செ.கார்த்திகேயன்.
##~## |
ரமேஷ§ம் மகேஷ§ம் ஒரே நேரத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். இருவரும் படித்தது ஒரே படிப்புதான். என்றாலும், ஓராண்டுக்குப் பிறகு ரமேஷ§க்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைத்தது. ஆனால், மகேஷ§க்கு சம்பள உயர்வு மட்டுமே கிடைத்தது. ''ஒரே வயது, ஒரே படிப்பு, ஒரே வேலை என்கிறபோது ஒருவருக்கு பதவி உயர்வு தந்துவிட்டு, இன்னொருவருக்குத் தராமல் இருப்பது என்ன நியாயம்?'' என்று கொதித்துப் போனான்.
இதற்கான காரணத்தைத் தன்னுடைய பாஸையே சந்தித்துக் கேட்டுவிடுவது என்று முடிவெடுத்தான். ஆனாலும், அவனுக்கு தைரியம் வரவில்லை. அப்போதுதான் அவனோடு வேலை பார்க்கும் விவேக்,
'ஹெச்.ஆர். மேனேஜரிடம் பேசிப் பார். உன் கேள்விக்கு அவர் பதில் சொல்வார்’ என்று சொல்ல, ஹெச்.ஆர். மேனேஜரை அணுகினான் மகேஷ்.
''உங்கள் ஆதங்கம் ரொம்ப சரி. ஆனால், ரமேஷின் லீடர்ஷிப் திறமை உங்களிடம் இல்லையே! நீங்கள் நானாச்சு, என் வேலையாச்சு என்று இருக்கிறீர்கள். ஆனால், ரமேஷோ நாலு பேருக்கு வழி காட்டுகிற அளவுக்கு திறமையாகச் செயல்படுகிறாரே! அவரது அந்தத் திறமைக்கு ஓர் அங்கீகாரம்தான் பதவி உயர்வு. நீங்கள் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கும் பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கும்'' என்றார் ஹெச்.ஆர். மேனேஜர்.
'அட, என்னிடம் இருக்கும் குறையைச் சொல்லாமல் சொல்லி, நான் செய்யவேண்டியதைப் புரிய வைத்துவிட்டாரே ஹெச்.ஆர். மேனேஜர்!’ என்று நினைத்தான் மகேஷ். அது ஒரு ஹெச்.ஆர்-ன் திறமை, பெருமையும்கூட!

ஒரு நிறுவனத்திற்கு பணியாளர்கள் என்பவர்கள் முதுகெலும்பு எனில், அந்த நிறுவனத்தின் மனசாட்சியாக விளங்குபவர்கள் மனிதவள மேலாளர்கள் (ஹெச்.ஆர்.). நிறுவனத்தின் வளர்ச்சியாகட்டும், பணியாளர்களுக்குத் தேவையான விஷயங்களாகட்டும், அதை சரியான முறையில் அமைத்துத் தருபவர்கள் அவர்களே! என்றாலும்கூட, ஹெச்.ஆர்-ன் கடமை என்ன? அவரை எதற்காகவெல்லாம் பணியாளர்கள் அணுகலாம்? சிறந்த ஹெச்.ஆர். மேனேஜர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? என்ற கேள்விகளுடன் கெம்பா ஸ்கூல் ஆஃப் ஹெச்.ஆர். நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஆர்.கார்த்திகேயனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
ஹெச்.ஆர்.-ன் கடமை!
''ஒரு நிறுவனத்திற்கு எவ்வளவு பேர் வேலைக்குத் தேவை என்பதில் ஆரம்பித்து, வேலைக்குச் சேர்ந்தவர்களை எப்படி தக்க வைத்துக்கொள்வது? அவர்களிடமிருந்து வேலையை முழுமையாகப் பெறுவது எப்படி? அவர்களின் அலுவலகச் சூழலுக்கும் சந்தோஷங் களுக்கும் இடையூறாக இருக்கும் விஷயங்களை எப்படி களைவது? என்பது முதல் நிறுவனத்தின் சீரான பணிகளுக்கு தங்களை முழுமையாக ஒப்படைப்பவர்கள்தான் மனிதவள மேலாளர்கள்'' என்று ஆரம்பித்தார்.

''பணியாளர்களுக்கு சகல வசதிகளையும் செய்து தந்த பின்னரும், அலுப்பு என்பது அவர்களுக்கு இருக்கவே செய்யும். அதையும் கையாளக்கூடியவராக ஹெச்.ஆர். இருப்பது அவசியம். சம்பளப் பட்டியலைக் கையாள்வது, பணியாளர்களின் வருகைப் பதிவு, சம்பளப் பிடித்தங்கள் மற்றும் ஊதியம் தருவதை நிர்வகிப்பது, நிறுவனத்தின் கலாசாரத்தைப் பணியாளர்களுக்கு எடுத்துச் சொல்வது, அலுவலகச் சூழலுக்கு தக்கபடியான விதிமுறைகளை அமைத்து, செய்ய வேண்டியதையும்; செய்யக்கூடாததையும் எடுத்துச் சொல்வது, விடுப்பு என்று பணியாளர்கள் வந்து கேட்கும்போது விடுப்பு தரமுடியாதச் சூழல் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அதை புரியவைப்பது, பணியாளர்களின் வேலை முன்னேற்றத்திற்கு கற்றல் மற்றும் பயிற்சிகளை அமைத்துத் தருவது போன்ற விஷயங்களை தெளிவாக கையாளவேண்டியது ஹெச்.ஆர்-ன் கடமை. இதுதொடர்பாக ஏதாவது சந்தேகம் அல்லது கேள்வி இருந்தால், தனது நிறுவனத்தில் இருக்கும் ஹெச்.ஆர். மேனேஜரையே தாராளமாக கேட்கலாம்.
எதற்கெல்லாம் அணுகலாம்?

