Published:Updated:

ஊர் ஜாதகம் : வளர்ச்சிக்கு ஏங்கும் நகரம் !

பானுமதி அருணாசலம், படங்கள்: சக்தி அருண்.

##~##

சுற்றிலும் மலைகள், மரங்கள் என இயற்கை வளங்கள் சூழ்ந்த ரம்மியமான பிரதேசமாக இருக்கிறது தேனி நகரம். விவசாயம் சார்ந்த இந்த ஊர் மக்கள், உழைப்பிற்கு அதிக முக்கியத்துவம் தருவதால், எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படுகின்றனர். வாசனைப் பயிர்கள், காபி, தேயிலை என பல பொருட்கள் மொத்தமாக விற்பனை ஆவதால், பணப்புழக்கம் இந்த ஊரில் தாராளமாகவே இருக்கிறது.

என்றாலும், இந்த நகரம் பொருளாதாரத்தில் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதை அறிய பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கேட்டோம். நாம் முதலில் சந்தித்தது பேராசிரியர் டாக்டர். ஜோசப் சேவியரை.

''இயற்கை வளமும், மனித வளமும்கொண்ட ஊர் இது. விவசாயம் சார்ந்த தொழில்களை அடிப்படையாகக்கொண்டு இயங்குகிறது. இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தகுந்த கல்வி வளர்ச்சி இல்லை. 1996-ல் மதுரை மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டம் பிரிந்து செயல்பட துவங்கியது. இத்தனை வருடங்களில் கல்வி வளர்ச்சியில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. உதாரணமாக, மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால்கூட மற்ற மாணவர்களுடன் போட்டிபோட முடியவில்லை. தரமான பள்ளி, கல்லூரிகள்தான் இன்றைக்கு தேனி நகரத்துக்கு முதல் தேவை. தேனியில் மருத்துவக் கல்லூரி வந்தபிறகு இங்கு மட்டுமல்லாமல் கேரளாவைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். இயற்கை சூழ்நிலை நன்றாக அமைந் துள்ளதால் இந்த நகரத்தை ஒரு மருத்துவ ஹப்பாக மாற்ற முயற்சி செய்யலாம்'' என்றார்.

ஊர் ஜாதகம் : வளர்ச்சிக்கு ஏங்கும் நகரம் !

நிதி விஷயங்களில் தேனி மக்கள் எப்படி செயல்படுகிறார்கள், பங்கு வர்த்தகங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்களா என ரெலிகேர் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் கிளை மேலாளர் ஆதிச்செல்வத்திடம் கேட்டோம்.

''கூர்மையான அறிவுகொண்ட தேனி மக்கள், முதலீடு, வர்த்தகத்தில் அதிக ஆர்வம்கொண்ட வர்களாக இருக்கிறார்கள். தொலைநோக்கு பார்வையுடன் வர்த்தகம் செய்வதில் கைதேர்ந்த வர்களாக இருக்கிறார்கள். இதற்கு ஒரு சிறந்த உதாரணம், சமீபத்தில் தங்கம் குறிப்பிட்ட விலைக்கு வந்தபோது இதனைத் தாண்டி மேலே போகாது என்று கணித்து, வாங்கிய தங்கத்தை விற்றனர். அவர்கள் கணித்தபடியே தங்கத்தின் விலை அடுத்த சில நாட்களில் கணிசமாக இறங்கியதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். பங்குச் சந்தை, கமாடிட்டி முதலீட்டுக்கு இந்த நகர மக்கள் ஓரளவுக்கு தயாராகி இருக்கின்றனர் என்றாலும், இதுபற்றி இன்னும் பலருக்கு தெரியவில்லை. அவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விழிப்பு உணர்வு கூட்டங்கள் இங்கே அடிக்கடி நடந்தால், பலரும் நிதிச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு உருவாகும்'' என்றார். வீடு, மனை வாங்கி, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதிலும் ஆர்வமாக இருக்கிறார்கள் தேனி மக்கள்.

ஒரு காலத்தில் பருத்தி விளைச்சலில் செழித்து விளங்கியது தேனி மாவட்டம். கடந்த சில ஆண்டு களாக அரசாங்கத்தின் ஊக்குவிப்பு இல்லாமல் பருத்தி உற்பத்தி பெரிதும் பாதிப்படைந்துள்ளது என தேனி மாவட்ட சேம்பர் ஆஃப் காமர்ஸின் செயலாளர் எஸ்.கே. நடேசன் சொன்னார்.

ஊர் ஜாதகம் : வளர்ச்சிக்கு ஏங்கும் நகரம் !

''எங்கள் மாவட்டத்தில் பருத்தி, தென்னை, கறுப்பு திராட்சை, வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாயம் பெருமளவில் செய்யப்படுகிறது. கரும்பு சுமார் 8 லட்சம் டன் அளவிலும், நெல் சுமார் 61,000 டன்னும் பயிரிடப்படுகிறது. போடிநாயக்கனூர் பகுதி ஏலக்காய், காபி, டீ, மிளகு உள்ளிட்டவைகள் விளையும் தட்பவெட்ப சூழ்நிலையைக் கொண்டதாகத் திகழ்கிறது. கடந்த ஆண்டில் மழை இல்லாததால் விவசாயம் கடுமையாகப் பாதிப் படைந்துள்ளது.

