மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

மூன்றாம் தொழில் புரட்சி !

##~##

நீங்கள் பிஸினஸ்மேனா? உங்களுக்கு ஓர் எச்சரிக்கை. இன்னும் சில வருடங்களில், உலகம் முழுக்க ஒரு தொழில்நுட்பப் புயல் அடிக்கப்போகிறது: உற்பத்தி முறைகள் தலைகீழாக மாறப் போகின்றன: மூன்றாம் தொழில் புரட்சி வரப்போகிறது.

2012 டிசம்பர் 21-ல் உலகம் அழியப் போகிறது என்று உடான்ஸ் விட்டார்களே, அதுமாதிரி இது இன்னொரு உடான்ஸ் என்று நினைத்துவிடாதீர்கள். ஏனென்றால், மூன்றாம் தொழில் புரட்சி வரப்போகிறது என்று கணித்தவர் சாதாரண மனிதரல்ல, உலகப் புகழ்பெற்ற எம்.பி.ஏ. கல்லூரியான வார்ட்டன் (Wharton) பிஸினஸ் ஸ்கூல் பேராசிரியர், ஏராளமான உலக நாடுகளுக்குப் பொருளாதார ஆலோசகர், Foundation on Economic Trends என்னும் ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக இருக்கும் ஜெரெமி ரிஃப்கின் (Jeremy Rifkin).

2011-ல் எழுதிய The Third Industrial Revolution, How Lateral Power is Transforming Energy, the Economy and the World என்னும் புத்தகத்தில் ரிஃப்கின் இந்தக் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.    

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். கடந்த நாற்பது ஆண்டுகளில் நம் வாழ்க்கை யும், நாம் வேலை பார்க்கும் விதமும் தலைகீழாக மாறிவிட்டன. காரணம், தொழில்நுட்ப வளர்ச்சி.

1973-ல் மோட்டரோலா கம்பெனியில் பணியாற்றிய டாக்டர் மார்ட்டின் கூப்பர் கண்டுபிடித்த செல்போன், 1976-ல் சாதாரண மனிதனும் பயன்படுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டர்களை உருவாக்கிய ஆப்பிள், 1991-ல் அமெரிக்க ராணுவம் கண்டுபிடித்த வேர்ல்டு வைட் வெப் (World Wide Web – WWW) ஆகிய தொழில்நுட்பங்கள் இன்று நாம் வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு மாற்றி இருக்கின்றன.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

முதலாம் புரட்சி கொண்டுவந்த முக்கிய      வித்தியாசம் உற்பத்திக்குப் பயன்படும் சக்தி. அதற்கு முன் மனித சக்தியும், மாடு, குதிரை போன்ற மிருக சக்திகளும் உற்பத்தியைப் பெருக்கவும், இயந்திரங்களை ஓட்டவும் பயன்பட்டன. முதல் தொழில் புரட்சியின் பலனாக, இவற்றின் இடத்தை நிலக்கரி பிடித்தது. இதனால், சக்தி வாய்ந்த இயந்திரங்கள், ரயில், கப்பல் போக்குவரத்து போன்ற முன்னேற்றங்கள் ஆகியவை மக்கள் வாழ்க்கையை அதிரடியாக மாற்றின.          

இரண்டாம் தொழில் புரட்சி காலத்தில் நிலக்கரியின் இடத்தை, பெட்ரோல், டீசல், இயற்கை வாயு ஆகிய பெட்ரோலியப் பொருட் களும், எடிசன் அறிமுகம் செய்த மின்சாரமும் பிடித்தன. பெட்ரோலியப் பொருட்களும், மின் சக்தியும்தான் இன்று உலகத் தொழில் வளர்ச்சி, போக்குவரத்து, பொருளாதாரம் ஆகியவற்றை இயக்கும் சக்திகள். மின்னாற்றல், நீரோட்டம் (Hydel), கரி, பெட்ரோலியப் பொருட்கள், அணுசக்தி, சூரிய வெப்பம், காற்று ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

இவற்றுள் பெட்ரோலியம் மிக முக்கியமானது. ஏனென்றால், உலக மொத்த மின்சார உற்பத்தி யில், சுமார் 25 சதவிகிதம் பெட்ரோலியப் பொருட்களை நம்பித்தான் இருக்கிறது.

