மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

கேஸ் ஸ்டடி அனுபவம்!

##~##

எம்.பி.ஏ. கல்லூரிகளில் பேச்சுத் திறமையை வளர்ப்பதில்லை, மலரச் செய்கிறார்கள். பேச்சு வன்மையை முன்னேற்ற அதை படிப்பு முறையுடனுடனே இரண்டறக் கலந்துவிட்டார்கள்.  

எம்.பி.ஏ. படிப்பில் கேஸ் ஸ்டடி படிப்பு முறை முக்கியமானது என்பதை முன்பே பார்த்தோம். வெறும் தியரியையே படித்துக்கொண்டிருக்காமல், வெளி உலகத்தில், கம்பெனிகளில் நடக்கிற உண்மை நிகழ்ச்சிகள், நிஜ பிசினஸ் அனுபவங்கள் அவர்களுக்குத் தெரியவேண்டும். கம்பெனி மேனேஜர்கள் அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதற்காக, வகுப்புகளில் கேஸ்கள் (கம்பெனிகளின் அனுபவங்கள்) விவாதிக்கப் படுகின்றன.      

கேஸ் ஸ்டடி பற்றி விவாதிக்கும்போது  சக மாணவர்கள் பேராசிரியரின் கருத்தை ஆமோதிக்கலாம்; சிலர் கருத்து மாறுபடலாம். இப்படி விவாதிப்பதால், மாணவர்கள் பிறர் கருத்தைக் கேட்கப் பழகுகிறார்கள். அவர்களின் சிந்தனை தெளிவாகிறது. அவர்களுடைய தகவல் பரிமாற்றத் திறன் (கம்யூனிகேஷன்) மலர்கிறது.

இந்த கேஸ்களில் கம்பெனி எதிர்மோதும் பிரச்னை பற்றிய விவரங்களை முன்னாடியே தந்துவிடுவார்கள். மாணவர்கள் தனியாகப் படிப்பதைவிட, குழுவாகச் சேர்ந்து படிப்பதையும், விவாதிப்பதையும் பேராசிரியர்கள் ஊக்கப்படுத்துவார்கள். ஒரே பிரச்னையைப் பல கண்ணோட்டங்களில் அணுக இந்தக் கூட்டுப் படிப்பு உதவுகிறது என்பது எம்.பி.ஏ. கல்லூரிகள் அனுபவத்தில் அறிந்த உண்மை.    

MBA - மூன்றெழுத்து மந்திரம்

கேஸ் ஸ்டடி பற்றிய விவாதத்தில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இதற்கு வகுப்புப் பங்கேற்பு (Class Participation)என்று பெயர். உங்கள் பங்கேற்புக்கு ஏற்றபடி, பேராசிரியர்கள் உங்களுக்கு மார்க் தருவார்கள்.      

கேஸ் ஸ்டடி விவாதம் எப்படி நடக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? அதோ, அங்கே, பேராசிரியர் குல்கர்னி நடத்தும் பிசினஸ் பாலிஸி (Business Policy)வகுப்புக்குப் போகலாம். பிசினஸ் பாலிஸி என்றால் என்ன?

சில வாரங்களுக்கு முன்னால், நாம் Business Process Re-engineering என்னும் மேனேஜ்மென்ட் கொள்கை பற்றிப் பார்த்தோம். ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த மர்ஃபி ரேடியோ, டயனோரா டிவி, சாலிடேர் டிவி. போன்ற கம்பெனிகள் காணாமல் போய்விட்டன. அதே சமயம், முருகப்பா, டிவி.எஸ், இந்தியன் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, பிரிட்டானியா, ஐ.டி.சி, கோத்ரெஜ், டாடா ஸ்டீல், கிர்லோஸ்க்கர், ஷாலிமார் பெயின்ட்ஸ் என நூறு வருடங்களை முடித்து, வெற்றிகரமாக நடைபோடும் கம்பெனிகளும் இருக்கின்றன.

காணாமல் போனவர்களுக்கும், தொடர்ந்து ஜெயித்துக்கொண்டே இருப்பவர்களுக்கும் ஒரே ஒரு முக்கிய வித்தியாசம் - மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, அவர்கள் கடைப்பிடிக்கும் யுக்திகளும், நடைமுறைகளும்.

இந்த யுக்திகளைக் கற்றுத் தரும் பாடம்தான் பிசினஸ் பாலிஸி. இந்தப் பாடத்தின் கேஸ் ஸ்டடிகளில், ஜெயித்தவர்கள், தோற்றவர்கள் ஆகிய இரு வகையினரின் யுக்திகளும், நடைமுறைகளும் ஆழமாக அலசப்படும்.  

