மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விரும்பிய நேரத்தில் வேலை !

இரா.ரூபாவதி.

##~##

சமீபகாலமாக ஃப்ளெக்ஸி டைம் ஜாப் (Flexi Time job)என்கிற விஷயம் பாப்புலராகி வருகிறது. அது என்ன ஃப்ளெக்ஸி டைம் ஜாப் என அவதார் நிறுவனத்தின் தலைவர் சௌந்தர்யா ராஜேஷிடம் கேட்டோம். தெளிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

விரும்பும்போது வேலை..!

''உலக அளவில் வெறும் 28 சதவிகித பெண்கள் வேலை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். இதில் சுயதொழில் செய்பவர்களும் அடக்கம். உலக அளவைவிட தமிழகத்தில் அதிகமான பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். இதில் வேலை பார்க்கும் பெண்களில் 45 சதவிகிதத்தினர் 20 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்கிறார்கள். இதற்கு அதிகமான வயதில் வேலை பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை குறைவுதான். இதற்கு முக்கிய காரணம், பெண்களின் குடும்ப பொறுப்புதான். இதனால் அவர்கள் எந்தவிதமான அலுவலக வேலையையும் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். இதில் ஒரு சில பெண்களே குடும்பம், வேலை என இரண்டையும் சமாளித்து, திறமையாகச் செயல்படுகிறார்கள்.

உங்களால் எந்த நேரத்தில் வேலை செய்ய முடியும் என்பதை மட்டும் சரியாகத் திட்டமிட்டு கண்டுபிடித்து, அந்த நேரத்தில் வேலை பார்ப்பதற்கு பல வேலைகள் உள்ளன. அதாவது, தினமும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அதன்பிறகு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலை பார்க்கலாம். மேலும், அலுவலகத்திற்கு எல்லாம் வர முடியாது. வீட்டில் இருந்தபடிதான் வேலை செய்யமுடியும் என்றாலும், அதற்கும் வேலை உள்ளது.  

விரும்பிய நேரத்தில் வேலை !

யாருக்கு கிடைக்கும்?

விருப்ப நேர வேலை என்பது முன் அனுபவம் உள்ள பெண்களுக்கு மட்டும்தான் கிடைக்கும்.   வீட்டில் இருந்து விருப்பமான நேரத்தில் வேலை செய்வது எனில், அது டேட்டா என்டரி வேலையாகவே இருக்கும் என பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. ஐ.டி., நிதித் துறை சார்ந்த வேலைகள், கஸ்டமர் சர்வீஸ், பி.ஆர். வேலை என பல வேலைகள் இவர்களுக்காக காத்திருக்கின்றன. இதில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை எனில், புரோகிராம் எழுதும் வேலை தவிர, குவாலிட்டி, டெஸ்டிங் போன்ற வேலைகளைத் தருகிறார்கள். இது போலவே பி.ஆர். வேலையும் ஊடகங்கள் சார்ந்த வேலைகள், அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் புதிய புதிய செய்திகளை அப்டேட் செய்வது, ப்ரௌஸர் தயாரிப்பது போன்ற வேலைகள் அதிகமாக இருக்கும். இந்த வேலைகளை வீட்டில் இருந்தபடியோ அல்லது விருப்பமான நேரத்திற்கோ வேலைக்குச் சென்று செய்யலாம். இதுபோன்ற விருப்பமான நேர வேலையிலும்

விரும்பிய நேரத்தில் வேலை !

தங்களின் திறமையை சரியாக வெளிப்படுத்தி சிறப்பாக பெண்கள் வேலை பார்க்கிறார்கள்.

சம்பளம் எவ்வளவு?

விருப்பமான நேரத்திற்கு வேலைக்குச் செல்வது அல்லது விரும்பிய நேரத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்ய நினைப்பவர்களுக்கு குறைந்த அளவு சம்பளமே கிடைக்கும். ஒரு மாதம் வாங்கும் சம்பளத்தில் பாதி அல்லது அதற்கு சற்று அதிகமாக மட்டுமே கிடைக்கும்.

ஆனால், இதில் வேலை அனுபவம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இதனால் எதிர்காலத்தில் முழுநேர வேலைக்கு உயர்ந்த பதவிக்குச் செல்லும்போது இந்த அனுபவங்கள் கைகொடுக்கும்'' என்று  முடித்தார் அவர்.

 ''மகிழ்ச்சியாக வேலை செய்கிறேன்!''

பிரியா, பெங்களூரு.

விரும்பிய நேரத்தில் வேலை !

''நான் காலை 9 மணியிலிருந்து மூன்று மணி வரை மட்டுமே அலுவலகத்தில் வேலை பார்ப்பேன். அதன்பிறகு எனக்கு வீடுதான் எல்லாம். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதால் என்னால் முழுநேரமும் வேலைக்குச் செல்வது என்பது இயலாது. ஒன்பது வருடங்கள் முன் அனுபவம் இருந்தது.  சென்னையில் உள்ள எம்.என்.சி. நிறுவனங்களில் வேலை பார்த்திருந்தேன். இதனால் என்னால் விருப்ப நேரத்தில் வேலை பார்ப்பது என்பது மிக எளிதாக உள்ளது. இதில் சம்பளம் என்பது குறைவாக இருந்தாலும், அது எனக்கு பிரச்னை இல்லை. ஏனெனில், என்னால் எனக்கு விருப்பமான துறையில் தொடர்ந்து இருக்க முடிகிறது. அந்தத் துறை சார்ந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிவதால் மகிழ்ச்சியாக வேலை செய்கிறேன்'' என்றார்.