உணர்ச்சிகளை வெல்லுங்கள்! படங்கள்: பீரகா வெங்கடேஷ்
கல்வி
##~## |
வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.
அன்னை படத்தில் சந்திரபாபு பாடும் இந்த ஹிட் பாடலை 1962-ல் எழுதியவர் கண்ணதாசன்.
அமெரிக்காவின் மாபெரும் மனோதத்துவ மேதை டேனியல் கோல்மேன் (Daniel Goleman),, ஹார்வர்டு பட்டதாரி; அறிவியலிலும் தலைசிறந்தவர். பிஸினஸ், மனோதத்துவம், அறிவியல் ஆகிய பல துறைகளில் பல்லாண்டுகளாக ஆராய்ச்சிகள் செய்தார். இவற்றின் பலனாக, 1995-ல் எமோஷனல் இன்டெலிஜென்ஸ்
(Emotional Intelligence) என்னும் மேனேஜ்மென்ட் கொள்கையை எடுத்துச் சொன்னார். இந்தக் கொள்கை என்ன சொல்கிறது தெரியுமா?
புத்திசாலிகளில் 20 சதவிகிதம்பேர் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள்.
வாழ்க்கையில் வெற்றி காண, அறிவுப்பூர்வமான புத்திசாலித்தனத்தைவிட, உணர்ச்சிப்பூர்வமான புத்திசாலித்தனம் அவசியம்.
ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். 1995-ல் ஓர் உலக மகாமேதை சொன்ன மனோதத்துவத்தை, மேனேஜ்மென்ட் கருத்தை அவருக்கு 33 வருடங்களுக்கு முன்பாகவே சொல்லி விட்டார் நம் கவிஞர் கண்ணதாசன். என்ன ஒரு தீர்க்கதரிசனம் பாருங்கள்!
ஒரே ஒரு வித்தியாசம், கவிஞரின் வேலை கருத்தைச் சொல்வதோடு முடிந்தது. மனோதத்துவ நிபுணரால் அப்படித் தன்னை நிறுத்திக்கொள்ள முடியுமா? புத்தியுள்ள மனிதரெல்லாம் ஏன் வெற்றி காண்பதில்லை, வெற்றிபெற்ற மனிதர்களெல்லாம் ஏன் புத்திசாலிகளில்லை என்று காரணங்களைக் கண்டுபிடித்தார். கோல்மேன் என்ன சொல்கிறார்?

நேற்றும் இன்றும் நீங்கள் செய்த எல்லாக் காரியங்களையும் நினைத்துப் பாருங்கள். காலையில் எழுந்தவுடன் மனைவியிடமும் குழந்தையிடமும் அன்பாகப் பேசினீர்கள். பேப்பர் லேட்டாக வந்தது. பேப்பர் போடும் பையனிடம் கோபப்பட்டீர்கள். பேப்பர் படித்தீர்கள். பட்ஜெட் நியூஸ். உங்கள் வருமான வரியும், சேமிப்பும் எப்படி பாதிக்கப்படும் என்று கணக்குப் போட்டீர்கள். வழியில் ஒரே டிராஃபிக். உங்கள் டூவீலரின் மேல் இடிப்பதுபோல் வந்த இளைஞன் மீது கோபப்பட்டீர்கள். ஆபீஸ் வந்தீர்கள். உங்கள் டெக்னிக்கல் அறிவை முழுக்க முழுக்கப் பயன்படுத்தும் அவசரமான புராஜெக்ட் வேலை. செய்து முடித்தீர்கள். பாஸ் பாராட்டினார். மனம் முழுக்க மகிழ்ச்சி. வீடு திரும்புகிறீர்கள். குடும்பத்தோடு கலகல பேச்சு, தொலைக்காட்சி சீரியல். நிம்மதியானத் தூக்கம்.
இப்படி நாம் எல்லோரும் நம் அன்றாட நிகழ்ச்சிகள் சிலவற்றில் அறிவைப் பயன் படுத்துகிறோம்; சில நிகழ்ச்சிகளில் நம் உணர்ச்சிகளைக் காட்டுகிறோம். அறிவார்ந்த செயல்களைவிட உணர்ச்சிப்பூர்வமான காரியங்களை நாம் வேகமாகச் செய்வோம். ஏனென்றால், நம் மூளையின் அமைப்பின்படி, அறிவு செயலாற்ற எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம். உணர்ச்சியோ ஒரு வினாடியின் 12,000-த்தின் ஒரு பகுதியில் செயலாற்றிவிடும். அதாவது, அறிவைவிட உணர்ச்சிகள் 12 மடங்கு ஸ்பீடு. மூளையின் கட்டளைப்படி அறிவு இயங்குகிறது; உணர்ச்சி அனிச்சைச் செயலாக நடக்கிறது.

