இரா.ரூபாவதி.
##~## |
தற்பொழுது நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் இல்லை என்றாலும், தினமும் பல ஊழியர்கள் வேறு வேலைக்குச் செல்வது என்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக ஐ.டி. துறையில் நிறுவனங்கள் மாறுவது அதிகமாக உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் திறமையுள்ள வர்களின் எண்ணிக்கைக் குறைந்து வருவதுதான். பல நிறுவனங்கள் தங்களுடைய சந்தையைத் தக்கவைத்துக் கொள்ளவும், விரிவுபடுத்தவும் திறமை வாய்ந்த ஊழியர்களை அதிக சம்பளம் கொடுத்து போட்டி நிறுவனங்களிலிருந்து கவர்ந்திழுத்து விடுவதுதான்.
ஊழியர்கள் வேறு நிறுவனங்களுக்குச் செல்லாமல் இருக்க நிர்வாகம் என்ன செய்யவேண்டும்? சம்பளத்தைத் தவிர வேறு என்னென்ன சலுகைகள் கொடுத்து ஊழியர் களைத் தக்கவைத்துக்கொள்வது என்று சொல்கிறார் கேப் ஜெமினி நிறுவனத்தின் மேனேஜர் பிரியா கணேஷ்.
''சம்பளத்தைத் தாண்டி நிறுவனத்துடன் உணர்வுப்பூர்வமான தொடர்பு இருக்க வேண்டும். அதை நிறுவனங்கள்தான் ஏற்படுத்த வேண்டும். இதற்காக நிறுவனம் ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டுச் செய்யவேண்டியது அவசியம். வேலை, அதற்கேற்ற சம்பளத்தோடு சற்று பரிவையும் சேர்த்து கொடுத்தால் போதும். பரிவு என்பது உணர்வுகளோடும், எதிர்காலத்தோடும் தொடர்புடை யதாக இருக்கவேண்டும்.
ஓர் ஊழியர் வேலைக்குச் சேர்ந்ததும் அவருடைய படிப்பு, குடும்பச் சூழல், ஊழியரின் எதிர்காலத் தேவை, தற்போதைய நிலை ஆகியவற்றை தெரிந்துகொள்வது நிறுவனத்தின் கடமை. அதை அடிப்படையாக வைத்து ஊழியர்களின் தேவைகளுக்கு ஏற்றாற்போல் வேலைகளை வடிவமைத்துக்கொள்ளலாம். அதாவது, ஊழியர் வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்கிறார் எனில், அவரின் தங்கும் இடம், உணவு பிரச்னைகளை கவனித்து சரி செய்யலாம். இரவு ஷிப்ட்டில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.

மேலும், ஊழியர் மேல்படிப்புக்குத் தேவையான விடுப்பு, நிதி உதவிகளை நிறுவனங்கள் செய்யலாம். அவசரத் தேவைகளின்போது ஊழியர்கள் கேட்பதற்கு முன்பாகவே பண உதவியும், தன்னம்பிக்கையும் கொடுக்கும் வகையில் நிறுவனம் நடந்துகொள்ளலாம். பெண் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கு ஏற்றச் சூழ்நிலையை உருவாக்கு வதோடு, அவர்களின் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கலாம்.
அதேபோல, ஆண் ஊழியர்களாக இருந்தாலும் ஏதாவது விபத்து அல்லது உடல்நலக் குறைவு ஆகியவை ஏற்படும் சூழ்நிலையில் அவர்களுக்கும் இந்த வாய்ப்பைக் கொடுக்கலாம். ஆயுள்

இன்ஷூரன்ஸ் மற்றும் மெடிக்ளைம் பாலிசிகள் எடுத்துக் கொடுப்பது, சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு வழி செய்யும் வகையில் நிதி ஆலோசனைகள் வழங்குவது போன்றவற்றால் ஊழியருக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினருக்கும் நிறுவனத்தின் மீதான ஈடுபாடு, மதிப்பு, மரியாதை வளர்வதற்கு தூண்டுகோலாக இருக்கும்.
வருடத்திற்கு ஒருமுறை ஊழியர்களின் தகுதி, பதவிக்கு ஏற்ப பரிசு கொடுப்பது ஊழியர்களை அதிகமாக ஊக்குவிக்கும். ஊழியர்களின் எதிர்கால வளர்ச்சி மற்றும் ஆளுமையைக் கூட்டும் வகையில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம். இந்தப் பயிற்சி ஒரு ரிலாக்ஸான சூழலில் அவசியம். பணியிடத்தில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவும், குழு மனப்பான்மையை வளர்க்கவும் வருடத்திற்கு ஒருமுறை சுற்றுலா அழைத்துச் செல்வது அவசியம். ஊழியர்களின் பிரச்னையைத் தீர்த்து வைப்பதற்கு நியாயமான ஒருவரை நியமிப்பது நல்லது. இவர் மீது அனைத்து ஊழியர்களுக்கும் நம்பிக்கை இருப்பது அவசியம். எந்த ஊழியர் மீதும் அதிக அழுத்தம் தராமல் வேலை வாங்குவதுதான் மிக முக்கியமான விஷயம்.''