குழுத் தலைவர்... வெற்றியும் தோல்வியும் கேப்டன் கையில்! செ.கார்த்திகேயன்படம்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்.
##~## |
பெரும்பாலான அலுவலகங்களில் தங்களது குழுத் தலைவரை குழுவின் மற்ற உறுப்பினர்கள் பெருமையாகச் சொல்லி கேட்டிருப்போம். ''எங்க பாஸ் மாதிரி யாராலயும் இருக்க முடியாது. வேலையில சின்னதா ஒரு தப்பு பண்ணினாலும் ஈஸியா கண்டுபுடிச்சிடுவாரு. அதேநேரத்துல எங்க எல்லோரையும் அரவணைச்சு கொண்டுபோறதுல ரொம்பக் கெட்டிக்காரர்'' என்று தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடுவார்கள்.
ஆனால், இன்னும் சிலர் தங்கள் குழுத் தலைவரை கன்னாபின்னாவென்று சாடுவார்கள். அதற்குக் காரணம், குழுத் தலைவரானவர் தனது குழு உறுப்பினர்களை சரியாக வழி நடத்தாததே! இதனால் குழு உறுப்பினர்களிடையே பல பிரச்னைகள் உருவாவதோடு, வேலை சூழலும் வெகுவாகப் பாதிப்படையும். அலுவலகத்தில் ஒரு குழுத் தலைவர் என்பவர் எப்படி இருக்கவேண்டும்? அவர் தனக்குக் கீழ் பணிபுரியும் பணியாளர்களிடம் எப்படி பழகவேண்டும்? என்ற பல கேள்விகளுடன் சென்னையைச் சேர்ந்த ஐசால்வ் நிறுவனத்தின் ஹெச்.ஆர். பிரிவின் உதவி மேலாளர் ந.பத்மலட்சுமியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
சரியான முடிவை எடுப்பவராக..!
பணியிடத்தில் பாஸ் என்பவர் சரியான முடிவை எடுக்கும் தன்மையுள்ளவராக இருப்பது அவசியம். அவருக்குக் கீழ் இருக்கும் பணியாளர்கள் என்னதான் சோம்பேறிகளாக இருந்தாலும் அவர்களிடம் சாதுரியமாக வேலை வாங்கும் திறமை உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

குழுத் தலைவர் எடுக்கும் முடிவு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லாவிட்டாலும், நான் எடுக்கும் முடிவு சரியானதாகவே இருக்கும் என்பதை அவர் குழுப் பணியாளர்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டும்.
குழுப் பணியாளர்களிடம் பாரபட்சம் பார்க்காமல் பழக வேண்டும். அவர்களிடம் ஏற்றத்தாழ்வுடன் பழகுபவராக இருந்தால் முதலில் அந்தப் பழக்கத்தைத் தவிர்ப்பது நலம்.
தனது குழுவின் பணியாளர்களை மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்துவது நல்லது. இந்தப் பண்பு நலன் அவர்களிடம் குழுத் தலைவரின் மீதான மதிப்பையும், மரியாதை யையும் உயர்த்தும்.
குழுத் தலைவர் முடிவு எடுக்கும் முன்பு யோசிக்கலாம்; ஆனால் முடிவெடுத்தப் பிறகு அதில் உறுதியாக இருக்கவேண்டும். அதைச் செயல்படுத்தும்வரை அவரிடம் முரணற்ற தன்மை இருப்பது அவசியம்.
ஆதரவாளராக..!
குழுத் தலைவர் என்பவர் தன் குழுவில் உள்ள பணியாளர்களை அலுவலக ரீதியாக மட்டுமல்லாமல், அனைத்துவிதமானச் சூழ்நிலைகளிலும் அவர்களுக்கு ஆதரவு தருபவராக இருப்பது நல்லது.
குழுப் பணியாளர்களில் ஒருவர் மட்டும் தனித்தோ அல்லது வேலையில் மந்தமான மனநிலையுடனோ இருப்பதாகத் தெரிந்தால் அவரை தனியாக அழைத்து, தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏதேனும் குறை இருக்கிறதா? என்று கேட்டுத் தெரிந்துகொண்டு அதை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளை சொல்லித் தருவது குழுத் தலைவரின் கடமை.

தனது குழுப் பணியாளர்களை மற்றவர் களிடம் விட்டுக்கொடுத்து பேசாதவராக குழுத் தலைவர் இருக்கவேண்டும். அதேபோல குழுத் தலைவர் குறித்து பிறரிடம் குழுப் பணியாளர்கள் மதிப்பு குறைத்து பேசக்கூடாது.
குழுத் தலைவர் தன் குழுப் பணியாளர்கள் முழு ஈடுபாட்டுடன் வேலையில் இறங்கும்போது அவர்களின் இலக்கு என்ன, வேலை எளிதாக முடிய எப்படி
செயல்பட வேண்டும் என்பதைச் சொல்லித் தரவேண்டும். அந்தச் சமயங்களில்
தன்னுடைய எதிர்பார்ப்பை குழுப் பணியாளர்களுக்குத் தெளிவாகப் புரியும்படி தெரியப்படுத்துவது அவசியம்.
கருத்தாளராக..!
