காலத்துக்கேற்ற மாற்றம்!
கம்பெனிகள் ஜெயித்த கதை
ஸ்ட்ராடஜி 7
##~## |
ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, குழந்தைகள், பெரியவர்கள் என கலந்து இருக்கவேண்டும். அப்போதுதான் அந்தக் குடும்பம் சீராக இருக்கும். ஒரு நிறுவனம் என்றால் பல்வேறு தொழில்களும் இருக்க வேண்டும் என்கிற பாஸ்டன் கான்செப்ட்டை கடைப்பிடித்த நிறுவனங்கள் 1980 - 85-ம் ஆண்டு வரை தொழில் துறையில் வெற்றிகரமாக இருந்தன.
கஷ்டப்பட்டு லாபம் சம்பாதித்து, அந்த பணத்தைக்கொண்டு வேறு ஒரு புதிய பிசினஸைத் தொடங்குவார்கள். அதில் சிலவற்றில் லாபமும், சில தொழில்களில் சீரான வளர்ச்சியும் இருக்கும். அதாவது, ஏற்கெனவே வெற்றிகரமாக நடந்துவரும் ஒரு நிறுவனம், ஒரு புதிய பிசினஸில் இறங்குகிறது எனில், அது தன்னிடம் இருக்கும் பணத்தைக் கொண்டுதான் தொடங்கும். அதாவது, பணம்தான் தொழில் தொடங்க முதன்மையானது என்பது பாஸ்டன் கான்செப்ட்-ன் அடிப்படையாக இருந்தது.
இப்போது நல்ல லாபம் தரும் ஒரு பிசினஸிலிருந்து பணத்தை எடுத்து லாபம் இல்லாத பிசினஸிற்கு செலவு செய்வார்கள். இப்போது லாபம் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் லாபம் தரும் என்பதால் இப்படி செய்வார்கள். புதிதாகத் தொடங்கப்படும் இந்த பிசினஸ்கள் ஏற்கெனவே இருக்கும் பிசினஸ்களோடு தொடர்பிருக்காது. இதனால் சில பிசினஸ்கள் லாபகரமாகவும், சில பிசினஸ்கள் நஷ்டம் தருவதாகவும் இருக்கும்.

உங்களிடம் நல்ல ஸ்டார் பிசினஸ் இருக்கும். ஆனால், இன்னொரு பிசினஸ் வாய்ப்பும் பிரகாசமாக இருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள பணம் தடையாக இருக்கும். சரியான நேரத்தில் அந்த பிசினஸை தொடங்கியிருந்தால், நல்ல லாபத்தைச் சம்பாதித்திருக்க முடியும். சந்தர்ப்பத்தைத் தவறவிடுவதன் மூலம் அந்த பிசினஸ் உங்கள் கையைவிட்டுப் போய்விடும்.
இந்த பாஸ்டன் கான்செப்ட் சரியானது என்று நினைத்ததால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நல்ல வாய்ப்புகளை பலரும் தவறவிட்டனர். இதனால் பணத்தைத் தாண்டி புதிய தொழில் வாய்ப்புகளைப் பற்றி பலரும் யோசிக்கவில்லை.
1985 வரை பாப்புலராக இருந்த இந்த பாஸ்டன் கான்செப்ட் அதன்பிறகு தனது பிரபலத்தை இழக்கத் தொடங்கியது. 85-ம் ஆண்டுக்குப் பிறகான நிதி உலகம், தொழில் துறையின் வளர்ச்சிக்கான தடைகளை உடைத்தெறிந்தது. வெஞ்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள், பேங்க் போன்றவை வளர வளர, பிசினஸ் தொடங்குவது எளிதானது. பணம் இல்லை என்பதற்காக சந்தர்ப்பத்தைத் தவறவிட வேண்டாம் என்பதே இந்த காலகட்டம் சொல்லும் முக்கியமான பாடமாக இருந்தது.
வெஞ்சர் கேப்பிட்டல் நிறுவனங்களும், வங்கிகளும் புதிய தொழில் வாய்ப்புகளைத் தீவிரமாக ஊக்குவித்தன. உங்களிடம் ஐடியா இருக்கிறது, தொழில்நுட்ப திறமை இருக்கிறது ஆனால், தொழிலில் இறங்க பணம் இல்லை என்கிற இந்த இடத்தில்தான் வெஞ்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் வெற்றிகரமாக நுழைந்தன.
'உன்னோட ஐடியாவை நம்பி பணம் தருகிறேன். அதை வைத்து தொழில் தொடங்கு. அதிலிருந்து வரும் லாபத்தில் இத்தனை சதவிகிதம் கொடுத்துவிடு அல்லது எனக்கு இத்தனை சதவிகிதம் பங்கை ஒதுக்கிவிடு’ என வெஞ்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் பிசினஸை ஊக்குவித்தன. இதனால் பணம் இருந்தால்தான் புதிய தொழிலைத் தொடங்க முடியும் என்கிற எண்ணம் உடைந்தது. தொழில் முனைவதில் புதிய பாய்ச்சல் ஏற்பட்டது. தொழில் துறையைவிட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டன.

