MBA - மூன்றெழுத்து மந்திரம்
##~## |
கம்பெனிகள் வரும் ஆண்டுக்கான தங்களுடைய திட்டங்களைத் தீட்ட, இலக்குகளை, செலவுகளை நிர்ணயிக்க, பொருட்களின் விற்பனை எண்ணிக்கை என்கிற மதிப்பீடு (Forecast) தேவை. மார்க்கெட்டிங் துறை அதிகாரிகள்தான் இந்தக் கணக்கீட்டைச் செய்கிறார்கள் என்று பார்த்தோம்.
மார்க்கெட்டிங் துறையின் பரிந்துரைகளை கம்பெனியின் தலைமை நிர்வாகம் ஆலோசித்து தயாரிப்பு எண்ணிக்கை, தயாரிப்பு செலவு எவ்வளவு இருந்தால் லாபம் பார்க்கலாம் என்ற கணக்குகள் போடும். இந்த அடிப்படையில், கம்பெனியின் சி.இ.ஓ-வும், தலைமை அதிகாரி களும், கம்பெனியின் நடப்பு ஆண்டுக்கான உற்பத்தி இலக்குகளை முடிவு செய்வார்கள்.
இப்போது உற்பத்தி நிர்வாகிகளின் வேலை தொடங்குகிறது. இந்த வேலைக்கு எம்.பி.ஏ. படித்த மாணவர்களை வைத்து தயார்படுத்துவார்கள். உற்பத்தித் துறையில் நுழையும் எம்.பி.ஏ.களின் வேலை என்ன?
உதாரணத்திற்கு ஒரு சாக்லேட் கம்பெனியில் வருடத்திற்கு 9,60,000 சாக்லேட்கள் தயாரிக்கவேண்டும். அதாவது, சராசரியாக மாதத்துக்கு 80,000 சாக்லேட்கள். ஆனால், சாக்லேட் விற்பனை எல்லா மாதங்களிலும் சமஅளவில் இருக்காது. தீபாவளிக்கும், ஆங்கிலப் புத்தாண்டுக்கும், கம்பெனிகளும், தனியாரும் சாக்லேட்களை பரிசாகத் தருவார்கள். எனவே, அக்டோபர்- ஜனவரி மாதங்களில் விற்பனை அதிகம். இத்தேவையைப் பூர்த்தி செய்ய, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக உற்பத்தி செய்யவேண்டும். எனவே, உற்பத்தி மேனேஜர் மாதவாரியான உற்பத்தி இலக்கை நிர்ணயிப்பார்.

இந்தக் கணக்குப்படி, அவர் முடிவு செய்திருக்கும் உற்பத்தி இலக்குகள் இவைதாம்:
ஜனவரி முதல் ஆகஸ்ட் முடிய, ஒவ்வொரு மாதமும் 70,000 சாக்லேட்கள்;
செப்டம்பர் முதல் டிசம்பர் முடிய, ஒவ்வொரு மாதமும் 1,00,000 சாக்லேட்கள்.
உற்பத்தி மேனேஜரின் வேலை இரண்டு அம்சங்களைக்கொண்டது.
1. கொள்முதல் (Purchase)
2. உற்பத்தித் திட்டமிடலும், கண்காணிப்பும் (Production Planning and Control)

கொள்முதலில் அவரும் அவரின் டீமும் ஒவ்வொரு மாதத்தின் உற்பத்தி எண்ணிக்கை இலக்கின்படி, மூலப்பொருட்களை யாரிடம், எவ்வளவு, என்ன விலையில் எந்தெந்த காலகட்டங்களில் வாங்கவேண்டும் என்று தெளிவான திட்டங்கள் போடுவார்கள்.
சில பொருட்கள் உடனடியாகவும் சில பொருட்களுக்கு காத்திருக்கவேண்டிய நிலையும் இருக்கும். காத்திருக்கவேண்டியிருந்தால், அந்தக் காலத்துக்குத் தேவையான அளவு பொருட்களை ஸ்டாக் வைப்பதற்கு, உற்பத்தி பாதிக்கப்பட வில்லை என்றாலும், செலவு அதிகரிக்கும். குறைந்த ஸ்டாக் வைத்தால், உற்பத்தி பாதிக்கப் படலாம். ஆனால், செலவு குறைவு.
