மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

பேலன்ஸ்டு ஸ்கோர்கார்டு ! படங்கள்: தே. தீட்ஷித்.

##~##

என் நண்பர் மோகன் பெரிய தொழில் அதிபர். மாருதி, ஹுண்டாய், ஃபோர்டு என பல முன்னணி கார் கம்பெனிகளுக்கு உதிரிபாகங்கள் சப்ளை செய்பவர். சென்னை, ராணிப்பேட்டை, புதுச்சேரி என மூன்று இடங்களில் தொழிற்சாலை; ஆண்டுக்கு ரூ.300 கோடிக்கு வியாபாரம்.

மோகன், அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கியவர். காரைக்குடி அருகே சொந்த ஊர். குடும்பச் சூழ்நிலையால், ஆசைபட்டபடி பி.இ. படிக்க முடியவில்லை. பாலிடெக்னிக் படித்தார். சென்னையில் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது.    

மோகனுக்கு மனம் நிறைய ஆசை - சொந்தத் தொழில் தொடங்கவேண்டும்,  நிறையச் சம்பாதிக்க வேண்டும், தம்பிகளை நன்றாகப் படிக்க வைக்கவேண்டும், தங்கைகளுக்கு நல்ல வேலை பார்க்கும் மாப்பிள்ளைகள் தேடவேண்டும்.

சின்னதாக மெஷின் ஷாப் தொடங்கினார். வெறியோடு உழைத்தார். வெற்றியைத் தேடிப் பிடித்தார். குடும்பச் சுமைகளை இறக்கிவைத்தபின், தன் 35-ம் வயதில் திருமணம் செய்துகொண்டார். காலப்போக்கில் ஓர் ஆண், இரண்டு பெண்கள் என மூன்று குழந்தைகள் பிறந்தன.    

காலை எட்டு மணிக்குத் தொழிற்சாலைக்குப் போகும் மோகன் வீடு திரும்பும்போது இரவு ஒன்பது, பத்து ஆகும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஃபேக்டரி போவார். குழந்தைகளோடு செலவிடவே அவருக்கு நேரம் இருந்ததில்லை. மகன் ராஜு, அமெரிக்காவில் எம்.எஸ். படிக்கிறான். மகள்கள் சந்தியாவும், அகிலாவும் சென்னைக் கல்லூரிகளில்.    

சென்றவாரம். சந்தியா போன் செய்தாள். மோகனுக்கு நெஞ்சுவலி. அப்போலோ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கிறார். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென்று சொல்லி விட்டார்கள். சரியான வேளையில் சாப்பிடாமல், தூங்காமல், ஓய்வு எடுக்காமல், நாள் முழுக்க வேலை, வேலை என்று அலைந்த மன அழுத்தத்தின் பலன் - இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு, சர்க்கரை நோய், முதுகுவலி எனப் பல பிரச்னைகள்.      

MBA - மூன்றெழுத்து மந்திரம்

மோகன் என்னைப் பார்த்ததும் அழுதார். 'எனக்கு இப்ப வயசு அறுபது. பணம் சேர்க்கிறது மட்டுமே வாழ்க்கைன்னு நெனச்சு பிஸினஸே கதியா இருந்துட்டேன். உடம்பை கவனிக்கலே. குழந்தைங்களோடு நேரம் செலவு பண்ணலே. வாழ்க்கையிலே ஜெயிச்சேன் என்று நம்பிக்கிட்டிருந்தேன். தோற்றுப்போயிட்டேன் என்கிறது இப்போதுதான் புரியுது.'

மோகனின் உலகம் அவர் கண்முன்னாலேயே நொறுங்கிக்கொண்டிருந்தது.

எனக்கு ஏராளமான மோகன்களைத் தெரியும். உங்களுக்கும் தெரிந்திருக்கும். ஏன், நம்மில் பலரே, நம்மை அறியாமலே மோகன் நடந்தப் பாதையில் பயணிக்கலாம். இதைத் தவிர்க்க என்ன வழி? 'பேலன்ஸ்டு ஸ்கோர்கார்டு’ (Balanced Scorecard) என்னும் மேனேஜ்மென்ட் கொள்கை!

மோகன் ஏன் 'தோற்றுப் போனார்?’ வாழ்க்கையில் ஜெயிப்பது என்றால், பணம் சேர்ப்பது மட்டுமே என்று அவர் தன் இலக்கை வகுத்துக்கொண்டிருந்தார். வாழ்க்கையில் நம் எல்லோருடைய முக்கிய குறிக்கோளும் என்ன? சந்தோஷம். இந்த மனநிலையை அடைய, பணம் ஒரு வழிதானே தவிர, பணம் மட்டுமே நம் இலக்காக இருக்கமுடியாது.  ஆரோக்கியம் வேண்டும், பிறர் நம்மிடம் அன்பும், பாசமும், நட்பும் காட்டவேண்டும்; சமூகம் நம்மை மதிக்கவேண்டும்.

