நடப்பு
Published:Updated:

ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டம்...

இன்னும் சீராக்குவது அவசியம் ! வா.கார்த்திகேயன்

 அலசல்

##~##

எதாவது ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்து, முதலீட்டாளர்களிடம் நல்ல பெயர் வாங்கத் துடிக்கிறது மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசாங்கம்.  இந்திய பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் பங்கு மிகவும் குறைவாக இருப்பதால் ஒரு தீர்வு காண்கிற மருந்தாக மத்திய அரசாங்கம் கண்டுபிடித்திருப்பதுதான் 'ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டம்’.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்தை அறிவித்தார் அப்போது நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி. இத்திட்டம்

2012-13-ல் நடைமுறைக்கு வருமா என்ற சந்தேகம் வலுத்துக்கொண்டே போனபின்பு சில ஷரத்துகளை புகுத்தி கடந்த நவம்பர் 23-ம் தேதி அன்று வெளியான அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசாங்கம். தொடர்ந்து, இதற்கான விதிமுறைகளை கடந்த டிசம்பர் மாதம் 6-ம் தேதி அறிவித்தது செபி.

இப்போதைக்கு ஹாட் டாப்பிக்-ஆக விவாதிக்கப்படும் இத்திட்டம் பற்றி பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்பு, இத்திட்டத்தின் முக்கிய விதிமுறைகள் என்னென்ன என்று பார்ப்போம்.

* ராஜீவ் காந்தி ஈக்விட்டி திட்டத்தின் மூலம் 80சிசிஜி ஷரத்தின் கீழ் 50,000 ரூபாய் முதலீட்டிற்கு 50 சதவிகிதத்திற்கு வரிவிலக்குப் பெறமுடியும்.

* முதல்முறை பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை.

* பத்து லட்சத்துக்குள் சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும்.

ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டம்...

* ஆண்டுக்கு 50,000 ரூபாய் வரை அதிக பட்சமாக இதில் முதலீடு செய்ய முடியும். 50,000 ரூபாய் முதலீடு செய்தாலும் 50 சதவிகிதம், அதாவது, 25,000 ரூபாய்க்கு மட்டுமே வரிவிலக்குப் பெற முடியும். அப்படி பார்த்தால், 50,000 ரூபாய் முதலீடு செய்தாலும் 25,000 ரூபாய்க்கு 20 சதவிகிதம் என்றால் அதிக பட்சம் 5,000 ரூபாய் வரை சலுகை பெறலாம். (பத்து லட்சம் ரூபாய் வருமானம் இருப்பவர்கள்தான் இதில் முதலீடு செய்ய முடியும் என்பதால், 10 லட்சம் ரூபாய் வரைக்கும் 20 சதவிகித வருமான வரிதான் இருக்கிறது!)

* பி.எஸ்.இ. 100, சி.என்.எக்ஸ். 100 பொதுத் துறை பங்குகளில் மற்றும் இதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் இ.டி.எஃப். திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதற்காக தனியாக டீமேட் கணக்குத் துவங்கவேண்டும்.

இத்திட்டம் குறித்து பங்குச் சந்தை ஆலோசகர் நாகப்பனிடம் பேசினோம்.

ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டம்...

''இத்திட்டம் மூலம் 50,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதில் 25,000 ரூபாய் வரை வரிவிலக்குக்காக கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். அப்படிப் பார்த்தால், அதிகபட்சம் ரூ.5,000 சலுகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தன் ஆயுளில் ஒரே ஒருமுறை வரிச் சலுகை பெற ஒரு டீமேட் கணக்கு துவங்கி அதில் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சரியாகப்படவில்லை'' என்றவர், இத்திட்டத்தில் இன்னும் என்னென்ன விஷயங்களைக் கொண்டு வரலாம் என்றும் சொன்னார்.

''ஒரு ஐ.பி.ஓ.-வில் முதலீடு செய்யும்போது சிறு முதலீட்டாளர்கள் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஓர் இடத்தில் சிறு முதலீட்டாளர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை அனுமதித்துவிட்டு,  இன்னொரு இடத்தில் 50,000 ரூபாய்க்கே அனுமதி என்றால் எப்படி? வாழ்க்கையில் ஒருமுறை மட்டும்தான் இச்சலுகை என்பதால் 50,000 ரூபாய் என்ற எல்லையை அதிகரிக்கலாம். மேலும், முதலீடு செய்யும் மொத்தத் தொகைக்கும் வரிவிலக்கு தரலாம். இல்லை என்றால் இது பெரிய அளவில் சென்றடைய வாய்ப்பு இல்லை.

ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டம்...