வேலை குறித்து குழுப் பணியாளர்கள் கருத்து சொல்லும்போது, 'நீங்க சொல்லி நான் என்ன கேட்பது’ என்கிற மாதிரி இல்லாமல் அதை காது கொடுத்து கேட்கும் தன்மை உள்ளவராக இருக்கவேண்டும். அப்போதுதான் பணியாளர்கள் தங்களின் கருத்திற்கும் மதிப்பு தருகிறார்கள் என நினைத்து செய்யும் வேலையில் ஆர்வம் காட்டுவார்கள்.
தன் குழுப் பணியாளர்கள் ஒவ்வொருவரின் வெற்றிக்கும், முன்னேற்றப் பாதைக்கும் குழுத் தலைவர் என்பவர் உற்ற துணையானவராக இருக்கவேண்டும்.
முன்னுதாரணமாக..!
குழுப் பணியாளர்களுக்கு குழுத் தலைவர் ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டும். அவர்களுக்கு மட்டுமின்றி, அடுத்தக் குழுத் தலைவர்களுக்கும், அடுத்தக் குழுப் பணியாளர் களுக்கும் முன்மாதிரியாக இருக்கவேண்டும்.
ஒரு வேலையை எப்படி சிறப்பானதாகச் செய்து முடிக்கவேண்டும் என்பதை குழுப் பணியாளர்கள் அவர்களின் குழுத் தலைவரைப் பார்த்து தெரிந்துகொள்ளும்படியாக குழுத் தலைவரின் நடவடிக்கைகள் இருக்கவேண்டும்.
குழுப் பணியாளர்கள் செய்த வேலையில் பிழை ஏற்படும்பட்சத்தில் அதைப் பொறுத்துக் கொள்பவராகவும், பிழையைச் சுட்டிக்காட்டி அதை அவர்களுக்குப் புரியவைப்பவராகவும் இருக்கவேண்டும்.
குழுப் பணியாளர்களை அரவணைத்துச் செல்லும் மனப்பக்குவம், சூழ்நிலைக்குத் தக்கவாறு தனது குழுவை இயக்கும் மனப்பக்குவம் போன்ற விஷயங்களில் குழுத் தலைவர் கைதேர்ந்தவராக இருக்கவேண்டும்.
குழுப் பணியாளர்களிடம் ஒரு வேலையை ஒப்படைத்திருக்கிறோம் என்றால் அந்தப் பணி முடியும் வரை அதைக் கண்காணிப்பது குழுத் தலைவரின் பொறுப்பாகிறது. இடையிடையே பணியாளர்களுக்கு எழும் சந்தேகங்களை குழுத் தலைவரும், பணியில் இடையிடையே குழுத் தலைவருக்கு எழும் கேள்விகளுக்குப் பணியாளர்களும் பதில்களை பரிமாற்றிக்கொள்ளுதல் நல்லது.
குழுத் தலைமைப் பதவியில் இருக்கும் அனைவரும் ஸ்மார்ட் கோல் (SMART goal) அமைத்துக்கொள்வது அவசியம். (S - Specific , M - Measurable ,A - Achievable, R - Realistic, T - Timely)
குழுத் தலைவர் நேர்மையாகவும், உண்மை யானவராகவும் இருக்கும்பட்சத்தில் குழுப் பணியாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மையைப் பெறமுடியும்.
அறிவுப் பகிர்வாளராக..!
குழுப் பணியாளர்களுக்கும், குழுத் தலைவருக்கும் அறிவு பகிர்தல் (knowledge sharing) என்பது மிக முக்கியமான விஷயம். குழுத் தலைவரும், குழுப் பணியாளர்களும், தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை, உடனுக்குடன் பகிர்ந்துகொள்வதால் இருவரிடமும் நல்ல உறவுமுறை வளர்ந்து பணியிடத்து வளர்ச்சிக்கு வித்தாகும்.
குழுத் தலைவர் தன் குழுப் பணியாளர்கள் செய்யும் தவறுகள், குற்றங்களை சுட்டிக்காட்ட வேண்டும். அதேபோல் தன் மீதான குறைகளை குழுப் பணியாளர்கள் தெரிவிக்கும்போது அது ஆக்கப்பூர்வமான விமர்சனமாக இருக்கும்பட்சத்தில் அதைக் குழுத் தலைவர் ஏற்றுக்கொள்ள தயங்கக்கூடாது.
குழுவில் உள்ள உறுப்பினர்கள் பணியில் சிறப்பானதொரு செயலைச் செய்து, அது அந்தக் குழுவிற்கே வெற்றியைத் தேடித்தந்திருந்தால் அந்தப் பணியாளரைப் பாராட்டி சின்ன அளவிலான பரிசுகளைக் கொடுத்து உற்சாகப்படுத்தலாம். இது அவர்களின் எதிர்காலப் பணிகளை உற்சாகப் படுத்தும்.
நண்பராக..!
என்றைக்குமே ஒரு குழுத் தலைவருக்கு நகைச்சுவை உணர்வு கட்டாயம் இருக்க வேண்டும். அடிக்கடி குழுப் பணியாளர்களை நகைச்சுவை உணர்வினால் உற்சாகமடையச் செய்யலாம்.
குழுப் பணியாளர்களுக்குச் சந்தேகம் என்று வரும்போது, எந்த நேரமானாலும் அதைக் குழுத் தலைவர் தெளிவுபடுத்த தொடர்பில் உள்ளவராக இருக்கவேண்டும்.
மேலே சொன்ன அனைத்து குணநலன்களும் ஒரு குழுத் தலைவருக்கு இருக்குமானால் அவருக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒரு குறையும் இருக்காது என்பது உண்மையே.
குரு (குழுத் தலைவர்) அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!