மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

நிதி நிர்வாகம்எஸ்.எல்.வி.மூர்த்தி

##~##

பிசினஸின் முக்கிய நோக்கம் லாபம் பார்ப்பது. லாபம் என்றால் என்ன? வருமானம் செலவைவிட அதிகமாக இருக்கவேண்டும். ஃபைனான்ஸ் மேனேஜர்களின் வேலை, கம்பெனியின் வரவையும், செலவையும் கண்காணித்து, லாபம் வரவைப்பது. இதற்கு இவர்கள் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம், பட்ஜெட் என்னும் வரவு- செலவுக் கணக்கு.

நம் எல்லோருக்கும் பட்ஜெட் என்றால் என்னவென்று தெரியும். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28-ம் தேதி நிதி அமைச்சர் இந்தியாவின் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறார்.

வீட்டில் உங்கள் அப்பா, அம்மா இரண்டுபேரும் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சேர்ந்து உட்கார்ந்து பட்ஜெட் போடுவதை நீங்களே பார்த்திருப்பீர்கள். எதற்கு இப்படி பட்ஜெட் போடுகிறார்கள்?

அப்போதுதான் வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு, வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணம், மளிகை மற்றும் காய்கறி செலவு, பொழுதுபோக்கு என அனைத்துக்கும் தொகை ஒதுக்கிச் செலவு செய்கிறோமா என்று தெரியும். செலவும் கட்டுக்குள் இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்வதன் மூலம் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தவும் முடியும்.

நம் வீட்டில் அப்பா, அம்மா பட்ஜெட் போடுவதைப்போல, கம்பெனிகளில் இந்த வேலையைச் செய்வது ஃபைனான்ஸ் மேனேஜர். ஆனால், வீட்டு பட்ஜெட்டுக்கும் கம்பெனி பட்ஜெட்டுக்கும் முக்கியமான வித்தியாசங்கள் உண்டு. வீட்டின் மாத வருமானம் சம்பளம் மூலம் வருவது. அது எவ்வளவு என்று கச்சிதமாகத் தெரியும். கம்பெனிகளின் வருமானம், விற்பனையில் வருவது. எவ்வளவு வரும் என்று கச்சிதமாகச் சொல்ல முடியாது. ஒரு மாதம் கூடும் அல்லது குறையும். மார்க்கெட்டிங் டிபார்ட்மென்ட் தரும் விற்பனைக் கணக்கீடுகளிலிருந்து இந்த வருமானத்தை அனுமானம் செய்யவேண்டும்.  

MBA - மூன்றெழுத்து மந்திரம்

தவிர, வீட்டு பட்ஜெட்டில் வீட்டு வாடகை, மளிகை என ஒருசில ஐட்டங்கள் மட்டுமே. கம்பெனியில் ஊழியர் சம்பளங்கள், மூலப்பொருள் வாங்குதல், விளம்பரச் செலவுகள் என பல செலவினங்கள் இருக்கும். இவை ஒவ்வொன்றையும் கண்காணித்து, கட்டுப்படுத்துவது பெரிய வேலை.  

நிதி நிர்வாகிகளின் இன்னொரு முக்கிய வேலை, கம்பெனிக்குப் பொருட்கள் வாங்கியவர்களுக்குப் பணம் தருவதும், கம்பெனியின் வாடிக்கையாளர்களிடமிருந்து விற்பனைக்கான பணத்தைப் பெறுவதும். இவற்றை முறையே வரவேண்டிய பணம் (Accounts Receivable),தரவேண்டிய பணம் (Accounts Payable) என்று சொல்வார்கள்.  

MBA - மூன்றெழுத்து மந்திரம்

திறமையான நிதி நிர்வாகி வரவேண்டிய பணத்தை சீக்கிரம் வாங்கி,  தரவேண்டிய பணத்தை தாமதமாகத் தருவார். ஏன் என்று கேட்கிறீர்களா?  உதாரணமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வருட விற்பனை ரூ.3,30,000 கோடி. அவர்கள் வாங்கும் மூலப்பொருட்களின் மதிப்பு ரூ.90,000 கோடி என்று வைத்துக்கொள்வோம்.  

