மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA மூன்றெழுத்து மந்திரம்

பிஸினஸில் ஜெயிக்க வைக்கும் 5 சக்திகள் ! படம்: வி.ராஜேஷ்.

கல்வி

 ##~##

பிஸினஸில் தொடர்ந்து வெற்றி காணவேண்டு மானால், போட்டியாளர்களைத் தோற்கடிப்பது மட்டுமே நோக்கமாகவும் யுக்தியாகவும் இருக்கக்கூடாது. பதிலாக, நமது திறமைகளை நாம் தொடர்ந்து பட்டை தீட்டவேண்டும் என்கிறார் போர்ட்டர். அவரது கண்ணோட்டத்தின்படி, நீங்கள் நடத்துவது இமயம் வெல்டிங்ஸ் என்கிற சிறிய தொழில் நிறுவனமாக இருந்தாலும் சரி, ரிலையன்ஸ் கம்பெனி மாதிரி பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, பிஸினஸில் ஜெயிக்க நீங்கள் போட்டியாளர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஐந்து சக்திகளைப் பயன்படுத்தவேண்டும். இதை ஐந்து சக்தி மாடல் (Five Forces Model) என்றும் அழைக்கிறார் போர்ட்டர். அவர் சொல்லும் ஐந்து சக்திகள் இதோ:

1. இன்றைய போட்டியாளர்கள்,  

2. புதிய போட்டியாளர்கள்,

3. மாற்றுப்பொருட்கள் (Substitutes),

4. வாடிக்கையாளர்கள்,

5. சப்ளையர்கள்,

இவை ஒவ்வொன்றும் பிஸினஸ் வெற்றி, தோல்விகளை எப்படித் தீர்மானிக்கின்றன? இவற்றை நமக்குச் சாதகமாக எப்படி பயன் படுத்திக்கொள்வது? நம் யுக்தியை வகுக்க, இவை ஒவ்வொன்றின் கீழும் நாம் எந்த அம்சங்களை எடை போடவேண்டும் என்பதை போர்ட்டர் விளக்கமாகச் சொல்கிறார்.

MBA மூன்றெழுத்து மந்திரம்

இன்றைய போட்டியாளர்களிடம் எடை போட வேண்டிய அம்சங்கள்:

* நாம் ஈடுபட்டிருக்கும் துறை வளர்கிறதா, தேய்கிறதா?

* அடுத்த 5, 10 ஆண்டுகளில் வளர்ச்சி எப்படி இருக்கும்?

MBA மூன்றெழுத்து மந்திரம்

* எத்தனை போட்டியாளர்கள் இருக்கிறார்கள்?

* அவர்களின் பலங்கள் என்ன?, பலவீனங்கள் என்ன?

* மக்களின் மொத்தத் தேவை எல்லாப் போட்டியாளர்களாலும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா? அல்லது நிறைவேறாதத் தேவைகள் ஏதாவது உண்டா?

* போட்டியாளர்களோடு ஒப்பிடும்போது, நமக்கு ஏதாவது தனித்துவம் இருக்கிறதா?  

புதிய போட்டியாளர்களிடம் எடை போட வேண்டிய அம்சங்கள்:

* புதிய போட்டியாளர்களின் நுழைவை ஈர்க்கும் அம்சங்கள் இந்தத் தொழிலில் இருக்கின் றனவா?

* புதியவர்களுக்குத் தொழில்நுட்பம், திறமை யான ஊழியர்கள், தேவையான முதலீடு, அரசு ஒப்புதல்கள் ஆகியவை கிடைப்பது சுலபமா, கடினமா?

* புதியவர்களால் தரமான பொருட்களை சகாய விலையில் தரமுடியுமா?

* அவர்கள் கணிசமான விற்பனையை எட்டுவது சுலபமா, கடினமா?      

MBA மூன்றெழுத்து மந்திரம்

மாற்றுப்பொருட்கள் பற்றி எடை போடவேண்டிய அம்சங்கள்:

* நம் தயாரிப்புகளுக்கு மாற்றுப்பொருட்கள் எவை எவை?

(உதாரணமாக, கண்ணன் தன் கடையில் கோகோ கோலா விற்கிறார். கோகோ கோலாவுக்குப் போட்டி யார்? 'பெப்ஸி, தம்ஸ் அப், கோல்டு ஸ்பாட், ஃபான்டா, லிம்கா, மிரிண்டா, போவன்டோ, ஃப்ருட்டி’ என்று அடுக்குகிறீர்களா? இவை மட்டுமல்ல, சில வேளைகளில் தாகம் தணிக்க ரஸ்னா அருந்துகிறீர்கள்; இளநீர் குடிக்கிறீர்கள், தண்ணீர் சாப்பிடுகிறீர்கள். இவை அத்தனையும் கோகோ கோலாவுக்குப் போட்டிதானே! அதாவது, தாகம் என்கிற தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்கள் எல்லாமே கோகோ கோலாவுக்குப் போட்டிதான். இந்தக் கண்ணோட்டத்தோடு, உங்கள் தயாரிப்புக்கான மாற்றுப்பொருட்களைப் பட்டியலிடுங்கள்.)

