மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஊர் ஜாதகம்

ரயில் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் ! செய்தி மற்றும் படங்கள்: பா.ஜெயவேல்

##~##

காஞ்சிபுரம் என்றாலே பட்டென நம் நினைவிற்கு வருவது பட்டுப் புடவை. உலக அளவில் வரவேற்பு பெற்றவை என்பதால் 'பட்டு நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதுதவிர, கோவில் நகரமாகவும் விளங்குவதால் உலகம் முழுவதிலுமிருந்து ஆன்மிக அன்பர்கள் காஞ்சிபுரத்திற்குப் படையெடுக்கின்றனர். மேலும், சென்னையை ஒட்டி வளர்ந்துவரும் நகரங்களில் காஞ்சிபுரம் முக்கிய இடத்தில் இருப்பதும், இந்த நகரத்துக்கு கூடுதல் சிறப்பு.

சென்னை வளரவளர காஞ்சிபுரம் நகரத்தின் வளர்ச்சியும், விரிவாக்கமும் மேலும் பெருத்துக்கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை. மேலும், சென்னையைச் சார்ந்து இருந்த வேலைவாய்ப்புகள் தற்போது காஞ்சிபுரத்திற்கு அருகிலேயே கிடைத்துவருவதால் மக்கள் நெருக்கமும் அதிகரித்து வருகிறது. ஆனால், தினமும் ஒரு லட்சம் பேர்வரை வந்துசெல்லும் இந்த நகரத்தின் மையமான பேருந்து நிலையம் சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பது, இங்கு வந்து இறங்கும் மக்களுக்கு காஞ்சிபுரத்தின் இன்னொரு முகத்தைக் காட்டுவதாக உள்ளது.

காஞ்சிபுரத்தின் மக்கள் நெருக்கடி அதிகரித்து வருவது குறித்து செங்கல்பட்டு ரயில்வேநிலைய மேலாளர் மணிவண்ணனிடம் பேசினோம். 'தினமும் பல ஆயிரம் பேர் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்குச் சென்றுவருகின்றனர். காலை, மாலை வேளைகளில் ரயில் நிலையம் நிரம்பி வழிகின்றது. காஞ்சிபுரம் மக்களின் தேவை கருதி கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து நிர்வாகத்திடம் பேசிவருகிறோம். ரயில் போக்குவரத்தை அதிகரிப்பதன் மூலமே இந்த நகரத்தின் வளர்ச்சி அடுத்த கட்டத்துக்குச் செல்லும்'' என்றார்.

வேலைவாய்ப்பைப் பொறுத்த வரை ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டைகள் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார மக்களின் வேலைவாய்ப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதுதவிர, பட்டுநெசவு, சாயத் தொழில் போன்றவற்றிலும் மக்களுக்கான வேலைவாய்ப்புகள் உள்ளன. இதுதொடர்பாக காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ராஜேஷைச் சந்தித்தோம்.

ஊர் ஜாதகம்

''காஞ்சிபுரம் பட்டு உலக அளவில் பெயர் பெற்றிருந்தாலும், பட்டுநெசவுக்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில், உலகத்தரத்தில் மேம்படுத்தும் நோக்கோடு 75 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பட்டுப் பூங்கா காஞ்சிபுரத்தின் பட்டு நெசவில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும் என்று சொல்லலாம். மேலும், நவீன உபகரணங்களுடன் கூடிய தறிக்கூடங்கள், பட்டு கைத்தறி நெசவாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றார் நம்பிக்கையாக.

பட்டு நெசவில் ஈடுபட்டுவரும் பன்னீர்செல்வம், ''தனியார் பட்டுச் சேலை விற்பனைக் கடைகள் அதிக அளவில் காஞ்சிபுரத்தில் வந்துவிட்டது. காஞ்சிபுரம் வந்தால் சேலை வாங்கவேண்டும் என்பவர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்கப்படும் ஒரிஜினல் காஞ்சி பட்டு விற்பனை நிலையங்களில் வாங்குவது நல்லது'' என்றார்.

ஆனால், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் துறையில் வேகமாக வளர்ந்துவரும் நகரத்தில் தரமான கல்வி நிலையங்கள் பெருமளவு இல்லையென்பதை மக்கள் ஒரு குறையாகத்தான் கருதுகின்றனர். காஞ்சிபுரம் நகராட்சி வளர்ச்சி குறித்து பெருநகராட்சி ஆணையர் விமலாவிடம் பேசினோம். 'தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கிய ஆன்மிக நகரம் என்பதால் நகராட்சி கூடுதல் கவனம் செலுத்துகிறது. மேலும், காஞ்சிபுரத்தின் முக்கிய தேவையான புதிய பேருந்து நிலைய திட்டம் அரசின் கைவசம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இடம் பார்த்துவருகிறோம். விரைவில் அந்தத் திட்டமும் நிறைவேற்றப்பட்டால் போக்குவரத்து நெரிசலும் மற்றும் மக்கள் நெருக்கடியும் குறையும்.

