மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப் - பிரச்னைக்குத் தீர்வு பேச்சுவார்த்தையே!

செ.கார்த்திகேயன், படம்: பா.கார்த்திக்.

##~##

எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும், அதனைத் தீர்க்க ஒரேவழி பேச்சுவார்த்தை நடத்துவதுதான். பிரச்னையில் சிக்கியிருக்கும் இருதரப்பினரும் எதிரெதிரே உட்கார்ந்து பேசினால், எந்தப் பிரச்னைக்கும் நிச்சயம் தீர்வு கிடைக்கும். பொதுவாழ்க்கையில் மட்டுமல்ல, நிறுவனங்களில் நடக்கும் பிரச்னைகளுக்கும் கலந்துபேசி முடிவெடுப்பதுதான் ஒரே தீர்வு.

பேச்சுவார்த்தை நடத்தும் தருணங்களில் இருதரப்பினரும் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? தகவல் பரிமாற்றம் எப்படி இருக்கவேண்டும் என்பதைச் சொல்கிறார் மனிதவள மறுமலர்ச்சி மையத்தின் இயக்குநர் கே.ஜாஃபர்அலி.

''எதிர்பார்ப்பு என்று ஒன்று வரும்போதுதான் பிரச்னை என்று ஒன்று வருகிறது.  பிரச்னைகளை தீர்க்க உதவுவது பேச்சுவார்த்தை. ஊழியர்கள் தங்கள் தேவையை நிறுவனத்திடம் கேட்டு, அது கிடைக்காமல் போனால் ஏற்படும் பிரச்னையை பேச்சுவார்த்தை (Negotiate)மூலம் தீர்க்க முடியும். பேச்சுவார்த்தை என்று வரும்போது இரண்டு காரணிகளை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஒன்று, மனப்பாங்கு (attitude); மற்றொன்று, திறமை (Skill).

பேசித் தீர்க்கலாம்!

உதாரணமாக, ஊழியர்கள் நிறுவனத்திடம் சம்பள உயர்வுவேண்டும், வேலைச் சூழலுக்குத் தேவையான வசதிகளை செய்து தரவேண்டும் என்று கேட்கும்போது, நிறுவனமும் ஊழியர்களிடம் சில கோரிக்கைகளை வைக்கும். உற்பத்தித் திறனை அதிகப்படுத்தவேண்டும்; விற்பனையை உயர்த்தவேண்டும் என்கிற தேவைகளை நிறுவனம் முன்வைக்கும். இரு தரப்பிலும் வேறுவேறு கோரிக்கை வைத்து  அது பிரச்னையாக மாறினால், அதனைத் தீர்க்க ஒரே வழி பேச்சுவார்த்தையே.

நாணயம் ஜாப் - பிரச்னைக்குத் தீர்வு பேச்சுவார்த்தையே!

அதேபோல பணியிடத்தில் பாஸ் என்பவருக்கும், அவருக்குக் கீழ் வேலை செய்யும் பணியாளர்களுக்கும் இடையே ஏற்படும் எதிர்பார்ப்பினால் பேச்சுவார்த்தைக்கான சூழலுக்குத் தள்ளப்பட்டாலும் திறமையுடனும், சிறந்த மனப்பான்மையுடனும் செயல்பட்டு தீர்வு காண்பது உத்தமம்.

மனப்பாங்குத் தொடர்பானது !

கலந்துபேசி முடிவெடுக்கும் நிலையில் இரு தரப்பினரும் பரஸ்பரம் புரிதலும் நம்பிக்கையும் வைப்பது அவசியம்.

இருவரும் இணைந்தே செயல்படுவோம் என்கிற மனப்பாங்குடன் இருப்பது அவசியம்.

கலந்துபேசுவது என்று முடிவானபிறகு இருவரது கருத்துகள் தவிர, மூன்றாவதாக யாராவது கருத்துச் சொன்னால், அந்தக் கருத்துகளையும் (ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால்!) ஏற்றுக்கொள்வது அவசியம்.

எந்த நிலையிலும் பேச்சுவார்த்தையை முறித்துக்கொள்ளக் கூடாது. பயத்துடனும் பேச்சுவார்த்தையை எதிர்கொள்ளக் கூடாது.

'நீ ஜெயிப்பதா, நான் தோற்பதா’ என்கிற ரீதியில் பேச்சுவார்த்தையை அணுகாமல், 'நானும் நீயும் சேர்ந்தே ஜெயிப்போம்’ என்று அணுகினால், இருதரப்பினருக்கும் தோல்வி என்பதற்கே இடமில்லை.  

திறமை தொடர்பானது !

ஒரு தகவலை பரிமாற்றம் செய்வதிலிருந்து அந்த விஷயத்தை நடைமுறைப்படுத்துவது வரை திறம்பட செயல்படவேண்டும். அந்தவகையில் ஒரு தகவலை பரிமாற்றம் செய்வதில் மூன்று வகையான திறமை இருக்கிறது.

நாணயம் ஜாப் - பிரச்னைக்குத் தீர்வு பேச்சுவார்த்தையே!

பேசிவ் ஸ்கில் - இவர்கள் குட்டக் குட்டக் குனிபவர்கள்.  அடுத்தவர்கள் காரியம் சாதிக்க இவர்கள் ஆமாம் சாமி போடுபவர் களாக இருப்பார்கள்.

அக்ரெஸிவ் ஸ்கில் - நான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்கிற மாதிரி எந்த விஷயத்திலும் இவர்கள் தீவிரமாக இருப்பார்கள்.

அஸெர்ட்டிவ் ஸ்கில் - உள்ளதை உள்ளபடி சொல்வதுபோல, தன் நிலையை பயமில்லாமல் வெளிப்படுத்துபவர்கள்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பிறகு அதை நடைமுறைப்படுத்த காலதாமதம் ஏற்பட்டாலோ அல்லது நடைபெறாமல் போகும் சூழ்நிலை உருவானாலோ மறுபேச்சுவார்த்தையில் ஈடுபட தயங்கவே கூடாது.

பொதுவாக, ஊழியர்கள் தங்களுக்குத் தரப்பட்ட வேலையை சிறப்பாகச் செய்து முடித்த பிறகே நிறுவனத்திடம் சம்பள உயர்வுக்காகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம், பேச்சுவார்த்தைக்கு உடன்படாதபோது பெரும்பாலானவர்கள் அவர்களின் உறவை துண்டித்துக்கொள்ளத் தயங்குவதில்லை. இது  தவறு. பேச்சுவார்த்தை மூலம் உடனடித் தீர்வு கிடைக்கவில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் கட்டாயம் கிடைக்கும்'' என்று முடித்தார் ஜாஃபர்அலி.  

அலுவலகம் ஆகட்டும், பொதுவாழ்க்கை ஆகட்டும், பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்கள் மேலே சொன்ன விஷயங்களை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.