உணர்ச்சி வெளிப்படும்போது, உடலின் ரத்த அழுத்தம் மாறுகிறது. இதனால் மூளையின் செயல்பாட்டை உணர்ச்சி அடக்கிவிடுகிறது, தாமதமாக்குகிறது. நாம் நம்மையும் மீறிச் சிலரிடம் கோபப்படுவோம். சிறிது நேரத்துக்குப் பின், அந்தக் கோப உணர்ச்சி தவறு என்று நம் அறிவு நமக்கு உணர்த்தும்.
உணர்ச்சிகளுக்கு அடிமையாகிவிடுவது பலவீனம். உணர்ச்சிகளை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். இப்படிக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுதான் எமோஷனல் இன்டெலிஜென்ஸ்.
அறிவுத் திறமையைக் கண்டுபிடிக்க ஐ.க்யூ
(Intelligence Quotient) என்னும் அளவுகோல் பயன் படுத்தப்படுகிறது. பல டெஸ்ட்கள் மூலம் ஐ.க்யூ கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த டெஸ்ட்களில், 140-க்கும் அதிகமான மார்க் வாங்குபவர்கள் மேதைகள். 120-140: அதிபுத்திசாலிகள். 110-120: புத்திசாலிகள். 90-110: சராசரி மனிதர்கள். 90-க்கும் கீழ்: புத்திசாலித்தனம் குறைவானவர்கள்
வாழ்க்கையில் வெற்றிபெற, நம் அறிவை, திறமைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்தாவிட்டால், அதாவது எமோஷனல் இன்டெலிஜென்ஸ் குறைவாக இருந்தால், அறிவு தன் முழுசக்தியோடு இயங்க முடியாது.
மணி என்பவர் மாமேதை; அவர் ஐ.க்யூ 150. ஆனால், அவருடைய எமோஷனல்
இன்டெலிஜென்ஸ் குறைவு. அடிக்கடி எல்லோரி டமும் கோபப்படுவார். நடராஜ் சராசரி மனிதர். அவர் ஐ.க்யூ 90. ஆனால், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் கில்லாடி. படித்து முடித்தபின் இருபது வருடங்களுக்குப் பிறகு இருவரும் சந்திக்கிறார்கள். இவர்களில் ஒருவர் மிகப் பெரிய தொழில் அதிபராகிவிட்டார். மற்றவர் ஒரு கம்பெனியில் மேனேஜராக இருக்கிறார்.
நடராஜ்தான் அந்தத் தொழில் அதிபர்; மணி மேனேஜர் என்று நீங்கள் எல்லோருமே கண்டுபிடித்திருப்பீர்கள். புத்தியுள்ள மணி வெற்றி பெறவில்லை. ஏன்? அவருடைய எமோஷனல் இன்டெலிஜென்ஸ் குறைவு. வெற்றி பெற்ற நடராஜ் புத்திசாலியில்லை; ஆனால், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர். நாம் எல்லோரும் நடராஜாக இருக்கத்தான் ஆசைப்படுவோம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? கோல்மேன் வழி காட்டுகிறார்.
1. முதலில், உங்கள் உணர்ச்சி நிலை என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும். மூன்று உணர்ச்சி நிலைகள் உள்ளன - உணர்ச்சி வசப்படுவது, உணர்ச்சியை முழுக்கக் கட்டுப்படுத்துவது அல்லது இவை இரண்டுக்கும் இடைப்பட்டதாக. நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். இதைக் கண்டுபிடிக்க பல டெஸ்ட்கள் இருக்கின்றன. இந்த டெஸ்ட்களில் சில நிகழ்ச்சிகளை வர்ணிப்பார்கள். அந்தச் சந்தர்ப்பங்களில் நீங்கள் எவ்வாறு செயல்படுவீர்கள் என்று கேட்பார்கள். சாம்பிளுக்குச் சில கேள்விகள் இதோ:
அ) உங்களின் கீழ் வேலை பார்ப்பவர் தினமும் வேலைக்கு லேட்டாக வருகிறார். அவரை என்ன செய்வீர்கள்?
a ஸ்ட்ரிக்ட்டாக எச்சரிக்கை கொடுப்பேன்.
b. அவர் ஏன் லேட்டாக வருகிறார் என்று விசாரிப்பேன்.
c. அவர் வேலையை அவர் சரியாகச் செய்தால் தாமதத்தைக் கண்டுகொள்ள மாட்டேன்.