பேராசிரியர் குல்கர்னியின் பிசினஸ் பாலிஸி வகுப்பில் இன்று சுவிட்ஸர்லாந்து கடிகார கம்பெனிகள் பற்றிய கேஸ் ஸ்டடி. கேஸ்களின் சுருக்கம் இதுதான்:

சுவிட்ஸர்லாந்து நாடு தயாரிக்கும் கடிகாரங்கள் மிகத் துல்லியமானவை. கீ கொடுத்தால் ஓடும். இந்த மெக்கானிக்கல் கடிகாரங்கள்  விலை அதிகமானவை. எல்லோரும் சுவிஸ் கடிகாரங்களையே வாங்கினார்கள்.

திடீரென இதில் நுழைந்தது ஜப்பான். எலெக்ட்ரானிக் கைக் கடிகாரங்களை அறிமுகம் செய்தது. மிகமிகக் குறைவான விலை. மக்கள் ஜப்பான் தயாரிப்புகளுக்கு மாறினார்கள்.

வெற்றிக் கொடி கட்டிய சுவிஸ் கடிகார கம்பெனிகள் தோல்விச் சறுக்கலில். அவர்கள் என்ன செய்யவேண்டும்?

MBA - மூன்றெழுத்து மந்திரம்

கேஸ், சுவிஸ் நாட்டின் பின்புலம், அந்த நாட்டில் கடிகாரத் தொழில் வளர்ந்த கதை, கடிகார கம்பெனிகளின் வரலாறு, அவர்களின் நிதி நிலைமை என எக்கச்சக்க விவரங்கள் தந்தது. இதைப்போல் ஜப்பான் குறித்தும் விவரங்கள்.      

'கேஸ் ஸ்டடிகளைப் படித்து வகுப்புப் பங்கேற்புக்குத் தயார் செய்வதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன். தனியாகப் படியுங்கள், குழுவாக சேர்ந்து விவாதியுங்கள்' என்று பேராசிரியர் குல்கர்னி வலியுறுத்தினார்.

சங்கர் தனியாக உட்கார்ந்து கேஸைப் பலமுறை படித்தான். கேஸ் அவனுக்குச் செம ஈஸியாக இருந்தது. அவன் மனதில் சில தீர்வுகள் உடனேயே தோன்றின.

''சுவிஸ் கைக் கடிகாரங்களின் விலை மிக அதிகம். அவர்கள் தங்கள் விலையைக் குறைக்கவேண்டும். மெக்கானிக்கல் கடிகாரங்கள் எலெக்ட்ரானிக் கடிகாரங்களைவிடத் தரத்தில் உயர்ந்தவை. சுவிஸ் கைக் கடிகாரங்கள் குறைந்த விலையில் கிடைத்தால், மக்கள் ஜப்பான் சாமான்களை வாங்கவேமாட்டார்கள். ஜப்பான் போட்டி அம்பேல்.''

தன் தீர்வுகளை நினைத்தபோது சங்கருக்குப் பெருமையாக இருந்தது. இத்தனை சிம்பிள் கேஸுக்கு மற்ற மாணவர்களோடு க்ரூப் ஸ்டடி போட்டு நேரத்தை வீணாக்க அவன் விரும்பவில்லை. சீக்கிரமே படுத்துத் தூங்கினான்.

சங்கர் வகுப்பில் பங்கேற்பைத் தொடங்கினான். சுவிஸ் பிரச்னைக்கு தன் தீர்வுகளைச்  சொன்னான். அவன் எதிர்பார்த்ததுபோல், குல்கர்னியிடமும், சக மாணவர்களிடமும் எந்தப் பரபரப்பும் ஏற்படவில்லை.

'இவர்களுக்கு வயிற்றெரிச்சல். என் ஜீனியஸ் ஐடியாவை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்' என்று பொருமினான்.

இன்னும் சில மாணவர்கள் தங்கள் தீர்வுகளை விளக்கினார்கள்.  ஹரி சொன்னான்:

''கடிகாரங்களுக்கான உலக மார்க்கெட் இரண்டு அங்கங்களைக் கொண்டது. ஒன்று, மிகத் துல்லியமான கடிகாரங்களை வாங்குபவர்கள். இவர்கள் வாழ்நாளில் ஒன்றிரண்டு கடிகாரங்களே வாங்குவார்கள். அவற்றுக்கு என்ன விலை வேண்டுமானாலும் தருவார்கள். சுவிஸ் கடிகாரம் வாங்குபவர்கள் இந்த ரகம்.

