Published:Updated:

ஊர் ஜாதகம் - தேவை அடிப்படைக் கட்டமைப்பு வசதி !

பானுமதி அருணாசலம், அபிநயா, படங்கள் : தே.தீட்ஷித்.

##~##

தொண்டைமான் கோட்டை என அழைக்கப்படும் புதுக்கோட்டை மாவட்டம், திருச்சி மற்றும்

தஞ்சாவூர் பகுதிகளில் இருந்த சில இடங்களைத் தனியாகப் பிரித்து 1974-ம் வருடம் உருவானது. விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட மாவட்டம் என்றாலும், வானம் பார்த்த பூமியாகத்தான் விவசாயம் பார்க்கப்படுகிறது. நெல், நிலக்கடலை, முந்திரிப்பருப்பு, கரும்பு, பூக்கள் உள்ளிட்டவைகள் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் பயிர்களாகத் திகழ்கிறது. என்றாலும், தொழில் வளர்ச்சியில் இந்த ஊர் எப்படி என்பதை அறிய ஒரு ரவுண்டு அடித்தோம்.

இந்த ஊரில் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார் புதுக்கோட்டை சிறு தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரித்விராஜ்.

''விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை அடிப்படையாகக்கொண்ட மாவட்டம். சொல்லிக் கொள்ளும்படி எந்தவித தொழிற்சாலைகளும் இங்கு கிடையாது. சுமார் 39 கி.மீ. வரையிலான கடற்பகுதியைக்கொண்டது. மணமேல்குடி, மீமிசல், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட இடங்களும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மீன்பிடித் தொழில் தான் பிரதானம். கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் கிடைப்பதால் மீன் பதப்படுத்தும் நிறுவனங்கள், கப்பல்கள் தயாரிக்கும் மற்றும் பழுது நீக்கும் நிறுவனங்கள், குளிர்பதனக் கிடங்குகள் உள்ளிட்டவைகள் இங்கு தேவைப்படுகிறது. மேலும், மங்களூர் டைல்ஸ், செராமிக், மொசைக் டைல்ஸ், ஆத்தங்குடி டைல்ஸ், கிரானைட் கட்டிங் மற்றும் பாலிசிங், புளூ மெட்டல் ஜல்லி ஆகியவை சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் கொண்டுவர வேண்டும்.

ஊர் ஜாதகம் - தேவை அடிப்படைக் கட்டமைப்பு வசதி !

சுமார் 14,713 ஹெக்டேர் பரப்பளவில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்படுகிறது. இந்த யூகலிப்டஸ் மரங்களிலிருந்துதான் பேப்பர் தயாரிப்பின் முக்கிய மூலப்பொருளான பல்ப் வுட் கிடைக்கிறது. இதனால் இந்த மாவட்டத்தில் பேப்பர் தயாரிக்கும் நிறுவனம் வந்தால் பலதரப்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்'' என்றார்.

''புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 90,000 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் பயிரிடப்படுகிறது. நெற்பயிரிலிருந்து கிடைக்கும் வைக்கோல் மட்டும் ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் டன் ஆகும். சுமார் 3,500 ஹெக்டேர் பரப்பளவில் வாழை பயிரிடப்படுகிறது. இதில் முக்கியமாக பூவன் மற்றும் ரஸ்தாளி உள்ளிட்ட ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், கொத்தமங்கலம், மழையூர், மறமடக்கி, வெட்டன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் வாழை பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது. இதில் 30 முதல் 40 சதவிகிதம் வரை உள்ளூர் தேவைக்கும், எஞ்சியவை அண்டை மாநிலங்களான கேரளம் மற்றும் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வாழை சார்ந்த தொழிற்சாலைகள் வந்தால் நல்லது'' என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன்.

ஊர் ஜாதகம் - தேவை அடிப்படைக் கட்டமைப்பு வசதி !

