான் நாங்கள் அரசிடம்  எதிர்பார்க்கிறோம். மூன்று நட்சத்திர மற்றும் ஐந்து நட்சத்திர ஓட்டல்களை சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கான வசதிகள் வந்தால் சுற்றுலா இன்னும் மேம்படும்'' என்கிற வேண்டுகோளை வைத்தார்.  

கல்வி, சுற்றுலா, தொழிற்துறை ஆகிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் இந்நகரம் இன்னும் வளர்ச்சி காணும். என்பதில் சந்தேகமே இல்லை.