நம்பர் 1 மேனேஜர் ஆவது எப்படி ?படம்: தே.தீட்ஷித்
##~## |
பத்து திறமைசாலிகள் தனித்தனியாக ஒரு வேலையைச் செய்கிறார்கள். அவர்கள் பத்துபேரும் சேர்ந்து கூட்டாகச் செயல்பட்டால் உற்பத்தித் திறன் எவ்வளவு அதிகரிக்கும்? பத்து மடங்கு என்று சொல்கிறீர்களா? இல்லை, இல்லை, 17.7 மடங்கு அதிகரிக்கும் என்கின்றன அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சிகள்.
இன்னும் ஒரு முக்கிய கண்டுபிடிப்பு. அமெரிக்கப் பயிற்சி மற்றும் முன்னேற்றக் கழகம் (American Society for Training and Development) ஓர் ஆராய்ச்சி நடத்தியது. கூட்டாகச் சேர்ந்து செயல்படுவதால் எத்தகைய வேறுபாடுகள் ஏற்படுகின்றன என்பது குறித்து 230 நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளிடையே கருத்துக் கணிப்பு நடத்தியதில் தெரியவந்த உண்மைகள் இனி:
* உற்பத்தி 77% அதிகரிக்கிறது; * தரம் 72% உயர்கிறது; * சேதாரம் 55% குறைகிறது; * ஊழியர்களின் திருப்தி 65% உயர்கிறது; * வாடிக்கையாளர் திருப்தி 55% அதிகரிக்கிறது.
பிஸினஸ் என்பது தனிமனித முயற்சி அல்ல. பலருடைய அறிவு, திறமை, உழைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தும் கூட்டு முயற்சி. இந்தக் கூட்டு முயற்சியை முன்னின்று திறமையாக நடத்துபவர்தான் மேனேஜர் என்பவர்.

இந்த மேனேஜர் என்பவர் ஒரே மாதிரி செயல்படக் கூடியவர் அல்ல. பல மேனேஜர்களின் நிர்வாக ஸ்டைலுக்கு ஏற்ப அவர்களை நான்கு வகையாகப் பிரித்திருக்கிறார்கள் பால்ஹெர்ஸி (Paul Hersey),, கென் ப்ளான்சர்டு (Ken Blanchard) என்னும் இரண்டு அமெரிக்க நிர்வாக மேதைகள். இவர்கள் இருவரும் இணைந்து 1985-ல் வெளியிட்ட சூழ்நிலை தலைமைக் கொள்கை (Situational Leadership Theory) என்கிற கொள்கையை உருவாக்கினர். மேனேஜர்கள் செயல்படும் விதங்களை 'மேனேஜ்மென்ட் ஸ்டைல்ஸ்’களாக காட்டினார்கள். அந்த ஸ்டைல்கள் இனி:
1. Telling – இவர்கள் என்னென்ன செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும் என்று கட்டளையிடுவார்கள். இவர்களைக் 'கட்டுப்படுத்தும் மேனேஜர்கள்’ (Directing Managers) என்று அழைப்பார்கள்.
2. Selling – இவர்கள் என்னென்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்யவேண்டும் என்று ஊழியர்களோடு கலந்து ஆலோசிப்பார்கள். இவர்களைப் 'பயிற்சி அளிக்கும் மேனேஜர்கள்’ (Coaching Manager) என்று கூறுவார்கள்.
3. Participating – இவர்கள் ஊழியர்களோடு தோளோடுதோள் சேர்த்துப் பணியாற்றுவார்கள். இவர்களைத் 'துணை செய்யும் மேனேஜர்கள்’ (Facilitating Managers) என்று சொல்வார்கள்.


4. Delegating – இவர்கள் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஊழியர்களோடு பகிர்ந்து கொள்வார்கள். அவர்களைச் சுதந்திரமாகச் செயல்படவிடுவார்கள். வீணாகத் தலையிடாமல், மேற்பார்வை மட்டுமே செய்வார்கள். இவர்கள், 'பொறுப்பை ஒப்படைக்கும் மேனேஜர்கள்’ (Delegating Managers)என்று அழைக்கப்படுவார்கள்.
நாம் சிறந்த மேனேஜர்கள் ஆகவேண்டும் என்றால், நமது மேனேஜ்மென்ட் ஸ்டைல் என்ன என்று கண்டுபிடிக்கவேண்டும். இந்த ஸ்டைலைக் கண்டுபிடிக்க ஒரு டெஸ்ட் இருக்கிறது. மிக, மிக சுவாரஸ்யமான டெஸ்ட். சிறந்த மேனேஜர் ஆகவேண்டும் என்று விரும்பும் அனைவரும் கட்டாயம் எடுத்துக்கொண்டேயாகவேண்டிய டெஸ்ட்.
எதிர்ப்பக்கத்தில் 24 கேள்விகளைத் தந்திருக் கிறேன். நிஜமாக, இவை கேள்விகள் அல்ல. நடைமுறை வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சம்பவங்கள். இந்தச் சந்தர்ப்பங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதைக் கற்பனை செய்யுங்கள். உங்கள் பதில் கீழ்க்கண்ட
5 விதங்களில் ஒன்றாகத்தான் இருக்கும்.
1 - நான் இப்படிச் செய்வதேயில்லை.
2 - சில சமயங்களில்
இப்படிச் செய்வதுண்டு.
3 - ஓரளவு இப்படிச் செய்வதுண்டு.
4 - பெரும்பாலான நேரங்களில் இப்படிச் செய்வதுண்டு.
5 - நான் எப்போதும் இப்படித்தான் செய்வேன்.
இந்த டெஸ்ட் எடுத்துக்கொள்வது எப்படி?

உதாரணமாக, கேள்வி 1. உங்களின் கீழ் வேலை பார்ப்பவர்களின் வேலைகளை நீங்கள் எப்போதும் கண்காணிப்பவராக இருந்தால், நீங்கள் எண் 5-ஐ டிக் செய்யவேண்டும். நீங்கள் கண்காணிக்கவே மாட்டீர்களா? உங்கள்
பதில் 1.
எல்லாக் கேள்விகளுக்கும் கட்டாயமாகப் பதில் எழுதியேயாக வேண்டும்.
24 கேள்விகளுக்கும் பதில்கள் தயாரா? உங்கள் பதில்களைப் பத்திரமாக வைத்திருங்கள்.
உங்கள் மேனேஜ்மென்ட் ஸ்டைல் என்ன? நம்பர் 1 மேனேஜராக நீங்கள் என்ன செய்யவேண்டும்?
பால் ஹெர்ஸி, கென் ப்ளான்சர்டு துணையோடு உங்களுக்கு வழி காட்டுகிறேன்.
(கற்போம்)