அவுட்சோர்ஸிங்!
##~## |
1980-களில், வல்லரசு நாடுகள் எவை? என்று யாராவது கேட்டிருந்தால், நீங்கள் எல்லோரும், ஒரு நிமிடத் தாமதம்கூட இல்லாமல் சொல்லியிருப்பீர்கள், அமெரிக்கா, ரஷ்யா என்று!
'இன்னும் இருபது ஆண்டுகளில் யார் வல்லரசு நாடுகளாக இருப்பார்கள்’ என்று இப்போது யாராவது கேட்டால், உலகம் முழுக்க இந்தப் பதில்தான் எதிரொலிக்கும், 'சீனா, இந்தியா.’
வறுமை நாடுகள் என்னும் நிலையிலிருந்து, வளரும் நாடுகளாகி, வல்லரசு பீடத்துக்கு முந்திவரும் சீனா, இந்தியாவின் முக்கிய வெற்றி ரகசியம், அவுட்சோர்ஸிங்.
ஆப்பிள், ரீபாக், டெல் என ஏகதேசம் அனைத்து அமெரிக்க கம்பெனிகளும், தங்கள் உற்பத்தி வேலைகளைச் சீனாவுக்கு அவுட்சோர்ஸ் செய்துவிட்டன. ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க வங்கிகள், இன்ஷூரன்ஸ் கம்பெனிகள், கம்ப்யூட்டர் நிறுவனங்கள், மருத்துவமனைகள் தங்கள் வாடிக்கையாளர் சேவை, சம்பளப் பட்டுவாடா, அக்கவுன்டிங் ஹெச்.ஆர். வேலைகள், சப்ளை செயின் மேனேஜ்மென்ட், ஹெல்த் கேர் சர்வீசஸ், இ-பப்ளிஷிங் போன்ற பணிகளை நமக்குத் தருகின்றன.
நம் பொருளாதார வளர்ச்சிக்கு மைய சக்தியாக இருக்கும் அவுட்சோர்ஸிங்கின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றி, மேனேஜ்மென்டில் ஈடுபாடுகொண்ட அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும்.

பி.பி.ஓ. என்றால் நம் நாட்டில் சாதாரண மக்களுக்கும் நன்றாகத் தெரியும். படிப்பை முடிக்கும் முன்னாலேயே காத்திருக்கும் கேம்பஸ் இன்டர்வியூ வேலைகள், கை நிறையச் சம்பளம், அடிக்கடி அமெரிக்கப் பிரயாணங்கள்... இப்படி நம் நாட்டுப் பொருளாதாரத்தைத் தலைநிமிர்ந்து நிற்கவைத்தக் காரணம், பி.பி.ஓ.
பிஸினஸ் ப்ராசஸ் அவுட்சோர்ஸிங் (B.P.O)பற்றி உங்களுக்குத் தெரியவேண்டுமானால், முதலில் அவுட்சோர்ஸிங் என்றால் என்ன என்று தெரியவேண்டும். அவுட்சோர்ஸிங் என்றால்..?
நீங்கள் உங்கள் நண்பருக்கு ஒரு கடிதம் எழுதுகிறீர்கள். அதை அவரிடம் சேர்க்கவேண்டும். என்ன செய்கிறீர்கள்? பக்கத்தில் உள்ள கூரியர் கம்பெனிக்கு போன் செய்கிறீர்கள். அந்த கம்பெனி ஊழியர் உங்கள் வீட்டுக்கு வந்து கடிதத்தை வாங்கிக்கொள்கிறார். கடிதம் உங்கள் நண்பருக்குப் போய்ச் சேருகிறது. கடிதத்தை நண்பரிடம் கொண்டுச் சேர்க்கிற உங்கள் வேலையை, கூரியர் கம்பெனியிடம் ஒப்படைத்தீர்கள். இதுதான் அவுட்சோர்ஸிங். அதாவது, நம் வேலையைப் பிறரிடம் ஒப்படைப்பதே அவுட்சோர்ஸிங். நீங்கள் கடிதம் கொண்டு சேர்க்கும் வேலையை கூரியர் கம்பெனிக்கு அவுட்சோர்ஸ் செய்துவிட்டீர்கள்.
உங்கள் வீட்டில் கல்யாணம். கல்யாண மண்டபத்தில் தோரணம் தொங்கவிடுவதில் இருந்து, பந்தி பரிமாறுவது வரை அத்தனை வேலைகளையும் நீங்களே செய்துகொண்டிருக்க முடியாது. அந்த வேலையை உங்களுக்காகவே செய்துதர இன்றைக்கு பல நூறு கான்ட்ராக்டர்கள் வந்துவிட்டார்கள்.

கல்யாணம் தொடர்பான அத்தனை பொறுப்பு களையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, நாம் ஹாயாக இருக்கலாம். அதாவது, நாம் கல்யாண ஏற்பாடுகளை அந்த கான்ட்ராக்டருக்கு அவுட்சோர்ஸ் செய்துவிடலாம்.
