செ.கார்த்திகேயன்.
##~## |
ஐகேட் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பானேஷ் மூர்த்தியின் பதவி திடீரென பறிபோயிருக்கிறது. காரணம், அந்த நிறுவனத்தின் பெண் ஊழியருடன் அவர் 'தொடர்பு’ வைத்திருந்ததை தலைமை அலுவலகத்துக்குச் சொல்லவில்லை என்கிற காரணம்தான். தவிர, பாலியல் தொல்லை தந்தார் என்கிற குற்றச்சாட்டு வேறு.
பானேஷ் மூர்த்தியின் மீது தவறு இருந்ததால் அவர் வேலை பறிபோனது. இதுபோன்ற களங்கம் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்ற ஆண்களுக்கும் வருவதற்கு வாய்ப்புண்டு. இந்தக் களங்கம் ஒருவர்மீது வராமல் இருக்க, அலுவலகத்தில் பணிபுரியும் சகபெண் ஊழியர்களுடன் எப்படி பழகவேண்டும்? என்னென்ன விஷயங்களை மனதில்கொண்டு செயல்படவேண்டும்? என்பதைச் சொல்கிறார் போலாரிஸ் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் பாலமுருகன்.
குடும்பத்தின் வாழ்வாதாரம்!
அலுவலகம் என்பது ஒருவருடன் ஒருவர் தொட்டுப் பேசி, விளையாடி மகிழ விளையாட்டு அரங்கம் கிடையாது. இதில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கட்டுப்பாடு என்பது முக்கியம். இதில் ஆண் அதிக கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். காரணம், ஓர் ஆண் என்பவர் அவரது குடும்பத்தை தனிப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக தாங்கக்கூடியவராக இருக்கலாம். அப்படிப்பட்டவர் அலுவலகத்தில் முறையாக நடந்துகொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டில் மாட்டினால், அந்தக் குடும்பத்தின் எதிர்காலமே பாதிப்படையும். எனவே, பனிக்கட்டியில் நடக்கிற மாதிரி கவனத்தோடு செயல்படவேண்டிய விஷயம் இது!

நெருக்கம் தவிர்ப்பீர்..!
பாலியல் ரீதியான பிரச்னைகளில் ஆண்கள் சிக்காமல் இருக்கவேண்டும் எனில், பெண்களிடமிருந்து கொஞ்சம் விலகி இருந்து பழகுவது நல்லது. ஐ.டி. துறையில் வேலை செய்யும் ஆண்களும், பெண்களும் கொஞ்சம் நெருக்கமாகவே இருப்பார்கள். இந்த 'நெருக்கம்’ தனிப்பட்ட முறையிலும், சமூக அடிப்படையிலும் பிரச்னையாக மாறாத வரை ஆபத்தில்லை. அப்படி பிரச்னையாக மாறினால், இருதரப்பினருக்குமே பாதிப்புதான்.
அலுவலகத்தில் யதார்த்தமாகப் பழகியதை வைத்தோ அல்லது கஷ்டமான சூழ்நிலையில் உதவியதை வைத்தோ 'காதல்’ என்று தவறாகப் புரிந்துகொண்டு, பிற்பாடு அப்படி எதுவும் இல்லை என்று தெரியும்போது ஏமாற்றம் ஏற்படும். இந்த ஏமாற்றத்தை இயல்பாக ஏற்றுக்கொண்டு கடந்துபோனால், பிரச்னை இல்லை. ஆனால், அதை ஏற்றுக்கொள்ள முடியாமல், மேலும் மேலும் பிரச்னையாக மாற்றினால், பாதிப்புதான். அதனால், அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் பெண் ஊழியர்களை காதல் கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறாகும்.
பேச்சில் கவனம் தேவை!
பெண்களைப் பார்க்கும் பார்வை, அவர்களிடம் பேசும் வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. அலுவலக வட்டாரத்தில் ஒருவரை ஒருவர் அழைப்பதற்கு பயன்படுத்தப்படும் வார்த்தைகளை (சார், மேடம் அல்லது பெயர்) மட்டுமே சொல்லி அழைப்பது நல்லது. ஸ்வீட்டி, டியர் போன்ற வார்த்தைகளால் பெண்களை அழைத்தால், பிரச்னைதான். இப்படி கூப்பிடும்போது அருகில் இருப்பவர்கள் முகம் சுழிப்பார்கள் என்பதை ஆண்கள் மறக்கக்கூடாது.

