மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

அடிப்படைத் திறமை...!படங்கள்: தே.தீட்ஷித்.

 கல்வி

##~##

அவுட்சோர்ஸிங் துறை இப்படி வளர்ந்தபோதிலும், அவுட்சோர்ஸ் செய்வதை உற்பத்திச் செலவைக் குறைக்கும் சாதா யுக்தியாகவே கம்பெனிகள் நினைத்தன. ஆனால், வளர நினைக்கும் ஒவ்வொரு கம்பெனியும் கடைப்பிடித்தே ஆகவேண்டிய அடிப்படை நிர்வாகக் கொள்கை அது என்கிற உண்மையை எடுத்துச் சொன்னார் அமெரிக்காவின் நிர்வாக மேதை ஒருவர்.

அவர் 1990-ல் கண்டுபிடித்துச் சொன்ன கொள்கையின் பெயர், அடிப்படைத் திறமை (Core Competence). ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு தனித்திறமை உண்டு. அதைக் கண்டுபிடித்து, அந்தத் திறமையில் கவனத்தையும், உழைப்பையும் ஒருமுகப்படுத்தினால், பிரமாண்ட வெற்றி காண முடியும் என்பது இந்த மேனேஜ்மென்ட் கொள்கையின் சாராம்சம்.    

அடிப்படைத் திறமை என்றால் என்ன? ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்திறமை உண்டு. அதைக் கண்டறிந்து ஜொலிக்க வைப்பவர்கள் சாதனை படைக்கிறார்கள். ரஜினி என்றால் ஸ்டைல்; கமல் என்றால் தனித்துவமான நடிப்பு; ஏ.ஆர்.ரஹ்மான் அற்புதமான இசை என ஒவ்வொருவரும் தன்னுடைய தனித் திறமைகளைப் பட்டை தீட்டினார்கள், மாபெரும் வெற்றி கண்டார்கள்.    

ரஜினி  இசை அமைக்க வந்திருந்தால்..?, ரஹ்மான் நடிக்க வந்திருந்தால்..? இத்தகைய சிகரங்களைத் தொட்டிருப்பார்களா? கம்பெனிகளும் இப்படித்தான். சில கம்பெனிகள் உற்பத்தியில் கில்லாடிகளாக இருப்பார்கள். ஆனால், மார்க்கெட்டிங் துறையில் அத்தனை சாமர்த்தியசாலிகளாக இல்லாமல் இருப்பார்கள். இவர்கள், மார்க்கெட்டிங் மகாராஜாக்களோடு கைகோத்தால், இருவருக்கும் வரலாறு காணாத வெற்றி கிடைக்கும்.  

MBA - மூன்றெழுத்து மந்திரம்

இந்த உண்மையை உணர்ந்து கொண்ட பிறகு, உலகத்தின் எல்லா நிறுவனங்களும், அடிப்படைத் திறமைக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கின. ஆனால், அவுட்சோர்ஸிங் என்கிற அற்புதமான வளர்ச்சியின் திசையையே மாற்றிய இந்த மாபெரும் மேனேஜ்மென்ட் கொள்கையை எடுத்துச் சொன்னவர் ஓர் இந்தியர்; அதிலும், நம் தமிழ்நாட்டுக்காரர். அவர் கோவையில் பிறந்து, சென்னையில் படித்தவர். அஹமதாபாத் ஐ.ஐ.எம். எம்.பி.ஏ. இவர் - கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத் (C.K.Prahalad).    

பிரகலாத்தின் கொள்கை உலக அவுட்சோர்ஸிங் துறையின் மாபெரும் வளர்ச்சிக்கு வித்திட்டது எப்படி? நிறுவனங்கள் தங்களுடைய அடிப்படைத் திறமையை அடையாளம் காணத்தொடங்கி, அவற்றில் தங்கள் கவனத்தையும், உழைப்பையும் செலுத்தின. பிற வேலைகளை அத்துறையின் நிபுணர்களிடம் அவுட்சோர்ஸ் செய்தன.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

கொள்கை பிரமாதம்தான். ஆனால், இதைச் செயல்படுத்துவதில், பல நடைமுறைப் பிரச்னைகள். அவுட்சோர்ஸ் செய்யும் வேலை செம்மையாக நடக்கவேண்டுமானால், வெவ்வேறு நாடுகளில் இருக்கும் இரு நிறுவனங்களும் சுலபமாக ஒருவரோடு ஒருவர் தகவல் பரிமாறிக்கொள்ளும் வசதி வேண்டும். உலகளாவிய டெலிபோன் வசதிகள் அப்போது திருப்திகரமானதாக இருக்கவில்லை. எனவே, அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வேலைகளை அமெரிக்காவிலும், அண்டை நாடான கனடாவிலும் இருக்கும் கம்பெனிகளுக்கு மட்டுமே கொடுக்கவேண்டிய கட்டாயம்.

