கருத்துப் பரிமாற்றம் !
##~## |
எம்.பி.ஏ. படித்தவர்கள் உயர்ந்த பதவிகளில் சேருகிறார்கள். இளம்வயதிலேயே நிறுவனங்களின் தலைமைப் பதவி பலரைத் தேடி வருகிறது. மார்க்கெட்டிங் நிர்வாகியாக நீங்கள் ஒரு கம்பெனியில் சேருகிறீர்கள். ஐந்து வருடங்களில் மார்க்கெட்டிங் மேனேஜர். பத்து வருடங்களில் ஜெனரல் மேனேஜர். அடுத்த பத்து வருடங்களில் நீங்கள்தான் சி.இ.ஓ.
உங்கள் தாத்தா, அப்பா, பார்த்த, பார்க்கும் வேலைகள் பற்றி அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். இருபது, இருபத்தைந்து வயதில், அவர்கள் ஜூனியராக வேலைக்குச் சேர்ந்திருப்பார்கள். திறமையாக, கடுமையாக உழைத்து நிறுவன ஏணியில் மெள்ள மெள்ள உயர்ந்து வந்திருப்பார்கள். ஆனால், எம்.பி.ஏ. படித்த நீங்களோ, இருபது வயதில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறீர்கள். நூற்றுக்கும் மேலானவர்கள் உங்களின் கீழ் வேலை பார்க்கிறார்கள். இவர்களுள் பலர் உங்கள் அப்பா வயதில்கூட இருக்கலாம்.
இன்றைய காலகட்ட வேலைகளுக்கும், நம் பெற்றோர் பார்த்த வேலை களுக்கும் இன்னொரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. 'காக்னிசன்ட், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ்., விப்ரோ போன்ற சாஃப்ட்வேர் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களோடு அடுத்தமுறை பேசும்போது கவனித்துப்பாருங்கள். 'என் வேலை’ என்றே சொல்லமாட்டார்கள்; 'எங்கள் வேலை’, 'எங்கள் டீம்’ என்றுதான் பேசுவார்கள். சாஃப்ட்வேர் கம்பெனிகளில் மட்டுமல்ல, எல்லா முன்னணி நிறுவனங்களிலும், மனிதர்கள் தனிப்பட்டவர்களாக, தீவுகளாக வேலை பார்த்த காலம் மலையேறிவிட்டது. குழுக்களாக, அணிகளாகத்தான் வேலை செய்கிறார்கள்.
இந்த இரு காரணங்களால், உங்கள் வேலையில் நீங்கள் ஜெயிக்கவேண்டுமானால், உயர்அதிகாரிகள், சகமேனேஜர்கள், கீழே பணியாற்றுபவர்கள் ஆகிய எல்லோருடைய மதிப்பையும், நம்பிக்கையையும் பெறவேண்டும்.
மார்க்கெட்டிங், ஆபரேஷன்ஸ்,
ஹெச்.ஆர்., ஃபைனான்ஸ், சிஸ்டம்ஸ் என்று மேனேஜ்மென்டின் எல்லாப் பிரிவுகளிலும் நீங்கள் கில்லாடியாக இருக்கலாம். ஆனால், இத்தனை அபார அறிவையும் நீங்கள் பயன்படுத்தவேண்டுமானால், உங்களிடம் சில குணங்கள் இருந்தே ஆகவேண்டும். அவை:
பிறர் கருத்தைக் கேட்கும் பழக்கம் (Listening), , பிறரைப் புண்படுத்தாமல் தன் கருத்துக்களை வலியுறுத்தும் வல்லமை (Assertiveness), தன் பேச்சுக்குப் பிறரை இணங்கவைக்கும் திறமை (Persuasive Skill)- இந்தத் திறமைகள் கம்யூனிகேஷன் (Communication) என்று அழைக்கப்படுகிறது.
கம்யூனிகேஷன் என்றால் 'பகிர்ந்துகொள்தல்’, 'கொடுத்தல்’, 'வெளிப்படுத்துதல்’ எனப் பல பொருட்கள். எனவே, கம்யூனிகேஷன் என்றால், எண்ணங்களையும், கருத்துக்களையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்தல் என்று பொருள்கொள்ளலாம். தமிழில் கருத்துப் பரிமாற்றம் என்று சொல்கிறோம்.
எல்லா எம்.பி.ஏ. கல்லூரிகளிலும், கம்யூனிகேஷன் ஒரு கட்டாயப் பாடம், முக்கிய பாடம். அப்படி கம்யூனிகேஷன் பற்றி என்னதான் சொல்லித் தருவார்கள்?
