பெஞ்ச்மார்க்கிங்! எஸ்.எல்.வி. மூர்த்தி படம்: ரா.நரேந்திரன்
##~## |
பிஸினஸில் தொடர்ந்து வெற்றி காணவேண்டுமானால், உங்கள் யுக்தி உங்களது திறமைகளை எப்போதும் பட்டை தீட்டுவதாக இருக்கவேண்டும். மைக்கேல் போர்ட்டரின் போட்டியில் அனுகூலக் கொள்கை கற்றுத் தரும் பாடம் இது.
திறமைகளைப் பட்டை தீட்டுவது சுயமுன்னேற்ற முயற்சி. இந்த முயற்சிக்கு எப்போதும் ஒரு உந்து சக்தி தேவை. சாதாரணமாக, இந்த உந்து சக்தி என்பது முன்னுதாரணமாகத் திகழும் ஒரு மனிதராக (Role Model) இருப்பார். புதுமுக நடிகனுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்; பாடலாசிரியருக்குக் கண்ணதாசன்; எழுத்தாளனுக்கு சுஜாதா; கிரிக்கெட்டுக்கு சச்சின்; பிஸினஸ்மேன்களுக்கு திருபாய் அம்பானி.
சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, கம்பெனிகளும் இப்படி செய்வதே பெஞ்ச்மார்க்கிங் (Benchmarking)கொள்கை. நீங்கள் காரைக் குடியில் ஓட்டல் நடத்துகிறீர்கள். சென்னைக்கு வருகிறீர் கள். மாம்பலத்தில் தங்கை வீட்டில் தங்குகிறீர்கள். தங்கை பிட்சா ஆர்டர் செய்கிறார். அடுத்த முப்பது நிமிடங்களில் சுடச்சுட பிட்சா வீடு தேடி வருகிறது. பிட்சா கம்பெனிக்குப் போய் அவர்கள் எப்படி இதைச் சாதிக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கிறீர்கள்.
காரைக்குடிக்குத் திரும்பிப் போனவுடன், நீங்களும் வீடுகளுக்கு இட்லி, வடை, குழிப் பணியாரம் டெலிவரி தொடங்குகிறீர்கள். 'ஆர்டர் செய்த முப்பது நிமிடங்களில் ஐட்டங்கள் அவர்கள் வீட்டில்’ என்று விளம்பரம் செய்ய, உங்கள் பிஸினஸ் சக்கை போடு போடுகிறது.

நீங்கள் செய்தது என்ன? அமெரிக்க பிட்சா கம்பெனியின் 30 நிமிட டோர் டெலிவரியை நீங்கள் பெஞ்ச்மார்க் செய்துவிட்டீர்கள்! இந்த பெஞ்ச்மார்க் கொள்கையைக் கண்டுபிடித்தது ஜெராக்ஸ் கம்பெனிதான்! இந்த கம்பெனி 1961-ல் தொடங்கப்பட்டது. 1970 வாக்கில் பல அமெரிக்க, ஜப்பான் போட்டியாளர்கள் தலைதூக்கத் தொடங்கினாலும், ஜெராக்ஸ்தான் கிங்.
1980-களில் ஜெராக்ஸ் சாம்ராஜ்ஜியம் ஆட்டம்காணத் தொடங்கியது. 1974-ல் உலகப் போட்டோகாப்பியர்கள் விற்பனையில் 86 சத விகிதம் ஜெராக்ஸ் மெஷின்கள். இதுவே 1984-ல் வெறும் 17 சதவிகிதமாகச் சறுக்கியது. கம்பெனித் தலைவராகப் பொறுப்பேற்ற டேவிட் கீர்ன்ஸ் (David Kearns),ஜெராக்ஸ் மறுபடியும் நம்பர் 1 ஆகவேண்டுமென்று முடிவு கட்டினார். ராபர்ட் காம்ப் (Robert Camp)என்பவரை இந்த புராஜெக்டின் தலைவராக நியமித்தார்.