அப்போது வந்த சில அதிரடித் தொழில்நுட்ப மாற்றங்கள் இந்தக் கட்டாயத்தை மாற்றின, அவுட்சோர்ஸிங் உலகளாவியதாக வளர உதவின. 1991-ல் அமெரிக்க அரசாங்கம், தங்கள் பாதுகாப்புத் துறையால் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்ட வையக விரிவலை (Worldwide Web), மின்

அஞ்சல் ஆகியவற்றை உலக மக்கள் அனைவரும் பயன்படுத்த அனுமதித்தன.  

1998-ல் மைக்ரோசாஃப்ட் கம்பெனியின் விண்டோஸ் 98 வெளியானது. அதில் வேர்டு, எக்ஸல், பவர் பாயின்ட் ஆகிய மூன்றையும் இணைத்துக் கொடுக்கப்பட்டு இருந்தது. கம்ப்யூட்டர் வைத்திருக்கும் அனைவரும் இணையதளங்களை அணுக முடிந்தது; மின்அஞ்சல் அனுப்ப முடிந்தது. உலகம் உள்ளங்கைக்கு வந்தது; பிஸினஸ் உலகமயமாகத் தொடங்கியது.  

சம்பளப் பட்டுவாடா, கிளெரிக்கல் வேலைகள் அவுட்சோர்ஸ் செய்ய ஆரம்பமானதைத்  தொடர்ந்து, இன்னொரு வேலையில் சேர்ந்து கொண்டது. அதுதான் கால் சென்டர்.

உலகின் முதல் கால் சென்டர் யாரால் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், 1960-களில் கால் சென்டர் தொடங்கிய டிரான்ஸ் வேர்ல்டு ஏர்லைன்ஸ் (Trans World Airlines)இத்துறையில் நிச்சய முன்னோடி. TWA போன்ற விமானக் கம்பெனிகளுக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகள் வரும். இவர்களுக்குப் பதில் சொல்ல, இந்த கம்பெனிகள் ஆயிரக்கணக்கானவர்களை போனில் பேசுவதற்காக மட்டுமே வைத்துக் கொள்ளவேண்டி வந்தது.    

இந்தச் செலவை எப்படிக் குறைக்கலாம் என நிறுவனங்கள், கனடாக்காரர்களைக் கண்டுபிடித்தது. அமெரிக்கா அளவுக்கு ஆங்கிலத் திறமை கொண்டவர்கள். எனவே, கால் சென்டர்கள், சம்பளப் பட்டுவாடா, கிளெரிக்கல் வேலைகள் அமெரிக்க நிறுவனங்களிலிருந்து கனடாவுக்கு அவுட்சோர்ஸ் ஆயின.

உற்பத்திக்கு மெக்ஸிகோ, மற்ற சேவைகளுக்கு கனடா என்பது அவுட்சோர்ஸிங்கின் எழுதப்படாத மந்திரமானது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வந்தவுடன், அவற்றின் முழுப் பயன்களை பெற சில அரசியல், பொருளாதார உடன்பாடுகள் தடையாக இருப்பதை நாடுகள் உணர்ந்தன. காலத்துக்கு ஏற்ற புதிய உடன்பாடுகள் நடைமுறைக்கு வரத் தொடங்கின.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

அமெரிக்காவைப் பொறுத்தவரை, வெளிநாட்டு உறவுகளின் அடிப்படையே வியாபாரம்தான். எனவே, வர்த்தக உடன்பாடுகள் விஷயத்தில் அமெரிக்கா பல நடவடிக்கைகள் எடுத்தது. 1994-ல் உலக வர்த்தகத்தில் 95 சதவிகிதம் பங்கேற்கும் 125 நாடுகள் இணைந்து உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organization)உருவாக்கின. இந்நாடுகள் வர்த்தகம் மற்றும் காப்பு வரிக்கான 'காட்’ ஒப்பந்தம்

