மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப்

ஆஃபர் லெட்டர் - இனியாவது அவசியம் படியுங்கள் ! செ.கார்த்திகேயன், படம்: பா.கார்த்திக்.

##~##

இன்றைக்கு பல நிறுவனங்கள், ஊழியர்களை வேலைக்குச் சேர்க்கும் முன்பு ஆஃபர் லெட்டர் தருகின்றன. ஆஃபர் லெட்டர் என்றால் என்ன? அதில் என்னவெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும்? அதில் நாம் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன? என்பது குறித்து சொல்கிறார் ''காம்ஃபை சொல்யூஷன்’ மனிதவள ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநர் ஏ.கே.சுகுமாரன்.

''இன்றையச் சூழலில் வேலை கிடைப்பது கடினமான விஷயமாக இருப்பதால், ஏதாவது ஒரு நிறுவனத்திடம் இருந்து ஆஃபர் லெட்டர் கிடைத்ததும் கொஞ்சமும் யோசிக்காமல் உடனே அதில் கையெழுத்து போட்டுவிடுகிறார்கள் பல இளைஞர்கள். இதனால் அவர்களின் எதிர்காலமே பாழாகிறது.

ஒரு நிறுவனம் நான்கு வகையான கடிதங்களைக் கையாளலாம். 1. ஆஃபர் லெட்டர், 2. அப்பாயின்மென்ட் லெட்டர், 3. கன்ஃபர்மேஷன் லெட்டர், 4. வொர்க் அஸைன்மென்ட் லெட்டர். ஒவ்வொரு கட்டத்திலும் தரப்படும் இக்கடிதங்கள் அத்தனையும் ஆஃபர் லெட்டர்களாகவே கருதப்படுகின்றன.

ஆஃபர் லெட்டர்!

நாணயம் ஜாப்

மேலே சொன்ன நான்கு வகையான கடிதங்களில் ஆஃபர் லெட்டர் என்பது ஒருவர் வேலையில் சேருவதற்காகத் தரப்படும் கடிதம் மட்டுமல்ல, அவருடைய முழு ஜாப் கேரியரையும் தீர்மானிக்கக்கூடியது. அந்த லெட்டரை இ மெயில் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அல்லது அஞ்சல் மற்றும் கூரியர் தகவல் பரிமாற்ற வசதிகள் மூலமாகவோ பெற்றவுடன், முதல் காரியமாக அதை ஒன்றுக்கு பலமுறை பொறுமையாகப் படித்துப்பார்த்து முழுமையாகப் புரிந்துகொள்வது அவசியம்.

இதில் பதவி பற்றிய விவரங்கள், வேலையில் சேரும் தேதி, என்ன துறையில் வேலை ஒதுக்கப்பட்டிருக்கிறது, சம்பள விவரம் மற்றும் வேலை செய்யும் நேரம் போன்ற அத்தனை விவரங்களும் தரப்பட்டிருக்கும். இந்த விவரங்கள் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும்.

அப்பாயின்மென்ட் லெட்டர்!

ஆஃபர் லெட்டரில் உள்ள விவரங்களையும் உள்ளடக்கியதாக இந்த அப்பாயின்மென்ட் லெட்டர் இருக்கும். அதையும்விட நிறுவனம் சார்ந்த விதிமுறைகள் இதில் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இதில் பாண்டு குறித்த விவரங்கள், நோட்டீஸ் பீரியட் கால அளவு, நிறுவனத்தின் விஷயங்களை ரகசியமாகக் கையாள்வது தொடர்பான உடன்படிக்கை போன்ற விதிமுறைகள் இடம் பெற்றிருக்கும். தவிர, ஒரு நிறுவனம் ஊழியர் களுக்குத் தரும் உபகரணங்களை எப்படி கையாளவேண்டும் என்பது மாதிரியான விதிமுறைகளைச் சொல்லியிருப்பார்கள். இந்த விவரங்களை மிகக் கவனமாகப் படித்த பின்னரே வேலை ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்திட வேண்டும்.

கன்ஃபர்மேஷன் லெட்டர்!

நாணயம் ஜாப்

ஊழியர்கள் வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து அவர்களின் வேலை திறமையை வைத்து நிறுவனத்தின் நிரந்தர ஊழியர் ஆக்குவதற்காகத் தரப்படும் கடிதம். இதில், ஊழியர் நிரந்தரமாக்கப்பட்டதற்கு பிறகு கிடைக்கும் அலுவலக சலுகை விவரங்கள் (போனஸ், அலவன்ஸஸ் போன்றவை) தரப்பட்டிருக்கும். இறுதியாக, அனைத்தும் உறுதி செய்யப்பட்டபிறகு நிறுவனம் ஊழியர்களுக்குத் தரும் ஒருவகையான ஆஃபர் லெட்டர்தான் இந்த கன்ஃபர்மேஷன் லெட்டர்.

வொர்க் அஸைன்மென்ட் லெட்டர்!

நிறுவனத்தின் நேரடி உறுப்பினர் அல்லாத பிற நிறுவனத்தில் இருந்து கான்ட்ராக்ட் முறையில் வேலை செய்ய வருபவர்களுக்குத் தரப்படும் ஆஃபர் லெட்டர். இதிலும் வேலைக்குத் தகுந்தாற்போல பல விதிமுறைகளைக் குறிப்பிட்டிருப்பார்கள். அந்த விதிமுறைகளையும் நன்குபடித்து புரிந்தபின்னர் ஒப்பந்தத்திற்கு உடன்படுவது நல்லது.

பொதுவாக, ஒருவருக்கு ஆஃபர் லெட்டர் கைக்குக் கிடைத்ததும் அந்த நிறுவனத்தின் ஹெச்.ஆர். பிரிவிற்கு மறுகடிதமோ அல்லது மெயிலோ அனுப்பி தாங்கள் பணிக்கு வந்து சேர்ந்துகொள்வதற்கான உறுதியை உடனே தெரியப்படுத்தவேண்டும்'' என்று சொல்லி முடித்தார்.

இனியாவது அவசரப்படாமல் ஆஃபர் லெட்டரை கையாள்வோமே!