மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

ஆளுமையை வளர்க்கும் எம்.பி.ஏ.!

கல்வி

##~##

பல வருடங்களுக்கு முன்னால், கோவையிலிருந்து நண்பர் நடராஜன் வந்திருந்தார். அவர் மகள் லலிதா, படிப்பில் படுசுட்டி. திறமைசாலியும்கூட. ஆனால், அவள் எம்.பி.ஏ. படிக்கலாமா, வேண்டாமா என நடராஜனுக்கு பெரிய கேள்வி. காரணம், லலிதா ஒரு சங்கோஜி. மற்றவர்களிடம் அவ்வளவு சுலபமாகப் பேசமாட்டார். நான் சொன்னேன், ''தைரியமாக எம்.பி.ஏ. படிக்க வையுங்கள். இரண்டு ஆண்டு கழித்து நீங்கள் புது லலிதாவைப் பார்ப்பீர்கள்'' என்று.  

நான் சொன்னபடி நண்பர் நடராஜனும் தன் மகளை எம்.பி.ஏ.வில் சேர்த்தார்.லலிதாவுக்கு ஐ.ஐ.எம். - இந்தோரில் அட்மிஷன் கிடைத்தது. படிப்பை முடித்ததும் ஒரு பன்னாட்டு கம்பெனியில் ஹெச்.ஆர். வேலை. இன்று அவள் சீனியர் மேனேஜர்.

லலிதாபோல் நூற்றுக்கணக்கான எம்.பி.ஏ.-க்களை எனக்குத் தெரியும். இரண்டு வருட எம்.பி.ஏ. படிப்பு அவர்களின் வாழ்க்கையை முழுக்க முழுக்க மாற்றி யிருக்கிறது. கிராமங்களிலிருந்து வந்தவர்கள், நண்பர்கள் வட்டாரங்களிலேயே தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தத் தயங்கியவர்கள், காரணமே இல்லாமல் தாழ்வுமனப்பான்மையை வளர்த்துக்கொண்டவர்கள் ஆகியோரின் தூங்கிக் கிடந்த திறமைகளை எம்.பி.ஏ. தட்டி எழுப்பி யிருக்கிறது.

என் அனுபவத்தில் சொல்கிறேன். எம்.பி.ஏ. என்பது மேனேஜ்மென்ட் அறிவை மட்டுமே தரும் படிப்பல்ல; தெளிவான சிந்தனை, முடிவெடுக்கும் துணிச்சல் ஆகிய ஆளுமைகளை வளர்த்து உங்களை பிசினஸ் தலைவன் ஆக்கும் படைப்பு.

இரண்டே வருடத்தில் எப்படி நடக்கிறது இந்த மேஜிக்? அவர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடங்களா, கற்பிக்கும் முறையா? நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன். பிசினஸ் ஸ்கூல்களின் வித்தியாசமான கற்பிக்கும் முறையை நீங்கள் தெரிந்துகொள்ள, சில வகுப்புகளுக்கே உங்களைக் கூட்டிக் கொண்டு போகிறேன். வாருங்கள் என்னோடு.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

எம்.பி.ஏ. இரண்டு வருடப் படிப்பு என்பது உங்களுக்குத் தெரியும். முதல் வருடத்தில் மேனேஜர் ஆவதற்கான ஆரம்பப் பாடங்கள் அத்தனையும் கற்றுத்தரப்படும். இரண்டாம் வருடம் - நீங்கள் மார்க்கெட்டிங், புரொடக்ஷன், ஹெச்.ஆர்., ஃபைனான்ஸ், ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட் போன்ற துறைகளில் எவற்றில் தேர்ச்சி (specialise) செய்ய விரும்புகிறீர்களோ, அதற்கு ஏற்றபடி, விருப்பப் பாடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பெரும்பாலான பிசினஸ் ஸ்கூல்களில், முதல் வருடப் படிப்பில் 54 கட்டாயப் பாடங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் விரிந்து, பரந்த கடல். ஒவ்வொரு பாடத்திலும் ஆழ்ந்த அறிவுபெற, ஒரு மாணவன் சுமார் 100 மணி நேரங்கள் செலவிட வேண்டும். நாமோ, ஒரு சில வாரங்களில், ஒரு சில மணிநேர வாசிப்பில், இந்தப் பாடங்கள் பற்றித் தெரிந்துகொள்ளப் போகிறோம். எனவே, நம் பார்வை மேலோட்டமான பார்வை மட்டுமே.