மோகனுக்கு மட்டுமல்ல, மக்கள் எல்லோருடைய முக்கிய ஆசைகளுமே, பணம், ஆரோக்கியம், பாசம், புகழ் ஆகிய நான்கும்தான் என்று மனோதத்துவ மேதைகள் சொல்கிறார்கள். இந்த நான்கும் சேர்ந்த வாழ்க்கைதான் சமனான (பேலன்ஸ்டு)  ஆன வாழ்க்கை. இதற்கு மோகன் என்ன செய்திருக்கவேண்டும்?

தன் வாழ்க்கை இலக்குகளைத் தெளிவாக முடிவு செய்திருக்கவேண்டும். நிறையச் சம்பாதிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்தியிருக்காமல், பிஸினஸ் செய்வதோடு,  உடல்நலத்தைப் பாதுகாத்து, குடும்பத்தோடு நேரம் செலவிட்டு, பணத்தையும், புகழையும் தேடுவேன் என இலக்கைத் தீர்மானித்திருக்கலாம். இப்படி தீர்மானிப்பதைத்தான் மேனேஜ்மென்ட் மொழியில் மிஷன் அண்ட் விஷன் ஸ்டேட்மென்ட் (Mission and Vision Statement) என்று சொல்வோம்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

அடுத்தபடியாக, இந்த நான்கு அம்சங்களுக்கும் மோகன் தனித்தனியான இலக்குகளை, நம்பர்களாக்கிக்கொள்ள வேண்டும்.    

பணம்: 'நிறையப் பணம் சேர்ப்பேன்’ என பொத்தாம் பொதுவாக இலக்கு நிர்ணயிக்காமல்,  2022-க்குள் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்து சேர்ப்பேன் என குறிப்பாகத் தீர்மானிக்கலாம்.  

உடல்நலம்: ஆரோக்கியமான மனிதரின் ரத்த அழுத்தமான 120/80-ம், சர்க்கரை லெவலும் இருக்கும்படி, சாப்பாட்டைக் கட்டுப்படுத்துவேன். வாரம் 5 மணி நேரமாவது  உடற்பயிற்சி செய்வேன்.  

பாசம்: மனைவி, குழந்தைகளோடு, ஒவ்வொரு வாரமும், சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சினிமா, பீச் அல்லது ஷாப்பிங் போவேன். வாரத்தில் 20 மணி நேரங்களாவது அவர்களோடு செலவிடுவேன்.

புகழ்: சமூக நலனில் அக்கறைக்காட்டும் அமைப்புகளில் சேருவேன். வருடத்துக்கு இரண்டு முறையாவது அவர்களுடைய கூட்டங்களில் பேசுவேன்; அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன்.    

இப்படி திட்டமிடுவதோடு நில்லாமல், இதனை செயல்படுத்தவேண்டும். அப்படி செயல்படுத்தி அதற்கு மார்க்கும் போடவேண்டும். குழந்தைகளின் படிப்பு முன்னேற்றத்தை எப்படிக் கண்டுபிடிக்கிறோம்? ப்ராக்ரஸ் ரிப்போர்ட் காட்டும் மார்க்கை வைத்து. அதேபோல், மோகனும் தனக்கு மார்க் போட்டுக்கொள்ள வேண்டும். இந்த மார்க்கை ஆங்கிலத்தில் ஸ்கோர் (Score) என்பார்கள்.  

உதாரணமாக, வாரம் 5 மணி நேர உடற்பயிற்சி செய்யத் திட்டமிட்டாரே? 3 மணி நேரம்தான் போக முடிந்ததா? அப்படியானால், மார்க் 60 சதவிகிதம். இதேபோல் ஒவ்வோரு செயல்பாட்டுக்கும் மார்க் போட்டுக்கொள்ள வேண்டும். எதிலாவது மார்க் குறைந்தால், மேம்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இவற்றைச் செய்தால், தன் இலக்குகள் அத்தனையையும் மோகன் அடைவார்.

மோகன் இப்போது என்ன செய்திருக்கிறார்? அவர் உண்மையாகவே ஜெயித்துவிட்டார். அவருடைய முந்தைய தோல்விக்கும், இன்றைய வெற்றிக்கும் என்ன வித்தியாசம்? அவர் ஸ்கோர்களைப் பயன்படுத்தியிருக்கிறார். ப்ராக்ரஸ் ரிப்போர்ட் என்ன காட்டுகிறது? மார்க். இதேபோல், ஸ்கோர்களைக் காட்டும் ஆவணம் கார்டு  என்று அழைக்கப்படும். அதாவது, மோகனின் வெற்றியின் ஒரே ரகசியம் - பேலன்ஸ்டு ஸ்கோர்கார்டு.  

உங்களுக்கு இப்போது ஒரு சந்தேகம் வரலாம். 'பேலன்ஸ்டு ஸ்கோர்கார்டு என்பது சுயமுன்னேற்றக் கொள்கையல்லவா? எம்.பி.ஏ. படிப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?’

