நடப்பு
Published:Updated:

நீங்கள் எப்படிப்பட்ட தலைவர் ?

நீங்கள் எப்படிப்பட்ட தலைவர் ?

##~##

லீடர்ஷிப் என்பது சாதாரண விஷயமல்ல. முதலாளியோ, மேனேஜரோ தொழில்ரீதியாகத் தொடர்ந்து வெற்றிகளைப் பெற ஒரு லீடராக (தலைவனாக) முடிவுகளை உடனுக்குடன் எடுப்பதும், மற்றவர்களை இயக்குவதும் மிக மிக அவசியமான ஒரு விஷயமாக இருக்கின்றது. முடிவெடுக்கவும் அதைச் செயலாக்கவும் தேவையான நேரம் எப்போதும் இருக்காது, கிடைக்காது! கஸ்டமர், சப்ளையர், தொழிலாளர்கள் என அத்தனைபேருக்கும் பதில் சொல்லவேண்டிய பிரச்னைகள் பல லீடர்கள் முன்வந்து கியூவில் நின்றுகொண்டே இருக்கும்.

நொடிக்கு நூறு பிரச்னை வந்துநிற்கும் இந்தக் காலத்தில் உறுதியான மனதையும் இளகிய நெஞ்சத்தையும் கொண்ட தலைவர்களை (லீடர்) காண்பது அரிதாக உள்ளது. அதிலும் வளரும் பிஸினஸ் எக்ஸிக்யூட்டிவ்களுக்கு உதாரணமாகக் காண்பிப்பதற்கு ஏதுவாக தலைவனுக்கெல்லாம் தலைவன் என்ற ஒருவரைக் கண்டுபிடிப்பதும் மிகவும் கடினமாக உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், 'அந்த ஆளைப் பார். அவருடைய மேனேஜ்மென்ட் எப்படி என்று வாட்ச் பண்ணு. அதே வழியில் நட! வெற்றி நிச்சயம்’ என்று சொல்லும் வாய்ப்பு மிக மிக குறைந்துகொண்டே வருகின்றது.

நீங்கள் எப்படிப்பட்ட தலைவர் ?

பழைய லீடர்ஷிப் ஸ்டைல்கள் எல்லாம் இன்றைக்கும் சரியானவையாகவே இருந்தாலும், இன்றைய மின்னல் வேகத்தில் ஒருவர் வெற்றிகரமான லீடராக இருக்க என்னென்ன விஷயங்களில் தயாராகிக்கொள்ளவேண்டும். ஹை-ஸ்பீடு யுகத்தில் ஒரு லீடராக உருவாக தினசரி அலுவலகச் செயல்பாடுகளில் எங்கெல்லாம் வாய்ப்புகள் இன்றையச் சூழலில் இருக்கின்றது என்பதை விளக்குவதுதான் டக்ளஸ் கோனன்ட் மற்றும் மெட்டி நோகார்ட் இணைந்து எழுதிய 'டச்பாயின்ட்ஸ்’ என்னும் இந்தப் புத்தகம்.

'டச்பாயின்ட்ஸ்’ ஒரு அலுவலகத்திலோ அல்லது ஃபேக்டரி யிலோ இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு பிரச்னைக்காகவோ, ஒரு செயலைச் செய்யவோ சந்தித்துக்கொள்ளும்  இடத்திலெல்லாம் இருக்கின்றது என்கிறார்கள் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள். இதையும் தாண்டி அலுவலகத்தில் நடக்கும் ஒரு கேஷ§வலான பேச்சுவார்த்தையின் போதும், ஒரு இ-மெயிலை அனுப்பும்போதும்கூட இருக்கின்றது என்கிறார்கள். இன்னும் சொன்னால், அலுவலகத்தில் வாராந்திர/மாதாந்திர மீட்டிங்கில் ஒருவருக்காக மட்டுமே காத்திருக்கும் நேரத்தில் (அவர் வந்துசேரும் நிமிடம் வரை) டச்பாயின்ட்ஸ் இருக்கின்றது என்கின்றனர் ஆசிரியர்கள்.

இப்படி உங்களுடன் இருக்கும் ஒவ்வொருவரிடமும் மிகக் குறைவான சில மணித்துளிகளே நீங்கள் சந்திப்பீர்கள். அந்தச் சந்திப்பில் ஒரு லீடராக உங்களுடையச் செய்கைகள் மூலம் உங்களுடைய எதிர்பார்ப்பு, எனர்ஜி, இன்ப்ளூயன்ஸ் போன்றவற்றை சுலபமாக ஏற்படுத்திக்கொள்ளலாம் என்கின்றனர் ஆசிரியர்கள்.

பெரும்பாலான லீடர்கள் இதுபோன்ற குறுக்கிடும் நபர்களை ஒரு தொல்லையாக நினைக்கின்றார்களே தவிர, இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறுகின்றார்கள் என்கின்றனர். லீடராக நீங்கள், பிரச்னையுடன் வரும் நபர் என இரண்டு பேர் டச்பாயின்ட்ஸில் இருந்தாலும் நீங்கள் வரும் நபரிடம் ஏற்படுத்தும் இம்பேக்ட் வேலையில் இருக்கும் மற்ற நபர்களையும் சென்றடையும் என்பதை மறந்துவிடாதீர்கள் என்கின்றனர்.

