எம்.பி.ஏ. படிப்பு இந்தியாவில் ஆரம்பம்!
##~## |
போர்ச்சுக்கல் நாட்டில் 1759-ல் தொடங்கிய காமர்ஸ் படிப்புதான், பின்னாளில் எம்.பி.ஏ. படிப்பாக வளர வழி வகுத்தது என கடந்த இதழ்களில் பார்த்தோம். இந்தியாவிலும், காமர்ஸ் படிப்புதான் எம்.பி.ஏ-வின் நதிமூலம். இந்த ஆரம்பம், நம் எல்லோருக்கும் பெருமையும், சந்தோஷமும் தரும் சமாசாரம். ஏன் தெரியுமா?
சென்னையின் பச்சையப்பன் கல்லூரியில்தான் 1886-ல் இந்தியா விலேயே முதன்முதலாக காமர்ஸ் படிப்பு தொடங்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
1903. பிரிட்டிஷ் அரசாங்கம், கொல்கத்தாவின் பிரெசிடென்சி கல்லூரியில் காமர்ஸ் தொடர்பான பாடங்களை அறிமுகம் செய்தது. இங்கு கற்றுத்தரப்பட்ட பாடங்கள் - அக்கவுன்டிங், டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட், பிஸினஸ் தகவல் தொடர்பு (Business Communication)பிஸினஸ் கடிதப் போக்குவரத்து (Business Correspondence).
இதே பாதையில், மும்பையில் சைடென்ஹாம் கல்லூரி (Sydenham College)காமர்ஸ் பாடங்களை கற்பிக்கத் தொடங்கியது. ஆனால், முழுநேர காமர்ஸ் கல்லூரி வந்தது டெல்லியில் 1920-ல். இந்தப் பெருமை, காமர்ஸ் காலேஜ் என்று தொடங்கப்பட்டு, இன்று ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸ் என்று அழைக்கப்படும் கல்வி நிறுவனத்துக்குத்தான்.
இவை அத்தனையுமே காமர்ஸ் படிப்புகள். முதன்முதலில் மேனேஜ்மென்ட் படிப்பை 1948-ல் டெல்லியில், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் (Indian Institute of Social Science)தொடங்கியது. கிறிஸ்தவ பாதிரியார் களின் முயற்சியால், 1949-ல் Xavier Labour Relations Institute ஜாம்ஷெட்பூர் நகரத்தில் பிறந்தது. டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் போன்ற டாடா குழும நிறுவனங்கள் ஜாம்ஷெட்பூரில் இருந்தது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். இந்தக் கல்லூரி மேனேஜ்மென்டின் எல்லா அம்சங்களையும் கற்றுத் தரவில்லை; தொழிலாளர் உறவில் மட்டுமே தன் பாடத் திட்டத்தை ஒருமுகப்படுத்தியது.

நம் நாட்டின் முதல் மேனேஜ்மென்ட் கல்வி நிலையம், 1953-ல் கொல்கத்தாவில் வந்த Indian Institute of Social Welfare & Business Management.இந்தக் காலகட்டத்தில், இந்திய அரசியல், பொருளாதாரச் சூழல்களிலும், சிந்தனைகளிலும் மாபெரும் மாற்றங்கள் நடந்தன. சுதந்திர இந்தியா வல்லரசாகவேண்டும் என்கிற ஆசை நேருஜிக்கு இருந்தது. இதன் முதல்படியாக, 1951-ல் நேருஜி முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை அறிவித்தார். இதில், விவசாயத்துக்கு முதலிடம் தரப்பட்டது.
ஆனால், விவசாயம் மட்டுமே இந்தியாவை ஏழ்மையிலிருந்து மீட்கமுடியாது, தொழில் வளர்ச்சி அவசியம் தேவை என்று உலக வரலாறு உணர்த்தியது. எனவே, இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் (1956-1961) கனரகத் தொழில்கள் முக்கியத்துவம் பெற்றன.
கனரகத் தொழில் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? தொழில்களைக் கனரகத் தொழில் (Heavy Industry),, மென்ரகத் தொழில் (Light Industry) என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு ஸ்க்ரூவை லேத் என்னும் இயந்திரத்தில் தயாரிக்கிறார்கள். ஸ்க்ரூவை, லேத்தில் தயாரிப்பது மென்ரகத் தொழில். இந்த லேத் இயந்திரமும் வேறு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட வேண்டுமல்லவா? லேத் தயாரிக்கும் தொழில் கனரகத் தொழில்.