பருத்தியைப் பொறுத்தவரை முன்பு பெருமளவில் பயிரிடப் பட்டது. அதனை சார்ந்து 40 ஸ்பின்னிங் மில்கள் வரை இருந்தது. ஆனால், இப்போது 10 ஸ்பின்னிங் மில்கள் மட்டுமே உள்ளது. இந்த மில்களும் ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பருத்தியை இறக்குமதி செய்து வருகின்றன. குஜராத்திலிருந்து ஒரு லோடு (17 டன்) பருத்தியைக் கொண்டுவர 85,000 ரூபாய் வரை செலவாகிறது. இதனைச் சமாளிக்க தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலில் சரக்கை கொண்டுவந்து அங்கிருந்து தேனி கொண்டு வரவேண்டியுள்ளது. ரயில் வசதி இல்லாதது பெரிய கஷ்டமாக இருக்கிறது. பருத்தி உற்பத்தி குறைந்துள்ளதால் சுமார் பத்தாயிரம் பேர்களின் வேலை வாய்ப்பு பாதிப்படைந்துள்ளது. பருத்தியிலிருந்து எண்ணெய் எடுக்கும் சுமார் 16 எண்ணெய் நிறுவனங்கள் இருந்தது. இப்போது அதுவும் செயல்படாமல் நின்றுவிட்டது.  

ஊர் ஜாதகம் : வளர்ச்சிக்கு ஏங்கும் நகரம் !

தேனி மாவட்டத்தில் மக்காச்சோளம் 6,500 ஏக்கர் பரப்பளவிலும், கறுப்பு திராட்சை 5,000 ஏக்கர் பரப்பளவிலும், பெரியகுளம் முதல் கம்பம் வரையில் 25,000 ஏக்கர் பரப்பளவில் மாம்பழமும் பயிரிடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழத்தைக் கூழ் செய்து மதிப்புகூட்டு பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்கின்றனர். அதேபோல், தேனியிலும் மாம்பழக் கூழ் செய்யும் நிலையங்கள் கொண்டுவந்தால் இங்கு விளையும் மாம்பழங்கள் வீணாகாது. கறுப்பு திராட்சை அதிகளவில் விளைவதால் அதனை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்தித் தரவேண்டும். மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் வேலைகள் ஆரம்பித்து மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம் முடிவடைய இன்னும் பல வருடங்கள் ஆகும். அதனால், ரயில் சேவையைத் துரிதமாக்கவேண்டும். விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்காமல், அதை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி விற்பதற்கான முயற்சி செய்தால் மட்டுமே இந்த நகரத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும்'' என்றார்.

தேனி, போடிநாயக்கனூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில்தான் ஏலக்காய் அதிகளவில் பயிரிடப்படுகிறது. பருவநிலை மாற்றத்தினால் எளிதில் பாதிப்படையும் சென்சிட்டிவ்-ஆன பயிர் இது என்பதால் இந்தப் பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது. ஏலக்காய் உற்பத்தி குறித்து போடிநாயக்கனூர் ஏலக்காய் விவசாயிகள் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் பசுபதியிடம் பேசினோம்.

''ஏலக்காய் நகரம் என பெருமையாக அழைக்கும் அளவுக்கு போடிநாயக்கனூர் பகுதியில் நிறைய ஏலக்காய் உற்பத்தி ஆகிறது. இங்கு விளையும் ஏலக்காய் உள்நாட்டுத் தேவைக்குப் போக 75 சதவிகிதம் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.  

விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் ஏலக்காயை ஏஜென்ட்கள் குறைந்த விலைக்கு வாங்கி, வடமாநில வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடம் அதிக விலைக்கு விற்றுவிடுகின்றனர். விவசாயிகளுக்கு உண்மையான விலை நிலவரங்கள் தெரியாமல் இருப்பதே இதற்கு காரணம். இங்கு ஸ்பைஸ் போர்டு இருக்கிறது. அரசின் இந்த அமைப்பு உண்மையான விலை நிலவரங்களை ஏலக்காய் விவசாயிகளுக்கு வெளிப்படையாகச் சொல்வது கிடையாது. மும்பை, டெல்லியில் நடக்கும் ஏற்றுமதி கண்காட்சியில் கலந்துகொள்ளும் போதுதான் ஏலக்காய் எந்த விலைக்கு விற்கப்படுகிறது என்று தெரிகிறது.

இதேபோன்ற ஏற்றுமதி கண்காட்சியை தேனி, போடி பகுதிகளில் நடத்தினால் ஏஜென்ட்களுக்குப் பதிலாக, ஏலக்காய் விவசாயிகள் பயன் பெறுவார்கள். தேனி நகரத்தின் வளர்ச்சியும் அதிகரிக்கும்'' என்றார்.

ஆக மொத்தத்தில், பொருளாதார வளர்ச்சிக்கு ஏங்கித் தவிக்கும் இந்த நகரத்துக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை இன்னும் பெருக்கி, விவசாயத்தோடு, புதிய தொழில் களையும் கொண்டுவந்தால்தான்  பெரிய அளவில் வளர்ச்சி காணும் என்பதில் சந்தேகமில்லை.