இது மட்டுமின்றி, ஊழியர்களுக்குத் தேவையான ஹெல்த் இன்ஷூரன்ஸ் போன்ற வசதி வாய்ப்பு களை நிறுவனத்தின் வாயிலாக அவர்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்படுத்தித் தருவதும் ஹெச்.ஆர்.-ன் கடமையே. இன்றைய நிலையில் இதுமாதிரியான விஷயங்கள் தங்களின் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் முன்னதாகவே ஏற்படுத்தித் தந்தாலும், இதுபோன்ற மிக முக்கியமான விஷயங்களுக்கு, தகவல் சேகரிப்பிற்கு நிச்சயமாக நிறுவனத்தின் மனிதவள மேலாளரை அணுகலாம்.
நிறுவனம் என்பது ஒரு குடும்பத்தைப்போல, மிக முக்கியமான தருணங்களில் பெற்றோர்களிடம் பிள்ளைகள் அனுமதிகேட்டுச் செய்வதுபோல, அலுவலகத்திலும் அனுமதி கேட்டல் என்பதைப் பணியாளர் கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இந்த அனுமதியை நேரடியாக பாஸிடம் கேட்காமல் நிறுவனத்தின் ஹெச்.ஆர்-ரிடம் சொல்லி அவர் வாயிலாக அணுகுவது உத்தமம். ஊழியர்களின் பாதுகாப்பு, நிறுவனத்தின் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் ஹெச்.ஆர். விதிமுறைகளை வலுவாக்குவது அவசியம்.
அலுவலக ஊழியர்களுக்கு உடன்வேலை செய்யும் மற்றொரு ஊழியரால் பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருக்குமானால் அதை நிறுவனத்தின் ஹெச்.ஆர்-ருக்கு முதலில் தெரியப்படுத்தவேண்டும். எந்தவொரு பிரச்னை என்றாலும், அதை முதலில் ஹெச்.ஆர்-க்கு தெரியப்படுத்துவது அவசியம். இன்றைய நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் இதுபோன்ற பிரச்னைகள் இருக்கும்பட்சத்தில் ஹெச்.ஆர். பிரிவினருக்கு ஒரு இ மெயில் மூலம் தெரிவிக்கும்படி முன்னதாகவே பணியாளர்களிடம் தெரிவித்துவிடுகின்றன.
சாதுரியமாகச் செயல்படுபவர்கள்!
பெரும்பாலான அலுவலகங்களில் நடக்கும் விஷயங்களில் முக்கியமானது, ஊழியர்கள் குழுத் தலைவருக்கு கீழ் பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை அதற்கு இதுதான் காரணம் என்பதையும் சொல்லி, வேலையில் இருந்து விலகும் விருப்பத்தையும் தெரிவித்துவிடுவார்கள். ஆனால், அவரை குழுத் தலைவரிடம் கேட்காமல் வேலையில் இருந்து விடுவிக்க முடியாது. இதுபோன்று ஊழியர்களுக்கும் குழுத் தலைவருக்கும் இடையேயான பிரச்னைகள் அதிகம் வரலாம். இத்தருணங்களில் சாதுரியமாக செயல்பட்டு இருவரின் பிரச்னைகளையும் களைவது
ஹெச்.ஆர்.தான் என்பதால், இதுபோன்ற சமயங்களில் பணியாளர்கள் தாமாக முடிவெடுக் காமல் ஹெச்.ஆர்.யை அணுகி தீர்வு காண்பதுதான் நல்லது.
ஒரு நிறுவனத்தில் ஹெச்.ஆர். மேனேஜர் என்பவர் கண்டிப்பாக இருக்க வேண்டிய இடத்தில் கண்டிப்புடனும், நண்பனாக பழகவேண்டிய இடத்தில் நண்பனாகவும், பணியாளர்கள் மனக் குழப்பத்தில் இருக்கும்போது கவுன்சிலிங் கொடுக்கும் மருத்துவராகவும் இருக்கவேண்டும். நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, அலுவலகச் சூழலுக்கு ஏற்றபடி அவர்களுக்குத் தேவையானதை செய்து தருபவராக இருக்க வேண்டும். அதேசமயத்தில், நிறுவனத்தின் வளர்ச்சியில் கவனம் கொண்டவராகவும் இருப்பது அவசியம்'' என்று முடித்தார் கார்த்திகேயன்.
ஹெச்.ஆர். மேனேஜரை நிர்வாகத்தின் ஆள் என்று நினைக்காமல், நம் பிரச்னைகளை (தனிப்பட்ட பிரச்னைகளை அல்ல!) எடுத்துச் சொன்னால், நிச்சயம் தீர்வு கிடைக்கும்!