நடப்பு
Published:Updated:

ஷேர்லக் - யூ டர்ன் அடிக்கும் ரிலையன்ஸ் !

ஷேர்லக் - யூ டர்ன் அடிக்கும் ரிலையன்ஸ் !

##~##

''குஜராத் சென்று திரும்பிய ஷேர்லக் அவர்களே, வருக! வருக!'' என்றபடி ஷேர்லக்கை நம் கேபினுக்குள் வரவேற்றோம். ''கிண்டல் வேண்டாம், ஆயிரம்தான் கொள்கை வேறுபாடு இருந்தாலும் மோடியின் நிர்வாகத் திறமைக்கு இந்த முதலீடு மாநாடு ஒன்றேபோதும்; அவர் மாதிரி ஒரே ஒருவர் மத்திய அமைச்சரவையில் இருந்தால்போதும், இந்தியா எங்கோ போய்விடும்!'' என்றவர், மார்க்கெட் பற்றிய செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

''கடந்த இரண்டாண்டுகளில் இல்லாத உச்சபட்சமாக, சந்தை முதல்முறையாக 20000 புள்ளிகளுக்கு மேல் குளோஸாகி இருக்கிறது. ரிலையன்ஸ், ஐ.டி.சி. போன்ற கம்பெனிகளின் ரிசல்ட் நல்லபடியாக வந்திருக்கிறது. என்றாலும், சந்தை இனி மேலேயா, இல்லை கீழேயா என்று சொல்ல முடியாமல் மதில்மேல் பூனையாக நிற்கிறது. எனவே, உஷாராக இருப்பது நல்லது!'' என்று எச்சரித்தவருக்கு ஜாங்கிரி தந்தோம். அதைச் சாப்பிட்டவர், முக்கிய நிறுவனங்களின் ரிசல்ட் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

ரிலையன்ஸ்: ''ரிலையன்ஸ் முடிவுகள் வெள்ளிக்கிழமை சாயங்காலம் வந்தது. எதிர்பார்த்ததைவிட முடிவு சிறப்பாக வந்திருக்கிறது. இனி ரிலையன்ஸுக்கு இறங்குமுகம் குறைவு என்பதுபோலதான் தெரிகிறது. விரைவில் இந்தப் பங்கு 1,000 ரூபாய்க்குச் செல்ல வாய்ப்பு இருப்பதாக பல அனலிஸ்ட்கள் சொல்கிறார்கள். அந்தப் பங்கு விலை 10 சதவிகிதம் உயர்ந்தால், சந்தையும் வேகமாக உயரும். காரணம், சென்செக்ஸ் வெயிட்டேஜில் ரிலையன்ஸ் 9 சதவிகிதம் இருக்கிறது. இனி ரிலையன்ஸ் உயர உயர சந்தையும் உயரும் என்று எதிர்பார்க்கலாம். எனவே, தப்பித் தவறி டிரேடர்கள் யாரும் அன்று அந்தப் பங்கை விற்று ஷார்ட் போய்விட வேண்டாம்.

ஷேர்லக் - யூ டர்ன் அடிக்கும்  ரிலையன்ஸ் !

ஐ.டி.சி.: விலைவாசி உயர்வு பொது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில் நிறுவனங்களுக்கு லாபகரமாக இருக்கிறது. மூன்றாம் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் வேளாண் வணிகப் பிரிவு விற்பனை 43.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் ஓட்டுமொத்த விற்பனை 23.1 சதவிகிதமாக அதிகரித்து ரூ.7,627 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தக் காலாண்டில் இதன் நிகர லாபம் 20.6 சதவிகிதமாக அதிகரித்து ரூ.2,052 கோடியாக உயர்ந்துள்ளது.

ஹெச்.சி.எல்.: நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் டிசம்பர் காலாண்டில் 65.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த

40 காலாண்டுகளாகத் தொடர்ந்து டிவிடெண்டை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து லாபத்தில் இயங்குவதற்கு ஒரு காரணம், இதன் சி.இ.ஓ. வினித் நாயர்தான். தனது சி.இ.ஓ. பதவியைத் துறந்ததன் மூலம் இந்த நிறுவனத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு வாய்ப்பை அடுத்த தலைமுறைக்கு தந்திருக்கிறார் நாயர்.

பதவி விலகும் எண்ணம் அவருக்கு முன்பே இருந்ததோ என்னவோ, தன்னிடம் இருந்த இந்த நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் கடந்த ஆண்டு ஜூன் மாதமே விற்றுவிட்டார். இதன் மூலம் அவருக்குக் கிடைத்தது சுமார் 138 கோடி ரூபாய். இந்தப் பணத்தை தான் நடத்திவரும் தொண்டு நிறுவனமான சம்பர்க்கிற்கு தந்துள்ளார். இப்போதைக்கு துணைத் தலைவராகவும் இணை நிர்வாக இயக்குநராகவும் அவர் இருந்து இந்த நிறுவனத்தை வழிநடத்தப் போகிறார் என்றாலும், இந்நிறுவனம் திறமைமிக்க ஒரு சி.இ.ஓ.வை இழந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

