MBA - மூன்றெழுத்து மந்திரம்
##~## |
இன்றைக்கு நம் நாட்டில் சுமார் 4,500 மேனேஜ்மென்ட் கல்லூரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு கல்லூரியும், எம்.பி.ஏ. படிப்பில் நம்பர் 1-ஆக இருக்க ஆசைப்படுகிறது. புதுமையான பாடங்களை, பயிற்சி முறைகளை அறிமுகம் செய்கிறது. மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்தும் பயிற்சிகளை நடத்துகிறது. ஆனால், 1961-ல் தொடங்கியதிலிருந்து இன்று வரை வெற்றிநடை போட்டு வருகிறது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட், அஹமதாபாத்.
ஐ.ஐ.எம். அஹமதாபாத்தின் வெற்றி ரகசியங்கள் என்று சாதாரணமாகச் சொல்லப்படுபவை இவைதாம்:
Common Admissions Test எனப்படும் நுழைவுத் தேர்வு உலகிலேயே மிகக் கடுமையான எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வாகக் கருதப்படுகிறது. இதனால், மிகத் திறமையான மாணவர்கள் மட்டுமே இங்கே சேருகிறார்கள். 1961 முதல் இன்றுவரை, திறமை இல்லாத ஒரு மாணவர்கூட, சிபாரிசால் அட்மிஷன் பெற்றது கிடையாது.
அற்புதமான பேராசிரியர்கள், இவர்கள் கம்பெனிகளுக்கு மேனேஜ் மென்ட் ஆலோசகர்களாகப் பணியாற்ற இன்ஸ்டிடியூட் ஊக்கமளிக்கிறது. இந்த அனுபவங்களை அவர்கள் மாணவர்களோடு பகிர்ந்துகொள்கிறார்கள். கேஸ் ஸ்டடி படிப்புமுறை யால், நூற்றுக்கணக்கான இந்திய, வெளிநாட்டு நிறுவனங்களின் அனுபவங்களை மாணவர்கள் விவாதிக்கிறார்கள். இதனால் நிஜ பிசினஸ் வாழ்க்கைப் பிரச்னைகளைத் தைரியமாக எதிர்கொள்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும்தாண்டி, சில ரகசியங்கள் இருக்கின்றன. அஹமதாபாத் ஐ.ஐ.எம்-ன் ஆரம்பகால வரலாற்றில் தொடர்பு கொண்டவர்களும், என்னைப் போல் அங்கே படிக்கும் வாய்ப்பு பெற்றவர்களும் அறிந்த அந்த உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அஹமதாபாத் ஐ.ஐ.எம்-ன் ஒரே ஒரு வெற்றி ரகசியத்தைக் கேட்டால், நாங்கள் எல்லோரும், ஒரு காரணத்தைச் சொல்லமாட்டோம், இரண்டு காரணங்களைச் சொல்லுவோம். அந்த இரண்டு காரணங்கள் - இரண்டு மாமனிதர்கள் - முதல் இரண்டு டைரக்டர்கள் - விக்ரம் சாராபாய், ரவி மத்தாய். இவர்களின் பங்களிப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள, ஐ.ஐ.எம். அஹமதாபாத்தின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டுவோமா?
1955-ல், மத்திய அரசு அமைத்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி கமிட்டியின் பரிந்துரைப்படி, ஹார்வர்டு உதவியோடு மும்பையிலும், எம்.ஐ.டி. உதவியுடன் கொல்கத்தாவிலும் ஐ.ஐ.எம்-கள் நிறுவ அரசு முடிவெடுத்தது. முயற்சிகள் தொடங்கின. ஆனால், பிசினஸ் ஸ்கூல் தொடங்க, மஹாராஷ்ட்ர அரசும், மும்பை பல்கலைக்கழகமும் ஏனோ உற்சாகமே காட்டவில்லை. இதை அறிந்தார் விக்ரம் சாராபாய். இவர் பற்றி ஒரு சிறு அறிமுகம்.
அப்போது இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றாக இருந்த, அஹமதாபாத்தைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கிய காலிக்கோ மில்ஸ் உரிமையாளர்களின் குடும்ப வாரிசு விக்ரம், பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்-ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி; சர்.சி.வி.ராமனின் மாணவர். இங்கிலாந்தில் பிஸிக்ஸில் டாக்டர் பட்டம் பெற்றார். இந்தியா திரும்பியவுடன், அஹமதாபாத்தில் பிஸிக்கல் ரிசர்ச் லேபாரட்டரி என்னும் சோதனைச் சாலையைத் தொடங்கினார். இந்திய அட்டாமிக் எனர்ஜி கமிஷனில் பணியாற்றினார். அதன் தலைவரும் ஆனார்.