அவரே மேலும் கூறுகையில், ''கொத்தமங்கலம் பகுதியில் அதிக அளவில் விளையும் மல்லிகை, ரோஜா பூக்களைக்கொண்டு வாசனைத் திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்தால் இப்பகுதி முன்னேறும்.  அதேபோல், காய்கறிகளும் அதிக அளவில் விளைவதால் குளிர்பதனக் கிடங்கும் தேவைப்படுகிறது. இந்த மாவட்டத்தில் முந்திரி விளைச்சல் அதிகமாக இருப்பதால்,  முந்திரி சம்பந்தப்பட்ட தொழிற்சாலை கொண்டுவந்தால் பலருக்கும் வேலை கிடைக்கும்.

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். இத்திட்டம் செயல்படத் துவங்கினால் மாவட்டத்தில் இருக்கும் சுமார் 5,000 குளங்கள் மற்றும் ஏரிகள் பயனடையும். மேலும், வேளாண் துறையின் பல்வேறு விவசாயப் பண்ணைகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் இருந்தபோதும், விவசாயக் கல்லூரி ஒன்று இல்லாது இருப்பது பெரும் குறை'' என்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் குறித்து ரோட்டரி கிளப் தலைவர் எஸ்.சகாயத்துடன் பேசினோம்.

''புதுக்கோட்டை தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டபோது, அரசு அலுவலகம் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒதுக்கின இடம்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். ஆனால், இப்போது அந்த மொத்த இடத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மட்டும்தான் இருக்கிறது. மத்திய அரசு அலுவலகம் எல்லாம் வெவ்வேறு இடங்களில் வாடகை கட்டடத்தில்தான் இயங்கி வருகின்றன. ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறையவே இடம் இருக்கிறது. அந்த இடத்துக்கு மற்ற அரசு அலுவலகங்களை இடமாற்றம் செய்தால், போக்குவரத்து நெரிசல் குறையும். அரசுப் பணமும் மிச்சமாகும். மக்களுக்கும் அரசு வேலைகள் அனைத்தும் ஒரே இடத்தில் முடியும்'' என்றார்.

ஊர் ஜாதகம் - தேவை அடிப்படைக் கட்டமைப்பு வசதி !

புதுக்கோட்டையின் கல்வி தரம் குறித்து கல்வியாளரும், சாகித்ய அகாடமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினருமான தங்க மூர்த்தியிடம் கேட்டபோது,

''இந்த ஊரில்தான் முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி பிறந்தார். அதனால் இங்கு மருத்துவக் கல்லூரி கொண்டுவரவேண்டும் என்று கேட்டு வருகிறோம். புதுக்கோட்டை பாதி டவுன், பாதி கிராமம் போன்ற  அமைப்பைக்கொண்டது. அதனால், இங்குள்ள மக்களிடம் பெரியளவில் கல்வி பற்றிய விழிப்பு உணர்வு இல்லை. இந்த ஊரில் தரமான கல்வி அமைப்புகளைத் தொடங்கி நடத்தினால் மட்டுமே கல்வியின் தரம் உயரும்'' என்றார்.    

இந்த ஊரில் உள்ள ஒரே பொழுதுபோக்கு இடம் என்றால் அது புதுக்குளம்தான். ஆனால், அது சரியாகப் பராமரிக்கப்படுவது இல்லை. அதை முழுநேரமாகப் பராமரிக்க ஆட்கள் நியமிக்கப்பட வேண்டும் என்கிறார்கள் புதுக்கோட்டைவாசிகள். அதுதவிர, ஊரில் இருக்கும் ஒன்றிரண்டு பூங்காக்களும் உரிய பராமரிப்பு இல்லாததால், பொதுமக்கள் உள்ளே செல்வதற்கு யோசிக்கிறார்கள்.

இந்த ஊரைச் சுற்றிவந்தபோது, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக இருந்தது. நகருக்குள் ஷேர் ஆட்டோ வசதி இருந்தால், இன்னும் விரைவாக ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்றுவர முடியும் என்கிறார்கள் மக்கள்.

ஆக, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை இன்னும் பலமடங்கு உயர்த்தினால்தான் புதுக்கோட்டை நகருக்குள் புதிய கம்பெனிகள், தொழில் நிறுவனங்கள் வரமுடியும் என்கிற நிலை இருக்கிறது. அரசாங்கம் மனது வைத்தால்தான், இந்த நகரம் இனி அடுத்தகட்ட முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும்!