மனிதவள மேம்பாடு !
##~## |
உங்கள் வீட்டுக்கு டி.வி. வாங்கவேண்டும். உங்கள் வீட்டுக்கு அருகே இரண்டு கடைகள் இருக்கின்றன. இரண்டு கடைகளிலும் எல்லா பிராண்ட் டி.வி.களும் விற்கிறார்கள்.
இரண்டு கடையிலும் ஒரே விலை. ஆனால், ஒரு கடையில் ஊழியர்கள் அன்போடு உங்களை வரவேற்று, பொறுமையோடு உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்வார்கள். இரண்டாவது கடையில் வாடிக்கையாளர்கள் கேட்கிற கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்காது.
நீங்கள் எந்த கடைக்குப் போய் டி.வி. வாங்குவீர்கள்? முதல் கடையில்தானே? எல்லா பிசினஸ்களுக்கும் பொருந்தும் உண்மை இது.
ஒரு நிறுவனம் தொடர்ந்து லாபகரமாக இயங்க வேண்டுமானால், பெரும் முதலீடும், புத்திசாலித்தனமான செயல்திட்டமும் மட்டும் போதாது. அங்கே பணிபுரிபவர்கள் அதிகபட்சத் திறமையுடன், முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்யவேண்டும். இதை எப்படி சாதிக்க முடியும்? அந்த வழிதான் ஊழியர் நிர்வாகம்.
ஊழியர் நிர்வாகம் (Personnel Management),, மனிதவள மேம்பாடு (Human Resource Development),, மனித முதலீட்டு நிர்வாகம் (Human Capital Management) என பல பெயர்களில் இத்துறை அழைக்கப்பட்டாலும், இன்று இதன் செல்லப் பெயர் ஹெச்.ஆர். (Human Resource) ஒரு நிறுவனத்தில் ஹெச்.ஆர். துறையின் கடமைகள் என்னென்ன என்று பார்க்கலாமா?

ஒவ்வொரு வேலையையும் கூறுபோட்டு ஆராய்ந்து வேலைகளை வடிவமைத்தல்; எந்தெந்த வேலைகளுக்கு எப்படிப்பட்ட, எத்தனைபேர், எப்போது தேவை என்று கணக்கிடுதல்; அவர்களைத் தேர்ந்தெடுத்தல்; அவர்களுக்குப் பயிற்சி தந்து, வேலைகளுக்குத் தயாராக்குதல்; அவர்களின் வேலைச் செயல்பாட்டை மதிப்பீடு செய்தல்; நன்கு பணியாற்றுபவர்களுக்குத் தகுந்த ஊதியம் மற்றும் பதவி உயர்வுகள் தருதல்; எதிர்பார்த்தபடி, பணி புரியாதவர்களை வழிக்குக் கொண்டு வருதல்; ஊழியர்களின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உதவுதல்; வேலைச் சூழலில் முன்னேற்றம் செய்தல்; விடுமுறை, மருத்துவ உதவிகள் போன்ற அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுதல்; ஊழியர்கள் குறித்த பதிவேடு களைப் பராமரித்தல்; தொழிற்சாலைகள் சட்டம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் நியதிகளுக்கு ஏற்றவாறு நிறுவனம் இயங்க வழி வகுத்தல்; நிறுவனத்தில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலைநிறுத்துதல்; யூனியனுடன் தொடர்புகளை வளர்த்தல், அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துதல்.
இவற்றைபற்றி எல்லாம் ஓரளவு தெரிந்து வைத்திருப்பீர்கள். முழுமையாக அறியப்படாத சில பணிகள் பற்றி இங்கே பார்ப்போம்.
ஊழியர்கள் தேவையைக் கணக்கிடுதல்!

நீங்கள் பிளாஸ்டிக் கச்சாப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துகிறீர்கள். உங்களுக்கு நான்கு போட்டியாளர்கள். உயர்ந்த தரம், நியாயமான விலை, தலைசிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றால் மட்டுமே ஆர்டர்கள் வாங்கமுடியும் என்பது உங்கள் கணிப்பு. விற்பனைப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். உங்களை எதிர்நோக்கும் இரண்டு கேள்விகள்:
1. எத்தனை விற்பனைப் பிரதிநிதிகள் தேவை?, 2. அவர்களுக்கு என்னென்ன குணாதிசயங்கள் இருக்கவேண்டும்?
இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
எத்தனை விற்பனைப் பிரதிநிதிகள் தேவை என்று எப்படி கண்டுபிடிக்க, நாம் முன்பு பார்த்த ஃப்ரெடரிக் டெய்லரின் நேர இயக்க நுண்ணாய்வு கொள்கையை (Time and Motion Study) பயன்படுத்தவேண்டும்.
உயர்ந்த தரம், நியாயமான விலை, தலைசிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவை நம் அடிப்படைக் கொள்கைகள். நம் விற்பனைப் பிரதிநிதிகள் இந்தக் குறிக்கோள்களைப் பிரதிபலிக்கவேண்டும். இதற்காக அவர்களிடம் இருக்கவேண்டிய குணங்கள்:
தரமான பொருட்களை வாங்கும் மனப்பாங்கு (தரமான பொருட்களை வாங்குபவர்கள்தாம் தரமான பொருட்களை விற்கவும் ஏற்றவர்கள்), பிறருக்கு மரியாதைக் கொடுத்தல், உதவும் குணம், பேச்சுத்திறமை, தேர்ந்தெடுத்தல்.
நம் தேவைகளை விளக்கி விளம்பரம் செய்ய வேண்டும். இவற்றுக்கு வரும் விண்ணப்பங்களை வடிகட்டி, நேர்காணலுக்கு அழைக்கவேண்டும். அப்போது, ஹெச்.ஆர். நிர்வாகிகள் பயன்படுத்தும் சில தேர்வுமுறைகள் இவைதாம்:
அறிவுக்கூர்மைத் தேர்வுகள் (Intelligence Tests),, உணர்வு சமநிலைத் தேர்வுகள் (Emotional Quotient Tests) மனோதத்துவத் தேர்வுகள் (Psychological Tests), குழுசார்ந்த உரையாடல்கள் (Group Discussions), நேர்முகப் பேட்டிகள் (Personal Interviews).