வருட விற்பனை = ரூ. 3,30,000 கோடி

வருடத்தில் ஞாயிறு, மற்ற விடுமுறைகள்போக

வேலை நாட்கள் =  300

சராசரி தினசரி விற்பனை = ரூ. 3,30,000/300

= ரூ. 1,100 கோடி

* தினசரி வசூலாகவேண்டிய பணம் = ரூ. 1,100 கோடி

ரிலையன்ஸின் ஃபைனான்ஸ் துறை, தினமும் ரூ.   1,100 கோடி வசூலாகிறதா என்று பார்க்கவேண்டும்.

ரிலையன்ஸ் தங்கள் பொருட்களை விற்கும் கடைகளுக்கு 30 நாட்கள் கடன் வசதி தருகின்றன. சரி, எல்லா வாடிக்கையாளர்களும் 30 நாட்கள் முடிந்தவுடன் பணம் தரவில்லை. ஒருநாள் தாமதமாகத் தருகின்றனர். ஒரு நாள், ஒரே ஒருநாள்தானே என்று நிதி நிர்வாகி அசால்டாக இருந்தால் என்ன விளைவு தெரியுமா?

வங்கி வட்டி ஆண்டுக்கு 10 சதவிகிதம். ஒரு நாளுக்கு 10 சதவிகிதம்.   365

ரூ. 1,100 கோடி ஒருநாள் முன்னால் கிடைத்தால், ரிலையன்ஸ் கம்பெனிக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?

1,100 கோடிக்கு ஒருநாள் வட்டி =        1,100 X10 = ரூ. 30,13,699
                                                                                ..............................................
                                                                                           100 X 365

வரவேண்டிய பணம் தாமதமாகும் ஒவ்வொருநாளும் ரிலையன்ஸுக்கு 30,13,699 ரூபாய் நஷ்டம்.  

இதேபோல ரிலையன்ஸ் தரவேண்டிய பணம் ஒருநாள் தள்ளித் தந்தால்,    8,21,918 ரூபாய் வட்டி கிடைக்கும். ஆக, வரவேண்டிய பணம் ஒருநாள் முன்னதாக வந்து, தரவேண்டிய பணம் ஒருநாள் பின்னதாகத் தந்தால், ரிலையன்ஸுக்குக் கிடைக்கும் லாபம், 30,13,699 8,21,918 = 38,35,617 ரூபாய்.

அம்மாடியோவ்! திறமையான நிதி நிர்வாகி தன் கம்பெனிக்கு இவ்வளவு லாபம் சேர்க்க முடியுமா?

MBA - மூன்றெழுத்து மந்திரம்

ஃபைனான்ஸ் மேனேஜர்களின் இன்னொரு முக்கிய பொறுப்பு, கிரயக் கணக்கீடு. அது என்ன? உற்பத்தி விலையைவிட விற்பனை விலை அதிகமாக இருந்தால்தான் லாபம் வரும். எனவே, உற்பத்தி விலை சரியாகத் தெரியவேண்டும். இந்தக் கணக்கிடும் முறையை, கிரயக் கணக்கீடு அல்லது கொள்முதல் கணக்கீடு (Cost Accounting) என்று சொல்வார்கள். கிரய விலையை எப்படி கண்டுபிடிப்பார்கள்? மூலப்பொருட்களின் விலை, இயந்திரத்தில் பொருளைத் தயாரிப்பதால் ஏற்படும் சேதாரச் செலவு, ஊழியர் இதற்காக எடுத்துக்கொள்ளும் நேரத்துக்கான ஊதியச் செலவு போன்ற பல ஐட்டங்களைக் கணக்கில் எடுத்து இந்தக் கிரய விலை கணக்கிடப்படும்.