ஆ) நீங்களும் உங்கள் சக ஊழியரும் சமமான திறமைசாலிகள். உங்கள் பாஸ் உங்களுக்குப் பதவி உயர்வு தரவில்லை. சக ஊழியருக்குப் பதவி உயர்வு தருகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?
a. எனக்கென்ன குறைச்சல் என பாஸை நேரில் பார்த்து கேட்பேன்.
b. வேறு வேலை தேடுவேன்.
c. சக ஊழியருக்கு ஒத்துழைப்பு தருவதை நிறுத்துவேன்.

இ) அலுவலகத்தில் உங்கள் சக ஊழியர் உங்களைப் பிறர் முன்னால் அடிக்கடி கேலி செய்கிறார். என்ன செய்வீர்கள்?
a பதிலுக்கு நானும் அவரைக் கேலி செய்வேன்.
b. வேண்டாம் இந்த விளையாட்டு என்று தனியாகக் கூப்பிட்டு எச்சரிப்பேன்.
c. கோபத்தில் அவரிடம் கத்துவேன்.
இணையதளங்களில் பல டெஸ்ட்கள் இருக்கின்றன. இவற்றை நேர்மையாக எழுதி, உங்கள் உணர்ச்சி நிலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
2. இரண்டாவது, உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எனில், உணர்ச்சி இல்லாத ஜடமாக இருப்பதல்ல. உங்கள் உணர்ச்சிகளைக் கட்டாயம் காட்டுங்கள். ஆனால், அவை நீங்கள் சொன்னபடி கேட்கவேண்டும். அவை சொன்னபடி நீங்கள் ஆடக்கூடாது. உணர்ச்சிவசப்படாமல் உணர்ச்சிகளைக் காட்டுவதுதான் எமோஷனல் இன்டெலிஜென்ஸ்.
3. மூன்றாவது, உணர்ச்சிகளை உங்களுடைய உந்துசக்தியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். உணர்ச்சி வெள்ளம் என்று சொல்கிறோம். நிஜமாகவே, உணர்ச்சிகள் காட்டாற்று வெள்ளம். எதிர்படுபவை அனைத்தையும் அழிக்கும் சக்திகொண்ட பேராறு. அந்த நீர்ச்சக்தியை அணைகட்டி மின்சாரம் எடுத்தால், ஊரையே ஒளிமயமாக்கலாம். உங்கள் உணர்ச்சிகள் அழிவுக் காட்டாறா, ஆக்கமான மின்சக்தியா? உங்கள் கையில்தான் முடிவு இருக்கிறது.
4. நான்காவது, மற்றவர்களின் உணர்ச்சி களைப் புரிந்துகொள்ள, மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் அனுபவங்களை நினைத்துப்பாருங்கள். வீட்டில் மனைவியிடம் கோபப்பட்டுக் கத்துகிறீர்கள். அவர் என்ன செய்வார்? அவராலும் அமைதியாகப் பதில் சொல்ல முடியாது. கோபமாகப் பதில் சொல்லுவார். உங்கள் ரத்த அழுத்தமும் எகிறும். இருவரும், உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகளைக் கொட்டுவீர்கள். யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்காவிட்டால், நாவினால் சுட்ட இந்த வடு, உறவின் அடித்தளங்களையே அசைத்துவிடும். நீங்கள் மட்டும் மனைவியின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, கோபம் இல்லாமல் ஆனால், உறுதியாக உங்கள் கருத்துக்களைச் சொன்னால், தகராறே இல்லாமல் போய்விடும்.
5. ஐந்தாவது, மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு, பழகும் கலையில் தேர்ச்சி பெறுங்கள், ஆரோக்கியமான உறவுகளை உருவாக்குங்கள். உங்களைச் சுற்றிப் பாருங்கள். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வாழ்பவர்கள் நல்ல கணவனாக, நல்ல மனைவியாக, நல்ல தந்தையாக, நல்ல தாயாக, நல்ல மேனேஜராக, நல்ல தலைவராகப் பரிமளிப்பார்கள். கோல்மேன் காட்டும் வழியில் உணர்ச்சிக் கட்டுப்பாட்டை வளர்த்துக்கொண்டால், நீங்கள் இந்த நிலையை எட்ட முடியும்.
அப்படி ஒரு நல்ல மனிதனாக, இந்தக் கட்டுரை ஓர் அறிமுகம் மட்டுமே. இன்னும் விவரமாக எமோஷனல் இன்டெலிஜென்ஸ் பற்றித் தெரிந்துகொள்ள நீங்கள் படிக்கவேண்டிய புத்தகம் இது:
Emotional Intelligence – Why it can matter more than IQ. Author – Daniel Goleman
(கற்போம்)
