மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப் : பதவி உயர்வுக்குப் பிறகு... பக்குவம் அவசியம் !

இரா.ரூபாவதி.

##~##

வேலைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தனக்கு பதவி உயர்வு கிடைக்கவேண்டும் என்று நினைத்துதான் தினம்தினம் வேலை பார்க்கிறோம். ஆனால், அனைவருக்கும் பதவி உயர்வு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடுவது இல்லை. ஒரு சிலருக்கு மட்டும்தான் அந்த வாய்ப்புக் கிடைக்கிறது. இப்படி படாதபாடுபட்டுக் கிடைத்தப் பதவி உயர்வுக்குப் பிறகு, எப்படி யெல்லாம் நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்து போலாரிஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டாளர் பாலமுருகனிடம் கேட்டோம்.

''ஒருவர் பதவி உயர்வு பெற்றிருக்கிறார் என்றால் அவர் கடந்த வருடங் களில் திறமையாகவும், கடுமையாகவும் உழைத் திருக்கிறார் என்றுதான் அர்த்தம். ஓரிரு மாதச் செயல்பாட்டை அடிப்படையாக வைத்து யாருக்கும் பதவி உயர்வு கிடைத்து விடுவதில்லை. அதற்கு தொடர்ச்சியான  உழைப்பு இருக்கவேண்டும். இப்படி கஷ்டப்பட்டுக் கிடைத்த பதவி உயர்வை தக்க வைத்துக்கொள்வதற்கும்  சில விஷயங்களை கடைப்பிடிக்கவேண்டியது அவசியம்.  

பதவி உயர்வுக்கு முன்பு வரை உங்களை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். பதவி உயர்வு கிடைத்தப் பிறகு உங்களை அனைவரும் கவனிக்க ஆரம்பிப்பார்கள். இந்தச் சமயத்தில்தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கடுமையாக உழைத்து கிடைத்த பதவி உயர்வைப் பற்றி உடன் வேலை பார்ப்பவர்களே விமர்சிக்கக்கூடும். அந்தச் சமயங்களில் எல்லாம் நீங்கள் தளர்ந்துவிடக் கூடாது. அதேசமயம், கோபப்படவும் கூடாது என்பதை எப்போதும் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், அப்படி ஏதாவது செய்தீர்கள் என்றால் அது இன்னும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.

நாணயம் ஜாப் : பதவி உயர்வுக்குப் பிறகு... பக்குவம் அவசியம் !

பதவி உயர்வு கிடைத்தவுடனே, உடன் வேலை பார்ப்பவர்களிடம் அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் அந்த சந்தோஷத்தை அவர்களை அழைத்து சின்ன விருந்து கொடுத்து கொண்டாடுங்கள், அதில் தவறு இல்லை. ஒருவேளை உங்களுக்குப் பதவி உயர்வு கிடைத்ததை வேறு யாராவது சொல்லி அவர்கள் தெரிந்துகொண்டால், தேவையற்ற விவாதங்களை எழுப்பு வதற்கான வாய்ப்புகள் அதிகம்.  

பதவி உயர்வு கிடைத்தப் பிறகு உங்களின் பொறுப்பு அதிகமாகி விடும். இதனால் நீங்கள் எப்போதும் பிஸியாக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் பல வேலைகள் வெளியே தெரியாது. அதனால் அவர்களுக்கு அதைச் சொல்லி புரியவையுங்கள். அதோடு, நான் தனியாக வேலை பார்க்க முடியாது. இது டீம் வொர்க். நம்முடைய டீம் சிறந்து விளங்கவேண்டும் எனில் நாம் அனைவரும் சிறப்பாக வேலை

நாணயம் ஜாப் : பதவி உயர்வுக்குப் பிறகு... பக்குவம் அவசியம் !

செய்யவேண்டியிருக்கும். அப்போதுதான் நம்மால் அடுத்த கட்டத்திற்கு உயர முடியும் என்று விளக்கிச் சொல்லுங்கள். ஒவ்வொரு செயலுக்கும் இது உங்களால்தான் செய்ய முடிந்தது என்று சொல்லிப் பழகுங்கள். இப்படி தொடர்ந்து அவர்களை அரவணைத்துச் சென்றாலே போதும், அவர்களுக்கு உங்கள் மீது அதிக மரியாதை ஏற்படும். வேலையைச் சரியாக, குறித்த நேரத்தில் செய்து முடிப்பார்கள்.

உங்களின் வேலைப் பளு அதிகமாவதால்,  முன்புபோல அவர்களிடம் சகஜமாகப் பழக முடியாது. இதை அவர்கள் விவாதமாக மாற்றிவிடக்கூடும். எனவே, முடிந்தவரை அவர் களுடனும் கொஞ்சம் நேரம் செலவழியுங்கள். அதேநேரத்தில், அது எல்லை கடந்து போய்விடாமல் பார்த்துக்கொள்வதும் உங்களின் கடமை. மேலும், உங்களின் நடவடிக்கைகள் எப்படி, அதில் ஏதாவது மாற்றம் தேவையா என்பதையெல்லாம் அவ்வப்போது கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அதில் மாற்றம் ஏதாவது தேவைப்பட்டால் அதை முடிந்தவரை செய்துவிடுங்கள்.

வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறையாவது உங்களின் டீம் நபர்களுடன் தனித்தனியாகப் பேசி அவர்களின் பிரச்னை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கான தீர்வுகளைத் தேடுங்கள். மேலும், டீமில் இருப்பவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டே இருங்கள். ஏதாவது தவறு இருப்பின் அதனை அவர்களிடம் சுட்டிக்காட்டி விளக்கிச் சொல்லுங்கள். அதாவது, உன்னுடைய தவறான நடவடிக்கையால்  நம்முடைய டீமிற்கு அவப்பெயர். அதுமட்டும் இல்லாமல் உன்னுடைய எதிர்காலமும் பாதிப்படையும் என்பதையும் சொல்லி, மேலும் அந்தத் தவறுகள் தொடர்ந்தால் நிர்வாகம் எடுக்கும் முடிவுக்கு நான் பொறுப்பு அல்ல என்பதையும் தெளிவாகச் சொல்லிவிடுங்கள்.

அதோடு பதவி உயர்வுக்குப் பிறகு நீங்களும் கவனமாக நடந்துகொள்ளவேண்டும். அதாவது, உடன் வேலை பார்ப்பவர்களை பொதுஇடத்தில் வைத்து கண்டிக்கக் கூடாது. குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர அதிகாரம் செய்யக்கூடாது. இப்படிச் செய்தாலே மேலும் உயர் பதவிகளை எளிதில் அடைய முடியும்.''