டச்பாயின்ட்ஸை, ரொம்ப நல்லவர் என்று பெயரெடுப்பதைவிட ரொம்ப எபெக்டிவ்வானவர் என்று பெயரெடுக்க மட்டுமே பயன்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் அது பிரச்னையில் கொண்டுபோய் விட்டுவிடும். ஒவ்வொரு டச்பாயின்ட்ஸும் அலுவலக உறவுகளை மேம்படுத்தவோ அல்லது உடைத்துக்கொள்ளவோ உதவும் என்பதால், மிகவும் கவனமாக கையாளவேண்டும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

லீடர்கள் எப்போதுமே பிரச்னைகளை கையாள உறுதியான மனதுடனும், மனிதர்கள் மீது இளகிய மனதுடனும் செயல்பட வேண்டிய அவசியத்தை விளக்குகின்றார்கள் ஆசிரியர்கள். இதில் ஒன்றை மட்டும் கொண்டிருப்பது ஒருவரை வெற்றிகரமான லீடராக்காது என்பதைத் தெளிவாகச் சொல்கின்றனர்.

நீங்கள் எப்படிப்பட்ட தலைவர் ?

உறுதியான மனதுடன் செயல்படுவதென்றால் என்ன? டார்கெட், தரம், அர்ஜென்ட், வேலை,  வெற்றி என்பதை மட்டுமே மனம், பேச்சு, செயல் என்ற மூன்றிலும் வைத்திருப்பது. இந்த ஸ்டைலில் போனால் என்ன செய்வீர்கள்? பிரச்னை வந்தால் எதிர்த்து நின்று முழுமூச்சுடன் போராடுவீர்கள்.  வெட்டு ஒண்ணு; துண்டு ரெண்டு என்று தீர்த்துவிடுவீர்கள். வேகம், வேகம், தீர்மானமான வேகம் என்பதுதான் மந்திரமாக இருக்கும். இதில் என்ன பிரச்னை வரும் என்றால், உயர்ந்த தரம் வைத்தால் செயல்பாட்டில் குறை இருக்கும்; கறாரான விதிமுறை வைத்தால், வேலையைச் சரியாகச் செய்வார்கள். ஆனால், மனம் லயித்து அந்த வேலையைச் செய்யமாட்டார்கள்.  

இளகிய மனது என்றால் என்ன? இதுதான் பாதை என்று சொல்லிவிட்டு மிகவும் குறைவான கட்டளைகளை இடுவது. பிரச்னைகளை காது கொடுத்து கேட்பது, ஆளுக்கு ஏற்றாற்போன்ற வேலைகளைத் தருவது, இயலாதவர்களை அனுசரித்து வைத்துக்கொள்வது, அவரவர் திறமைக்கு ஏற்ப டார்கெட்டை ஃபிக்ஸ் செய்வது போன்றது. இந்த அணுகுமுறையிலும் சிக்கல் இருக்கத்தான் செய்கின்றது. தொழிலாளர்கள் முழு ஒத்துழைப்பைத் தருவார்கள். ஆனால், பல நேரங்களில் இலக்குகளை அடைய முடியாது.

இந்த இரண்டு பிரச்னைகளிலும் இருந்து தப்பிக்க சரியான அளவில் இரண்டு அணுகுமுறைகளையும் கலந்து செய்யுங்கள் என்கின்றனர் ஆசிரியர்கள். அவசர உலகில் பல  விஷயங்கள் உங்கள் கையை மீறியதாக இருக்கின்றது. இரண்டே விஷயங்கள்தான் உங்கள் கையில் இருக்கின்றது. ஒன்று, பாசிட்டிவ் எனர்ஜியையும், போகவேண்டிய திசையையும் சூசககமாகக் காண்பிக்க அடுத்தமுறை உங்கள் முன்னே வரும் டச்பாயின்ட்ஸ். இரண்டாவது, தலைமை (லீடர்) என்ற நிலைமையைத் தாண்டிய மேம்பாடு நிலைக்கு நீங்கள் போவது.

முதல்மட்ட லீடராக இருந்தீர்கள் என்றால் உங்களுடன் வேலை பார்ப்பவர்களுக்கு நீங்கள் எனர்ஜியும் டைரக்ஷனும் கொடுக்க முடியும். லீடருக்கெல்லாம் லீடரானால் உங்களால் மொத்த டிவிஷனையும், கம்பெனியையும் நடத்திச் செல்லமுடியும். ஒரு கம்பெனியின் 'விஷன் மிஷன் ஸ்டேட்மென்ட்’கள் எல்லாம் ஒரு வாக்குறுதிகள்தான். ஒரு லீடர்தான் இந்த விஷன் மற்றும் மிஷன் ஸ்டேட்மென்ட்களை நடவடிக்கையாக மாற்றும் முக்கிய நபராவார்.

லீடர்ஷிப் என்பது தோட்டக்கலை போன்றது. நிறுவி, வளர்த்து, தினசரிப் பாதுகாத்து, பராமரித்து வரவேண்டிய ஒரு விஷயம். தினசரி கிடைப்பதுதான் டச்பாயின்ட்ஸ். அதை அத்தனைத் தொழிலதிபர்களும், மேனேஜர்களும் உபயோகித்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

மனித உறவுகளைப் பேணுவதன் மூலம் வெற்றி பெற நினைக்கும் தொழிலதிபர்களும், மேனேஜர்களும் நிச்சயமாக படிக்கவேண்டிய புத்தகம் இது!