மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஊர் ஜாதகம் - தொழிற் சாலைகள் தேவை!

க.அருண்குமார், படங்கள்: எஸ்.சிவபாலன்.

##~##

'தெற்கு சோழநாடு’ என பெருமையுடன் அழைக்கப்படும் ஊர் பட்டுக்கோட்டை.  தஞ்சை மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க பெரிய நகரங் களின் வரிசையில் பட்டுக்கோட்டையும் ஒன்று. இந்நகரத்தின் தொழில், கல்வி, உள்கட்டமைப்பு எப்படி உள்ளது..? நகர மேம்பாட்டுக்கு இன்னும் என்னென்னவெல்லாம் தேவை என்பதை அறிய பட்டுக்கோட்டையை ஒரு சுற்று சுற்றினோம்.

காதிர் முகைதீன் கல்லூரியைச் சேர்ந்த இணை பேராசிரியர் சந்திரசேகரனை நாம் முதலில் சந்தித்துப் பேசினோம்.

'இங்கு பழைமை வாய்ந்த கலைக் கல்லூரி ஒன்றும், புதிதாக ஓர் ஆண்கள் கலைக் கல்லூரியும், பெண்கள் கலைக் கல்லூரி ஒன்றும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஊரைச் சுற்றி நான்கு பாலிடெக்னிக் கல்லூரிகளும், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியும் உள்ளது. மேலும், இருபதுக்கும் மேற்பட்ட தனியார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பகுதியில் மேல்நிலை ஆராய்ச்சிப் படிப்புக்கு ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்தால் மாணவர்கள் பயனடைவார்கள். மேலும், இப்பகுதியில் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக ஒரு ஐ.ஏ.எஸ். அகாடமியைத் தொடங்கவேண்டும். காரணம், வருடந்தோறும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கிருந்து ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வருகின்றனர்'' என்றார்.

கோல்டு ப்ளஸ் அதிபரும், பட்டுக்கோட்டை சில்க் சிட்டி அரிமா சங்கத் தலைவருமான இராஜகோபால் நம்மிடம் பேசும்போது, 'பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நெல் உற்பத்திதான் பிரசித்தமானது. சமீபகாலமாக இங்கு விவசாயம் அழிந்துவரக்கூடியச் சூழல் நிலவுகிறது. இதற்கு காரணம், தண்ணீர் பற்றாக்குறையும் பருவநிலை மாற்றங்களுமே. போதுமான அளவுக்கு நீராதாரத்தை அரசாங்கம் ஏற்படுத்தித் தந்தால் மட்டுமே இப்பகுதியின் விவசாயத்தைக் காப்பாற்ற முடியும். நகரின் சுகாதார மேம்பாட்டிற்கு பாதாளச் சாக்கடை திட்டம் அவசியம் தேவை. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை அவசியம். ரிங் ரோடு திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தி முடிக்கவேண்டும். நீண்டநாள் போராட்டத்திற்கு பிறகு, மத்திய ரயில்வே பட்ஜெட் மூலம் பட்டுக்கோட்டை மார்க்கமாகச் செல்லும் ரயில்வே பாதையை அகலப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப் பணியை விரைவில் முடித்தால் நகரின் சுற்றுலா, வணிகம், தொழில் மேலும் வளர்ச்சியடையும்' என்றார்.

ஊர் ஜாதகம் - தொழிற் சாலைகள் தேவை!

பட்டுக்கோட்டை நகரின் தொழில் நிலவரம் பற்றி அறிய மாநில வர்த்தகர் சங்கத் துணைத் தலைவர் இராமானுஜத்திடம் பேசிய போது, 'பட்டுக்கோட்டையில் ஜுவல்லரி, ஜவுளி, மருந்துக் கடைகள் இவையெல்லாம் லாபகரமாகத்தான் இயங்கி வருகின்றன. வேதாரண்யத்தில் இருந்து பட்டுக்கோட்டை வழியே திருச்சி செல்லும் பை-பாஸ் மற்றும் செங்கிப்பட்டியில் இருந்து சேதுபவாசத்திரம் வரை செல்லும் பை-பாஸ் ஆகிய இரண்டு திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்தால் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம்.

மேலும், வங்கிகள் கடனுக்கான உச்சவரம்புத் தொகையை உயர்த்தினால் தொழில் மேம்பாடு இருக்கும். பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகம். இங்கு தென்னை வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. அது சரியான முறையில் செயல்படுவது இல்லை. அங்கு கொப்பரை தேங்காயை மட்டுமே வாங்கிக்கொள்கிறார்கள்; முழுத்தேங்காய்களை வாங்குவது இல்லை, முழுத்தேங்காய்களை வாங்கினால் விவசாயிகள் பலர் பயனடைவார்கள். ஆகவே, அரசு அதற்கான நடவடிக்கையை அவசியம் எடுக்கவேண்டும்.

உணவு பாதுகாப்புச் சட்டத்தின் விதிமுறைகள் மிகக் கடுமையாக உள்ளன. உதாரணமாக, பெரிய அளவில் பிரட் உற்பத்தி செய்து பல மாநிலங்களில் விநியோகம் செய்யும் கம்பெனிகளும் உள்ளன; சிறிய அளவில் பிரட் உற்பத்தி செய்து அந்த வட்டாரத்தில் மட்டுமே விநியோகம் செய்யும் கம்பெனிகளும் உள்ளன. பெரிய அளவில் பிரட் உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்கு வகுக்கும் அதே விதிமுறைகளை சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகளுக்கும் விதிப்பதால் அவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் நிலை நிலவுகிறது.

