இரா.ரூபாவதி படம்: ப.சரவணக்குமார்.
##~## |
புதிதாக வேலைக்குச் சேரும்போது பல விஷயங்களைக் கவனிக்கவேண்டி இருக்கும். சம்பளம், வேலை நேரம் ஆகியவற்றோடு அக்ரிமென்டையும் கவனிப்பது முக்கியம். சில நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் எடுப்பதற்கு முன் அக்ரிமென்ட் போடுவதை வழக்கமாக வைத்துள்ளன. இந்த அக்ரிமென்டில் கையெழுத்து போடும்முன் என்னென்ன விஷயங்களை எல்லாம் கவனிக்கவேண்டும், அக்ரிமென்டில் இருக்கும் சிக்கல் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே.எம். ரமேஷ்.
''இந்திய சட்டப்படி அக்ரிமென்ட் என்பது சாதாரண விஷயம்தான். அதாவது, இரண்டு நபர் இணைந்து எந்தவிதமான வற்புறுத்தலும் இல்லாமல் தங்களுக்குள் போட்டுக்கொள்வதுதான் அக்ரிமென்ட். இந்த அக்ரிமென்ட் பல விஷயங்களுக்கும் போடப்படுகின்றன. பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுக்கும்போது இதுபோன்ற அக்ரிமென்ட் போடுவதைக் கட்டாயமாக வைத்துள்ளன. இதன் மூலம் நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு கிடைப்பதாக அந்த நிர்வாகங்கள் உணர்கின்றன. காரணம், அக்ரிமென்ட் போடும்போது எந்த ஊழியராலும் எளிதில் வேலையைவிட்டு செல்ல முடியாது. அப்போது நிறுவனங்கள் தங்கள் எதிர்காலத்தை இன்னும் தெளிவாகத் திட்டமிட முடியும்.
தவிர, ஒரு நிறுவனம் தனது ஊழியருக்கு அளிக்கும் பயிற்சியை மிக முக்கியமானதாக கருதுகிறது. எந்த வேலையாக இருந்தாலும் அதை விரைவாகவும், முழுமையாகவும் முடிக்க பயிற்சி கட்டாயம் வேண்டும். என்னதான் படித்துவிட்டு வந்தாலும், பயிற்சி பெற்றபிறகுதான் ஒரு நிறுவனத்துக்கு ஏற்ற மாதிரி வேலை பார்க்க முடியும். ஊழியர்களுக்குப் பயிற்சி தர பல நிறுவனங்கள் அதிக பணத்தைச் செலவழிக் கின்றன. ஆறு மாதகாலம் நடக்கும் இந்தப் பயிற்சி காலத்தில் ஊழியர்களுக்குச் சம்பளமும் தரப்படுகிறது. எனவே, அந்த நிறுவனங்கள் இதை ஒரு முதலீடாகவே பார்க்கின்றன.

பயிற்சி பெற்ற ஊழியர்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது வேலை பார்க்கவேண்டும் என்றுதான் பல நிறுவனங்கள் நினைக்கின்றன. இதனால்தான் அக்ரிமென்டில் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் வேலை பார்க்கவேண்டும் என்றும், ஒருவேளை வேலையைவிட்டு செல்வதாக இருந்தால் பயிற்சி அளிப்பதற்காக செலவு செய்யப்பட்ட தொகை மற்றும் ஒவ்வொரு மாதமும் தரப்பட்ட சம்பளம் ஆகியவற்றை திரும்பத் தரவேண்டும் என அக்ரிமென்டில் ஒரு தொகையைக் குறிப்பிடு கின்றன. இந்த விதியை மீறி, வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போனால், ரிலீவிங் லெட்டர் தர நிறுவனங்கள் மறுக்கின்றன.
ஒரு சிலர் ரிலீவிங் லெட்டர் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவதால், பயிற்சியில் சேரும் முன்பே, ஊழியர்களின் பெற்றோர்களின் பெயரில் இருக்கும் சொத்து விவரங்களையும், ஆவணங்களையும் சில நிறுவனங்கள் கேட்கின்றன. அவர்கள் கேட்கும் ஆவணங்களைத்

தந்துவிட்டால், பிற்பாடு அவர்கள் சொல்லும் அத்தனை விஷயங்களுக்கும் கட்டுப்பட்டு நடக்கவேண்டிய கட்டாயம் உருவாகிவிடும்.
அக்ரிமென்டில் கையெழுத்துப் போடும் முன்பே அதில் குறிப்பிட்டிருக்கும் தொகை எவ்வளவு என்பதைப் பார்த்து, அது அதிகமாக இருந்தால், இவ்வளவு பணம் தர இயலாது என்று சொல்லலாம். உங்கள் உழைப்பு அந்நிறுவனத்துக்கு தேவை எனில், இந்தத் தொகையைக் கட்டாயமாகக் குறைப்பார்கள்.
மேலும், முடிந்தவரை எந்தவிதமான ஆவணங்களின் ஒரிஜினலையும் தராமல் இருப்பது நல்லது. நகல் தருவதையும் தவிர்க்கலாம். அதேபோல, அக்ரிமென்டில் பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர் யாரும் கையெழுத்துப் போடுவதையும் தவிர்ப்பது நல்லது.
இன்னும் சில நிறுவனங்கள், வேலையை விட்டுச் செல்லும்போது போட்டி நிறுவனங் களில் வேலைக்குச் சேரக்கூடாது என்றும் அக்ரிமென்டில் சொல்கின்றன. இந்த விதிமுறையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. அப்படி நீங்கள் கையெழுத்துப் போட்டால், பிற்பாடு ஒன்றும் செய்ய முடியாது. வேலைக்கான அக்ரிமென்டில் தெரியாத்தனமாக கையெழுத்துப்போட்டுவிட்டால், அடுத்த
24 மணி நேரத்திற்குள் அதை ரத்து செய்யலாம்'' என்று முடித்தார்.
வேலை கிடைத்தால் போதும் என்றில்லாமல் அதனால் என்னென்ன பிரச்னைகள் வரும், அதிலிருந்து தப்பிப்பது எவ்வாறு என்று யோசிப்பது அவசியம்!