இன்று இருக்கும் பெட்ரோலியப் பொருட்கள் அதிகபட்சம் 2078-வரைதான் தாக்குப்பிடிக்கும் என்று அறிவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். இயற்கை தந்திருக்கும் பெட்ரோலியம் காலியாகி விட்டால், நம் எதிர்காலமே அவுட்.  

இதைத் தடுக்க, அறிவியல் மேதைகள் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து வருகிறார்கள். மூன்றாம் தொழில் புரட்சி என ரிஃப்கின் சொல்லும் கொள்கை இந்தச் சிந்தனையின் பலன்தான்.

அதிகபட்ச மின்னாற்றலும், பெட்ரோலியமும் பெரிய பெரிய தொழிற்சாலைகளை நடத்தத் தேவைப்படுகின்றன. இதற்குப் பதிலாக, தொழிற் சாலைகள் ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் நடத்தக்கூடிய சிறு தொழில்களாகிவிட்டால் இவற்றை நடத்த, குறைந்த அளவு மின்சக்தி போதும். சூரியன், காற்று ஆகிய இயற்கை சக்திகளிலிருந்து ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தேவையான மின்சாரத்தை அவர்களே உற்பத்தி செய்துகொள்ளலாம். யாரும் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய தேவை கிடையாது.

இதைப் படித்தவுடன், இதெல்லாம் சாத்தியமா? என்று கேட்பீர்கள்.  தொழில்நுட்பம் நன்கு வளர்ந்துவிட்ட இந்த காலத்தில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்த குடிசைத் தொழில்களுக்குப் போவது பிற்போக்குச் சிந்தனை அல்லவா? ரிஃப்கின் போன்ற மேதைகள் இதை சொல்லலாமா? என்று நீங்கள் கேட்கலாம்.

பொறுமையாக யோசிப்போம். ரிஃப்கின் காட்டும் வழியில், பெரிய தொழிற்சாலைகள் மூடப்படும்; அவற்றின் இடங்களில் குடிசைத் தொழில்கள் வரும். இதனால், உற்பத்திச் செலவு கணிசமாகக் குறையும். எப்படி?  

இந்த மேஜிக்கை நடத்தப்போவது 3 D Printing, Additive Manufacturing ஆகிய இரண்டு தொழில்நுட்பங்கள்! இவை என்ன, இவை இரண்டும் என்ன செய்யப் போகின்றன?

MBA - மூன்றெழுத்து மந்திரம்

கம்ப்யூட்டரிலிருந்து பிரின்ட்அவுட் (Printout)எடுக்க நாம் எல்லோரும் பயன்படுத்தும் கருவி பிரின்டர். இவை நம் கடிதங்கள், ஆவணங்கள் ஆகியவற்றின் பிரின்ட்அவுட் எடுக்க உதவுகின்றன. இந்தக் கடிதங்கள், ஆவணங்கள் ஆகியவை நீளம், அகலம் ஆகிய இரண்டு பரிமாணங்களே கொண்டவை. இதனால் இந்த பிரின்டர்களை இரண்டு பரிமாண பிரின்டர்கள் (2 D Printers) என்று சொல்கிறோம். நீளம், அகலம் ஆகியவற்றோடு 'கனம்’ என்கிற மூன்றாவது பரிமாணத்தையும் ஒரு பிரின்டர் தருமானால், அது மூப்பரிமாண பிரின்டர் (3 D Printers)ஆகிறது.  