இதன்படி, எம்.பி.ஏ. முதல் வருடப் படிப்பில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பாடங்கள்: கணிதம், பொருளாதாரம், மார்க்கெட்டிங், உற்பத்தி (புரொடக்ஷன்), ஃபைனான்ஸ்,ஹெச்.ஆர்., சிஸ்டம்ஸ் மேனேஜ்மென்ட், பிசினஸ் பாலிசி, கருத்துப் பரிமாற்றம் (Communication). இனி ஒவ்வொரு பாடம் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்.

கணிதம்!

MBA - மூன்றெழுத்து மந்திரம்

நீங்கள் வீட்டிலிருந்து புடவை வியாபாரம் தொடங்குகிறீர்கள். உங்கள் தோழியிடமிருந்து சராசரி 200 ரூபாய் விலைக்கு 20 புடவைகள் வாங்கி வருகிறீர்கள். 200-ஐ 20-ல் பெருக்கி 4,000 ரூபாய் கொடுக்கிறீர்கள். அவற்றை வீட்டுக்குக் கொண்டுவர 200 ரூபாய் ஆட்டோ செலவு. புடவைகள் விலையையும், ஆட்டோ செலவையும் கூட்டி, மொத்த அடக்கவிலை 4,200 என்று கண்டுபிடிக்கிறீர்கள். 4,200-ஐ, புடவை களின் எண்ணிக்கையான 20-ல் வகுத்து, ஒரு புடவையின் அடக்க விலை 210 ரூபாய் என்று கண்டுபிடிக்கிறீர்கள்.

ஒரு புடவைக்கு 40 ரூபாய் லாபம் பார்ப்பது உங்கள் திட்டம். இந்த லாபத்தை அடக்க விலையோடு கூட்டி, ஒவ்வொரு புடவையையும் (210 40) = 250 ரூபாய்க்கு விற்கவேண்டும். 19 சேலைகளே விற்கின்றன. கடைசியாக ஒரு புடவை மிஞ்சுகிறது. அதை 200 ரூபாய்க்கு விற்கிறீர்கள். உங்கள் மொத்த வருமானம் 19ஜ்250 200=4,950 ரூபாய்.

லாபத்தை எப்படி கண்டுபிடிப்பீர்கள்? மொத்த வருமானத்திலிருந்து, மொத்தச் செலவைக் கழித்துக் கண்டுபிடிப்பீர்கள்.    

நீங்கள் இதுவரை என்ன செய்தீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். நீங்கள் செய்தது பிசினஸ்; போட்டது கணக்கு. ஆனால், கூட்டிக் கழித்து, பெருக்கி, வகுத்தபிறகு கிடைப்பது லாபம் (அல்லது நஷ்டம்). அதுதான் பிசினஸ்.

பொருளாதாரம்!

கணக்குப் போலவே, பிசினஸுக்கு அத்தியா வசியமானது பொருளாதாரம். பிசினஸுக்கு மட்டுமல்ல, சாதாரண மனிதர்களுக்கும் தேவையான சில முக்கிய பொருளாதாரக் கொள்கைகளைப் பார்ப்போம்.

தேவைகள் கொள்கை!
( Principles Of Demand )

வாடிக்கையாளர்களின் தேவை கூடும்போது விலை உயரும்; தேவை குறையும்போது விலை குறையும். உற்பத்தியாளர்களின் சப்ளை இதற்கு எதிர்மாறானது. சப்ளை கூடும்போது விலை குறையும்; சப்ளை குறையும்போது விலை கூடும்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

தேவையையும், சப்ளையையும் சீர்தூக்கி, என்ன விலை நிர்ணயிக்கலாம் என்று முடிவெடுப்பதுதான் பிசினஸ் வெற்றி ரகசியம்.

நாம் மளிகைக் கடை நடத்துகிறோம். பலர் போட்டிக் கடைகள் திறக்கிறார்கள். நாம் என்ன செய்வோம்? விலையைக் குறைப்போம். விலையைக் குறைத்தால் நிச்சயமாக விற்பனை அதிகமாகுமா? பிசினஸ்களின் வெற்றி அல்லது தோல்வியை முடிவு செய்வது இந்தக் கேள்விக்கான பதில்தான். இதை, பொருளாதாரத்தில், தேவைகளின் மீட்சித் திறன் (Elasticity of Demand) என்று சொல்கிறார் கள். இதைக் கண்டுபிடிக்க ஒரு சூத்திரம் இருக்கிறது.  

இந்த சூத்திரத்தில் ஒரு சூட்சுமம் உண்டு. அது என்ன தெரியுமா?