மைண்ட்ட்ரீ: சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு 400 ரூபாய்க்கு கீழே மைண்ட் ட்ரீ பங்கின் விலை இருந்தது. மேலும், அந்தச் சமயத்தில் அப்போதைய சேர்மன் அசோக் சூட்டாவும் அந்த நிறுவனத்திலிருந்து விலகினார். அவ்வளவுதான் அந்த நிறுவனம் என்று பலரும் நினைத்தனர். ஆனால், கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சவிலையில் வர்த்தகமாகிறது. இந்தக் காலாண்டிலும் இந்தப் பங்கின் முடிவு நன்றாக வந்திருக்கிறது. இப்போது 750 ரூபாய்க்கு வர்த்தகமாகும் இந்தப் பங்கு 1,000 ரூபாய்க்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதாம்!'' என்றவருக்கு சுடச்சுட டீ தந்தோம்.  

''இன்றைக்கு சென்னையில் செபி போர்டு மீட்டிங் நடந்ததே! என்ன விசேஷம்?'' என்றோம்.

''இந்த போர்டு மீட்டிங்கில் ஆறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாம். 25 சதவிகித பங்குகளை முதலீட்டாளருக்குத் தருதல், என்.எஃப்.ஓ. காலத்தை 15 நாட்களிலிருந்து

45 நாட்களாக உயர்த்துவது பற்றி பரபரப்பாக விவாதம் நடந்தது என்று நண்பர் ஒருவர் காதும் காதும் வைத்த மாதிரி சொன்னார்'' என்று கிசுகிசுத்தார் ஷேர்லக்.  

''ஆர்.பி.ஐ. கூட்டம் விரைவிலேயே நடக்கப் போகிறதே! இந்த முறையாவது வட்டி விகிதம் குறைக்கப்படுமா?'' என்றோம். டீயை குடித்தபடி நம் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

''ஆர்.பி.ஐ. அதன் நிதி மற்றும் கடன் கொள்கையை வருகிற 29-ம் தேதி ஆய்வு செய்கிறது. அப்போது வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் அது ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நடக்கும் முதல் வட்டி குறைப்பாக இருக்கும்.

ஆனால், பணவீக்கம் பெரிய அளவில் குறையவில்லை. தவிர, இப்போது டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் பணவீக்கம் மேலும் உயரவே செய்யும் என்கிறார்கள் நிபுணர்கள். அப்படி இருக்கும்போது வட்டி விகிதம் குறையுமா என்பதும் கேள்விக்குறிதான். பொறுத்திருந்து பார்ப்போம்'' என்றவரிடம் ''பட்ஜெட் செய்திகள் ஏதுமுண்டா?'' என்று கேட்டோம்.

''மத்திய பட்ஜெட் தயாரிப்பில் நிதி அமைச்சகம் மும்முரமாக இருக்கிறது.  பட்ஜெட் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கையை இப்போதே எடுக்கத் தொடங்கி இருக்கிறது. அதிக நிதி கையிருப்பை கொண்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களை பட்ஜெட்டுக்கு முன்பாக அதிக டிவிடெண்ட் அறிவிக்க கேட்டுக்கொண்டிருக்கிறது'' என்றார்.

''டெக்கான் கிரானிக்கல் பங்கு பற்றி முக்கிய முடிவு வெளியாகி இருக்கிறதே?'' என்றோம்.

''ஆமாம், பங்குச் சந்தை பட்டியலிடப்படும் விதிமுறைகளை பின்பற்றாதக் காரணத்தால் 23-ம் தேதி முதல் டெக்கான் கிரானிக்கல் நிறுவனப் பங்கின் வர்த்தகம் தேசிய பங்குச் சந்தையில் நிறுத்தப்படுகிறது. எனவே, உங்களுக்குத் தெரிந்தவர், தெரியாதவர் யாராவது இந்தப் பங்கை வைத்திருந்தால், கிடைக்கிற விலைக்கு விற்றுவிட்டு வெளியே வந்துவிடும்படி சொல்லுங்கள். வர்த்தகம் நடப்பது நிறுத்தப்பட்டால், அதன்பிறகு இந்த பங்கை விற்கவே முடியாது.

டெக்கான் கிரானிக்கல் தவிர, எஃப்

அண்ட் ஓ வர்த்தகப் பிரிவிலிருந்து ஜி.வி.கே. பவர் மற்றும் பூஷன் ஸ்டீல் ஆகிய நிறுவனப் பங்குகளை நீக்குகிறது என்.எஸ்.இ. இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. குறைந்தபட்ச வர்த்தக அளவுக்கு குறைவாக வர்த்தகமாகி வருவதே இதற்கு காரணம்'' என்றார்.

''சந்தை ஹாட்-ஆக இருக்கிறதே, ஷேர்டிப்ஸ் உண்டா?'' என்றோம்.    

''சந்தை ஹாட் என்று நீரே சொல்லிவிட்டீர். பிறகு எதற்கு டிப்ஸ்?'' என்று சொல்லிவிட்டு வேகமாக நடையைக் கட்டினார் ஷேர்லக்.