மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஸ்ட்ராடஜி - பிசினஸ் தந்திரங்கள் !

கம்பெனிகள் ஜெயித்த கதை படம்: ரா.மூகாம்பிகை.

##~##

நீங்கள் யார், உங்கள் போட்டியாளர்கள் யார் என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து ஒரு ஸ்ட்ராடஜியை அமைத்துவிட்டால் மட்டும் போதாது, அதைச் செயல்படுத்துவது முக்கியம். நீங்கள் உருவாக்கிய ஸ்ட்ராடஜி உங்கள் நிறுவனத்துக்குப் பொருந்தி வருகிறதா, உங்கள் தொழில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்த ஸ்ட்ராடஜி பொருந்தி வருகிறதா என்று பார்க்கவேண்டும்.

உங்கள் நிறுவனம் முழுமைக்கும் சேர்த்து மொத்தமாக ஒரு ஸ்ட்ராடஜியை, இலக்கை நிர்ணயம் செய்தபின், அதை உங்கள் நிறுவனத்தில் இருக்கும்

ஹெச்.ஆர்., ஃபைனான்ஸ், மார்க்கெட்டிங், புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைவர்களுக்கும் சொல்லி, அதற்கு அவர்களைத் தயார்படுத்தவேண்டும்.

ஆனால், பல நிறுவனங்களில் இப்படி செய்யாததால், ஒவ்வொரு டீமும் ஒவ்வொரு திசையை நோக்கி நடந்துகொண்டிருக்கும். கல்யாண வீட்டில் கச்சேரி நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்த ஆர்க்கெஸ்ட்ரா குரூப்பில் இருக்கும் அனைவரும் ஒரே சீராக வாசிக்கவேண்டும். மின் இணைப்பு, ஸ்பீக்கர்கள் சரியாக இயங்கவேண்டும். இத்தனையும் சரியாக இருந்தால் மட்டுமே அந்த வாசிப்பு இசையாக இருக்கும். இல்லை எனில் அது வெறும் சத்தமா கவே இருக்கும். இசை என்கிற பெயரில் சில நிறுவனங்கள் வெறும் சத்தத்தையே எழுப்பச் செய்கின்றன.

நிறுவனத்தின் இலக்கு, அதற்கான திட்டம் என்ன என்பதை நிறுவனத்தின் ஒவ்வொரு துறைத் தலைவரும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு, குறைந்த விலையில் செல்போன் விற்கும் பிசினஸை நீங்கள் செய்யப் போகிறீர்கள் எனில், முதலில் அதை உங்கள் ஹெச்.ஆர்.-க்கு தெரியப்படுத்த வேண்டும். இல்லையெனில் உங்கள் ஹெச்.ஆர். ஐ.ஐ.டி.யிலும், ஐ.ஐ.எம்.யிலும் ஆட்களை எடுப்பார். அப்போது உங்கள் செலவு அதிகரிக்கும். ஹெச்.ஆரிடம் சொல்லிவிட்டால், சாதாரண கல்லூரிகளில் இருக்கும் திறமையான மாணவர்களை எடுப்பார். அவர்களுக்கு கணிசமான சம்பளம் தந்தாலே போதும். இதுபோல, ஒவ்வொரு துறை தலைவர்களின் கவனத்துக்குச் செல்லும்போதும் சரியாகத் திட்டமிடுவார்கள்.

ஸ்ட்ராடஜி - பிசினஸ் தந்திரங்கள் !

சரி, உங்களது ஆர்க்கெஸ்ட்ராவில் அனைவரும் சரியாக வாசிக்கிறார்கள். ஆனால், தார் பாலைவனத்தில் இசைக் கச்சேரி நடந்து யாருக்கு என்ன பிரயோஜனம்? உங்களது திட்டங்கள் சுற்றுப்புற சூழ்நிலைகளை கவனத்தில் கொள்வதாக இருக்க வேண்டும்.  