உள்ளபடி சொன்னால், இதை பலர் சுயமுன்னேற்றத்துக்குப் பயன்படுத்தினாலும், பேலன்ஸ்டு ஸ்கோர்கார்டு கொள்கை முழுக்க முழுக்க மேனேஜ்மென்ட் கொள்கை; பிஸினஸை மேம்படுத்துவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கொள்கை.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

உலகப் புகழ்பெற்ற எம்.பி.ஏ. படிப்பகமான ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் காப்லான் (Robert Kaplan), அவருடைய சக மேனேஜ்மென்ட் மேதை டேவிட் நார்ட்டன் (David Norton) ஆகிய இருவரும், உலக நிறுவனங்களின் வெற்றி ரகசியங்களையும், தோல்விக்கான காரணங்களையும் ஆராய்ந்தனர்.  பெரும்பாலான கம்பெனிகள், லாப-நஷ்டக் கணக்குகளை மட்டுமே கவனித்தன. தொடர்ந்து லாபம் வந்தால், தமக்கு ஒளிமயமான எதிர்காலம் என்று கணக்குப் போட்டார்கள். ஆனால்,  திடீரென நஷ்டம் வந்தபோது, காணாமல் போனார்கள்.

பணம் சேர்ப்பது மட்டுமே குறிக்கோளாக இருந்த மோகன் வாழ்க்கையில் 'தோற்று’ப் போனதைப்போல்தான், இந்த கம்பெனிகளும். எனவே, லாப-நஷ்டக் கணக்கை மட்டுமே கவனித்தால் போதாது என்னும் முடிவுக்கு காப்லான் வந்தார். வேறு எவற்றில் கவனம் செலுத்தவேண்டும்? மோகன் நீடித்த வெற்றி காண, பணம், ஆரோக்கியம், பாசம், புகழ் ஆகிய நான்கு அம்சங்களிலும் முன்னேற்றம் காணவேண்டும் என்று பார்த்தோம். இதேபோல், கீழ்க்கண்ட நான்கு அம்சங்களிலும் கவனம் செலுத்தும் கம்பெனிகள் மட்டுமே நீடித்து ஜெயிக்கமுடியும் என்று காப்லான் ஆராய்ச்சி நிரூபித்தது.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

அந்த அம்சங்கள்: பணம் தொடர்பான சமாச்சாரங்கள் (Financial Perspectives), வாடிக்கையாளர் தொடர்பான சமாச்சாரங்கள் (Customer Perspectives), கம்பெனி நடைமுறைகள் (Internal Processes Perspectives), ஊழியர்கள் அறிவைப் பெருக்குதல்; அவர்கள் வளர்ச்சி  (Learning & Growth)   - இந்த அடிப்படையில், காப்லான் தன் பேலன்ஸ்டு ஸ்கோர்கார்டு கொள்கையை 1991-ல் வெளியிட்டார்.

காப்லான் கொள்கைப்படி, கம்பெனிகள் இந்த நான்கு அம்சங்களில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான இலக்குகளை, நம்பர்களாக்கிக் கொள்ள வேண்டும், ஸ்கோர் வைத்துக்கொள்ள வேண்டும், ஸ்கோர்களை ஆராய்ந்து, செயல்பாடுகளை மாற்றவேண்டும்.    

கடந்த 75 ஆண்டுகளில் வெளியான மேனேஜ்மென்ட் கொள்கைகளில், அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியது பேலன்ஸ்டு ஸ்கோர் கார்டு கொள்கைதான். அண்மையில் நடந்த ஒரு கருத்துக்கணிப்பின்படி, உலகின் 44 சதவிகித கம்பெனிகளும், இந்தியாவின் 45 சதவிகித கம்பெனிகளும் கடைப்பிடிக்கும் கொள்கை. பிஸினஸ் மட்டுமல்ல, பல அரசாங்கங்களும், சேவை நிறுவனங்களும், தனிமனிதர்களும் பேலன்ஸ்டு ஸ்கோர்கார்டு  கொள்கையை வெற்றிகரமாகப் பின்பற்றுகிறார்கள். நீங்கள் எப்போது காப்லான் காட்டும் பாதையில் முதலடி எடுத்துவைக்கப் போகிறீர்கள்?

(கற்போம்)

 கேளுங்கள் சொல்கிறேன்!

மணிகண்டன், மின்னஞ்சல் மூலமாக.

நான் இ.சி.இ. முடித்திருக்கிறேன். அடுத்து எம்.பி.ஏ. படிக்க ஆசை. மார்க்கெட்டிங், லாஜிஸ்டிக்ஸ் இந்த இரண்டில் நான் எதை தேர்வு செய்யலாம்?

''எம்.பி.ஏ. படிப்பில் மார்க்கெட்டிங், லாஜிஸ்டிக்ஸ் என ஒரு துறையில் மட்டும்தான் ஸ்பெஷலைஸ் செய்யவேண்டும் என்பதில்லை. லாஜிஸ்டிக்ஸ் என்பதே மார்க்கெட்டிங் துறையின் முக்கியமான ஒரு அம்சமாக மாறி வருகிறது. எனவே, எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிப்பில் லாஜிஸ்டிக்ஸ், மார்க்கெட்டிங் ஆகிய இரண்டு துறைகளையும் விருப்பப் பாடங்களாகத் தேர்வு செய்யுங்கள். நிச்சயம் ஜெயிப்பீர்கள்.''