பொருட்களை சப்ளை செய்யும் கம்பெனிகள் அவர்களின் லாபத்துக்கு ஏற்ப விலையை நிர்ணயிப்பார்கள். அவர்களிடம் பேரம்பேசி, யார் குறைந்த விலைக்குத் தரமான பொருட்களைத் தருகிறார்களோ, அவர்களிடம் வாங்கவேண்டும்.
அடுத்த நடவடிக்கை, உற்பத்தித் திட்டமிடலும், கண்காணிப்பும் (Production Planning and Control).
ஜனவரி-ஆகஸ்ட் வரை மாதம் 70,000 சாக்லேட் களும் செப்டம்பர் முதல் டிசம்பர் முடிய, மாதம் 1,00,000 சாக்லேட்களும் தயாரிக்க, உற்பத்தி மேனேஜர் எப்படித் திட்டம் போடுவார்?
கம்பெனியில் இப்போது இருக்கும் இயந்திரங் களே இந்த உற்பத்திக்குப் போதுமா அல்லது புது இயந்திரங்கள் வாங்கவேண்டுமா? எத்தனை இயந்திரங்கள் வாங்கவேண்டும், எப்போது வாங்கவேண்டும்? போதுமான தொழிலாளர்கள், சூப்பர்வைசர்கள், தரக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் இருக்கிறார்களா? போதாவிட்டால், எப்படி அதிகமாக்கலாம்? இந்த அதிக அளவுக்குத் தொழிலாளர்களின் சம்மதத்தை எப்படி பெற முடியும்?
தொழிலாளர்களுக்கு ஓவர்டைம் தரவேண்டும் என்றால் அதற்கு சி.இ.ஓ. சம்மதிப்பாரா?
உற்பத்தி எண்ணிக்கை, தயாரிப்பு நேரம், செலவு ஆகியவற்றை வரையறுத்துவிட்டார். திட்டப்படி உற்பத்தி நடக்கிறதா என்று பார்க்கவேண்டும், இல்லாவிட்டால், திருத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
இவற்றைத் தவிர உற்பத்தித் துறை மேனேஜர் இயந்திரக் கோளாறு, ரிப்பேர், தொழிலாளிகளின் திறமை, உழைப்பையும் வெளிக்கொண்டுவர ஊக்கம் அளித்தல் ஆகியவற்றை பார்க்க வேண்டும்.
உற்பத்தியில் இன்னொரு முக்கிய அம்சம், பொருளின் தரம். கஸ்டமர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற தரம் அவசியம். தயாரிக்கிற பொருளில் குறைபாடு இருந்தால், கஸ்டமரின் நம்பிக்கையை இழக்க நேரிடும். இதுவே போட்டியாளர்களின் வாய்ப்பாக மாறிவிடும். உற்பத்தி மேனேஜரின் பொறுப்பு உற்பத்தி இலக்கு மட்டுமல்ல, தரமான எண்ணிக்கையை எட்டுவதாகும்.
இந்தத் திறமைகள் அத்தனையையும் உறபத்தி நிர்வாகம் தொடர்பான முதல் வருடப் பாடங்களில் கற்றுத்தரப்படுகின்றன.
உற்பத்தி என்றாலே, நம் மனங்களில் டூத் பேஸ்ட், சாக்லேட், பிஸ்கட், ஃப்ரிட்ஜ், டி.வி போன்ற பொருட்கள்தாம் நினைவுக்கு வரும். கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், ஃபைனான்ஸ் கம்பெனிகள், மேனேஜ்மென்ட் ஆலோசகர்கள், வழக்கறிஞர்கள், சாஃப்ட்வேர் கம்பெனிகள் ஆகியோரின் தயாரிப்பு என்ன? அவர்கள் நமக்குத் தரும் சேவை. இதனால், பல எம்.பி.ஏ. கல்லூரிகளில் உற்பத்தி நிர்வாகம் (Production Management), சிற்சில மாற்றங்களோடு செயல்முறை நிர்வாகம் (Operations Management) என்னும் பெயரில் வழங்கப்படுகிறது.