இன்று நாம் எத்தனையோ ராக்கெட்கள் விடுகிறோமே, அந்த சாதனைக்கு காரணம் விக்ரம்! இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Space Research Organisation)முதல் தலைவர். இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என்று நன்றியோடு இவரை அறிவியல் உலகம் பதிவு

செய்திருக்கிறது. இதனால்தான், ISRO-வின் திருவனந்தபுரம் கிளை விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் (VSSC) என்று அழைக்கப்படுகிறது.
விக்ரம் தொலைநோக்குப் பார்வைகொண்ட பிறவித் தலைவர். ஒரு முடிவெடுத்துவிட்டால், அற்புதமான திறமைசாலிகளை அதில் பங்கெடுக்க வைத்து, அவர்களிடம் அர்ப்பணிப்பை உருவாக்கி, எடுத்த காரியத்தைக் கனகச்சிதமாக முடித்துக்காட்டுபவர்.
இந்திய அரசாங்கமும், குஜராத் அரசாங்கமும், ஐ.ஐ.எம். தொடங்குவதில் கூட்டாளிகளாகச் சேர்ந்தன. கஸ்தூரிபாய் லால்பாய் என்னும் குஜராத்தின் முன்னணி தொழில் அதிபர் கல்லூரிக்குத் தேவையான நிலத்தை இலவசமாக வழங்கினார். ஃபோர்டு ஃபவுண்டேஷன் நிதி உதவி அளிக்க சம்மதித்தது. ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனியின் சேர்மனாக இருந்த பிரகாஷ் தாண்டன் மேனேஜ்மென்ட் உலகின் ஜாம்பவான். விக்ரமின் உந்துதலால், தாண்டன் புதிய கல்லூரியின் சேர்மனாக இருக்க சம்மதித்தார். ஹெச்.ஆர். துறை மேதையான பேராசிரியர் டாக்டர் கமலா சௌத்ரி ஐ.ஐ.எம்-ஐ வழிநடத்தச் சம்மதித்தார்.
விக்ரம் பகுதிநேர கவுரவ இயக்குநரானார். நிலம் ரெடி. ஆனால், அங்கே கட்டடம் வரும் வரை, ஆரம்பப் பணிகளுக்கு அலுவலகம் வேண்டுமே? சாராபாய் தன் குடும்பத்தோடு வசித்த வீட்டின் ஒரு பகுதியைத் தயக்கமே இல்லாமல் அலுவலகத்துக்குக் கொடுத்தார்.
உலக எம்.பி.ஏ. படிப்பின் முன்னோடியான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கூட்டுறவோடுதான் ஐ.ஐ.எம். தொடங்கவேண்டும் என்பதில் விக்ரம் உறுதியாக இருந்தார். இப்போது ஒரு பிரச்னை. பல காரணங்களால், ஃபோர்டு ஃபவுண்டேஷன், இன்னொரு அமெரிக்க எம்.பி.ஏ. கல்லூரியுடன் கைகோக்க வேண்டுமென்று வற்புறுத்தியது. ஹார்வர்டோடு சேர்ந்தால், நிதிஉதவி கிடைக்காது என்னும் மறைமுக பயமுறுத்தல்.

விக்ரம் இந்த மிரட்டல்களுக்குப் பயப்படுபவரில்லை. ஐ.ஐ.எம். சிறந்த தரத்தோடு உருவாக்கப்பட வேண்டுமானால், கூட்டுறவு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தோடு மட்டும்தான் - ''ஃபோர்டு ஃபவுண்டேஷன் நிதி உதவி தராவிட்டால் நாமே சமாளிப்போம்' என்னும் உறுதியோடு 'ஹார்வர்டுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தார். ஹார்வர்டு பல்கலையும் சம்மதித்தது. ஃபோர்டு ஃபவுண்டேஷனும் இறங்கி வந்து, நிதிஉதவி அளித்தது; 1961-ல் ஐ.ஐ.எம். அஹமதாபாத் பிறந்தது.
உண்மையான தலைவர் யார் தெரியுமா? ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்துவது மட்டுமல்ல. தான் இல்லாதபோதும், நிறுவனம் நிலைத்து நிற்கும்படியான அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குபவர். இதையும் விக்ரம் கனகச்சிதமாகச் செய்தார்.