கம்பெனியில் பணம் தொடர்பான எல்லா வேலைகளும் ஃபைனான்ஸ் டிபார்ட்மென்டின் பொறுப்புதான். புதுத் தொழிற்சாலை தொடங்க வேண்டும், புதுத் தொழிலில் இறங்கவேண்டும், பங்குச் சந்தை மூலமாகப் பொதுமக்களிடம் பணம் சேர்ப்பதா, இல்லை, வங்கிகளில் கடன் வாங்கலாமா? கம்பெனியின் சேமிப்புப் பணத்தைப் பயன்படுத்தலாமா? வரவு, செலவுகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்து, ஆலோசனை சொல்வது ஃபைனான்ஸ் வல்லுநர்கள்தாம்.

கம்பெனிகளில் வரவும் செலவும் ஒரே சீராக இருக்காது. நம் விற்பனைக்கு மாதத்தின் இரண்டாம் வாரம்தான் பணம் வரும். ஆனால், முதல் வாரத்தில் சம்பளம் தரவேண்டும். இதற்கு வங்கிக் கடன் ஏற்பாடு செய்யவேண்டும்.

கம்பெனி கணக்கு வழக்குகளை எப்போதும் சீராக, தயார் நிலையில் வைத்திருப்பது, அரசாங்க விதிகளுக்கு ஏற்ப, அரசுத் துறைகள், பங்குச் சந்தை, பங்குதாரர்கள் ஆகியோருக்கு விவரங்களை வழங்குவது போன்றவையும் நிதி நிர்வாகிகளின் கடமை.

முன்னாட்களில் தொழில்முனைவர்கள் கம்பெனி தொடங்குவார்கள். அவை வளரும். ஆனால், சமீப காலமாக சில கம்பெனிகள் போட்டிக் கம்பெனிகளையும்,  தங்கள் தொழிலோடு தொடர்பு கொண்ட கம்பெனிகளையும் வாங்கி, தங்களோடு இணத்துக்கொண்டு பிரமாண்ட மாகிறார்கள். கம்பெனிகள் இப்படி வளரும் முறை ஒருங்கிணைத்தலும் கையகப்படுத்தலும் (Mergers and Acquisitions) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு நிதித் துறை அறிவாளிகளின் திறமை அவசியம். பெரிய, பெரிய தொழில்களையும் தாண்டி, இன்றைக்கு ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆகியவற்றில் முதலீடு செய்வது சாதாரண மனிதர்களின் அன்றாட விஷயமாக மாறிவிட்டது. இவர்களுக்கும் எம்.பி.ஏ. படித்தவர்கள் வழிகாட்டுகிறார்கள். இதனால்தான் Private Wealth Management, Private Equity Finance, Security Analysis and Portfolio Management, Financial Services, Fixed Income Securities and Derivatives, New Generation Investment Products போன்ற பாடங்கள் விருப்பப் படிப்புகளாக இரண்டாம் வருடத்தில் அளிக்கப்படுகின்றன.

பிசினஸ்களின் நிதி நிர்வாகத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்களுக்கு ஏற்ப,  எம்.பி.ஏ. கல்லூரிகளின் படிப்புத் திட்டங்களும் மாறிக்கொண்டு வருகின்றன.

(கற்போம்)
படம்: க.ரமேஷ்.

நீங்களும் நாங்களும்!

இந்த தொடரில் இதுவரை வந்த அத்தியாயங்களை vikatan.com/mba ; என்ற இணையதளத்திலும் படிக்கலாம். இந்த தொடர் பற்றி நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை, சந்தேகங்களை

vikatan.com/mba என்ற இணையதளத்தில், அதற்கான இடத்தில் பதிவு செய்யலாம். உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் மேனேஜ்மென்ட் நிபுணர் எஸ்.எல்.வி.மூர்த்தியே பதில் சொல்வார்.