மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப் - ரெஸ்யூமே ரெஃபரன்ஸ்...

செ.கார்த்திகேயன்.

##~##

பெரும்பாலான நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு சேர்பவர்களிடம் ரெஃபரன்ஸ் தொடர்புகள (Reference Contact Information) கேட்டுப் பெறுவது இப்போது வழக்கமான நடைமுறையாக மாறிவிட்டது. எதற்காக இந்த ரெஃபரன்ஸ் தொடர்புகள்? ரெஃபரன்ஸ் தொடர்புகளாக யாரைக் குறிப்பிடலாம்? யாரைக் குறிப்பிடக் கூடாது? என்கிற கேள்வியுடன் மனிதவள மேலாளர் ந.பத்மலட்சுமியிடம் கேட்டோம். அவர் தந்த விவரங்கள் இனி உங்களுக்காக...

ரெஃபரன்ஸ் இரண்டு வகை!

''ஒருவர் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, ரெஸ்யூமேயில் அவர் சொல்லி இருக்கும் தகவல்கள் உண்மையானதா என்று தெரிந்துகொள்ளவும், வேலைக்கு விண்ணப்பித்திருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனம், வேலை திறமைகளைத் தெரிந்துகொள்ளவும், அவரது குணநலன்களை விசாரித்து தெரிந்துகொள்ளவும்தான் நிறுவனங்கள் ரெஃபரன்ஸ் தொடர்புகளை கேட்டுப் பெறுகின்றன. ஒருவர் வேலை தேடும்போது ரெஸ்யூமே எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு முக்கியம் அவர் ரெஸ்யூமேயில் குறிப்பிடும் ரெஃபரன்ஸ் தொடர்புகளும்.  

இதில் இரண்டு வகை ரெஃபரன்ஸ்கள் உண்டு. ஒன்று, ஒருவருடைய தனிப்பட்ட குணாதிசயங்களை பற்றி விசாரிப்பதற்கான ரெஃபரன்ஸ் (Personal reference).. மற்றொன்று, வேலை குறித்த விவரங்களை விசாரிப்பது (Professional reference).. புதிதாக வேலைக்குச் சேர்பவர்கள் முதல் பிரிவையும், ஏற்கெனவே வேலையில் இருந்தவர் கள் இரண்டாம் பிரிவையும் ரெஃபரன்ஸாக தருவது நல்லது'' என்று ஆரம்பித்தவர், யாரை ரெஃபரன்ஸில் குறிப்பிடுவது என்பதைச் சொன்னார்.  

நாணயம் ஜாப் - ரெஸ்யூமே ரெஃபரன்ஸ்...

யாரைக் குறிப்பிடுவது?

''கல்லூரி முடிந்து புதிதாக வேலைக்குச் சேர்பவராக இருந்தால் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், விளையாட்டு ஆசிரியர் போன்றோர்களை ரெஸ்யூமேயில் ரெஃபரன்ஸ் தொடர்புகளில் குறிப்பிடலாம். ஒரு மாணவர் என்.சி.சி. அல்லது

என்.எஸ்.எஸ். போன்ற சிறப்பு பயிற்சி வகுப்புகளில் பங்குகொண்டவராக இருந்தால், அந்த சிறப்பு பயிற்சி வகுப்பு ஆசிரியரையும் ரெஃபரன்ஸ் தொடர்புகளில் குறிப்பிடலாம். படிக்கும் காலத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்திருந்தால் அந்நிறுவனத்தின் உரிமையாளர்களையும் குறிப்பிடலாம்.

நாணயம் ஜாப் - ரெஸ்யூமே ரெஃபரன்ஸ்...

ஏற்கெனவே ஒரு நிறுவனத்தில் வேலை செய்தவராக இருந்தால் அந்நிறுவனத்தின் பாஸ், மேலாளர், உடன் வேலை செய்த பணியாளர்கள், மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்தவராக இருந்தால் வாடிக்கையாளர்களைகூட ரெஃபரன்ஸ் தொடர்புகளில் குறிப்பிடலாம். வேலை செய்த காலத்தில் தொடர்ந்து தொடர்பில் இருந்த வாடிக்கையாளர்களின் பெயர்களை, நம் மீது நல்ல மதிப்புள்ள வாடிக்கையாளர்களின் பெயர்களை மட்டுமே குறிப்பிடுவது நல்லது.

எப்படி தேர்ந்தெடுப்பது?