சாதாரணமாக, பிறரோடு நம் எண்ணங்களை எப்படி பகிர்ந்துகொள்கிறோம்? பேச்சு மூலமாக அல்லது எழுத்து மூலமாக. ஆகவே, கம்யூனிகேஷன் என்றாலே, அது மொழியோடும், வார்த்தைகளோடும் மட்டுமே தொடர்புடையது என்று நாம் நினைக்கிறோம். இந்த நினைப்பு தவறானது என்று மனோதத்துவ மேதைகளும், மேனேஜ்மென்ட் அறிஞர்களும் நிரூபித்துவிட்டார்கள்.

நம் எல்லோருடைய கருத்துப் பரிமாற்றங்களுக்கும் மூன்று அம்சங்கள் இருக்கின்றன. அவை:
* பேசும் விஷயம்
* சொல்லும் வார்த்தைகள்
* வார்த்தைகளின் தொனி
பேசும்போது நம்மை அறியாமலே நம் உடல், முகம் செய்யும் அசைவுகள் (இது உடல் மொழி (Body Language) என்று அழைக்கப்படுகிறது.
உங்கள் நண்பரோடு பேசுகிறீர்கள். இந்தக் கருத்துப் பரிமாற்றத்தால் நீங்கள் அவரிடம் ஏற்படுத்தும் பாதிப்பு 100 சதவிகிதம் என்று வைத்துக்கொள்வோம். இதில், ஒவ்வொரு அம்சமும் எத்தனை பாதிப்பை ஏற்படுத்துகின்றன தெரியுமா?
பேசும் விஷயம் - 7 %
சொல்லும் வார்த்தைகள் - 38 %
உடல் மொழி - 55 %

உடல்மொழி இத்தனை முக்கியமானது என்று நம்மில் ஏராளமானவர்களுக்குத் தெரியாது. இன்டர்வியூக்களுக்குப் போகும்போது, என்ன டிரெஸ் போடலாம், எப்படி தலை சீவலாம், எந்தக் கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்லவேண்டும் என்று நீங்கள் தயார்படுத்திக் கொள்வீர்கள். ஆனால், உங்களை இன்டர்வியூ செய்பவரை 55 சதவிகிதம் பாதிக்கப் போகிற உடல்மொழி சம்பந்தமாக நீங்கள் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. ஏனென்றால், உடல்மொழியின் பலம் பற்றி நம்மில் பலருக்குப் பெரிதாக எதுவும் தெரியாது.
உடல்மொழி பற்றிய பரிச்சயம் உள்ள எம்.பி.ஏ. பட்டதாரி, தன் கருத்துப் பரிமாற்றத்தில் உடல்மொழியில் அதிக கவனம் செலுத்துகிறான். வேலை பார்க்கும் நிறுவனத்தில் எளிதாகப் பிறரின் மதிப்பைப் பெறுகிறான். பிறரிடம் பேசும்போது, அவர்களுடைய உடல்மொழியைக் கவனித்து, தன் கருத்துக்களை அவர்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்று எடை போடவும் எம்.பி.ஏ. பட்டதாரியால் முடியும். ஏன் தெரியுமா? நம்மிடம் பிறர் பேசும்போது, பேசும் விஷயம், பயன்படுத்தும் வார்த்தைகள், தொனி ஆகியவற்றை அவர்களால் ஓரளவு மறைக்கமுடியும். உடல் அசைவுகளையும், முகபாவங்களையும் அப்படி மறைக்க முடியாது. இந்த உடல்மொழிகளில் ஒளிந்துகிடக்கும் அர்த்தங்கள் எம்.பி.ஏ. பட்டதாரிக்குப் புரியும்.
இப்படிப்பட்ட சில அர்த்தங்களை, ரகசியங் களை, நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன்.
அலுவலகத்தில் சகஊழியரோடு நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்களா? அவரை நன்றாகக் கவனியுங்கள்.
அவர் கண்கள் உங்கள் கண்களைப் பார்த்து பேசுகிறாரா? உங்கள் பேச்சை அவர் உன்னிப்பாகக் கேட்கிறார் என்று அர்த்தம்.
அவர் பார்வை எங்கெங்கோ போகிறதா? தலையைச் சரித்தபடி அவர் உங்கள் பேச்சைக் கேட்கிறாரா? - உங்கள் பேச்சு அவருக்கு போரடிக்கிறது.
நெஞ்சில் கை கட்டியபடி உங்கள் பேச்சைக் கேட்கிறாரா? - உங்கள் கருத்துக்களை ஏற்கும் மனநிலையில் அவர் இல்லை.
அவர் காதைத் தடவுகிறாரா, தாடையைச் சொறிகிறாரா? - உங்கள் பேச்சை அவர் நம்பவில்லை. இத்தனை சுவாரஸ்யமான உடல்மொழி பற்றி இன்னும் தெரிந்துகொள்ள நீங்கள் படிக்கவேண்டிய புத்தகம்:
The Definitive Book of Body Language by Barbara Pease. இந்தப் புத்தகத்தை வெளியிட்ட நிறுவனம்: Bantam.