சூத்திரத்தில் எத்தனை அம்சங்கள் இருக்கின்றன?

1. பொருளுக்கான மீட்சித்திறன்.  

2. தேவையின் சதவிகித மாற்றம்.

3. விலையின் சதவிகித மாற்றம்.  

நாம் காட்பரீஸ் சாக்லேட் விற்கிறோம். போட்டிக் கடைக்காரர் திடீரென ஐம்பது காசு விலை குறைக்கிறார். சாக்லேட்டின் மீட்சித் திறனைக் கண்டுபிடித்து, எவ்வளவு விலைக் குறைத்தால், எவ்வளவு விற்பனை அதிகமாகும் என்று கணக்குப் போட்டு, போட்டிக் கடையைக் கிறங்கடித்துவிடலாமா?  

பிசினஸில் தீர்வு காண்பது அத்தனை சுலபமல்ல, நண்பர்களே! இந்த மூன்று அம்சங்கள் ஒவ்வொன்றும் எத்தனை என்று எந்த பாடப் புத்தகமும் பதில் தராது. உங்கள் அனுபவத்திலிருந்துதான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். படிக்காத பல மேதைகள் பிசினஸில் ஜெயிப்பதற்குக் காரணம், தங்கள் விற்பனைப் பொருட்களுக்கான மீட்சித்திறனைத் துல்லியமாக எடை போடுவதால்தான்.  

விளையாட்டுக் கொள்கை! (Game Theory)

இந்தக் கொள்கை சதுரங்க விளையாட்டின் அடிப்படையில் உருவாகியிருப்பதால்தான், விளையாட்டுக் கொள்கை என்று இதற்குப் பெயர். சாதாரணமாக இருவர் விளையாடும் செஸ் ஆட்டத்தில், ஒவ்வொருவரிடமும் ஓர் அரசன், ஓர் அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு யானைகள், எட்டுப் படை வீரர்கள் என பதினாறு காய்கள் இருக்கும். தன் அரசனைப் பாதுகாத்துக்கொண்டு எதிரி அரசனைப் பிடிப்பதுதான் ஆட்டம்.

ஆட்டத்தில் ஜெயிக்க, வியூகம், யுக்தி என்னும் இரண்டு அம்சங்கள் முக்கியமானவை. வியூகம் என்றால், நீண்டநேர இலக்கை எட்டும் வழிமுறை; யுக்தி என்பது உடனடியாக காய்களை நகர்த்தும் தந்திரம். போட்டியாளர் தன் காய்களை எப்படி நகர்த்துவார் என்று அனுமானம் செய்து ஒவ்வொரு காய்களையும் நகர்த்த வேண்டும்.

பிசினஸிலும் இப்படித்தான் என்கிறது, கேம் தியரி. நாம் விலையைக் குறைத்தால், போட்டியாளரும் விலையைக் குறைப்பாரா? அதே விலையில் தரம் உயர்வான பொருள் தருவாரா? இவை இரண்டையுமே செய்யாமல் விளம்பரத்தை அதிகமாக்குவாரா? போட்டியாளர் எந்த மூவ் எடுப்பார் என்று யூகிப்பதுதான் வெற்றிக்கான மந்திரச் சாவி.      

பொருளாதாரம் பற்றி இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமா, ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டுமா? நீங்கள் படிக்க வேண்டிய  புத்தகம் - 1) 1) Economics by Paul A. Samuelson & William D. Nordhaus , Publisher – Tata McGraw – Hill Education Pvt. Limited.

கல்லூரிக்குப் போகாமலே, கணிதத்திலும், பொருளாதாரத்திலும் நம் ஊர் அண்ணாச்சிகளுக்கு இருக்கும் தேர்ச்சி; லட்சக்கணக்கான மதிப்புள்ள வியாபாரப் பரிவர்த்தனைகளை மனக்கணக்காகப் போடும் லாவகம்; நூற்றுக்கணக்கான விற்பனைப் பொருட்களின் விலைகளை விரல் நுனியில் வைத்திருக்கும் நினைவாற்றல்; விலைகளை உயர்த்தினால், குறைத்தால், எதிர்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை முடிவெடுக்கும் ஆற்றல் -  உங்களிடம் இத்தனை திறமை கொட்டிக் கிடக்கும்போது, ஆயிரம் வால்மார்ட்கள் வந்தாலும் உங்களுக்கு ஈடாக மாட்டார்கள்.          

(கற்போம்)
படங்கள்: கே.குணசீலன்,  தே.தீட்ஷித்.