உதாரணத்துக்கு, ஒரு ஆயில் அண்ட் கேஸ் நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். பெட்ரோலின் விலை உயர்ந்தாலும் குறைந்தாலும்  வாடிக்கையாளர்கள் வாங்கித்தான் ஆகவேண்டும். அதேபோல,  இன்னொரு நிறுவனம் இத்தொழிலில் நுழைந்து ஆரம்பிப்பது கடினம். போட்டி நிறுவனங்களும் குறைவுதான். ஒரே விஷயம், திறமையான பணியாளர்கள் கிடைப்பதும், மூலப்பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதும்தான். இந்த வெளிப்புற சூழ்நிலையை மனதில் வைத்து உங்களது திட்டம் இருக்க வேண்டும்.

உங்கள் நிறுவனத்தின் உட்புறச் சூழ்நிலையையும், வெளிப்புறச் சூழ்நிலையையும் மனதில் வைத்து நீங்கள் அமைக்கும் ஸ்ட்ராடஜி எல்லா காலத்துக்கும் பொருந்தி வருகிற மாதிரி சரியானதாக இருக்கவேண்டும். பொருந்தி வருவதில் பிரச்னை என்றால், யோசிக்காமல் அதை தூக்கி எறிந்துவிட்டு, புதிய ஸ்ட்ராடஜியை உருவாக்கவேண்டும். இல்லை எனில், உங்களை உயர்த்திய அதே ஸ்ட்ராடஜி உங்களைத் தோல்வி அடைய செய்துவிடும்.

ஸ்ட்ராடஜி - பிசினஸ் தந்திரங்கள் !

முன்பு வேலைக்கு ஆட்களை எடுக்க பத்திரிகைகளில் விளம்பரம் தருவார்கள். பிறகு வேலைக்கு ஆட்களை எடுக்க என தனியாக இணையதளங்கள் வந்தன. இப்போது அதையும் தாண்டி, ஃபேஸ்புக், லிங்க்டுஇன் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள். இதனால், விளம்பரச் செலவு வெகுவாகக் குறைகிறது.

இந்த காலவோட்டத்துக்கேற்ப நீங்கள்  உங்கள் ஸ்ட்ராடஜியை மாற்றவில்லை எனில் தோற்றுப் போவீர்கள் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். அமெரிக்காவில் கூர்ஸ் பீர் (சிஷீஷீக்ஷீs தீமீமீக்ஷீ) என்பது படுபிரபலம். அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் எங்கே போனாலும் இந்த பீரை விரும்பி எடுத்துச் செல்வாராம். இந்த பீர் பதப்படுத்தப்பட்டதல்ல. எனவே, நீண்டகாலத்துக்கு தாங்காது. இருந்தாலும் இந்த பீர் மிகவும் பிரபலம் என்பதால்,  அமெரிக்காவின் மற்ற நகரங்களுக்கு கடத்த ஆரம்பித்தார்கள். இதைத் தடுக்க, 'சில நகரங்களில் விற்பனையாகும் எங்கள் பீர்களை வாங்கவேண்டாம்’ என்று விளம்பரம் செய்தது அந்நிறுவனம்.  

ஆனால், பிற்பாடு பதப்படுத்தப்பட்ட பீர் வந்தபிறகு, மக்களின் ரசனை மாறியது. தவிர, போட்டி நிறுவனங்கள் புதிய ஸ்ட்ராடஜியைக் கொண்டு வந்ததால், கூர்ஸ் நிறுவனத்தின் விற்பனை வேகமாக சரிந்தது. மேலும், இந்நிறுவனமே அத்தனை வேலைகளையும் செய்ததால், ஓர் அளவுக்கு மேல் உயர முடியவில்லை. உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் ஊற்று நீரைத்தான் இந்த நிறுவனம் பயன்படுத்தியது; பார்லியை இவர்களே விளைவித்தார்கள். ஒரு காலத்தில் இந்த நிறுவனத்துக்கு எந்த விஷயம் சாதகமாக இருந்ததோ, அந்த விஷயமே பிறகு அந்நிறுவனத்தைச் சரித்துவிட்டது.

இதுபோல இன்னும் பல கேஸ் ஸ்டடிகள் வரும் வாரங்களில்...

(வியூகம் அமைப்போம்)