இரும்பு, உருக்குத் தொழில்கள் சுதந்திர இந்திய அரசின் தனிக்கவனம் பெற்றன. பெரும்பாலான இயந்திரங்கள் தயாரிக்கப்படுவது இரும்பு, உருக்கு ஆகியவற்றால்தான். ஆகவே, இரும்பு, உருக்கு தொழிற்சாலைகள் வந்தால், அதிக இயந்திரங்கள் தயாரிக்கப்படும். இதனால் தொழில் வளர்ச்சி பெருகும்.
இந்தச் சிந்தனையின் பலனாக, மூன்று இரும்பு உருக்கு ஆலைகளை அரசாங்கம் நிறுவியது. ஜெர்மனியின் உதவியோடு ரூர்க்கேலா; ரஷ்யா உதவியோடு பிலாய்; இங்கிலாந்தோடு கைகோத்து துர்காப்பூர். இவற்றைத் தொடர்ந்து, ஹெவி இன்ஜினீயரிங் கார்ப்பரேஷன், ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் போன்ற அரசு கனரகத் தொழிற்சாலைகளும் தொடர்ந்தன.
வெளிநாட்டு உதவியோடு இந்தப் பிரமாண்டத் தொழிற்சாலைகளை நிறுவிவிடலாம். ஆனால், இவற்றை தொடர்ந்து நடத்த திறமை வாய்ந்த இன்ஜினீயர்கள் தேவை அல்லவா? இந்தியாவில் தலைசிறந்த இன்ஜினீயர்களை உருவாக்கும் நோக்கத்தில்தான் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Indian Institute of Technology) என்னும் பொறியியல் கல்லூரிகளை நாட்டின் பல்வேறு பாகங்களில் தொடங்க முடிவெடுத்தது அரசாங்கம்.
1951-ல், மேற்கு வங்காள மாநிலம் கரக்பூரில் முதல் ஐ.ஐ.டி. தொடங்கி, அடுத்த பத்தாண்டுகளில் ஐந்து ஐ.ஐ.டி.கள் ஆரம்பமானது. இதன் மூலம் இன்ஜினீயர்களும் தயார். ஆனால், மேனேஜர்களை ரெடி பண்ணவேண்டுமே!

நாம் முன்பு பார்த்ததுபோல், இந்தியாவில் அப்போது பிஸினஸ் தொடர்பாக காமர்ஸ் படிப்பு மட்டுமே இருந்தது. காமர்ஸ் பட்டதாரிகளால் நிர்வாகப் பொறுப்புகளைக் கையாள முடியாது, மேனேஜ்மென்ட் படிப்பு வழங்கும் கல்வி நிலையங்கள் தொடங்கினால்தான், நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும் என்று 1953-ல் ஆல் இந்தியா கவுன்சில் ஆஃப் டெக்னிக்கல் எஜுகேஷன் (All India Council of Technical Education) கருத்து தெரிவித்தது.
இதன்படி, அரசாங்கம், கல்வி அமைச்சகத்தில் Board of Management Studies என்னும் அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பின் வழிகாட்டலில், ஏழு கல்வி நிலையங்களில் பகுதி நேர மேனேஜ்மென்ட் படிப்பு தொடங்கப்பட்டது. இவற்றுள், சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்ட படிப்புக்கு, பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் டிப்ளமோ என அழைக்கப்பட்டது: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு, ஐ.ஐ.டி., கரக்பூர், வி.ஜே.டி.ஐ. (V.J.T.I) மும்பை ஆகிய மூன்று கல்விக்கூடங்களில் தொழில் அமைப்பு (Industrial Organisation) டிப்ளமோ என்கிற பெயரில் தொடங்கப்பட்டது.
இரண்டு வருடங்கள் ஓடின. இந்தப் பகுதி நேரப் படிப்பை எடை போடவும், இந்திய மேனேஜ்மென்ட் படிப்புக்குப் பாதை வகுக்கவும், அன்றைய மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி தலைமையில் அரசாங்கம் 1955-ல் குழு அமைத்தது.
மேனேஜ்மென்ட் படிப்பு பற்றி வழிகாட்ட டி.டி.கே. மிகப் பொருத்தமானவர். ஏன் தெரியுமா? அவர் அன்றைய வர்த்தக அமைச்சர் மட்டுமல்ல, டி.டி.கிருஷ்ணமாச்சாரி அண்ட் கம்பெனி என்னும் நிறுவனத்தைச் சென்னையில் 1928-ல் தொடங்கி, அரசியலில் 1946-ல் நுழைவது வரை 18 வருடங்கள் வெற்றிகரமாக பிஸினஸ் நடத்தியவர்.