மேலும், முதல்முறை பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்குதான் இந்தச் சலுகை என்றும், எந்தெந்த வகை பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தாலும், சிறு முதலீட்டாளர்களை நேரடியாகப் பங்குகளை வாங்க அனுமதிப்பது ரிஸ்க் என்றே தோன்றுகிறது. பி.எஸ்.இ. 100, சி.என்.எக்ஸ். 100 அல்லது பொதுத்துறை பங்குகள் என எந்த பங்காக இருந்தாலும் பங்குகள் என்று வந்துவிட்டால்  சரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிறு முதலீட்டாளர்கள் 50,000 ரூபாயையும் மொத்தமாக முதலீடு செய்து, அந்தப் பங்கு அதிகமாகச் சரிந்துவிட்டால், அவருக்கு வரிச் சலுகை கிடைத்தும் புண்ணியமில்லை. பங்குச் சந்தையே வேண்டாம் என்ற முடிவுக்குகூட அவர்கள் வந்துவிடவும் வாய்ப்பு இருக்கிறது.

ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டம்...

ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் அல்லது இண்டெக்ஸ் இ.டி.எஃப்.களில் முதலீடு செய்யும் பட்சத்தில் இவ்வளவு பெரிய ரிஸ்க் இல்லை. இண்டெக்ஸ் இ.டி.எஃப்.-ல் தரமான பங்குகள் மட்டுமே இருக்கும். அதேபோல, மியூச்சுவல் ஃபண்டுகளில் ஃபண்ட் மேனேஜர் இருப்பார். அதனால் சிறு முதலீட்டாளர்களை நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்யாமல் வேறு வழிகளில் உள்ளே வரவைக்கலாம். நோக்கம் நல்லதாக இருந்தாலும், இதில் நிறைய மாற்றங்கள் தேவை'' என்றார்.

இந்த வரிவிலக்கைப் பெறுவதற்கு இதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம் என்பதால் ஃபண்ட்ஸ் இந்தியா டாட் காமின் இயக்குநர் ஸ்ரீகாந்த் மீனாட்சியிடம் பேசினோம்.  ''ஏற்கெனவே இருக்கும் இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் 80சி-யின் கீழ் வரிவிலக்கு பெறமுடியும். ஆனால், இத்திட்டத்தில் கூடுதலாக 25,000 ரூபாய்க்கு வரிவிலக்கு பெறலாம். ஒரு வருடம் மட்டுமே சலுகை பெறுவதற்காக, ஒரு டீமேட் கணக்கு துவங்கி முதலீடு செய்வது தேவைதானா என்று தோன்றுகிறது. ஆனால், புதிய நேரடி வரிவிதிப்புச் சட்டம் (direct tax code) அமலுக்கு வரும்பட்சத்தில் இ.எல்.எஸ்.எஸ். திட்டம் இருக்காது. அந்தத் திட்டத்துக்கு மாற்றாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், என் கேள்வியே, டி.டி.சி.யில் ஏன் இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தை நீக்க வேண்டும் என்பதே. சிறு முதலீட்டாளர்கள் வரியைச் சேமிக்க இருக்கும் எளிமையான வழி இ.எல்.எல்.எஸ்.தான்'' என்றார்.

ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டம்...

இத்திட்டத்திற்கு இப்போதைக்கு மூன்று மியூச்சுவல் ஃபண்டுகள் விண்ணப் பித்திருக்கின்றன. கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகள் இருக்கும் சூழ்நிலையில் மூன்று பண்டுகள் மட்டுமே இதற்கு  விண்ணப்பித்திருப்பது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் விருப்பமின்மையையே காட்டுகிறது. மேலும், மத்திய அரசு நெருக்கடி கொடுத்ததினாலேயே எஸ்.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் இதற்கு விண்ணப் பித்திருப்பதாகப் பேச்சு.

இந்த ஃபண்டிற்காக விண்ணப்பித்திருக்கும் நிறுவனங்களில் ஐ.டி.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் ஒன்று. ஆனால், இந்த ஃபண்டில் இ.எல்.எஸ்.எஸ். திட்டம் இல்லை. இந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் பாலசுப்ரமணியனிடம் பேசினோம். ''எங்களிடம் அனைத்து வகையான திட்டங் களும் இருக்கிறது. வரி சேமிப்புத் திட்டம் மக்களுக்குத் தரவேண்டும் என்பதற்காக விண்ணப்பித்திருக்கிறோம். பி.எஃப்., வீட்டுக் கடன், கல்விக் கட்டணம் உள்ளிட்ட முதலீடுகளே ஒரு லட்சத்தைத் தாண்டிவிடுவதால், மக்களுக்கு இது ஒரு புதிய வாய்ப்பாக இருக்கும்'' என்றவர், இந்தத் திட்டம் எப்போது வரும் என்பதைச் சொல்ல மறுத்துவிட்டார்.

இத்திட்டத்தைக் கொண்டு வந்ததன் நோக்கம் சரிதான். ஆனால், இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்து, இன்னும் சில விஷயங்களைச் சேர்ப்பது நல்லது. அவசரப்பட்டு அரைகுறையாக வெந்த சோறைப் போடுவதைவிட, ஆறஅமர செய்தாலும் அமர்க்களமான ருசியில் இருந்தால்தானே மக்கள் மனதில் இடம் பெற முடியும்?