இரா.ரூபாவதி, படம்: பா.கார்த்திக்.
##~## |
பலநாள் கனவு கண்டு, கஷ்டப்பட்டு வாங்கியப் பொருளில் ஏதாவது குறை இருந்தால், அதற்குப் பதிலாக வேறொரு பொருளை வாங்கிக்கொண்டு வருவதோடு, பிரச்னை முடிந்ததாக நினைக்கிறோம் நாம். பணம் தந்து வாங்கும் பொருளில் அல்லது பெறும் சேவையில் ஏதாவது குறை ஏற்பட்டால் அந்தப் பொருளை தயாரித்த நிறுவனத்தின் மீதும், விற்பனை செய்த நிறுவனத்தின் மீதும் வழக்குப் போடும் அதிகாரம் நுகர்வோர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. இதற்கு என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்கிறார் மாநில நுகர்வோர் நீதிமன்றத்தின் நீதிபதி ரகுபதி.
நோட்டீஸ் அனுப்பலாம்!
''நீங்கள் வாங்கியப் பொருளில் வாரன்டி நாட்களுக்குள் பிரச்னை ஏதும் வந்தால் பொருளை வாங்கிய நிறுவனத்திடம் முறையிடலாம். அங்கு எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை என்றால் பொருளைத் தயாரித்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பலாம். இந்த நோட்டீஸுக்கு நிறுவனம் செவிசாய்த்து உங்களுக்கான இழப்பீட்டை தர ஒப்புக்கொண்டால், தீர்ந்தது பிரச்னை.

நிறுவனம் எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை என்றால் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். இதற்கு எத்தனை எதிர்மனுதாரர் இருக்கிறார்களோ, அத்தனைபேருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதோடு நுகர்வோர் நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி மற்றும் இரண்டு

உறுப்பினர் களுக்குச் சேர்த்து மூன்று மனுக்களை நீதிமன்றத்தில் தர வேண்டும். இந்த மனுக்கள் பச்சை தாளில் இருக்கவேண்டும் என்பது முக்கியம்.
பில்லைப் பாருங்கள்!
பொருளுக்கான பில், வாரன்டி கார்டு, அந்த நிறுவனத்திற்கு அனுப்பிய நோட்டீஸின் நகல் ஆகிய அனைத்து ஆவணங் களையும் இணைத்துத் தர வேண்டும். விற்பனை செய்யும் பொருட்களுக்குப் பெரும்பாலான கடைகள் முறையான பில் தருவதில்லை. அவர்கள் பில் என்று உங்களிடம் தருவது மதிப்பீட்டு ரசீதைத்தான். இதைவைத்து நீங்கள் வழக்குப் போட முடியாது. பில்லில், டி.என்.ஜி.எஸ்.டி., பில் நம்பர், வாங்கியப் பொருளின் பெயர் மற்றும் பணம் செலுத்தியதற்கான முத்திரை ஆகியவை இருக்கிறதா என்பதை உறுதி செய்து வாங்குங்கள். வாங்கியப் பொருளில் பிரச்னை ஏற்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் வழக்குத் தொடர வேண்டும். (இலவசமாகத் தரும் பொருட்களில் குறை இருந்தால் தயாரித்த நிறுவனத்தின் மீது வழக்குப்போட முடியாது.)
மேல்முறையீடு!

கீழ் நீதிமன்றத்தில் நீங்கள் கேட்ட இழப்பீடு குறைவாக கிடைத்து, அதில் திருப்தியில்லை எனில், அந்தத் தீர்ப்பை எதிர்த்து தேசிய நுகர்வோர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். அதற்கு 25 ஆயிரம் ரூபாய் அல்லது இழப்பீடாகத் தந்த தொகையில் 50 சதவிகிதம் என இந்த இரண்டில் எது குறைவோ அதை நீதிமன்றத்தின் பெயரில் ஓராண்டிற்கு வைப்பு நிதியாக வைக்கவேண்டும்.
எந்த நீதிமன்றத்தில்..?
மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கோரும் வழக்குகளைப் பதிவு செய்யலாம். 20 லட்சத்திற்கு மேல் ஒரு கோடி ரூபாய் வரையிலான வழக்குகளை சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றத்திலும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் வழக்குகளை டெல்லியில் உள்ள தேசிய நுகர்வோர் நீதிமன்றத்திலும் பதிவு செய்யலாம். இழப்பீட்டிற்கு ஏற்ப நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ய கட்டணம் வசூலிக்கப்படுகிறது (பார்க்க பெட்டிச் செய்தி). இதை நீதிமன்றத்தின் பெயரில் டி.டி.யாக எடுத்துத் தரவேண்டியிருக்கும். இழப்பீடு என்பது பொருள் வாங்கியவரின் பதவி, வருமானம், அவருடைய தகுதி ஆகியவற்றை கருத்தில்கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. நுகர்வோர் பாதுகாப்பு குறித்த உங்களின் சந்தேகங்களுக்குத் தனியாக உதவி மையங்களும் உள்ளன. அதற்கு 044 - 2859 2828 எண்ணில் தொடர்புகொள்ளலாம்'' என்றார்.