எம்.பி.ஏ. படிப்பு ஆரம்பம்!
##~## |
வாரன் பஃபெட், பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, லட்சுமி மிட்டல், நாராயண மூர்த்தி போன்ற தொழிலதிபர்கள் இன்று தமிழ்நாட்டின் சிறிய கிராம மக்களால்கூட அறியப்படும், மதிக்கப்படும் பிரபல பிஸினஸ்மேன்கள்.
இந்த சமூக கௌரவம் மிக சமீபத்திய நிகழ்வு; 1980-களுக்குப் பிறகு வந்த மாற்றம். என் நண்பர் ஆடிட்டர் வாசு இதை அழகாகச் சொல்லுவார்.
'எனக்குச் சொந்த ஊர் நாகர்கோவில். எங்கள் வீட்டில் தாத்தா, அப்பா, அண்ணன் எல்லோருமே அரசாங்க ஊழியர்கள். நான் 1969-ல் பி.இ. படித்து முடித்தேன். மின்வாரியத்தில் ஜூனியர்
இன்ஜினீயர் வேலை. ஆனால், பிறரிடம் கைகட்டி நிற்பது எனக்குப் பிடிக்காது. சொந்தமாக பிஸினஸ் தொடங்க நினைத்தேன். வீட்டில் ஒரே எதிர்ப்பு. ஊரிலும் எல்லோரும் என்னை அதிசயப் பிறவியாகப் பார்த்தார்கள். கவர்ன்மென்ட் வேலையைவிட்டு, பிஸினஸ் நடத்துவது அவர்களுக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது.'
1969-ல் மட்டுமல்ல, ரோம், கிரேக்கம் போன்ற பண்டைய கி.மு. கால நாகரிகங்களிருந்தே, பிஸினஸ்மேன்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகத் தான் நடத்தப்பட்டார்கள். ஆனால், சமூக ஏற்ற இறக்கங்களைச் சமதளமாக்கும் ஒரே ஒரு சக்தி உலகில் உண்டு. அந்த சக்தி, பணம்!
பதினேழாம் நூற்றாண்டில் வியாபாரிகளிடம் செல்வம் சேரத் தொடங்கியது. வியாபாரம் என்றால் என்ன என்று அறிந்துகொள்ளும் ஆசை மக்களிடையே வந்தது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, 1759-ல், வாணிபம் (Commerce)தொடர்பான பாடங்களைக் கற்பிக்கும், The Aula do Comercio என்னும் கல்வி நிறுவனம், அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. பிஸினஸ் தொடர்பான விஷயங்களைக் கற்றுத் தர, தொடங்கப்பட்ட உலகத்தின் முதல் கல்விச்சாலை இதுதான்.

இந்தப் படிப்பு எந்த நாட்டில் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? தொழிற்சாலை கள் நிறைந்திருந்த இங்கிலாந்திலோ அல்லது தொழில்கள் வளர்ந்து கொண்டிருந்த அமெரிக்காவிலோ என்றுதானே? இல்லை, இல்லை. இந்த காமர்ஸ் படிப்பு போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரத்தில்தான் தொடங்கியது. ஏன்? யாருக்குமே இதன் காரணம் தெரியவில்லை.
லிஸ்பனில் தொடங்கியது வாணிபம் தொடர்பான படிப்பு. பொருளாதாரம், உற்பத்தி, விலை நிர்ணயம், விநியோகம் ஆகிய விஷயங்கள் மட்டுமே பாடத்திட்டத்தில் இருந்தன; மேனேஜ்மென்ட் பாடங்கள் எதுவும் இருக்கவில்லை.

முதன்முதலில், காமர்ஸ் படிப்பில் மேனேஜ்மென்ட் கற்றுத்தரத் தொடங்கியவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். 1819-ல் பாரிஸ் நகரத்தில் தொடங்கப்பட்ட The Ecole Superieure de Commerce of Paris தான் இந்த முயற்சி. இந்தக் கல்விச்சாலை இன்று ESCP-EAP European School of Management என்று அழைக்கப்படுகிறது.
நாம் இதுவரை பார்த்த மேனேஜ்மென்ட் கொள்கைகளை மனதுக்குள் கொண்டுவாருங்கள். ஒன்றிரண்டு கொள்கைகளைத் தவிர, ஏறக்குறைய எல்லா சித்தாந்தங்களையும் உருவாக்கியவர்கள் அமெரிக்கர்களே. ஆனால், ஆச்சரியமாக, இவற்றை பாடங்கள் ஆக்கவேண்டும், மேனேஜ்மென்ட் அறிவைப் பரவலாக்கவேண்டும் என்னும் உணர்வு அமெரிக்காவில் வந்தது, சுமார் 62 ஆண்டுகளுக்குப் பிறகு, 1891-ல்தான்!
1891-ல், அமெரிக்க, பென்சில்வேனியா பல்கலைக்கழகம், தங்கள் வளாகத்தில் வார்ட்டன் பிஸினஸ் ஸ்கூல் (Wharton Business School) என தனிப் பிரிவைத் தொடங்கியது. மேனேஜ்மென்ட் பாடங்கள் கற்றுக் கொடுப்பது இந்த ஸ்கூலின் குறிக்கோள். ஆனால், இந்தப் படிப்பு மாஸ்டர் டிகிரி படிப்பு அல்ல, இளநிலை படிப்புதான்.
மேனேஜ்மென்டில் மாஸ்டர் டிகிரி படிப்பு முதன்முதலாக, 1900-ல், அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் (New Hampshire) மாகாணத்தில், ஹானோவர் (Hanover)நகரத்தில் இருக்கும் டார்ட்மவுத் கல்லூரியில் (Dartmouth College), டக் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் (Tuck School of Business) என்னும் பெயரில் தொடங்கப் பட்டது.
எம்.பி.ஏ. என்னும் பெயரில் முதுநிலை பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பை முதலில் தொடங்கியது அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம். ஆண்டு 1910. முதலில் தொடங்கிய பெருமை மட்டுமல்ல, 102 ஆண்டுகளுக்குப் பிறகும், ஹார்வர்டு முன்னணியில்தான் இருக்கிறது.