இது மாதிரி, பிஸினஸ் நிறுவனங்கள் தங்களுடைய வேலையின் ஒருபகுதியை மாற்றாரிடம் ஒப்படைப்பதுதான் பிஸினஸ் ப்ராசஸ் அவுட்சோர்ஸிங்.
தனிப்பட்டவர்களான நாம் கூரியர், கல்யாண கான்ட்ராக்டர்கள் போன்றவர்களின் உதவியைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி, பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்ற ஆள் பலம், பண பலம்கொண்ட பிரமாண்ட கம்பெனிகள் தங்கள் வேலைகளை ஏன் அவுட்சோர்ஸ் செய்யவேண்டும்?
நியாயமான கேள்வி. நாம் எப்போது நம் வீட்டு வேலையை அவுட்சோர்ஸ் செய்கிறோம்? அவற்றைச் செய்ய நாமே செய்துகொள்ள ஆள் பலமில்லை, நேரம் போதவில்லை என்பதால். அது மாதிரி, தொழிற்சாலைகள் தங்கள் வேலைகளில் சில பகுதிகளை வெளியாரிடம் ஒப்படைக்க முக்கிய காரணம், செலவுக் குறைப்பு!

1945 காலகட்டத்தில் இந்தியா, பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகளில் ஜவுளித் தொழில் அமோகமாக வளர்ந்தது. இந்த நாடுகளில் தொழிலாளர்களின் ஊதியம் இங்கிலாந்தைவிட மிகக் குறைவு. இங்கிலாந்து முதலாளிகள் இந்த நாடுகளில் உள்ள கம்பெனிகளிடம் தங்கள் பொருட்களைத் தயாரிக்கும் கான்ட்ராக்டைக் கொடுத்தார்கள். ஆமாம், உற்பத்தி வேலை இங்கிலாந்தில் உள்ள நெசவுத் தொழிற்சாலைகளால், ஆசிய நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்டது.
விரைவில் அமெரிக்காவும் இந்தப் பாதைக்கு மாறவேண்டிய அவசியம் வந்தது. கார் கம்பெனிகள் தங்கள் விற்பனையைக் கூட்ட விலைக் குறைப்பில் ஈடுபட்டன. இவர்களுடைய தொழிலாளர் சம்பளம் அதிகம். சின்னக் கம்பெனிகளில் சம்பளம் குறைவு. எனவே, பெரிய அமெரிக்க கார் கம்பெனிகள் தங்கள் உற்பத்தியைச் சின்னக் கம்பெனிகளுக்கு அவுட்சோர்ஸ் செய்தன. செலவைக் குறைத்தன. இப்போது சில புத்திசாலிகளின் மூளைக்குள் குறளி சொன்னது, 'உற்பத்தியை அவுட்சோர்ஸ் செய்து செலவுகளைக் குறைக்கிறோமே, மற்றப் பணிகளையும் ஏன் அவுட்சோர்ஸ் செய்யக் கூடாது?’
ஆயிரம்பேர் வேலை பார்க்கும் பல நிறுவனங்களில் சம்பளப் பட்டுவாடா செய்யும் ஊழியர்களே நூற்றுக்கும் மேல் இருந்தார்கள். இந்த வேலைகளை வெளியாரிடம் கொடுத்தால்..? என நிறுவனங்கள் சிந்திக்கத் தொடங்கின.
இந்தத் தேவைக்கு சேவை தர 1949-ல் அமெரிக்காவில் வந்தது ஆட்டொமேட்டிக் டேட்டா பிராஸஸிங் (Automatic Data Processing)என்ற நிறுவனம். சம்பளம் தொடர்பாக கம்பெனிகளின் அத்தனை வேலைகளையும் கான்ட்ராக்ட் எடுத்துச் செய்யும் சேவை இவர்களின் பாதை. உற்பத்தி அல்லாத மற்ற வேலைகளுக்கு வெளிநிறுவனங்களைப் பெரிய அளவில் பயன்படுத்திய அவுட்சோர்ஸிங்கின் நதிமூலம் இது.

1957-ல் சில உலகப் பொருளாதார நிகழ்வுகள் அவுட்சோர்ஸிங் வளர உந்துசக்தி தந்தன. கார், எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய தயாரிப்புப் பொருட்களின் முன்னோடி அமெரிக்கா. இந்தப் பொருட்களுக்கு உலகின் பெரிய மார்க்கெட்டும் அமெரிக்காதான்.
ஜப்பானிய டொயோட்டா கார் கம்பெனி தன் கார்களை அமெரிக்காவில் அரங்கேற்றியது. சோனி தன் டிரான்ஸிஸ்டர் ரேடியோக்களை அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தியது.
ஜப்பானின் ராஜதந்திரம் விலை. அதாவது, அமெரிக்க கம்பெனிகள் என்ன விலைக்கு விற்கிறதோ, அதைவிட 10% விலை குறைவாக விற்பது. அமெரிக்க கம்பெனிகள் விலையைக் குறைத்தால்? அவர்கள் குறைக்கக் குறைக்கக் குறைத்துக்கொண்டே போகவேண்டும்.
விலையைக் குறைப்பதோடு ஜப்பானிய கம்பெனிகள் மெள்ள மெள்ளப் பொருட்களின் தரத்தையும் உயர்த்தின. சோனி, டொயோட்டா போன்ற ஜப்பானிய கம்பெனிகள் அமெரிக்க மார்க்கெட்டில் காலூன்றத் தொடங்கின. .
மாட்டிக்கொண்டன அமெரிக்க கம்பெனிகள். தங்கள் விலைகளை, செலவுகளைக் குறைக்கா விட்டால், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடவேண்டிய கட்டாயம்! நூற்றுக்கணக்கான கம்பெனிகள் ஏ.டி.பி.யின் சேவையைப் பயன்படுத்தத் தொடங்கின.
அடுத்தபடியாக, வாடிக்கையாளர் சேவை அவுட்சோர்ஸ் ஆனது. ஊழியர்கள் கஸ்டமர்களின் போன்கால்களுக்குப் பதில் சொல்லும் இடம் அலுவலகத்தில் கால் சென்டர் (Call Centre) என்று அழைக்கப்படும். முதல் கால் சென்டர் யாரால் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், 1960-களில் கால் சென்டர் தொடங்கிய டிரான்ஸ் வேர்ல்டு ஏர்லைன்ஸ் (Trans World Airlines)இந்தத் துறையில் நிச்சய முன்னோடி. அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவில் சம்பளம் குறைவு. எனவே, கால் சென்டர் வேலைகள் விரைவில் கனடாவுக்கு அவுட்சோர்ஸ் ஆயின.
1962-ல் அமெரிக்க டெக்ஸாஸ் மாநில ப்ளானோ (Plano)நகரில் தொடங்கப்பட்ட எலெக்ட்ரானிக் டேட்டா சிஸ்டம்ஸ் (Electronic Data Systems)நிறுவனம் அவுட்சோர்ஸிங் துறையில் இன்னொரு புதிய பாதை போட்டது.
இன்ஷூரன்ஸ் கம்பெனிகளில் கிளெரிக்கல் வேலைகள் அதிகம். வாடிக்கையாளர்களின் மனுக்கள், அவர்களுடைய கோரிக்கைகள், அதற்கான படிவங்கள், ஆவணங்கள், இவை ஒவ்வொன்றையும் பரிசோதித்தல் என ஆயிரக்கணக்கான மணி நேரங்கள் செலவாகும். இந்தப் பணிகளை கான்ட்ராக்டில் எடுக்கும் சேவையோடு ஏ.டி.எஸ். தன் முதல் அடியை எடுத்து வைத்தது. இந்த கம்பெனியும் ராட்சஸ வளர்ச்சி கண்டது.
அவுட்சோர்ஸிங் துறை இப்படி வளர்ந்த போதிலும், அசுர வளர்ச்சி கண்டது 1990-க்குப் பிறகுதான். இதற்குப் பல காரணங்கள்...
(கற்போம்)
படங்கள்: ரா.நரேந்திரன்
கேளுங்கள் சொல்கிறேன்!
?நான் ராணுவத்தில் சேவை செய்துவிட்டு, இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெறப் போகிறேன். அஞ்சல் வழி மூலம் ஏற்கெனவே பி.பி.எம். படித்திருக்கிறேன். ஓய்வு பெற்றபிறகு அஞ்சல் வழி மூலமே எம்.பி.ஏ. படிக்கலாம் என்றிருக்கிறேன். ஃபைனான்ஸ் அல்லது லாஜிஸ்டிக் மேனேஜ்மென்ட் - இதில் நான் எதைப் படித்தால் என் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்?
- எம்.விஜயராகவன், மின்னஞ்சல் மூலம்.
''ஓய்வு பெற்றபிறகும் படிக்க நினைக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். ஃபைனான்ஸ் அல்லது லாஜிஸ்டிக் மேனேஜ்மென்ட் - இந்த இரண்டு பாடங்களுக்குள் உங்கள் பின்னணியை வைத்துப் பார்க்கும்போது, லாஜிஸ்டிக் மேனேஜ்மென்ட் என்பதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம், ஃபைனான்ஸ் என்பது ஏற்கெனவே நன்கு வளர்ந்துவிட்ட ஒரு துறை. ஆனால், லாஜிஸ்டிக் என்பது இனிமேல்தான் வளரவேண்டிய துறை. தவிர, போட்டி குறைவாக இருக்கும் துறையும்கூட. எம்.பி.ஏ.-வில் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் பாடத்தை எடுத்து ஸ்பெஷலைஸ் செய்யுங்கள். உங்கள் எதிர்காலத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும்!''