பயிற்சி !
பணியாளர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டோம். அவர்களை நம் நிறுவனத்துக்கும், ஏற்கப்போகும் வேலைக்கும் முழுக்கப் பொருந்தச் செய்ய வேண்டாமா? இதற்கு, பழக்கப்படுத்துதல் (Orientation) என்னும் முறையை ஹெச்.ஆர். துறையினர் பயன்படுத்துகிறார்கள். நிறுவனம், போட்டியாளர்கள், வேலை பொறுப்புகள், அதிகாரங்கள், மேலதிகாரிகள், அவர்களின் கீழ் பணியாற்றப் போகிறவர்கள், வேலை தொடர்பாக உறவு வைத்துக்கொள்ளவேண்டிய பிற துறை ஊழியர்கள் - ஆகியவை தொடர்பான விவரங்களை ஹெச்.ஆர். துறையினரோடு பகிர்ந்துகொள்வார்கள். பயிற்சி என்பது ஒருமுறை மட்டும் தந்து நிறுத்திவிட முடியாது. ஊழியர்களின் அறிவையும் திறமையையும் எப்போதும் வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு அடிக்கடி பயிற்சி தந்து கொண்டே இருக்கவேண்டும். இதுவும்
ஹெச்.ஆரின் வேலைதான்!
செயல்முறை மேம்பாடு!
ஊழியர்கள் அர்ப்பணிப்போடு தங்கள் முழுத்திறமையையும் காட்டுவதற்கு, பீட்டர் டிரக்கர் என்ற அமெரிக்க நிர்வாக மாமேதையின், இலக்குகள்படி நிர்வாகம் (Management by objectives) கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது என்று நாம் பார்த்திருக்கிறோம்.
இந்த இலக்குகள் எப்படி இருக்கவேண்டும் தெரியுமா? ஸ்மார்ட்டாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார் பீட்டர் டிரக்கர். SMART என்றால்..?
S - Specific(தெளிவாய்க் குறிப்பிடக்கூடிய),
M - Measurable (அளவிடக்கூடிய),
A - Achievable(நிறைவேற்றக்கூடிய),
R - Realistic(நடைமுறைக்கு இயைந்து வரக்கூடிய),
T - Timerelated (காலக்கெடு வரையறுக் கப்பட்ட).
இதுதான் SMART இலக்குகள். இதை நிர்ணயிக்க, ஹெச்.ஆர். அதிகாரிகள்தாம், மார்க்கெட்டிங், உற்பத்தி, ஃபைனான்ஸ் போன்ற பிற துறை மேனேஜர்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.
ஊழியர் மதிப்பீடு!
நன்றாகப் படித்து, நிறைய மார்க் வாங்கும் மாணவனுக்கு பரிசு கிடைக்கும். படிப்பில் கவனம் செலுத்தாத மாணவனுக்கு திட்டு கிடைக்கும். கம்பெனிகளிலும் இதுதான் நடக்கிறது. உண்மையான உழைப்பாளிகளை அடையாளம் காணவேண்டும். இதற்கு அவர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த மதிப்பீட்டு முறைகளைச் செயல்படுத்த உதவுபவர்கள் ஹெச்.ஆர்.
திறமைக்குக் கிரீடம் சூட்டுதல்!
திறமை கொண்டவர்களுக்கும், கடுமையாக உழைப்பவர்களுக்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகிய பயன்கள் கொடுத்து ஊக்கம் அளிக்கவேண்டும். ஊதிய நிர்ணயத்தில்
ஹெச்.ஆர். துறையினருக்கு முக்கியமான பங்கு உண்டு. இதற்காக அவர்கள் பல அம்சங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
அதிக சம்பளம் தந்தாவது, மிக உயர்ந்த திறமைகொண்டவர்களை மட்டுமே சில நிறுவனங்களில் வேலைக்கு எடுப்பதை நிறுவனக் கொள்கையாக வைத்திருப்பார்கள். - பலருக்கும் தெரியாத, புதிய கம்பெனி எனில், அதிக சம்பளம் தரத்தான் வேண்டும். - வசதி குறைந்த இடங்களில் உங்கள் தொழிற்சாலை இருந்தால், அதிகச் சம்பளம் தந்தாகவேண்டும். நீங்கள் தரும் சம்பளம் போட்டி கம்பெனி சம்பளத்தோடு குறைவாக இருக்கக்கூடாது.
ஹெச்.ஆர். துறையில் இப்படி பல முக்கிய வேலைகள். இவை அத்தனையையும் கச்சிதமாகச் செய்ய, எம்.பி.ஏ. படிப்பின் முதல் வருடத்தில் பெர்சனல் மேனேஜ்மென்ட், இரண்டாம் வருடத்தில் Recruitment & Selection, Training & Development, Performance Management, Compensation Management, Labour Laws, International HR Management ஆகிய பாடங்கள் போதுமான அறிவையும், திறமைகளையும் தருகின்றன.
(கற்போம்)
படங்கள்: இ.ராஜவிபீஷிகா.