அவர் தோல்விக்கான காரணங்களை அலசினார். ஜெராக்ஸின் இழப்புக்கு முக்கிய காரணம் - ரிக்கோ, கேனன் மெஷின்கள் ஜெராக்ஸின் பாதி விலையில் விற்றன. அவர் களுடைய உற்பத்திச் செலவு ஜெராக்ஸின் செலவில் 40 சதவிகிதம்தான். எப்படி அவர்களால் இதைச் செய்ய முடிந்தது?
அவர் அடுத்தடுத்தக் கேள்விகளை கேட்டார். 'போட்டியாளர்களின் செலவு நம்மைவிடக் குறைவாக இருப்பது ஏன்? அவர்கள் எந்தெந்த அம்சங்களில் ஜெராக்ஸைவிடச் சாமர்த்திய சாலிகள்?’
ஜெராக்ஸ் தொழிற்சாலையில் இயந்திரங்களை உற்பத்தி செய்யும்போது, 1,000-க்கு 30 இயந்திரங்கள் தரக்குறைவானவையாக இருந்தன. இந்தக் குறைகளை நிவர்த்தி செய்யப் பணமும் நேரமும் செலவாயின. ஜப்பானிய கம்பெனிகளின் உற்பத்தியில், தரக்குறைவான இயந்திரங்கள் 1,000-க்கு மூன்றே மூன்றுதாம்.
ரிக்கோ, கேனன் ஆகியோர் குறைவான ஸ்டாக் வைத்து அவற்றைத் திறமையாக நிர்வாகம் செய்தார்கள். ஸ்டாக் குறையும்போது, அவற்றைப் பராமரிக்கும் செலவும் குறையும் என்பது பிஸினஸ் சூட்சுமம்.
ஜெராக்ஸின் அக்கவுன்டிங் டிப்பார்ட்மென்ட், கஸ்டமர்களுக்கு விற்பனை இன்வாய்ஸ்களை அனுப்புவதில் ஒன்று, இரண்டு வாரங்களுக்கு மேல் தாமதம் இருந்தது. இதனால் பணவரத்து தாமதமானது.

இப்படி பல காரணங்கள். சாதாரணமாக, இப்படிப்பட்ட காரணங்களைக் கண்டுபிடித்த பிறகு அந்த கம்பெனிகள் என்ன செய்யும்? ரிக்கோ, கேனன் என்னென்ன செய்கிறார்களோ, அந்த யுக்திகளைக் காப்பி அடிப்பார்கள். இங்கேதான் காம்ப் வித்தியாசம் காட்டினார்.
ரிக்கோ, கேனன் கம்பெனிகளோடு ஒப்பிடும்போது, ஜெராக்ஸின் பலவீனங்கள் கண்டுபிடித்ததோடு, உலகிலேயே மிகச் சிறந்த கம்பெனிகள் எவை எவை என்று கண்டுபிடித்ததோடு, அவர்கள் பின்பற்றும் மிகச் சிறந்த நடைமுறைகளைக் கண்டறிந்து அவற்றை பின்பற்றத் தொடங்கினார்.
உதாரணமாக, தொழிற்சாலை வடிவமைப்பு மாற்றங்கள் தொடர்பாக, இந்தத் துறையில் மாபெரும் சாதனைகள் படைத்திருந்த ஃபோர்டு கார் கம்பெனி, கும்மின்ஸ் ஆகிய இரு கம்பெனிகளையும் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டார். தரமுன்னேற்றத்துக்கு, டொயோட்டா கார் கம்பெனியும், ஃப்ளோரிடா பவர் லைட் கம்பெனியும்; சப்ளையர் மேனேஜ்மென்டுக்கு ஹோண்டா கார் கம்பெனியையும்; அக்கவுன்டிங் முறைகளுக்கு அமெரிக்கன் ஹோண்டா கம்பெனியையும் எடுத்துக்கொண்டார். இவர்கள் அனைவரையும் காம்ப் தொடர்புகொண்டு, இத்துறைகளில் அவர்களுடைய அபரிமித வெற்றிக்கு என்னென்ன காரணம் என்று விசாரித்தார்.