விக்ரம், கல்லூரிக்கான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினார். கணிதம், பொருளாதாரம், அக்கவுன்டிங், மனிதவளம், மார்க்கெட்டிங் போன்ற துறைகளுக்கு ஆறு பேராசிரியர்களைப் பொறுக்கிப் பொறுக்கி எடுத்தார். இவர்கள் கல்லூரிப் பேராசிரியர்களாக இருந்தவர்கள் அல்ல; கார்ப்பரேட் அனுபவம் கொண்டவர்கள். ஐ.ஐ.எம். வித்தியாசம் காட்ட
வேண்டும் என்கிற விக்ரமின் தெளிவான தொலை நோக்குப் பார்வை இது. இந்தப் பேராசிரியர்கள் ஆறு பேரும் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல் நடத்தும் உலக ஆசிரியர்கள் செயல் திட்டத்தில் (International Teachers Programme) பயிற்சி கொடுக்கப்பட்டுப் பட்டை தீட்டப்பட்டார்கள்.

1965. அஹமதாபாத் ஐ.ஐ.எம். தொடங்கி நான்கு வருடங்களாகிவிட்டன. பகுதிநேர டைரக்டராக விக்ரம் பணியாற்றினார். அப்போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு வழி காட்டியதோடு அணுசக்தி கழகத் தலைவராகவும் அவர் இருந்தார். தன் ஐ.ஐ.எம். பொறுப்பிற்கு விக்ரம் இன்னொருவரைத் தேடினார். அவரும், பிறரும் தேர்ந்தெடுத்த மனிதர், ரவி மத்தாய்!
எல்லோருக்கும் ஆச்சரியம். ஏன் தெரியுமா? ஐ.ஐ.எம். பேராசிரியர்கள் பெரும்பாலானோர் மேனேஜ்மென்டில் டாக்டர் பட்டம் வாங்கியவர்கள், உலகப் பெரும் நிறுவனங்களில் வெற்றிக் கொடி கட்டியவர்கள். இவர்களுக்குத் தலைமை தாங்கும் டைரக்டர் டாக்டர் பட்டம் பெற்றவராக, பன்னாடுகளில் கார்ப்பரேட் அனுபவம் பெற்றவராக, வயதில் மூத்தவராக இருக்கவேண்டும். இவற்றில் ஒரு தகுதிகூட ரவி மத்தாயிடம் இல்லை.
அப்போது அவர் வயது 38. படிப்பு? பி.ஏ. ஹானர்ஸ் (அரசியல், பொருளாதாரம், தத்துவம்). மருந்துக்குக்கூட மேனேஜ்மென்ட் கிடையாது.
கார்ப்பரேட் அனுபவம்? ஐந்தே வருடங்கள் ஆசிரியர் அனுபவம்? ஒரே ஒரு வருடம் ஐ.ஐ.எம். கொல்கத்தாவில் மார்க்கெட்டிங் பேராசிரியராக. விக்ரமின் தேர்வு எத்தனை சரியானது என்பதை ரவி நிரூபித்தார். ஐ.ஐ.எம்., கல்வி பயிற்றுவிக்கும் கல்லூரி என்னும் நிலையைத் தாண்டி, மேனேஜர்களை உருவாக்கும் institution. ஒவ்வொரு சிறு அம்சத்தையும் நுணுக்கமாகச் செதுக்கிச் செதுக்கி இதை ரவி சாதித்தார்.
ஆளுமை, பார்வையில் தெளிவு, இலக்கில் ஒருமுகம், தலைமைக் குணங்கள், அதிகாரங்களைத் தன்னிடம் மட்டுமே தேக்கிக்கொள்ளாமல் பிறரிடம் பகிர்ந்துகொண்ட லாவகம், சமுதாயப் பொறுப்புணர்வு ஆகியவை ரவியின் முத்திரைக் குணங்கள்.
ரவியின் ஆளுமைக்கு ஒரு சின்ன உதாரணம். வெற்றிகரமான சி.இ.ஓ.-கள் தாமாகவே பதவி விலகி இளையதலைமுறைக்கு வழிவிட வேண்டும் என்னும் கொள்கைகொண்ட ரவி 1972-ல் தன் பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகியபின் அவர் இன்னொரு புதுமையும் செய்தார். இயக்குநராகப் பதவியேற்ற பேராசிரியர் சாமுவேல் பால் தலைமையின் கீழ் ரவி பேராசிரியராகப் பணியாற்றினார்.
தன்னலமும், பதவி ஆசையும் இல்லாத தலைவர்கள் அர்ப்பணிப்போடு உழைப்பார்கள். சொன்னதைச் செய்து, தாங்கள் தலைமை தாங்கும் நிறுவனங்களுக்கு முன்னுதாரணம் காட்டுவார்கள். அந்த நிறுவனம், அவர்கள் தலைமையில் வானத்தையே வசப்படுத்தும். ஐ.ஐ.எம்-க்கு மட்டுமல்ல, உங்கள் நிறுவனங்களுக்கும், இந்த உண்மைப் பொருந்தும்.
(கற்போம்)