நடப்பு
Published:Updated:

அக்ரி கமாடிட்டி !

அக்ரி கமாடிட்டி !

மஞ்சள் (TURMERIC)

##~##

வர்த்தகர்கள் குறைவாக மஞ்சளை வாங்கிச் செல்வதால் மஞ்சளின் விலை குறைந்து வர்த்தகமாகும். மேலும், ஏற்றுமதித் தேவை குறைந்ததை அடுத்து விலை இன்னும் குறைந்தது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அதிகளவில் வரத்து வந்ததும் விலை குறைவிற்கு காரணமாக அமைந்தது.

எனினும், இந்த விலை குறைவு இந்த வாரத்து நிலைமைதான். மொத்தத்தில் பார்க்கும்போது, மஞ்சள் உற்பத்தி இந்தாண்டு குறைவாக இருக்கும் என்பதால் விலை அதிகரிப்பதற்கான சூழ்நிலை நன்றாகவே இருக்கிறது.

அக்ரி கமாடிட்டி !

சென்றவார மத்தியில் நிஜாமாபாத் சந்தைக்கு 1,000 பைகள் மஞ்சள் வரத்து வந்தன. (ஒரு பை என்பது 70 கிலோ). நூறு கிலோ மஞ்சள் 5,700 ரூபாய்க்கு வர்த்தகமானது.  வரும் வாரத்தில் மஞ்சள் அதிக விலை ஏற்றம் இல்லாமல் வரத்தைப் பொறுத்து வர்த்தகமாகும்.

மிளகு (PEPPER)

மிளகு விலை அதிகரித்ததால் வர்த்தகர்கள் பிராஃபிட் புக்கிங் செய்து வருகிறார்கள். என்.சி.டி.இ.எக்ஸ். குடோனில் கலப்பட மிளகை டெலிவரிக்கு வைத்திருந் ததாக கூறப்படும் புகாரை அடுத்து விசாரணை நடந்து வருகிறது. அந்த மிளகு பயன்பாட்டிற்கு தகுதியற்றது என கூறப்பட்டால் மிளகு சப்ளையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

அக்ரி கமாடிட்டி !

சென்ற வாரத்தில் வியாழன் அன்று கொச்சி சந்தைக்கு 33 டன் மிளகு விற்பனைக்கு வந்தது. 100 கிலோ மிளகு 39,900 ரூபாய் ஸ்பாட் விலையாக இருந்தது. சென்ற ஆண்டில் 48,000 டன்னாக இருந்த மிளகு உற்பத்தி, 2013-ம் ஆண்டில் 60,000 டன்னாகவும் சர்வதேச மிளகு உற்பத்தி 2013-ம் ஆண்டில் 3.17 லட்சம் டன்னாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மிளகாய் (CHILLI)

சந்தையில் அதிகப்படியான மிளகாய் வரத்து இருந்ததால் சென்ற வாரத்தில் விலை குறைந்தது. தற்போது சந்தைக்கு வரும் மிளகாய் தரமில்லாததாக இருப்பதால் வர்த்தகர்கள் இந்த மிளகாயை வாங்காமல் தரமுள்ள மிளகாய் வரும்போது வாங்கலாம் என காத்திருக்கிறார்கள். இதனால் புதிய மிளகாயை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திணறுகிறார்கள்.

அக்ரி கமாடிட்டி !

வரும் வாரத்தில் தரமான மிளகாய் வரும் என நம்புவதால் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. சென்ற வியாழன் அன்று குண்டூர் சந்தைக்கு 27,000 பைகள் (ஒரு பை என்பது 45 கிலோ) வரத்து வந்துள்ளன. புதிய மிளகாய் வரத்து 20,000 பைகளாக இருக்கிறது. அதேநேரத்தில் குளிர்பதனக் கிடங்குகளில் 7,000 பைகள் சப்ளை செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீரகம் (JEERA)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து ஜீரகத்தின் விலை சென்ற வாரத்தில் உயர்ந்து வர்த்தகமானது. நூறு கிலோ தரமான ஜீரகம் சென்ற வாரத்தில் 14,100 ரூபாய்க்கு விற்பனையானது. உஞ்ஹா சந்தைக்கு தின வரத்தாக சென்ற வியாழன் அன்று 3,000 பைகள் வந்தன. (ஒரு பை என்பது 55 கிலோ).

அக்ரி கமாடிட்டி !

2011-2012 ராபி சீஸனில் ராஜஸ்தான் மாநிலத்தில் 4.68 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் ஜீரகம் பயிரிடப்பட்டிருப்பதாகவும், கடந்த ஐந்து ஆண்டு சராசரி அளவுடன் ஒப்பிட்டால் இது மிக அதிகம் என்கிறார்கள்  விவசாயிகள். புதிய ஜீரகம் பிப்ரவரி முதல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் 90 சதவிகிதம் விதைப்பு முடிந்து விட்டது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 5.2% அதிகமான ஹெக்டேர்களில் பயிர் விளைவிக்கப்பட்டுள்ளது. தேவை அதிகரித்தாலும் வரத்து கூடுமென்பதால் விலை ஏற்றம் அதிகம் இருக்காது.

 ஏலக்காய் (CARDAMOM)

பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு வட மாநிலங்களில் தடை விதித்துள்ளதன் காரணமாக  ஏலக்காயின் தேவை சமீப வாரங்களாகக் குறைந்து வருகிறது. மேலும், வட மாநிலங்களில் அதிக குளிர் நிலவுவதாலும் ஏலக்காய் தேவை குறைந்துள்ளது. சென்ற வியாழன் அன்று இடுக்கி மார்க்கெட்டுக்கு வரத்து 49 டன்னாகவும், விற்பனை 45 டன்னாகவும் இருந்தது. ஒரு கிலோ 752 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதிகபட்ச விலையாக 1,062 ரூபாய்க்குக் கேட்கப்பட்டது.

அக்ரி கமாடிட்டி !

சமீபத்திய தகவல்படி, நேபாளம் நாட்டின் சோலுகும்பு மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 25 மில்லியன் ரூபாய் மதிப்புடைய ஏலக்காய் அதிகப்படியான பனிப் பொழிவு காரணமாகச் சேதமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. புதிய பயிர் சேதமடைந்ததாலும், பழைய பயிர்கள் வறண்டு விட்டதாலும் அங்கு ஏலக்காய் தட்டுப்பாடு வருமென கூறப்படுகிறது. ஏலக்காய் விலை வரும் வாரத்திலும் குறைந்தே வர்த்தகமாகும்.