எம்.பி.ஏ. படிப்பில் மாணவர்களின் பேச்சு, எழுத்து ஆகிய இரு திறமைகளும் பட்டை தீட்டப்படுகின்றன. எழுத்துத் திறமையை வளர்க்க Written Analysis and Communication என்ற கட்டாயப் பாடம் முதல் வருடத்தில் உண்டு.
உங்கள் எழுத்துத் திறமையையும் வளர்த்துக்கொள்ளவேண்டுமா? இதோ சில டிப்ஸ்.
உங்கள் எழுத்துக்களைப் படிப்பவர்கள், அந்த எழுத்துக்கள் மூலமாகத்தான் உங்களை எடை போடுகிறார்கள். உங்கள் எழுத்துக்கள் அத்தகைய ஆக்கப்பூர்வமான பிம்பத்தைப் (Positive image) படிப்பவர் மனங்களில் உருவாக்கவேண்டும்.

உங்கள் கருத்தோட்டம் தெளிவாக இருக்க வேண்டும்; படிப்பவரைக் குழப்பக்கூடாது. உங்கள் எழுத்து யாரைப் போய்ச் சேரவேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அவர்களுக்குப் புரியும்படி எழுதுங்கள். உங்கள் எழுத்தின் குறிக்கோள் உங்கள் கருத்தை அவர்களிடம் சென்றடைய வைப்பதுதானே தவிர, உங்கள் அறிவை அவரிடம் காட்டுவதல்ல.
எளிமையான வார்த்தைகள், குட்டிக் குட்டி வாக்கியங்களைப் பயன்படுத்துங்கள். சின்னச் சின்ன பத்திகளாகப் (paragraph) பிரித்து எழுதுங்கள். நீங்கள் எழுதுவதைப் படிப்பவர் உங்கள் முன்னால் உட்கார்ந்திருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவரிடம் பேசுவதுபோல் உங்கள் எழுத்து அமையட்டும்.
சுவாரஸ்யமாக எழுதுங்கள். கதைகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், அவை சுருக்கமாக இருக்கவேண்டும்; சொல்லவரும் கருத்துக்குப் பொருத்த மானவையாக இருக்கவேண்டும்; மையக் கருத்திலிருந்து அவர்கள் கவனத்தைத் திசை திருப்பவேகூடாது.
செய்வினை (Active voice) வாக்கியங்களாக எழுதுங்கள். முடிந்தவரை செயப்பாட்டு வினையில் (passive voice) எழுதவேண்டாம். உதாரணம்: Murali achieved his target என்பது செய்வினை. The target was achieved by Murali என்பது செயப்பாட்டு வினை.
அலுவலக வேலையில் எழுதும் ரிப்போர்ட் களில் மட்டுமின்றி, இ-மெயில், கடிதங்கள் என பிசினஸ் தொடர்பான அனைத்து கருத்துப் பரிமாற்றம் செய்யும் சந்தர்ப்பங்களிலும் இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்துங்கள்.

எம்.பி.ஏ. கல்லூரிகளில், Written Analysis and Communication பாடத்தில் இப்படிப்பட்ட சூட்சுமங்களைக் கற்றுத்தருகிறார்கள். ஒவ்வொரு வாரமும், மாணவன் ரிப்போர்ட்கள்,
presentations ஆகியவைச் செய்யவேண்டும். இவற்றுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாணவனின் எழுத்தில் இருக்கும் பலங்களையும், பலவீனங்களையும் கூர்ந்து கவனித்து, தனிப்பட்ட ஆலோசனைகள் தருகிறார்கள்.
எழுத்துத் திறமையை இப்படிச் செம்மைப் படுத்தும் எம்.பி.ஏ. கல்லூரிகள் பேச்சுத் திறமையை எப்படி வளர்க்கின்றன?
(கற்போம்)
படங்கள்: க.ரமேஷ், தே.தீட்ஷித்.
ட்விட்டர் டோனி!
விமானத் துறை நிறுவனமான ஏர் ஏசியா குரூப்பின் சி.இ.ஓ. டோனி பெர்னான்டஸ் தன்னுடைய முக்கியமான முடிவுகளை எல்லாம் ட்விட்டர் மூலமே வெளியிடுகிறார். என்ன காரணம் என்று கேட்டால், குறைந்த செலவில் மிக அதிகமான மக்களைச் சென்றடைவதற்கு அதுதான் பெஸ்ட் மீடியாவாக இருக்கிறது என்கிறார். டாடா சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த நிறுவனம் குறைந்த கட்டணத்தில் விமான சர்வீஸை அளிக்கப் போகிறது. இந்த பிசினஸில் ஜெயிக்க ரத்தன் டாடா உங்களுக்கு ஏதாவது அட்வைஸ் தந்திருப்பாரே என்று கேட்டால், அதை நான் புத்தகம் எழுதும்போது சொல்வேன் என்கிறார்.