மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப்

பயிற்சிக் காலம்: பக்குவமாய் கடக்க வேண்டும்! செ.கார்த்திகேயன்.

##~##

ஒருவர் அலுவலக வாழ்க்கைக்குள் முதன்முதலாக நுழையும்போது அவர் மனதில் ஆயிரமாயிரம் கனவுகள் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும். சொந்தச் சம்பாத்தியத்தில் ஒரு வீடு வாங்கவேண்டும், கார் வாங்கவேண்டும், தனது தங்கையின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிக்கவேண்டும்... என பல கனவுகள் இருக்கலாம்.

இந்தக் கனவுகள் நிறைவேற முக்கியத் தேவை, பலமான நிதி நிலையை உருவாக்கிக்கொள்வது. இதற்கு அடிப்படையாக இருப்பதுதான் வேலை. அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேருபவர்களுக்கு முதல் ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ டிரெய்னிங் அல்லது கான்ட்ராக்ட் பீரியடாக இருக்கும். இந்தச் சமயத்தில் அவர்கள் வேலையை எப்படி செய்யவேண்டும்?, அலுவலகத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? என்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் ஐசால்வ் டெக்னாலஜி நிறுவனத்தின் ஹெச்.ஆர். பிரிவின் துணை மேலாளர் பி.சி.ரம்யா.

நாணயம் ஜாப்

''ஒருவரைப் பார்க்கும்போது அவர் மீது ஏற்படுகிற அபிப்ராயம்தான் அவர் மீதான சிந்தனைகளுக்கு வித்தாக அமையும் என்பார்கள். அதேபோலத்தான் ஒருவர் அலுவலகத்தில் சேரும்போது, அவர் மீது உண்டாகிற அபிப்ராயம்தான் அவர் அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் வரை நிலைக்கும். அதனால்தான் உடை மற்றும் சிகை அலங்காரங்களில் முதலில் கவனம்  செலுத்துங்கள். அடுத்து, அலுவலக நண்பர்களுடன், மேலதிகாரிகளுடன் பேசும் விதம். தன்மையான பேச்சு, சாதுரியமாகப் பேசும் திறன் முக்கியம். பயிற்சிக் காலத்தில் இருக்கும்போது நிரூபிக்கவேண்டிய முக்கியமான விஷயம், உங்களிடமிருக்கும் உண்மைத்தன்மை மற்றும் நீங்கள் ஒரு விவரம் தெரிந்த பணியாளர் என்பதைத்தான்'' என்று தெளிவாக்கியவர், மேலும் சில முக்கிய விஷயங்களை எடுத்துச் சொன்னார்.

''இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலான வர்கள் அலுவலகத்திற்கு சேர்ந்த புதிதில் குறித்த நேரத்துக்கு அலுவலகம் வரத் தவறுகிறார்கள். சரியான நேரத்திற்கு அலுவலகம் வராமல் இருப்பது மட்டுமல்லாமல் அதற்கென ஜோடித்த சில பொய்கள் சொல்வதையும் வழக்கமாக்கிக்கொள்வது (உதாரணம், பஸ் லேட், டிராஃபிக் ஜாம்...) முற்றிலும் தவறான விஷயம். பொதுவாகவே, அலுவலகத்துக்கு காலதாமதமாக வரும்பட்சத்தில் இது மாதிரியான பொய்களை சொல்லவே கூடாது. அதுவும் பயிற்சிக் காலத்தில் கட்டாயம் சொல்லக் கூடாது.

அதேபோல, பயிற்சிக் காலத்தில் அடிக்கடி விடுப்பு எடுப்பதும் விரும்பத்தக்க விஷயமல்ல. பயிற்சிக் காலத்தில் சம்பளம் இல்லாத விடுமுறையே பல நிறுவனங்கள் அளிக்கும். சம்பளம்தான் கிடையாதே என்று இஷ்டத்துக்கு லீவு எடுத்தால், அதனால் நம் இமேஜ் பெரிதும் பாதிப்படையும். இதனால் நம் பயிற்சிக் காலம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தவிர, எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் பதவி உயர்வுக்கும் அது ஒரு தடையாக மாறலாம்.

நாணயம் ஜாப்

பயிற்சிக் காலத்தில் உயரதிகாரிகளிடமோ அல்லது சக ஊழியர்களுடனோ தேவையில்லாமல் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தெரிந்தாலும் தெரியா விட்டாலும் நாலுபேர் முன்பு அமைதி காப்பது அவசியம். ஆனால், பேச வாய்ப்பு கிடைத்தும் பேசாமல் இருப்பதும் தவறுதான்.

அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்களின் பெயரையும், அவர்களது வேலைத்திறனையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்றாற்போல செயல்படுவது நல்லது. முக்கியமாக, அவரவர்களின் குழு பணியாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த விஷயங்களை தெரிந்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஏற்றபடி பழகுவது நல்லது.

பயிற்சிக் காலத்தில் தனக்குத் தரப்பட்ட வேலைகளை சிறப்பாகச் செய்து முடித்துவிட்டு சக பணியாளர் களின் வேலையிலும் கவனம் செலுத்தி அவர்களுக்கு உதவுவது உத்தமம். இதனால் தனக்கு அளிக்கப்பட்ட மற்ற வேலைகள் பற்றி தெரிந்துகொள்ளும் அனுபவம் கிடைப்பதோடு, மற்றவர் களின் வேலையை பகிர்ந்துகொள்பவர் என்கிற நல்ல பெயரும் கிடைக்கும்.  

மதிய உணவு இடைவேளை நேரங்களை குழு பணியாளர்கள் மற்றும் குழுத் தலைவர்களுடன் செலவிடுவதை தவறவிட வேண்டாம். இந்த நேரங்களில்தான் அலுவலக உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள முடியும்.

அதிலும் பயிற்சிக் காலத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் இடைவேளை நேரங்களை பகிர்ந்துகொள்வதுதான் நல்லது.

பயிற்சிக் காலத்தில் பணியாளர் களுக்கு கவனிக்கும் திறன் என்பது மிக முக்கியம். கவனமாக இருக்கும் பட்சத்தில்தான் அடுத்தவர்கள் செய்யும் வேலைகளில், அடுத்தவர்கள் சொல்வதில் இருந்தும் நம்மால் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள முடியும்'' என்றார் ரம்யா.

பயிற்சிக் காலம்தான் எதிர்காலத்துக்கு அடிப்படை என்கிறபோது அதை பக்குவமாக கடந்துவருவதுதானே சரி!