பணம்தான் முக்கியம் என்கிற நிலையி லிருந்து மனிதவளம்தான் முக்கியம் என்கிற கருத்து உருவானது. இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்ளாததால் நூற்றாண்டுப் பாரம்பரியம்கொண்ட வெஸ்டிங் ஹவுஸ் போன்ற நிறுவனங்கள்கூட காணாமல் போய்விட்டன. ஆனால், இந்த மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனது பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்திவரும் நிறுவனம் ஒன்று இருக்கிறது. கடந்த 50 வருடங்களில் டாப் 10 நிறுவனம் என்று கணக்கெடுத்தால், அதில் இந்த நிறுவனம் நிச்சயம் இடம் பிடித்துவிடும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் நல்ல வளர்ச்சி கண்ட நிறுவனங்கள், குறிப்பிட்ட தொழிலில் மட்டும் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் என எல்லாவற்றையும் தாண்டி, பல தொழில்களை நிர்வகித்துவரும் நிறுவன வரிசையில் இந்நிறுவனம் மட்டும் இப்போது டாப் 10 கம்பெனியில் இருக்கிறது. அந்த நிறுவனம், ஜி.இ. என சுருக்கமாக அழைக்கப்படும் ஜெனரல் எலெக்ட்ரிக்.
பாஸ்டன் கான்செப்ட் எதிர்காலத்தில் தாக்குப் பிடிக்காது என முன்னரே அறிந்துகொண்டு தனது உத்திகளை மாற்றியதால்தான் ஜி.இ. நிறுவனம் தாக்குப் பிடிக்க முடிந்தது. இந்த முடிவு எடுக்கப்பட்ட காலத்தில் அந்நிறுவனத்தில் சி.இ.ஓ.வாக இருந்தவர் ஜாக் வெல்ச் (யிணீநீளீ கீமீறீநீலீ). 1981-ல் ஜி.இ. நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக பொறுப்பேற்ற அவர், ஜி.இ. நிறுவனத்தின் முகத்தை மாற்றி, அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்திக்கொண்டு சென்றதிலும் அவர் பங்களிப்பு முக்கியமானது.
ஆனால், ஜி.இ. நிறுவனத்திற்கு சி.இ.ஓ. பொறுப்புக்கு வருவது அவ்வளவு சாதாரண மானதல்ல. வேறு நிறுவனங்களிலிருந்து யாரும் அந்தப் பொறுப்புக்கு நேரடியாக வந்துவிட முடியாது. அப்போது சி.இ.ஓ.வாக ரெஜினால்டு ஜோன்ஸ் (Reginald H.Jones)என்பவர், தனக்குப் பிறகு சி.இ.ஓ.வாக வர தகுதியுள்ள 12 பேரை தேர்ந்தெடுத்தார். அதிலிருந்து ஒவ்வொருவராக கழித்துக்கட்டி, கடைசியில்தான் ஜாக் வெல்சை தேர்வு செய்தார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட காலம் எட்டு ஆண்டுகள்.
ஜி.இ. நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக ஜாக் வெல்ச் பொறுப்பேற்றதும் செய்த முதல் வேலை, தன்னை தேர்ந்தெடுத்த ரெஜினால்டு ஜோன்ஸுக்கு விருப்பமான சுரங்கத் தொழிலை மூடச் சொன்னதுதான் என்றால் நம்புவீர்களா..?
(வியூகம் அமைப்போம்)
நடை கட்டிய ஆர்ச்சிலர் !
உலகின் மிகப் பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஆர்ச்சிலர் மிட்டல் நிறுவனம் ஒடிஸாவில் இரும்புத் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டுள்ளது. 12 மில்லியன் டன் இரும்பினை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த தொழிற்சாலை அமைக்க 2006-ம் ஆண்டிலேயே ஒடிஸா மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. ஏழு ஆண்டுகள் கடந்தபின்னரும் தொழிற்சாலை அமைக்கத் தேவையான இடத்தை ஒடிஸா மாநில அரசாங்கம் தரவில்லை. இரும்புத் தாதுவை எடுப்பதற்கான அனுமதியும் கிடைத்தபாடில்லை என்பதால் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைகழுவி உள்ளது ஆர்ச்சிலர் நிறுவனம். தென் கொரிய நிறுவனமான போஸ்கோ கர்நாடகாவில் அமைக்கவிருந்த இரும்பு உற்பத்தி தொழிற்சாலையை சமீபத்தில் கைகழுவியதைத் தொடர்ந்து, ஆர்ச்சிலரும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.