ஐ.டி. நிறுவனங்கள், வெளிநாடுகள் அவுட்சோர்ஸ் செய்யும் வேலைகளை உற்பத்தி (Production) என்று அழைப்பதில்லை; புராஜெக்ட் என்று சொல்கிறார்கள்.
இவை மட்டுமே புராஜெக்ட் அல்ல. தொழிற்சாலை தொடங்குவதும் புராஜெக்ட்தான். பிசினஸில் மட்டுமல்ல, நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் புராஜெக்ட் மேனேஜ்மென்ட் உண்டு. உங்கள் வீட்டில் புதுமனை புகுவிழா, அல்லது உங்கள் தங்கையின் திருமணம், உங்கள் குழந்தையின் பிறந்தநாள் விழா - இவை எல்லாமே புராஜெக்ட்கள்தாம். இந்த நிகழ்ச்சிகளை நடத்தி முடிப்பதில், எவை முக்கியம் என்று உங்களுக்குத் தெரியும்.
இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஏராளமான சின்னச் சின்ன வேலைகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் கச்சிதமாக நடக்கவேண்டும், காலதாமதமில்லாமல் நடக்கவேண்டும். அப்போதுதான் மொத்த நிகழ்ச்சியும் நன்றாக நடக்கும்.

புதிது புதிதாகப் பிரச்னைகள் வரும். அவற்றுக்கு உடனடி முடிவுகள் எடுக்கவேண்டிய கட்டாயம் இருக்கும். நிகழ்ச்சிக்கு எவ்வளவு செலவு செய்யலாம் என்று கணக்குப் போட்டிருப்பீர்கள். இந்தத் தொகையை பட்ஜெட் என்று சொல்வோம். போட்ட பட்ஜெட்டைத் தாண்டாமல் செலவுகளைக் கண்காணிக்கவேண்டும், கட்டுப்படுத்த வேண்டும்.
அதாவது, புராஜெக்ட் மேனேஜ்மென்டின் வெற்றி என்பது கீழ்க்கண்ட இரண்டு அம்சங்களை நிர்வகிப்பதுதான். அவை:
1. நேரம். (நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் புராஜெக்டை முடித்தல்)
2. செலவு (பட்ஜெட்டுக்குள் புராஜெக்டை முடித்தல்)
இதற்காக, இரண்டு நிர்வாகத் தீர்வுகளை மேனேஜ்மென்ட் மேதைகள் கண்டுபிடித்திருக் கிறார்கள். இவை:
1. PERT (Project Evaluation and Review Technique) 2. CPM (Critical Path Method)
எம்.பி.ஏ. கல்லூரிகளில், முதல் வருடத்தில்,PERT, CPM ஆகிய இரண்டும் விரிவாகக் கற்றுத் தரப்படுகின்றன. நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டுமா? எளிமையாகப் புரிந்துகொள்ள, இந்த இரண்டு இணையதளங்களுக்கும் விசிட் அடியுங்கள்.
www.netmba.com/operations/project/pert
www.netmba.com/operations/project/cpm
முதல் வருடமே, உற்பத்தி மேனேஜ்மென்ட் தொடர்பான முக்கிய துறைகள் அத்தனையிலும் தேர்ச்சி தந்துவிடுகிறது. உற்பத்தித் துறையில் ஸ்பெஷலைஸ் செய்ய விரும்புபவர்கள், இரண்டாம் வருடத்தில், Supply Chain Management, Quality Management & Six Sigma, Services Management போன்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திறமைகளைப் பட்டை தீட்டிக்கொள்ளலாம்.
(கற்போம்)
படம்: ச.இரா.ஸ்ரீதர்.