ரெஃபரன்ஸ் தொடர்புகளில் குறிப்பிடப் படுபவர்கள் ஒரே துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பது அவசியம். அப்போதுதான் அந்த வேலை குறித்த விஷயங்கள் முழுமையாக அவர்களுக்கு தெரிந்திருக்கும். அதற்கேற்றாற்போல அவர்களால் பதில்களையும் சொல்ல முடியும். நமக்குத் தெரிந்தவர் என்பதால் யாரை வேண்டுமானாலும் ரெஃபரன்ஸாகப் போட்டுவிடக் கூடாது. நம்மை தெரிந்தவர்கள், நம்மைப் பற்றி பாசிட்டிவ்-ஆக பதில் தருபவர்களைத்தான் ரெஃபரன்ஸ் தொடர்புகளாக தேர்வு செய்யவேண்டும்.

ஒருவர் வேலைக்காக விண்ணப்பித்து முதல் தேர்வில் தேர்ச்சி அடைந்ததும், அவரைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள அவரது ரெஸ்யூமேயில் தரப்பட்டிருக்கும் ரெஃபரன்ஸ் தகவல்களை பயன்படுத்தி விசாரிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால், ரெஃபரன்ஸ் தொடர்பாளர்களிடம் ரெஸ்யூமே யில் போடுவதற்கு முன்னரே அவர்களின் சம்மதம் பெற்று, குறிப்பிடுவது நல்லது.

நாணயம் ஜாப் - ரெஸ்யூமே ரெஃபரன்ஸ்...

தவிர, அவரிடம் அத்தகவலை தெரியப்படுத்துவதும் அவசியம். எந்நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்கிறோம், என்ன வேலை போன்ற தகவல்களைச் சொல்லி, அந்நிறுவனத்திலிருந்து செல்போன் மூலமாக பேசலாமா அல்லது

இ மெயில் மூலமாக தொடர்புகொள்ளலாமா என்பதையும் கேட்டு நிறுவனத்திடம் தெரியப் படுத்துவது அவசியம். முடிந்தமட்டில் ரெஃபரன்ஸ் தொடர்பாளர்களிடமும் ஒரு ரெஸ்யூமேயைத் தந்துவைப்பது நல்லது.

ஒரு ரெஃபரன்ஸ் தொடர்பை தேர்வு செய்யும் முன் அந்த நபரின் மனதில் நம்மைப் பற்றிய எண்ணம் எப்படி இருக்கிறது என்பதைக் கேட்டு தெரிந்துகொண்ட பின்னர் அவரை ரெஃபரன்ஸ் தொடர்பில் குறிப்பிடலாம்.

ரெஃபரன்ஸ் தொடர்பு விவரம்!

ரெஃபரன்ஸாக தருகிறவர்களின் பெயர், அவரின் பதவி, வேலை பிரிவு, வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர், தொலைபேசி அல்லது அலைபேசி எண், இ மெயில் முகவரி மற்றும் முகவரி என அத்தனையையும் தெளிவாக குறிப்பிடவேண்டும். ரெஸ்யூமே என்பது தனியாகவும், ரெஃபரன்ஸ் லெட்டர் என்பது தனியாகவும் இருப்பது அவசியம்.

ஒரு நிறுவனம் ரெஃபரன்ஸ் லெட்டரை கேட்டால் மட்டுமே தருவது நல்லது. குறைந்த பட்சம் மூன்று ரெஃபரன்ஸ் தொடர்புகளை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். ரெஃபரன்ஸ் தொடர்பாளரை எவ்வளவு நாளாகத் தெரியும், அவருக்கும் உங்களுக்குமான உறவு என்ன என்பது குறித்த விவரங்களும் இடம் பெற்றிக்கவேண்டியது அவசியம்.

பொதுவாக, ரெஃபரன்ஸ் கேட்டால் தரத் தயார் என நிறுவனத்திடம் தரும் ரெஸ்யூமேகளில் குறிப்பிடுவது நல்லது. அதோடு, ரெஃபரன்ஸ் லெட்டரை தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம். பிற்பாடு எழுதித் தருகிறேன்,

இ மெயில் அனுப்புகிறேன் என்று சொல்லி, காலம் கடத்துவது நல்லதல்ல'' என்று முடித்தார் பத்மலட்சுமி.

ரெஃபரன்ஸ்தானே என்று இனி அஜாக்கிரதை யாக இல்லாமல், மேலே சொன்ன விஷயங்களை கருத்தில்கொண்டு செயல்படுவது அவசியம்!