மற்ற எபிசோடுகள்
Published:Updated:

முக்கியமான 3 நிலைகள் !

முக்கியமான 3 நிலைகள் !

##~##

என் பிசினஸ் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. எங்களுக்கு எதற்கு கார்ப்பரேட் ஸ்ட்ராடஜி. சொல்லப்போனால், எங்களுக்கு வளர்ச்சியே தேவையில்லை. இந்த வளர்ச்சியே போதும் என்று நினைக்கும் நிறுவனங்களும் இருக்கின்றன. நிறுவனங்கள், இன்று எந்த சிக்கலும் இல்லாமல் நல்லபடியாக நடந்தாலும், தொடந்து ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில், அடுத்துவரும் சிறிய நிறுவனங்கள் அந்த பெரிய நிறுவனத்தைத் தாண்டிச் சென்றுவிடும்.  

வயதான ஒரு பிசினஸ்மேன், ஒரு பிசினஸ் டீலை முடிக்க விமானத்தில் போய்கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு இளைஞன், அந்த பிசினஸ்மேனிடம் நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டி ருந்தார். அப்போது, ''உங்களுக்கு வயதாகிவிட்டது; உங்கள் நிறுவனமும் நன்றாக வளர்ந்துவிட்டது; இனியும் ஏன் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்'' என்று கேட்டார். ''இந்த விமானம் இப்போது 30,000 அடி உயரத்தில் பறக்கிறது. மேலே வந்துவிட்டது என்று முடிவு செய்து இன்ஜினை அணைக்க முடியுமா? அப்படி என்ஜினை அணைத்தால் விமானம் நொறுங்கும். அதுபோலதான் பிசினஸும். ஓடிக்கொண்டுதான் இருக்கவேண்டும்'' என்றார்.

அதுபோல பிசினஸ் ஒன்றை ஆரம்பித்துவிட்டால் தொடர்ந்து ஓடிக்கொண்டுதான் இருக்கவேண்டும். என்னதான் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தாலும் எல்லா பிசினஸுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. ஆரம்ப நிலை, வளர்ச்சி நிலை, முடிவு நிலை என்கிற கட்டங்களை எல்லா பிசினஸும் சந்தித்தே ஆகவேண்டும். அதனால் நிறுவனங்கள் ஒரே பிசினஸையே தொடர்ந்து செய்ய முடியாது. ஒரு பிசினஸில் இருக்கும் லாபத்தை எடுத்து இன்னொரு பிசினஸில் முதலீடு செய்யும்போதுதான், ஒரு பிசினஸின் வளர்ச்சி முடியும் தருவாயில் இருக்கும்போது, இன்னொரு பிசினஸின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

முக்கியமான 3 நிலைகள் !

இந்தியாவை எடுத்துக்கொண்டால், அனைத்து முக்கியமான பெரிய கார்ப்பரேட்களும் ஐ.டி. பிசினஸில் நீண்டகாலமாக இருக்கின்றன. கார்ப்பரேட் ஸ்ட்ராடஜியைத் தெரிந்துகொண்டதால்தான் எல்லா நிறுவனங்களும் தங்களால் முடிந்த அளவுக்கு ஐ.டி. துறையில் கால் பதித்திருக்கின்றன.

கார்ப்பரேட் ஸ்ட்ராடஜி ஏதோ இப்போது வந்தது என நினைக்கவேண்டாம். அமெரிக்காவில் 1950 - 60களில் பொருளாதாரம் வளர்ந்து வந்தபோது இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதற்காக ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனங்களும் பல பிசினஸ்களைச் செய்ய ஆரம்பித்தன. ஆனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மூலப்பொருட்கள் சப்ளை செய்ய பெரிய ஆட்கள் இல்லாததால், வேறு வழி இல்லாமல் சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களே இதர பிசினஸ்களிலும் தடம் பதித்தது. உதாரணத்துக்கு கார் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மூலப்பொருட்களையும் தயாரித்தன. அதேசமயம், அந்த கார்களை வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லாததால், அதை தருவதற்கான ஃபைனான்ஸ் கம்பெனியையும் அந்த நிறுவனமே நடத்தியது.

தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்குத் தேவையான அல்லது அது சார்பான பிசினஸ்களை ஆரம்பிப்பது, 'ரிலேட்டட் ஸ்ட்ராடஜி’. ஆனால், இது எல்லாருக்கும் பொருந்தாது; சிலர் சேவைத் துறையில் இருப்பார்கள். அப்போது மூன்று வகையில் அவர்களது கார்ப்பரேட் ஸ்ட்ராடஜியை அமைக்க முடியும்.

1. மனிதவளம்.

2. அவர்களிடம் இருக்கும் சொத்துகள் மற்றும் உபகரணங்கள்.

3. சந்தை மற்றும் வாடிக்கையாளர்களின் தேவை.

உதாரணத்துக்கு, நீங்கள் தண்ணீர் கேன் சப்ளை செய்கிறீர்கள். உற்பத்தியாளரிடம் வாங்கி, வாடிக்கையாளர்களிடம் விற்கிறீர்கள். இங்கு எப்படி உங்கள் பிசினஸை விரிவாக்குவது என்பது உங்களுக்கு குழப்பமாக இருக்கலாம். ஆனால், உங்களிடம் இருக்கும் வாடிக்கையாளர்களை வைத்து புதிய பிசினஸை நீங்கள் ஆரம்பிக்கலாம்.