இன்று, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், சிலி, கனடா, சீனா, கோஸ்டாரிகா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், இந்தோனேஷியா, இத்தாலி, ஜோர்டான், ஜப்பான், லித்துவேனியா, லக்ஸம்பர்க், மெக்சிகோ, மலேசியா, மொனாக்கோ, மொராக்கோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, ரஷ்யா, ஸ்பெயின், ஸ்காட்லாந்து, சுவிட்சர்லாந்து, இலங்கை, தான்சானியா, தாய்லாந்து, உக்ரைன், யுனைடெட் அரபு எமிரேட்ஸ் என அத்தனை நாடுகளிலும் எம்.பி.ஏ. படிப்பு இருக்கிறது. இந்தப் பட்டியலில் நம் இந்தியாவின் பெயர் இல்லையே என்று நினைத்துவிடாதீர்கள். நம் நாட்டில்தான் அது லட்சியப் படிப்பாச்சே!
நாட்டுக்கு நாடு, கல்லூரிக்குக் கல்லூரி, எம்.பி.ஏ. படிப்பின் பெயர் மாறுகிறது. MBA (Master of Business Administration), MBM (Master of Business Management), MM (Master of Management), PGDM (Post Graduate Diploma in Management), PGDBM (Post Graduate Diploma in Business Management ), PGP (Post Graduate Program in Management), PGBP (Post Graduate Program in Business Management)என்று பலவாறாக அழைக்கப் படுகிறது. ஆனால், அடிப்படையில், எல்லாமே பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷனில் முதுநிலை படிப்புகள்தாம்.

நம்மூரில் பெரும்பாலோர் எம்.பி.ஏ. என்கிற பெயரைத்தான் பயன்படுத்துகிறார்கள். பொதுமக்களும் அப்படித்தான். நமக்கு எல்லா வனஸ்பதிகளுமே டால்டாதான்; போட்டோகாப்பி எடுப்பது ஜெராக்ஸ்தான். இதே பாணியில் நம் எல்லா பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்புகளையும் எம்.பி.ஏ. என்று பொதுவாகச் சொல்கிறோம்.
Bachelors in Business Administration என்னும் இளநிலை படிப்புக்கு அத்தனை மவுசு இல்லை. BBA படித்தவர்களுக்கு MBA அட்மிஷனில் எந்த முன்னுரிமையும் இல்லை என்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இதேபோல், DBA என்னும் Doctor of Business Administration படிப்பையும், பேராசிரியர்களாக விரும்புபவர்கள் மட்டுமே மேற்கொள்கிறார்கள். கார்ப்பரேட் வேலைகளுக்கும் DBA படிப்பதால், அதிகப் பயன் இல்லை.
எம்.பி.ஏ. படிப்புக்கான உலகின் டாப் ஸ்கூல்கள் எவை என்று ஒவ்வொரு வருடமும் பலர் கருத்துக் கணிப்புகள் செய்கிறார்கள். இவற்றுள் நான் அதிகமாக மதிப்பது ஃபைனான்ஷியல் டைம்ஸ் என்னும் இங்கிலாந்து நாளிதழின் மதிப்பீட்டை. அவர்களின் கணிப்பின்படி முதலில் இருக்கும்
11 ஸ்கூல்களின் பட்டியல் இதோ:
1. ஸ்டான்ஃபோர்டு கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் (Stanford Graduate School of Business), அமெரிக்கா,
2. ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூல், அமெரிக்கா,

3. வார்ட்டன் ஸ்கூல், அமெரிக்கா,
4. லண்டன் பிஸினஸ் ஸ்கூல், இங்கிலாந்து,
5. கொலம்பியா பிஸினஸ் ஸ்கூல், அமெரிக்கா,
6. INSEAD, Fontainebleau, பிரான்ஸ், INSEAD, சிங்கப்பூர்,
7. ஸ்லோன் பிஸினஸ் ஸ்கூல், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Sloan Business School, Massachusetts Institute of Technology),, அமெரிக்கா,
8. IE பிஸினஸ் ஸ்கூல், மாட்ரிட்(Madrid),ஸ்பெயின்,
9. IESE பிஸினஸ் ஸ்கூல், பார்சிலோனா (Barcelona), ஸ்பெயின்,
10. UST பிஸினஸ் ஸ்கூல், ஹாங்காங்,
11. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், அஹமதாபாத், இந்தியா.
(சாதாரணமாக, டாப் 10-ரேங்கில் இருக்கும் நிறுவனங்களைத்தான் தருவார்கள். நான் இங்கே டாப் 11 கல்லூரிகளைத் தந்ததற்கு இரண்டு முக்கிய காரணம்: ஒன்று, நம் நாட்டு ஐ.ஐ.எம். அஹமதாபாத் 11-ம் இடத்தில் வருவதை மதிக்கும் நாட்டுப்பற்று; இரண்டாவது, அடியேன் எம்.பி.ஏ. படித்த கல்லூரி அது!)
(கற்போம்)
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்