* நம் தயாரிப்புப் பொருட்களோடு ஒப்பிடும் போது, இந்த மாற்றுப்பொருட்களின் பலங்கள் எவை, பலவீனங்கள் எவை?

MBA மூன்றெழுத்து மந்திரம்

* எந்தெந்த காரணங்கள் கஸ்டமர்களை மாற்றுப்பொருட்களைத் தேடிப் போகவைக்கும்?  

வாடிக்கையாளர்கள் பற்றி எடை போடவேண்டிய அம்சங்கள்:

* நம் முக்கிய வாடிக்கையாளர்கள் யார் யார்? அவர்கள் நம்மிடம் வாங்குவதற்கான காரணங்கள் என்னென்ன? நம் தயாரிப்புப் பொருள் வாடிக்கையாளர் மனங்களில் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது?

* விலை மாற்றம் விற்பனையை எப்படிப் பாதிக்கும்?  

சப்ளையர்கள் பற்றி எடைபோடவேண்டிய அம்சங்கள்:

* நம் முக்கிய சப்ளையர்கள் யார் யார்? இவர்களுடன் நம் உறவு எப்படி?

* நம் தரத்தை உயர்த்தவும், விலையைக் குறைக்கவும் எந்த சப்ளையர்கள் எப்படி உதவுவார்கள்?

MBA மூன்றெழுத்து மந்திரம்

* புதிய சப்ளையர்கள் நமக்குத் தேவையா, ஏன்?  

* நாம் வாங்கும் முக்கிய பொருட்களுக்கு, நல்ல தரத்தில், சகாய விலையில், மாற்றுப் பொருட்கள் இருக்கின்றனவா? அவை பற்றிய விவரங்கள் என்ன?  

இன்றைய போட்டியாளர்கள், புதிய போட்டியாளர்கள், மாற்றுப்பொருட்கள், வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள் ஆகிய இந்த ஐந்து சக்திகளின் பாதிப்பும் சமமானதாக இருக்காது: ஒவ்வொரு பிஸினஸிலும், இவற்றின் பாதிப்பு சக்தி மாறுபடும். இதைச் சரியாகக் கணித்து, உங்கள் வியூகங்களை அமையுங்கள். வெற்றி நிச்சயம்!

ஐந்து சக்திகள் மாடலின் முக்கிய பலம் என்ன தெரியுமா? சாதாரணமாக மேனேஜ்மென்ட் கொள்கைகளில் கணிதம், மனோதத்துவம் ஆகியவை அடித்தளமாக இருக்கும். கணித, மனோதத்துவப் பின்புலங்கள் இல்லாதவர்கள் மேனேஜ்மென்ட் கொள்கைகளைப் புரிந்து கொள்வதும், கடைப்பிடிப்பதும் கொஞ்சம் சிரமம். ஆனால், போர்ட்டரின் கொள்கையை முகேஷ் அம்பானி முதல் மூலக்கடை முத்து வரை அனைவரும் பின்பற்றலாம்.  

இப்போது உங்களுக்கு ஒரு சின்னப் பயிற்சி...

உங்களூரில் நீங்கள் ஒரு ஜுவல்லரி கடையை நடத்தி வருகிறீர்கள். உங்களுக்குப் போட்டியாகப் புதிதாக ஒருவர் ஒரு ஜுவல்லரி கடையை உங்கள் கடைக்கு எதிரிலேயே ஆரம்பிக்கிறார். ஐந்து சக்திகள் மாடலை பயன்படுத்தி அந்தப் போட்டியாளரை எப்படி சமாளிப்பீர்கள்?

உங்கள் பதில்களை 100 வார்த்தைகளுக்கு மிகாமல் pdf word document attachment ஆக, ஜனவரி 26 -ம் தேதிக்குள் எங்களுக்கு அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி mba@vikatan.com.160; உங்கள் வயது, படிப்பு, வேலை, முழு விலாசம், மொபைல் நம்பர் ஆகிய விவரங்களைக் கட்டாயம் தரவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 3 பதில்களுக்கு விகடன் புத்தகப் பரிசு வழங்கப்படும்.  

(கற்போம்)