ஊர் ஜாதகம்

நகர வளர்ச்சிக்கு ஏற்ப நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்படும் பகுதிகளுக்குத் தேவையான சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் இணைப்பு போன்றவை தடையில்லாமல் செய்து தருகிறோம். இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான குடியிருப்புகளை காஞ்சிபுரத்தில் அமைத்துக் கொடுக்கின்றன. இது நகர வளர்ச்சிக்கு சாதகமான விஷயம். மேலும், சென்னையின் துணை நகரமாக காஞ்சிபுரம் வளர்ந்து வருவதால் இதற்கேற்ப எங்களது உட்கட்டமைப்பு வேலைகளையும் விரைவுப்படுத்துகிறோம்'' என்று நம்பிக்கையூட்டினார்.

ஊர் ஜாதகம்

காஞ்புரம் நகரத்தின் மற்றொரு முக்கிய தேவையாக இருப்பது தொழிற்பேட்டையின் வளர்ச்சிதான். இதை மேம்படுத்துவதன் மூலம் புதிய தொழில் நிறுவனங்களை நகரத்தை நோக்கி இழுக்கலாம் என்கின்றனர் நகரவாசிகள்.

காஞ்சனா இன்ஜினீயரிங் உரிமையாளர் ராஜா, '1967-ல் நான்கு தொழில் நிறுவனங்களோடு தொடங்கப் பட்டது இந்த தொழிற்பேட்டை. பிறகு சிட்கோ வசம் வந்தது. ஆனால், தொழிற்சாலைக்கு சிறிய பொருள் தேவையென்றாலும் சென்னையை நம்பியிருக்க வேண்டியிருப்பதால் செலவு, உற்பத்தி நிறுத்தம், கால விரையம் என பல்வேறு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதற்கான வசதிகள் இங்கு இல்லை. அம்பத்தூர் தொழிற்பேட்டை போன்று அனைத்து வசதிகளும் அளித்தால் பல தொழில் நிறுவனங்களும் இங்கு தொழில் தொடங்க வருவார்கள்'' என்று சொன்னார்.

''மேலும், அருகிலேயே ஸ்ரீபெரும்புதூர் சிப்காட், ஒரகடம் சிப்காட், செய்யார் சிப்காட் என அனைத்து வசதிகளும் கொண்ட தொழிற்பேட்டைகளுக்கு பேருந்துகள் மூலம் தினசரி சுமார் 20,000 பேராவது வேலைக்குச் சென்று வருகின்றனர். அதேபோன்று

காஞ்சிபுரம் தொழிற்பேட்டையிலும் அதிக கவனம் செலுத்தினால், இந்நகரம் மேலும் வளர்ச்சி அடையும்'' என்று குறிப்பிட்டார்.

ஊர் ஜாதகம்

''காஞ்சிபுரத்தின் வளர்ச்சியில் மேலும் முக்கிய பங்கு வகிப்பது விவசாயம் என்று சொல்லலாம். ஏற்கெனவே ஏரிகள் நிறைந்த பகுதி என்பதால் விவசாய வளர்ச்சியும் நன்றாக உள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்துதான் சென்னை நகரத்தின் காய்கறி தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன'' என்கிறார் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீதாராமன்.

''காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதி. சமீப காலங்களில் பல்வேறு காரணங்களால் விவசாயப் பரப்பு குறைந்து வருகிறது. என்றாலும், நகர வருமானத்தில் 36 சதவிகிதம் விவசாய உற்பத்தியாக இருக்கிறது.  குறிப்பாக, நெல், மணிலா மற்றும் எள், கரும்பு, இதர பயறு வகைகள் போன்றவை பயிரிடப்படுகின்றன. எனவே, விவசாய உற்பத்தியும் நகர வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றுகிறது என்று சொன்னால் மிகையில்லை'' என்றார்.

சென்னை நகரம் பக்கத்திலிருக்க, பல பன்னாட்டு நிறுவனங்கள் சுற்றியிருக்க தேசிய நெடுஞ்சாலையின் அருகில் இருக்கும் காஞ்சிபுரத்தின் வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகளில் மேலும் பன்மடங்காக இருக்கும்  என்கிறது புள்ளிவிவரங்கள்.

அதற்கேற்ப புதிய பேருந்து நிலையம், கூடுதல் ரயில் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும், உள்ளூர் தொழிலை ஊக்குவிப்பதுபோல பட்டு நெசவில் புதிய முறைகளும், தொழிற்பேட்டையும் கவனம் பெற்றுவிட்டால் காஞ்சிபுரம், தொழில் நகரமாக ஜொலிக்கும்!