முக்கியமான 3 நிலைகள் !

உதாரணத்துக்கு, உங்களிடம் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட வீட்டு சாமான்கள் தேவைப்படும். நிரந்தரமான வாடிக்கையாளர்கள் இருக்கும்போது அவர்களுக்கு இன்னும் என்ன சேவை தரமுடியும் என்பதை யோசித்தாலே இன்னும் பல பிசினஸை உருவாக்க முடியும்.

அடுத்தது, உங்களிடம் இருக்கும் மனிதவளத்தை வைத்து வேறு புதிய பிசினஸ் வாய்ப்புகளைப் பற்றி யோசிக்க முடியும். உதாரணத்துக்கு, நீங்கள் எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட தொழிலில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், உங்களிடம் இருக்கும் மனிதவளத்தைப் பயன்படுத்தி ஒரு பொருளை மட்டும் தயாரிக்காமல் அதோடு தொடர்புடைய மற்ற பொருட்களையும் தயாரிக்க முடியும். இதுபோலவே, உங்களிடம் இருக்கும் சொத்துக்கள் மற்றும் உபகரணங்களை வைத்துக்கொண்டு புதிய பிசினஸில் ஈடுபட முடியும் என்பதை யோசிக்கலாம்.

சரி, இது ஒருபுறம் இருக்கட்டும்! குடும்பம் என்றால் எப்படி இருக்கும் என்பதை யாராவது சொல்ல முடியுமா? ஒரு குடும்பத்தில் இருக்கும் ஆறு பேரும் தாத்தா, பாட்டிகளாக இருந்தால் அதை குடும்பம் என்று சொல்வோமா? இல்லை, குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரும் குழந்தைகளாக இருந்தால் அதை குடும்பம் என்று சொல்வோமா? சொல்ல மாட்டோம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, குழந்தைகள் என பலரும் அடங்கியதுதான் ஒரு குடும்பம். இதேபோலத்தான் கார்ப்பரேட் ஸ்ட்ராடஜியும் இருக்கவேண்டும். சில பிசினஸ்கள் ஆரம்பநிலையில் இருக்கவேண்டும்; சில பிசினஸ்கள் வளர்ச்சி நிலையில் இருக்க வேண்டும்; இன்னும் சில பிசினஸ்கள் முதிர்வு நிலையில் இருக்கவேண்டும்.

சில பிசினஸ்களில் பெரிய அளவில் செலவு இருக்காது. ஆனால், சீரான வருமானம் அந்த பிசினஸிலிருந்து வரும். அதற்காக இந்த பிசினஸையே வேண்டாம் என்று சொல்ல முடியாது. இந்த பிசினஸ் தாத்தாபோல, குறைவாகச் சாப்பிடுவார். அதேபோல சீரான வருமானத்தைத் (பென்ஷன்) தருவார். இதற்கு மேல் இந்த பிசினஸில் ஒன்றும் செய்ய முடியாது என்பதற்காக தாத்தாவை வெளியே அனுப்ப முடியாது.

அதேபோல, குழந்தைகள் அதிகமாகச் சாப்பிடும். ஆனால், சில காலத்துக்குப் பிறகு நன்றாகச் சம்பாதிக்கும். அதாவது, தாத்தாவிடம் கிடைக்கும் வருமானத்தை எடுத்து குழந்தைக்கு தரவேண்டும். இதில் எங்கேயும், யாருக்கும் பிரச்னை வராமல் சாமர்த்தியமாக முடிவெடுப்பதுதான் கார்ப்பரேட் ஸ்ட்ராடஜி.

இந்த கான்செப்டை உருவாக்கியது பாஸ்டன் கன்சல்டிங் குரூப். இந்த கான்செப்ட் நன்றாகவே இருந்தாலும், இதை அப்படியே பயன்படுத்திய நிறுவனங்கள் திவால் ஆனது. ஏன் என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

(வியூகம் அமைப்போம்)

அபராதம் கட்டத் தயார்!

சிமென்ட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து செயற்கையான டிமாண்டை உருவாக்கி அதன் விலையை உயர்த்தியதால், 11 பெரிய சிமென்ட் நிறுவனங்கள் மீது காம்பெட்டிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா அபராதம் விதித்தது. இந்த அபராதத் தொகையை கட்டியே தீரவேண்டும் என உச்ச நீதிமன்றமும் சொன்னதால், இப்போது அபராதத் தொகையைச் செலுத்த தயாராகி வருகின்றன. மொத்த அபராதத் தொகையான ரூ. 6,698 கோடியில் பத்து சதவிகிதத்தை, அதாவது 669 கோடி ரூபாயைக் கட்ட கடந்த காலாண்டில் ஒதுக்கீடு செய்துள்ளன. ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 132 கோடியும், கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ் 117 கோடியும், அம்புஜா சிமென்ட் 116 கோடியும், ஏ.சி.சி. 115 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளன.