மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அப்ரைஸல்... சம்பள உயர்வுக்கான துருப்புச் சீட்டு !

செ.கார்த்திகேயன்,படம்: பா.கார்த்திக்.

நாணயம் ஜாப்

##~##

ஒரு நிறுவனம் தன்னுடைய வளர்ச்சியையும், நிறுவனப் பணியாளர்களின் முன்னேற்றத்தையும் அறிந்துகொள்ள பெரிதும் உதவிகரமாக இருப்பது, அப்ரைஸல் என்று சொல்லப்படும் மதிப்பீடு. ஒருவர் மருத்துவமனைக்குச் சென்று தன்னுடைய உடல்நிலையை சரிபார்த்துக்கொள்வதுபோல, அலுவலகம் செல்லும் ஒவ்வொருவரும் தங்களின் பணி சார்ந்த விஷயங்களை வருடம் ஒருமுறை தனக்குத்தானே மதிப்பீடு செய்துகொள்வது அவசியம்.

அப்படி தெரிந்துகொள்வதற்காகத்தான் கார்ப்பரேட் அலுவலகங்களும் ஐ.டி. துறை அலுவலகங்களும் வருடம் ஒருமுறை அப்ரைஸல் படிவங்களை ஊழியர்களிடம் தந்து அவர்களுக்கு அவர்களே மதிப்பீடு செய்துகொள்ளும்படி சொல்கிறார்கள். இந்த அப்ரைஸலின் முக்கியத்துவம் என்ன என்பதைச் சொல்கிறார் ரான்ஸ்டாட் நிறுவனத்தின் சி.இ.ஓ. பாலாஜி.

''பொதுவாகவே அப்ரைஸல் என்பது சம்பள உயர்வுக்காகப் பயன்படும் ஒரு கருவி என்பதுபோலவே பல அலுவலகங்களில் சித்தரிக்கப்படுகிறது. ஆனால், அப்ரைஸல் என்பது சம்பள உயர்வுக்கான ஒரு துருப்புச் சீட்டு மட்டுமே. அப்ரைஸல் டெஸ்ட்டில் இருந்து நிறுவனமும், நிறுவன ஊழியர்களும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

பொதுவாக, வருடத்திற்கு ஒருமுறை அனைத்து அலுவலகங்களிலும் இந்த அப்ரைஸல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சில நிறுவனங்களில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அப்ரைஸல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெரும்பாலான நிறுவனங்கள் அனுதினமும் ஊழியர்கள் செய்யும் வேலைகளை ஆட்டோமேட்டிக்காக அப்டேட் செய்து கொள்ளும் வசதிகளை  அமைத்துத் தந்து, அதிலிருந்து இந்த அப்ரைஸல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

அப்ரைஸல்...  சம்பள உயர்வுக்கான துருப்புச் சீட்டு !

அப்ரைஸல் ஃபார்ம் !

தலைமைப் பண்பு, வேலையில் வேகம், பக்குவம், குழுவுடன் ஒன்றி செயல்படும் மனநிலை மற்றும் ஆங்கிலப் புலமை போன்ற விவரங்கள் சம்பந்தப்பட்ட கேள்விகள்தான் இந்த அப்ரைஸல் படிவங்களில் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும். அதற்கான மதிப்பெண் விவரங்களும் தரப்பட்டு அவர்களாகவே மதிப்பீடு செய்துகொள்ளும்படியான வழிமுறைகள் தரப்பட்டிருக்கும். இந்தப் படிவத்தை ஊழியர்கள் பூர்த்தி செய்யும்போது கவனம் மிக முக்கியம். கேள்விகளுக்கான பதிலை உள்ளபடி தரவேண்டியது அவசியம். மதிப்பெண்கள் அதிகமாக இருக்கவேண்டும் என்பதற்காக உண்மைத்தன்மையைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.

கலந்துரையாடலில் கவனம் அவசியம் !

அப்ரைஸல்...  சம்பள உயர்வுக்கான துருப்புச் சீட்டு !

இந்தப் படிவம் பூர்த்தி செய்யப்பட்டதும் குழு தலைவருடனோ அல்லது நிறுவனத்தின் மேலாளருடனோ நேரடியாக கலந்துரையாடல் மேற்கொள்ளவேண்டி இருக்கும். அந்தச் சமயத்தில் படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது காட்டும் கவனத்தைவிட, நேரடி கலந்துரையாடலின்போது மிக கவனமாக இருப்பது அவசியம். அப்படி கலந்துரையாடல் மேற்கொள்ளும்போது கேட்கும் கேள்விகளுக்குத் தெளிவாகவும், தாங்கள் நினைக்கும் விஷயங்களை தைரியமாகவும் தலைமைப் பொறுப்பில் இருப்பவரிடம் தெரியப்படுத்தலாம். ஆனால், அது விவாதத்துக்குரியதாக மாறிவிடக் கூடாது. இந்த இடத்தில், ஓர் ஊழியர் தனது திறமையை எப்படி எல்லாம் பட்டைத் தீட்டிக்கொள்ளலாம் என்பதுபோன்ற விவரங்களை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. அப்போதுதான் உங்கள் எதிர்கால வாழ்க்கை குறித்த அக்கறை உங்களுக்கு இருக்கிறது என்பது அவருக்கும் தெரியும். உயர்பதவி குறித்தும், வேலையில் முன்னேற்றம் குறித்தும் இந்த இடத்தில் அவரிடம் பேசி தெரிந்துகொள்ள வேண்டும்.

எந்தவொரு நிறுவனமானாலும் சரி, அப்ரைஸல் விஷயங்களுக்காக வருடத்தின் தொடக்கத்திலேயே குறிக்கோள்களை அமைத்துக் கொண்டு செயல்படவேண்டும். வருட இறுதியில் அப்ரைஸலுக்காக மெனக்கெடுவது கூடவே கூடாது. குறிக்கோள்கள் நிறுவனத்தின் முன்னேற்றப் பாதையை நோக்கி இருக்கவேண்டும். அதேசமயம், நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாகவும் அந்த குறிக்கோள்கள் இருப்பது அவசியம். இந்த அப்ரைஸல் நடவடிக்கையிலிருந்து நிறுவனத்தின் மீதான குறைகளும், ஊழியர்களின் மீதான குறை களும் வெளிப்படும். அதை உடனே களைந்து தீர்வு காண்பது நல்லது'' என்றார்.

இனியாவது அப்ரைஸல் என்பதை நம் முன்னேற்றத்துக்கு வழி அமைத்துத் தரும் விஷயமாகப் பார்ப்போம்!