காரணம், போட்டியாளர்களைக் காப்பி அடிப்பதைவிட, தங்கள் துறையில் எடுத்துக் காட்டாக இருக்கும் கம்பெனிகளின் நடைமுறை களைப் பின்பற்றுவது சுலபம். தவிர, போட்டி நிறுவனங்கள் தங்கள் சக்சஸ் ஃபார்முலாக்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளும் என்று சொல்ல முடியாது. ஆனால், ஃபோர்டு, கும்மின்ஸ், டொயோட்டா, ஃப்ளோரிடா பவர் லைட், ஹோண்டா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி ஆகிய நிறுவனங்கள் தங்கள் வெற்றி ரகசியங்களை தயக்கம் இல்லாமல் பகிர்ந்துகொண்டன.
ஐந்தே வருடங்களில் ஜெராக்ஸ் கம்பெனி தன் அத்தனை பலவீனங்களையும் வென்று, முதன்மை இடத்தை மீண்டும் பிடித்தது. ஜெராக்ஸ் கடைப்பிடித்த இந்தக் கொள்கைக்கு பெஞ்ச்மார்க்கிங் என்று காம்ப் பெயர் வைத்தார். 1989-களில் அறிமுகமான நாள் முதல்,
பெஞ்ச்மார்க் கொள்கையைக் கடைப்பிடிக்காத வெற்றிகர நிறுவனங்களே உலகத்தில் இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது.
இந்தியாவிலும் ஏராளமான நிறுவனங்கள் பெஞ்ச்மார்க்கிங் கொள்கையைப் பின்பற்று கின்றன. ஒரு சிலரது அனுபவத்தைப் பார்க்க லாமா?
கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் நடத்தும் என்.ஐ.ஐ.டி. உங்களுக்குத் தெரியும். 1990-களில் என்.ஐ.ஐ.டி. தன் மையங்களுக்குத் தேவையான கம்ப்யூட்டர்களை இறக்குமதி செய்தது. வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்ததிலிருந்து, கணினிகளை மையங்களில் நிறுவுவது வரை 110 நாட்கள் எடுத்தன. இந்தக் காலவிரயத்தால், அதிக மாணவர்களைப் பயிற்சிக்கு எடுக்க முடிய வில்லை. வருமானமும் குறைந்தது.
இறக்குமதி நிறுவனங்கள், சப்ளையர் மேனேஜ்மென்ட் கம்பெனிகள் ஆகியோரை முன்னோடிகளாக வைத்து, என்.ஐ.ஐ.டி
பெஞ்ச்மார்க்கிங் செய்ததில், கம்ப்யூட்டர் இறக்குமதி செய்வதற்கான காலத்தை 110 நாட்களிலிருந்து 26 நாட்களாகக் குறைத்தது.
தற்போது என்.ஐ.ஐ.டி. மட்டுமல்ல, வீட்டுக் கடன் வழங்கும் ஹெச்.டி.எஃப்.சி., இன்ஃபோசிஸ், விப்ரோ, டாடா, ரிலையன்ஸ், டிவி.எஸ். குழுமம் போன்ற ஏராளமானோர் பெஞ்ச்மார்க்கிங் கொள்கையைப் பயன்படுத்தி பெரிய அளவில் பயன்கள் கண்டிருக்கின்றனர்.
