Published:Updated:

ஊர் ஜாதகம் :மற்ற நகரங்களுடன் இணைக்க வேண்டும்!

க.அருண்குமார், படங்கள்: க.ரமேஷ்.

உடுமலைப்பேட்டை:

##~##

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஊர் உடுமலைப்பேட்டை. காற்றாலை மின் உற்பத்தி, தேங்காய் கொப்பரை, கறிக்கோழி உற்பத்தி, நாட்டு வெல்லம் என வளமான தொழில்களால் செழித்து கிடக்கிறது இந்த பூமி. திருமூர்த்தி மலை, அமராவதி அணை போன்ற சுற்றுலாத்தலங்களும் இயற்கையின் கொடைகளாக குதூகலமூட்டுகிறது. இந்த ஊரின் வளர்ச்சிக்கு இன்னும் என்னென்ன தேவை என்பதை அறிய வலம் வந்தோம். நாம் முதலில் சந்தித்தது உடுமலைப்பேட்டை வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவரான வழக்கறிஞர் இராஜேந்திரனை.

'திருப்பூருக்கு அடுத்தபடியாக நூற்பாலைகள் அதிகம் நிறைந்த ஊராக இருந்தது. மூலப்பொருட்கள்

தட்டுப்பாடு காரணமாக நூற்பாலைகள் தொழில் நலிவடைந்துள்ளதால், தற்போது அந்தத் தொழிலுக்கான சுவடுகளே கிடையாது. விவசாயமும் முன்புபோல வீரியமாக இல்லை. இதன்காரணமாக வெளியூர்களுக்கு வேலை தேடி செல்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக, உடுமலையின் பட்டுப்புழு உற்பத்திக்கு நல்ல கிராக்கி இருக்கிறது. ஆனால், இந்தத் தொழில் பெரிதாக கண்டுகொள்ளப்படவே இல்லை. தென்னை உற்பத்தி சார்ந்த பொருட்களை அரசு மேலும் ஊக்குவித்தால் அது மாற்றுத்தொழிலாக வளர்வதற்கு நிறைய வாய்ப்புள்ளது.

பொதுவாகவே, உடுமலை பழைய நகரம் என்பதால், உள்நகரில் சாலைகள் போக்குவரத்து நெரிசலை சந்திக்கின்றன. மேலும், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு தினசரி செல்லும் வாகனங்கள் நகரின் உள்ளே வந்துதான் செல்கின்றன. இதற்கு ஏற்ப புறவழிச்சாலை வசதிகள் கொண்டுவரப்பட வேண்டும். தளி, மூணாறு வழியில் கட்டப்படும் மேம்பாலப் பணி பல வருடங்களாக நீண்டுகொண்டே இருக்கிறது. இதன்காரணமாக அடிக்கடி விபத்துகளும் நடப்பதால் அரசு உடனடியாக இத்திட்டத்தை விரைந்து முடிக்கவேண்டும்'' என்று முடித்தார்.

ஊர் ஜாதகம் :மற்ற நகரங்களுடன் இணைக்க வேண்டும்!

கறிக்கோழி வளர்ப்பில் உடுமலை நகரமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்குள்ள விவசாயிகள் சிறிய அளவில்கூட கறிக்கோழி பண்ணைகளை நடத்தி வருமானம் ஈட்டுகின்றனர். குறிப்பாக, பெரிய நிறுவனங்களில் குஞ்சுகளாக வாங்கி அதை வளர்த்து அதிலிருந்தும் லாபம் பார்க்கின்றனர். தவிர, பால் உற்பத்தி அதிகளவில் உள்ளது. ஆனால், இதற்கேற்ப பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இங்கு வந்தால் மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்கின்றனர் பலரும்.

இந்த நகரத்தின் முக்கிய பிரச்னை, பாதாளச் சாக்கடை இல்லாததே. பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது இத்திட்டம். இது விரைவாக முடிக்கப்படவேண்டும் என்பது மக்களின்

ஊர் ஜாதகம் :மற்ற நகரங்களுடன் இணைக்க வேண்டும்!

எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அடுத்து, உடுமலை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பாலநாகமாணிக்கத்தைச் சந்தித்தோம். 'உடுமலைப்பேட்டையின் முக்கியமான தொழில் விவசாயம்தான். போதிய மழையின்மை காரணமாக 42 சதவிகிதம் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. மேலும், உற்பத்திக்கு சரியான விலையும் கிடைப்பதில்லை.  பட்டுப்புழு உற்பத்தியில் முன்னணியில் இருந்தாலும்  மல்பெரி பயிருக்கு தற்போது தட்டுப்பாடு உள்ளது. கோழி வளர்ப்பை பொறுத்தவரை, சிறுசிறு அளவில் நடக்கிறது என்றாலும், கோழிகளுக்கு வரும் நோய்த் தொற்றுகளுக்கு சரியான பராமரிப்பில்லாமல் பெருத்த நஷ்டத்தைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. அரசாங்கம்தான் இப்பிரச்னைகளுக்கான தீர்வினை எங்களுக்குத் தரவேண்டும்'' என்றார்.

உடுமலையின் நீர் ஆதாரமாக விளங்குவது திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள்தான். அமராவதி அணையின் முழுக் கொள்ளளவு மூன்று டி.எம்.சி. ஆனால், இரண்டு டி.எம்.சி. தான் நீர் நிரம்புகிறது. அணை தூர்வாரப்படாததால் இந்த நிலைமை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். திருமூர்த்தி அணையின் நிலவரமும் இதுதான். மூன்று டி.எம்.சி. கொள்ளளவுகொண்ட இந்த அணையில் 1.5 டி.எம்.சி.தான் நீர் நிறைகிறது.  பருவகாலங்களில் நீரை முழுமையாகச் சேமித்தால், மின் உற்பத்திக்கும் பயன்படுத்த முடியும். இந்த இரண்டு அணைகளும் முழுக் கொள்ளளவோடு இருந்தால் குடிநீர், மின் தட்டுப்பாடு இருக்காது என்கின்றனர் மக்கள்.

பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த ஊரில் காற்றாலை அமைத்து மின் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட நான்காயிரம் கோடி ரூபாய் அளவுக்கு காற்றாலைத் துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், சாலைப் போக்கு வரத்தில் உடுமலை மோசமான நிலைமையில் உள்ளது. திண்டுக்கல்லில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை உடுமலை நகரத்துக்குள் வரும்போது மிகவும் குறுகலாகிவிடுகிறது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் அல்லது புறவழிச்சாலை ஏற்பாடுகளை உடனே மேற்கொள்ள வேண்டும். இதுதவிர, மூணாறு, தளி, பழனி போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு தினசரி வரும் வாகனங்கள் புழங்குவதற்கு ஏற்ப நகரத்தில் போதுமான

ஊர் ஜாதகம் :மற்ற நகரங்களுடன் இணைக்க வேண்டும்!

கட்டமைப்பு வசதிகள் கிடையாது. குறிப்பாக, வசதியான தங்குமிடங்கள், உணவகங்கள் தட்டுப்பாடு உடுமலையில் குறைகளாகவே படுகிறது. கேரளாவில் இருந்து பழனி செல்லும் பக்தர்கள், கொடைக்கானல் செல்வோர், மூணாறு செல்வோர் என பலரும் நகரை கடந்துதான் செல்லவேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இதனால் போக்குவரத்து விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும்.

அடுத்து நாம் சந்தித்தது உடுமலை மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சிவசண்முகத்தை. ''ரயில்பாதை அகலமாக்குதல் பணியை விரைந்து முடிக்கவேண்டும். கோவையில் இருந்து சென்னைக்கு உடுமலை வழியாக ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும்.  உடுமலையில் இருந்து பெங்களூருக்கும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் விடவேண்டும். உடுமலையை முக்கிய நகரங்களுடன் இணைத்தால்தான் இங்குள்ள தொழில்கள் வளர்ச்சி அடையும்.  

தமிழகத்தில் இவ்வளவு தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் இருந்தும் உடுமலையில் ஒரு பொறியியல் கல்லூரிகூட கிடையாது. இங்கு உடனடியாக ஒரு பொறியியல் கல்லூரியைத் தொடங்கவேண்டும்''  என்றார்.

இச்சிறு நகரத்தில் தொழில் உற்பத்தியைப் பெருக்குவதோடு, போக்குவரத்து திட்டங்களை மேம்படுத்த வேண்டும். சுற்றுலா சார்ந்த நகரமாக மாறுவதற்கு போதிய வாய்ப்புகள் இருப்பதால், அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி, அடிப்படை கட்டமைப்புகளை வளர்த்தெடுப்பது அவசியம்!