ஊர் ஜாதகம் - தொழிற் சாலைகள் தேவை!

பட்டுக்கோட்டை பகுதி விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளது புது ஆற்று பாசனமே. காவிரியில் அதிகமாக நீர்வரத்து ஏற்பட்டு உபரியாக நீர்வரத்து இருந்தாலே புது ஆற்றில் நீர்வரத்து இருக்கும். இப்போது அது சாத்தியமே இல்லாதச் சூழல் நிலவுகிறது. ஆகவே எள்ளு, கடலை போன்ற தண்ணீர் குறைவாகச் செலவாகும் பயிர்களை பயிரிட தொடங்கலாம். மேலும், பட்டுக்கோட்டையைச் சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் இருந்து மீன் மற்றும் கருவாடு வரத்து உள்ளது. முறையான குளிர்பதனக் கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் இப்பகுதி மக்கள் பயனடைவார்கள்' என்றார்.

'பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள வேதாரண்யம் முதல் தொண்டி வரை பாக்ஜலசந்தி உள்ளது. இங்கு கடலின் ஆழம் குறைவாக இருக்கும். காற்றும் நன்றாக வீசும். இங்கு காற்றாலைகள் அமைத்தால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு அதில் இருந்து கிடைக்கும் மின்சாரம் பயனுள்ளதாக அமையும்.

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் ஏரி மற்றும் நகரின் மையப் பகுதியில் உள்ள காசங்குளம் ஏரி ஆகிய ஏரிகளை தூர்வாரி அதில் படகு சவாரி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்தால் சுற்றுலா மேம்படும். பட்டுக்கோட்டைக்கு அருகே சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள புதுக்கோட்டை செல்லிக்குறிச்சி ஏரியை ஆழப்படுத்தினால் அது  பட்டுக்கோட்டை பகுதி விவசாயத்திற்கு மிகுந்த பயன்தரக்கூடியதாக இருக்கும்.

ஊர் ஜாதகம் - தொழிற் சாலைகள் தேவை!

மேலும், அதை ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாகவும் மாற்றலாம். பட்டுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மனோரா. அது வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். சமீபகாலமாக மிகவும் சிதிலமடைந்துள்ளது. அதை முறையாகப் பராமரித்தால் பட்டுக்கோட்டையில் சுற்றுலா வருபவர்களின் வளர்ச்சி பெருகும்.

பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள கடற்கரை பகுதியில் அலையாத்திக் காடுகள் உள்ளன. இந்த காடுகளால்தான் 2004-ம் ஆண்டு சுனாமி பாதிப்பில் இருந்து அப்பகுதிகள் தப்பித்தன. தற்போது அந்த மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. 80 சதவிகிதம் கார்பன் அந்த மரங்களில் உள்ளதால், அந்த மரங்களை அழித்து பலர் விறகுக்குப் பயன்படுத்துகிறார்கள். அரசு உடனடியாக அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடற்கரை பகுதிகளில் மரங்களை வளர்க்க வேண்டும்' என்றார் சன் சோலார் நிறுவனத்தைச் சார்ந்த பழனிக்குமார்.  

நகரப் பொறியாளர் சங்க கௌரவத் தலைவர் செந்தில் குமாரிடம் பேசியபோது, 'பட்டுக்கோட்டை நகரானது திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் கிடையாது. சுற்றியுள்ள 146 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் இங்கு வந்து குடியேறியதால் உருவானதே. இங்கு குறைவான பரப்பளவில் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். சென்ற ஐந்து வருடங்களில் இருந்துதான் பட்டுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள் விரிவடைந்து வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளன. பட்டுக்கோட்டையைச் சுற்றி மூன்று கிலோ மீட்டர் வரை எந்த பக்கம் சென்றாலும் ஒரு காட்டாறு குறுக்கிடும்; அந்தக் காட்டாற்றில் தடுப்பணை கிடையாது. அதனால், ஆற்று மணல் கடலை நோக்கி அரித்துச் செல்லப்படுகிறது. இதைத் தடுக்க அந்தக் காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை அமைப்பது அவசியம். மேலும், புறநகரில் பேருந்து நிலையத்தை அமைத்தால் நகர  நெரிசல் குறைய வாய்ப்புள்ளது' என்றார்.  

நகரின் முக்கிய பிரமுகர்கள் பலரிடம் பேசியபோது ''பட்டுக்கோட்டையைச் சுற்றி சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. ஆகவே, தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் சோப்பு, தேங்காய் எண்ணெய் முதலான தொழிற்சாலைகளை பட்டுக்கோட்டையிலேயே தொடங்கினால் விவசாயிகள் பயனடைவதோடு வேலை வாய்ப்பும் பெருகும்'' என்கிறார்கள்.

மத்திய பல்கலைக்கழகம் வேண்டும்; உள்கட்டமைப்பு வசதிகளை மேப்படுத்த வேண்டும்; ரிங் ரோடு திட்டம் நிறைவேற்றப் படவேண்டும்; ரயில் பாதையை அகலப்படுத்தும் பணி விரைவாக முடிக்கப்பட வேண்டும் என நகரின் பல தேவைகள் நிறைவேற்றப் பட்டால் பல துறைகளிலும் பட்டுக்கோட்டை பளிச்சிடும்.