பிஸினஸில் மட்டும்தான் பெஞ்ச்மார்க்கிங் பயன் தருமா? சமூக சேவையிலும் வெற்றிகரமாகப் பயன்படுத்தலாம் என்று நிரூபித்திருக்கிறது மதுரையில் இருக்கும் அரவிந்த் கண் மருத்துவமனை. இங்குள்ள மருத்துவர்கள் வருடத்துக்கு சராசரியாக 2,500 கண்படல அறுவை சிகிச்சைகள்
(Cataract Surgery) செய்கிறார்கள். உலகத்தில் சராசரியாக ஒரு சர்ஜன் செய்யும் காட்டராக்ட் சர்ஜரிகள் எத்தனை தெரியுமா? 250. அதாவது, அரவிந்த் டாக்டர்களின் செயல்திறன் உலக மருத்துவர்களைவிடப் பத்து மடங்கு அதிகம்! அரவிந்த் மருத்துவமனை செய்த சாதனையை ஹார்வர்டு பல்கலைக்கழகம் கேஸ் ஸ்டடியாக்கி, தன் எம்.பி.ஏ. மாணவர்களை விவாதிக்கச் செய்கிறது. அரவிந்த் மருத்துவமனையால் இந்தச் சாதனையை எப்படிச் செய்ய முடிந்தது?
அமெரிக்காவின் மெக்டொனால்ட்ஸ் (McDonalds), பிட்சா ஹட் ஆகிய கம்பெனிகள் தங்கள் பர்கர், பிட்சா ஆகியவற்றைப் பெருமளவில் விளம்பரம் செய்து மக்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கின்றன. அவர்களைப்போல், விளம்பரத்தைப் பயன்படுத்தி காட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்தால், அதிக மக்களை சென்றடையலாம் என நினைத்து, 1991-லேயே அந்த முயற்சியை எடுக்கத் தொடங்கியது.
ஹென்றி ஃபோர்டு கொண்டுவந்த அசெம்பிளி லைன் தயாரிப்புக் கொள்கையின் அடிப்படையில் ஆபரேஷன் தியேட்டர் வசதிகளை மாற்றி அமைத்தால், டாக்டர்கள் பல மடங்கு அதிக நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று திட்டமிட்டது அரவிந்த் மருத்துவமனை. இப்படி பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லி, மேனேஜ்மென்ட் மேதைகள் அரவிந்தின் வெற்றிக்குச் சொல்லும் முக்கிய காரணம் - அது கடைப்பிடிக்கும்
பெஞ்ச்மார்க்கிங் கொள்கைதான்!
(கற்போம்)
கேளுங்கள் சொல்கிறேன்!
?பி.காம் பட்டதாரியான எனக்கு லாஜிஸ்டிக் துறையில் ஒன்பது ஆண்டுகால அனுபவம் இருக்கிறது. இப்போது நான் எம்.பி.ஏ. படிக்க விரும்புகிறேன். ஃபைனான்ஸ், லாஜிஸ்டிக் இந்த இரு துறைகளில் நான் எதை தேர்வு செய்யலாம்? எந்தக் கல்லூரியை நான் தேர்வு செய்யலாம்?
மனோகரன் மாணிக்கவாசகம், மின்னஞ்சல் மூலமாக.
''எம்.பி.ஏ. படிப்பதன் மூலம் உங்கள் கேரியரை இன்னும் சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும். நீங்கள் ஃபைனான்ஸ் துறையில் ஸ்பெஷலைஸ் செய்யலாம். சப்ளை செயின் மேனேஜ்மென்ட் பாடத்தை விருப்பப் பாடமாக கூடுதலாகத் தேர்வு செய்துகொள்ளலாம். கல்லூரிகளைப் பொறுத்தவரை, இன்னும் சில அத்தியாயங்கள் இந்தத் தொடரை நீங்கள் தொடர்ந்து படித்தால், உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும்!''

இந்த தொடரில் இதுவரை வந்த அத்தியாயங்களை vikatan.com/mba என்ற இணையதளத்திலும் படிக்கலாம். இந்த தொடர் பற்றி நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை, சந்தேகங்களை vikatan.com/mba என்ற இணையதளத்தில், அதற்கான இடத்தில் பதிவு செய்யலாம். உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங் களுக்கும் மேனேஜ்மென்ட் நிபுணர் எஸ்.எல்.வி.மூர்த்தியே பதில் சொல்வார்.