ஆங்கிலப் புலமையும், கணிதத் திறமையும் கொண்ட இந்தியா அமெரிக்காவைக் காந்தமென இழுத்தது. 1993-ல், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி இந்திய நாட்டின் முதல் பி.பி.ஓ-வை குர்கான் (Gurgaon) நகரில் திறந்தது. 1995-ல் உலகப் பெரும் கம்பெனிகளில் ஒன்றான ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனி, தன் அவுட்சோர்ஸிங் பணிகளைக் கையாள இந்தியாவின் பலங்களையும், பலவீனங்களையும் ஆராய்ந்து அறிக்கை தரும் பொறுப்பை உலகப் புகழ் பெற்ற ஆலோசனை நிறுவனமான அக்செஞ்சர் (Accenture) நிறுவனத் திடம் ஒப்படைத்தது.  

இதன்படி, ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனியினர் ஒரு சூத்திரம் கண்டுபிடித்தார்கள். 'ஜெனரல் எலெக்ட்ரிக் தன் 70 சதவிகித வேலைகளை அவுட்சோர்ஸ் செய்யவேண்டும்; அதில் 70 சதவிகிதம் அமெரிக்கா தாண்டிய வெளிநாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்ய வேண்டும்; அதில் 70 சதவிகிதம் வேலைகளை இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்யவேண்டும். சுருக்கமாகச் சொன்னால், சுமார் மூன்றில் ஒரு பங்கு வேலை இந்தியாவுக்குத் தரவேண்டும்.''

ஜெனரல் எலெக்ட்ரிக் கொடுத்த நற்சான்றிதழால், பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வேலைகளை இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்யத் தொடங்கின. அப்போது பிறந்தது 1999-ம் ஆண்டு - உலக கம்ப்யூட்டர் துறைக்குச் சோதனைக் காலம். ஆனால், இந்தியாவுக்கு வாய்ப்புக் கதவுகளைத் திறந்த பொற்காலம். Y2K என்னும் கம்ப்யூட்டர் பிரச்னை வந்தது.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

அது என்ன Y2K பிரச்னை? 1990-ம் ஆண்டுகள் வரை கம்ப்யூட்டர் நிரல்களில் ஆண்டினைக் குறிக்கையில் முதல் இரண்டு இலக்கங்களான 19 என்பதை நிலையாக எடுத்துக்கொண்டு அவற்றைக் குறிக்காமல் விட்டுவிடுவார்கள். அடுத்த இரண்டு இலக்கங்களின் எண்களை மட்டுமே குறிப்பது வழக்கம். 1999-ஐ 99 என்று போடுவார்கள். அதாவது, 99 என்று போட்டால் அதை 1999 என்று கம்ப்யூட்டர் கரெக்ட்டாக அடையாளம் கண்டுகொள்ளும். 00 என்று போட்டால், கம்ப்யூட்டர் 1900 என்று புரிந்து கொள்ளுமா அல்லது 2000 என்றா?  

இந்த கம்ப்யூட்டர் தவறுக்கு ஏன் Y2K என்று பெயர் வைத்தார்கள். Y என்றால் ஆங்கில Year என்னும் சொல்லின் முதல் எழுத்து. K ஆயிரத்தைக் குறிக்கப் பயன்படும் சங்கேதச் சொல். Y2K பிரச்னைக்குத் தீர்வு காண லட்சக்கணக்கான மென்பொருள் நிபுணர்கள் உடனடியாகத் தேவைப்பட்டார்கள். இதற்காகத்தானே காத்திருந்தது இந்தியா? களத்தில் குதித்து, காரியத்தைச் சாதித்தது. இந்தியாவின் திறமை உலகத்துக்கே தெரிந்தது.  

இன்று இந்திய பி.பி.ஓ. துறையில் சுமார் 28 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள்;

11 பில்லியன் டாலர் வருமானத்தை நாட்டுக்குக் கொண்டுவருகிறார்கள். பிரகலாத் அவர்களின் அடிப்படைத் திறமைக் கொள்கையே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம். தேங்க் யூ பிரகலாத்!

(கற்போம்)