உடை விஷயத்தில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கவனமாக இருக்கவேண்டும். உதாரணமாக, சர்ட் பட்டனை போடாமல் அலுவலகத்திற்குள் நடமாடுவது. இதனால் ஆண்கள் தங்கள் மதிப்பை தாங்களே குறைத்துக்கொள்வதோடு, பெண்களை கவர்வதற்காகவே இப்படி அலைகிறான் என்கிற மாதிரியான தப்பான அபிப்ராயமும் உருவாகும்.
ஆண்கள், பெண்களிடம் பேசும்போது நேருக்கு நேர் (ஐ-கான்டக்ட்) பார்த்து பேசுவது முக்கியம். சகபெண் ஊழியர்களுடன் பேசும்போது அவர்களின் கண்களை மட்டுமே பார்த்து பேசுவது உத்தமம். அப்படியில்லாமல் கண் பார்வை அங்கும் இங்குமாகப் பயணித்தால், அதையே ஒரு காரணமாக காட்டி, பழி சுமத்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. விளையாட்டாககூட கண்ணடித்து பேசுவது, கையைக் காட்டியோ அல்லது உயர்த்தியோ பேசுவது கூடவே கூடாது. இப்படி பேசுவதைக் கொஞ்சம் ஒதுங்கி நின்று பார்ப்பவர்கள், தவறாக நினைப்பதோடு, நம்மைப் பற்றி அவதூறு கிளப்புவதற்கும் இடம் தந்த மாதிரி ஆகிவிடும்.
நாகரிகமாக நடந்துகொள்ளுங்கள்!
அலுவலகத்தில் ஆண்கள், பெண்களிடம் நாகரிகமாக நடந்துகொள்வது முக்கியம். குழு கலந்துரையாடலின்போது பாஸ் என்கிறவர்கூட தனக்கு கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் நாகரிகமாகவே நடந்துகொள்ள வேண்டும். சபை உரையாடலின்போது அலுவலகம், வேலை சார்ந்த விஷயங்கள் தவிர்த்து மற்ற விஷயங்களைப் பேசாமல் தவிர்ப்பது நல்லது.
ஆண், பெண் இருவருமே அலுவலகத்தில் பொது இடத்தில் சந்தித்து பேசும்போது அனைவருக்கும் தெரிந்த மொழியில் பேசுவது அவசியம். தம்மைச் சுற்றி இருப்பவர்களுக்குத் தெரியாத மொழியில் பேசும்போது, அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்பது தெரியாமல் போவதால், வீண்வம்பு உருவாக நிறையவே வாய்ப்புண்டு.
தனிப்பட்ட நட்பு வேண்டாமே!
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், குடும்பம் சார்ந்த பிரச்னைகளை எதிர்பாலினத்தவர்களிடம் அலுவலகத்தில் பேசக் கூடாது. அவரிடம் கருத்து கேட்பதோ, உதவி கேட்பதோ கூடவே கூடாது.

அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் அடிக்கடி ஆண் ஊழியர்களின் உதவியையோ, ஆண் ஊழியர்கள் பெண் ஊழியர்களின் உதவியையோ நாடுவதைத் தவிர்க்கவும். ஆரம்பத்தில் தொடங்கும் இந்த உதவி, பிற்பாடு பெரும் தலைவலியாக மாற வாய்ப்புண்டு.
சுருக்கமாக, அலுவலகம் நம் வாழ்வின் அடிப்படை. அங்கு தொடர்ந்து வேலை பார்ப்பதால் வளமான எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள முடியும் எனில், தேவை இல்லாமல் சிக்கலில் போய் மாட்டுவது கூடாது. நம் வேலையைக் கவனமாக செய்வதோடு, சக ஊழியர்களுடனும் கவனமாகப் பழகினால் பிரச்னையே வராது!'' என்று முடித்தார் பாலமுருகன்.