உலக மேனேஜ்மென்ட் துறையிலும், எம்.பி.ஏ. படிப்பிலும் முன்னோடிகளாக இருக்கும் அமெரிக்க பிஸினஸ் ஸ்கூல்களோடு கைகோத்து, நாம் பிஸினஸ் ஸ்கூல்களை நிறுவவேண்டும் என்று டி.டி.கே. கமிட்டி பரிந்துரை சொன்னது.

இதற்காக, அரசாங்க குழு அமெரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் செய்தது; பல முன்னணி எம்.பி.ஏ. கல்லூரிகளோடு பேச்சுவார்த்தைகள் நடத்தியது. இதன் நடுவே, அமெரிக்க ஃபோர்டு ஃபவுண்டேஷன் (Ford Foundation) உதவிக்கரம் நீட்டியது. தவிர, ஹார்வர்டு, மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இருக்கும் ஸ்லோன் பிஸினஸ் ஸ்கூல் ஆகிய இரண்டும் இந்தியாவில் எம்.பி.ஏ. படிப்பு தொடங்குவதில் பங்கேற்கச் சம்மதித்தன.
1961-ல் ஸ்லோன் பிஸினஸ் ஸ்கூல் கூட்டுறவோடு, நம் நாட்டின் முதல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கொல்கத்தாவில் பிறந்தது. சில மாதங்கள் கழிந்தன. ஹார்வர்டு கூட்டுறவுடன், இரண்டாம் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரத்தில் தோன்றியது.
52 வருடங்கள் ஓடிவிட்டன. இன்று, கொல்கத்தா, அஹமதாபாத், பெங்களூரு, லக்னோ, கோழிக்கோடு, இந்தோர், ஷில்லாங், ரோட்டக், ராஞ்சி, ரெய்ப்பூர், திருச்சி, உதய்பூர், காசிப்பூர் என 13 இடங்களில் ஐ.ஐ.எம்.கள் இருக்கின்றன.
ஏறத்தாழ எல்லா பல்கலைக்கழகங்களும் எம்.பி.ஏ. படிப்பு வழங்குகின்றன. இவை தவிர, தனியார் கல்லூரிகள். நாடு முழுக்க, ஆல் இந்தியா கவுன்சில் ஆஃப் டெக்னிக்கல் எஜுகேஷன் (All India Council of Technical Education) அங்கீகாரம் பெற்ற மேனேஜ்மென்ட் கல்லூரிகளே நான்காயிரத்துக்கும் அதிகமாக இருக்கின்றன. இவை தவிர, அங்கீகாரம் பெறக் காத்திருக்கும் கல்லூரிகள் சுமார் 500 இருக்கும். ஒவ்வொரு வருடமும் சுமார் 4 லட்சம் எம்.பி.ஏ. பட்டதாரிகளை இந்தக் கல்வி நிலையங்கள் உருவாக்குகின்றன.
(கற்போம்)
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்.
கேளுங்கள் சொல்கிறேன்!?
நான் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். ஃபைனான்ஸைதான் முக்கிய பாடமாக எடுத்து படிக்கப்போகிறேன். என் பேராசிரியர்களும் நண்பர்களும் சி.எஃப்.ஏ., எஃப்.ஆர்.எம்., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.எஸ்.ஏ.பி., சி.ஏ. போன்ற படிப்புகளையும் படிக்கச் சொல்கிறார்கள். இதில் எந்தப் படிப்பை படித்தால் என் எதிர்காலம் இன்னும் சிறப்பாக அமையும்?
- நிவேதா, மின்னஞ்சல் மூலமாக.
''நீங்கள் எம்.பி.ஏ. படிப்பதற்கான நோக்கம், உங்கள் கல்லூரிக்கு வரும் வேலை வாய்ப்பு நிறுவனங்களின் விருப்பம் ஆகியவற்றை தெரிந்துகொண்ட பிறகே உங்கள் கேள்விக்கு சரியான பதிலைச் சொல்ல முடியும். என்றாலும், நீங்கள் நல்ல பி-ஸ்கூலில் படிக்கிறீர்கள் எனில், சி.ஏ. அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ. போன்ற படிப்புகள் உங்களுக்கு இன்னும் வலு சேர்க்கிற மாதிரி அமையுமா என்பது சந்தேகமே. மற்ற படிப்புகளைப் பொறுத்தவரை, எம்.பி.ஏ. படித்து முடித்த பிறகு ஏதாவது ஒன்றை தேர்வு செய்து படியுங்கள்!''