ஒரு கனசதுரப் பொருளைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதை 2D பிரின்ட் எடுத்தால், நீளம், அகலத்தோடு ஒரு சதுரம் கிடைக்கும். அதையே 3D பிரின்ட் எடுத்தால் என்ன கிடைக்கும்? நீளம், அகலம், கனம் உள்ள பொருள் கிடைக்கும். அந்தப் பொருள் என்ன என்று கவனித்துப் பாருங்கள். அது இன்னொரு கனசதுரம்! ஆமாம், 3D பிரின்டிங் செய்வதன் மூலமாக, உங்களிடம் இருந்ததுபோலவே, இன்னொரு கனசதுரத்தை நீங்கள் உற்பத்தி செய்துவிட்டீர்கள். கம்ப்யூட்டரையும், 3D பிரின்டரையும் மட்டுமே வைத்துகொண்டு, பெரிய தொழிற்சாலைகள் தயாரிக்கும் கனசதுரப் பொருளை உங்கள் வீட்டிலேயே நீங்கள் தயாரித்துவிட்டீர்கள்.      

இப்படி தயாரிக்க 3D பிரின்டர்கள் பயன் படுத்தும் உற்பத்திமுறை additive manufacturing என்று அழைக்கப்படுகிறது.Addition என்றால் கூட்டல் என்று அர்த்தம். அதாவது, additive manufacturing என்றால், கூட்டல் உற்பத்திமுறை.

இன்று தொழிற்சாலைகளில் நாம் எல்லோரும் பயன்படுத்துவது subtractive manufacturing, , அதாவது, குறைத்தல் உற்பத்திமுறை. இவ்விரண்டு உற்பத்திமுறைக்கும் உள்ள வித்தியாசத்தை ஒரு எளிய உதாரணம் மூலம் விளக்குகிறேன்.

ஒரு சிற்பி, நடனமாடும் பெண்ணின் சிலை செதுக்குகிறார். எப்படி செய்கிறார்? பெரிய கல்லை எடுக்கிறார். அதிலிருந்து, பெண்ணின் உருவம் தவிர்த்த அத்தனை கற்களையும் வெட்டி எடுக்கிறார். அதாவது, பாறையின் சில தேவையற்ற பாகங்களைச் சிற்பி குறைக்கும்போது, நடனமாடும் பெண்ணின் சிலையை அவர் உருவாக்குகிறார். இது குறைத்தல் உற்பத்திமுறை.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

இப்போது சிற்பி, புதிய முறையில் சிலை செய்யப்போகிறார். கம்ப்யூட்டரில் நடனமாடும் சிலையை வரைகிறார். அவர் அருகில் ஒரு 3D பிரின்டர். அந்த மெஷினில், கல் தூள் தூளாக இருக்கிறது. சிற்பி கம்ப்யூட்டரில் கட்டளை (command) கொடுத்தவுடன், கல் தூள் படிப்படியாகச் சிலை வடிவமெடுக்கிறது. காலில் தொடங்கி உடலின் ஒவ்வொரு பாகமும் உருவாகிறது. இது கூட்டல் உற்பத்திமுறை.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

ஒரு முக்கிய வித்தியாசத்தைக் கவனியுங்கள். குறைத்தல்முறையில், கல் சேதாரமானது. கூட்டல் முறையில், சிலையின் சைஸுக்கு அதிகமாக ஒரு சின்னத் துண்டுகூட வேஸ்ட் கிடையாது. தொழிற்சாலைகளிலும் இப்படித்தான்.

கம்ப்யூட்டரையும், 3 D பிரின்டரையும் பயன்படுத்திக் கூட்டல் உற்பத்திமுறையைப் பின்பற்றினால், சேதாரம் குறையும்.      

ஐரோப்பாவில், குறிப்பாக ஜெர்மனியில் 3D பிரின்டர்கள் விற்பனைக்கே வந்துவிட்டன. கூட்டல்முறையைப் பயன்படுத்துவதால், 90 சத விகித மூலப் பொருள் மிச்சமாகிறது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

குறைந்த முதலீடு, மூலப் பொருட்கள் சேமிப்பு, குறைவான தொழிலாளிகள் என கூட்டல் உற்பத்திமுறை அனுகூலங்களை அள்ளித் தருகிறது. இவற்றை உலகம் முழுக்கக் கடைப்பிடிக்கும் மூன்றாம் தொழில் புரட்சி விரைவில் மலரப் போகிறது என்கிறார் ரிஃப்கின்.  

அந்த நாளை வரவேற்கத் தயாராவோம்!

(கற்போம்)

படங்கள்: சாய் தர்மராஜ்