இன்னொரு வகை, நேரம் பார்க்க கைக்கடிகாரம் அணியும் சாதாரண மக்கள். ரிப்பேர் வந்தால் கடிகாரங்களைக் கடாசத் தயங்கவே மாட்டார்கள். இவர்கள் ஜப்பான் வாட்ச் வாங்குபவர்கள்.

இன்று ஜப்பான் குறைந்த விலையில் வாட்ச் விற்கிறது. நாளை சீனா, அடுத்த நாள் இந்தியா, கொரியா போன்ற நாடுகள் ஜப்பானைவிட விலை குறைவாக விற்கலாம். இந்த விலைக் குறைப்புப் போரில் சுவிஸ்காரர்கள் இறங்கக் கூடாது. ஏனென்றால், சுவிஸ் வாட்ச் தரத்தில் உயர்ந்தது என்கிற இமேஜ் இருக்கிறது. விலைக் குறைப்பு சுவிஸ் கம்பெனிகளின் இமேஜை அழிக்கும்; அந்த கம்பெனிகளுக்கே அது சாவு மணி அடிக்கும்.  

எனவே என் கருத்துப்படி, சுவிஸ் கம்பெனிகள் ஜப்பானின் போட்டி பற்றிக் கவலையேபடக் கூடாது. தரமான வாடிக்கையாளர்கள் என்கிற விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும்'' என விலாவாரியாக பேசினான் ஹரி.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

சங்கரின் உடலில் இப்போது ஆயிரம் வால்ட் மின்சாரம் ஓடியது. 'என்ன தெளிவான பேச்சு, அறிவுப்பூர்வமான கருத்துக்கள்! ஹரி, நீ பெரிய ஆள்டா' - என்று மனம் அவனை பாராட்டியது.

உதய் கங்குலி அடுத்துப் பேச வந்தான். வங்கத்து இளைஞன். ஒவ்வொரு வார்த்தையும் அறிவுக் கூர்மையாக பேசினான்.

''ஹரியின் பெரும்பான்மையான கருத்துக்களோடு உடன்பாடு எனக்கு இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் நான் மாறுபடுகிறேன். சுவிஸ் கம்பெனிகள் மெக்கானிக்கல் வாட்ச்கள் மட்டுமே தயாரிக்கவேண்டும் என்றான் ஹரி. நம் கேஸ் ஸ்டடியில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்று பாருங்கள். மெக்கானிக்கல் வாட்ச்களின் விற்பனை வளர்ச்சி சதவிகிதம் வருடா வருடம் குறைந்துகொண்டு வருகிறது. அதேசமயம், எலெக்ட்ரானிக் கடிகார விற்பனை நாற்பது சதவிகிதத்தில் வளருகிறது.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

சுவிஸ் கம்பெனிகள் இந்த எலெக்ட்ரானிக் கடிகாரத் துறையில் நுழையாவிட்டால், வெகு சீக்கிரம் கடிகாரத் துறையிலிருந்தே ஓரம்கட்டப்படுவார்கள். எனவே, சுவிஸ் கம்பெனிகள் மெக்கானிக்கல் கடிகாரங்களையும் தயாரிக்கவேண்டும்; எலெக்ட்ரானிக் கடிகாரங்களையும் தயாரிக்கவேண்டும்.''

சங்கர் அசந்து போனான். அவன் கர்வம் நொறுங்கியது. அவன் தன் திறமை எல்லைகளைப் புரிந்துகொண்டான். வகுப்புப் பங்கேற்புக்குக் குழுவாக விவாதித்துத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேராசிரியர்கள் வற்புறுத்துவதன் காரணம் புரிந்தது.  

சங்கரிடம் பிறர் கருத்தைக் கேட்கும், மதிக்கும் பழக்கம் வந்தது. சொல்லும் கருத்துக்கள், வார்த்தைகள், அவற்றின் தொனி, உடல்மொழி ஆகிய மூன்றையும் முழுக்கப் பயன்படுத்தி, பிறரைப் புண்படுத்தாமல் தன் கருத்துக்களை வலியுறுத்தவும், தன் பேச்சுக்குப் பிறரை இணங்கவைக்கவும் அவன் திறமை பெற்றான். சங்கரின் கம்யூனிகேஷன் திறமைகளும், ஆளுமையும் புதிய பரிமாணங்களைத் தொட்டன.

(கற்போம்)

படங்கள்: எம்.விஜயகுமார், கே.குணசீலன்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்